இறந்தகாலமும் எதிர்காலமும் எம்மிடம் இல்லை. நிகழ்காலம் மாத்திரமே கைவசம் இருக்கிறது என்பதுதான் யதார்த்தம் என்றாலும், மனித மனம் நிகழ்காலத்தைவிட்டு விட்டு, அடிக்கடி நினைப்பது இறந்த காலமாகவும் எதிர்காலமாகவும்தான் இருக்கிறது. அது ஏன்…? - அபிதாவின் மனதை அரித்துக்கொண்டிருக்கிறது இந்தக்கேள்வி.
இறந்தகாலம், நினைவுகளிலேயே பெரிதும் தங்கியிருப்பதுபோன்று எதிர்காலம் கனவுகளில்தான் பெரிதும் தங்கியுள்ளது என்பதையும் நன்கு புரிந்துகொண்டே, மஞ்சுளாவை நிகழ்காலத்திற்கு அழைத்துப்பேசுவதற்கு அபிதா தயாராகியிருந்தாள்.
“ மஞ்சு, இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படியே இருக்கப்போறீங்க… ? வாழ்க்கைத் துணையொன்று தேவைப்பட்ட காலத்தை நீங்கள் கடந்துகொண்டிருக்கிறீங்க. “
“ என்ன புதிர் போடுறீங்க அபிதா…? காலம் தரித்து நிற்காதுதானே…?! கடப்பதுதானே அதன் வேலை. நாம் அதனோடு சேர்ந்து இழுபடுகின்றோம். நான் இன்னமும் துணை தேடும் படலத்தில் இறங்கவில்லை. இரண்டொருத்தர் என்னை விரும்புவதாக புரபோஸ் செய்துமிருக்கிறான்கள். ஒன்றிரண்டு ஃபேஸ் புக் வழியாகவும் வந்தது. நான்தான் ரிஜெக்ட் பண்ணியிட்டன். என்ர அம்மா செய்த செயலுக்குப்பிறகு, திருமணம், இல்லறம், குடும்பம் பற்றியே நான் யோசிப்பதற்கு விரும்புவதில்லை. “ என்று சொன்ன மஞ்சுளா, மரத்தில் தவழ்ந்து சென்ற அணிலை பார்த்து பரவசத்துடன் நின்றாள்.
அந்த அணிலை அபிதாவும் பார்த்தாள். அது எதனையோ கால்களுக்கிடையில் வைத்து சாப்பிட்டது. “ அதற்கிருக்கும் சுதந்திரம் கூட மனிதர்களுக்கில்லை. “ என்றாள் அபிதா.
இருவரும் அந்த வீட்டின் பின்வளவு மரக்கறி தோட்டத்திலிருந்த நீண்ட மரக்குற்றியில் அமர்ந்தனர். பல வருடங்களுக்கு முன்னர் அந்த வீட்டுக்காணியின் எல்லையில் நெடிதுயர்ந்து வளர்ந்து நின்ற வேப்பமரத்தின் அடிப்பகுதி. அதன்வேர்கள் அயல்வீட்டினரால் கட்டப்பட்ட மதில் சுவரில் வெடிப்புகளை ஏற்படுத்தியதால் வெட்டித்தரிக்கப்பட்டதன் ஒரு பாகம்தான் அந்தக்குற்றி என்று முன்பொருதடவை ஜீவிகா சொல்லியிருக்கிறாள்.
சுவரில் வெடிப்பு வந்தமையால் இந்த மரத்திற்கு இந்தக்கதி. மஞ்சுளாவின் பெற்றோர்களிடம் பிளவு வந்தமையால் இவளுக்கு இந்த நிலை. நல்லவேளை இந்த பெண்குற்றியின் மீது எவரும் ஏறி அமரவில்லை. தப்பியிருக்கிறாள். அந்த வேப்பமரக்குற்றியையும் அருகில் கழுத்தளவுக்கு உயர்ந்திருக்கும் மதிலையும் அதில் சுவடுகளாகப் பதிந்திருக்கும் வெடிப்புகளையும் மஞ்சுளாவின் வாழ்க்கையோடு அபிதா ஒப்பிட்டுப்பார்த்தாள்.
‘அடடா….எனக்கும் கதாசிரியர்களின் கற்பனை சுரக்கிறதே…?! ‘
அபிதா தனக்குள் சிரித்தாள்.
அணில் மீதிருந்த பார்வையை விலக்கிய மஞ்சுளா, கைத்தொலைபேசியில் முகநூல் பார்க்கத் தொடங்கியதும் அபிதாவுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.
“ பிளீஸ் மஞ்சு, கொஞ்ச நேரம் அதனை அணைத்துவைத்துவிட்டு, நான் சொல்வதைக்கேளுங்க….. “
“ கேட்டுக்கொண்டுதானிருக்கிறன். சொல்லுங்க…. “
“ இல்லை…. உங்கள் கவனம் முழுவதும் அதில் இருக்கும்போது இந்த நல்ல விடயத்தை பேசமுடியாது. “
“ ஓகே…. சொல்லுங்க…. என்ன, எனக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டீங்களா…? ஆள் எப்படி இருப்பான்…. கார்த்திக், சூரியா, விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி… இந்த ரேஞ்சிலா… சொல்லுங்க… “
“ அடச்சீ… அவங்கள் கலியாணம் கட்டி பிள்ளைகளும் பெத்தவன்கள். நான் பார்த்திருப்பது நடிகர் ரேஞ்சில் இல்லை… நடிக்காதவர்கள் ரேஞ்சில்…. நேரடியாக விடயத்திற்கு வாரன். எங்கட சுபாஷினிக்கு ஒரு தம்பி இருக்கிறார். பேங்கில்தான் அவரும் வேலை. சுபாவுக்கு உங்கட கடந்த காலம் எல்லாம் தெரியும். உங்கட இயல்புகளும் தெரியும். அவதான் கேட்கச்சொல்லிவிட்டு நுவரேலியாவுக்கு பஸ் ஏறினா… என்னிடம் படமும் இருக்கிறது . “ என்றாள் அபிதா.
“ எங்கே காட்டுங்க…. உங்கட வாட்ஸ் அப்பில் இருக்கிறதா…? “
“ இல்லை…. அந்தளவுக்கு என்னிடம் முன்னேற்றம் இல்லை மஞ்சு. இந்த வாட்ஸ் அப், முகநூல் சமாச்சாரம் எதுவும் எனக்குத் தெரியாது. கையிலிருக்கும் கைப்பேசி எவருடனும் பேசவும். வரும் அழைப்பினைக்கேட்கவும் மாத்திரம்தான் உகந்தது. “
“ என்ன… அபிதா… இன்னுமா அந்த பழைய கைப்பேசியை வைத்துக்கொண்டு அல்லாடுறீங்க… இப்பதான், ஜீவிகா மாசம் முடியும் முன்பே சம்பளம் தந்துவிடுகிறாள். அதில் நல்லதோர் ஃபோன் வாங்கலாமே…. “
“ வேண்டாம் மஞ்சு. நான் தேவைகளை அதிகப்படுத்திக்கொள்வதில்லை. அது மேலும் மேலும் பிரச்சினைகளைத்தான் கொண்டு வரும். அந்த லெப்டொப்பைக்கூட தமிழில் எழுதிப்பழகுவதற்கும் மின்னஞ்சல் பாவனைகளுக்காகவும்தான் விரும்பினேன். அதுக்காகத்தான் சம்பளப்பணத்தையும் மிச்சம் பிடித்து வைத்திருந்தேன். அதற்கிடையில் அந்த லண்டன்காரரான ஜீவிகாவின் பெரியப்பா வாங்கித்தந்திட்டார். ஒன்று தெரியுமா…? எனக்கு இப்போது மின்னஞ்சலும் இருக்கிறது. அதுக்குத்தான் எங்கட சுபா, தன்ர தம்பியின் படத்தை அனுப்பியிருக்கிறா. “ என்று அபிதா சொன்னதும் மஞ்சுளா, கன்னத்தில் கைவத்து புன்சிரிப்புடன் அவளைக் கூர்ந்து பார்த்தாள்.
“ ம்… முன்னேற்றம்தான்….அது சரி உங்கட மின்னஞ்சல் என்ன… சொல்லுங்க… “
“ இது என்ன… நீண்ட கர்நாடக பெயராக இருக்கிறது. கேட்கும்போதும் ஒருமாதிரி இருக்கிறது. இது வேண்டாம் அபிதா. நான் வேறு ஒன்று க்ரியேட் பண்ணித்தாரன் “ என்றாள் மஞ்சுளா.
மரத்தில் தவழ்ந்துகொண்டிருந்த அணில் தரையில் குதித்து ஓடியது. அதன் வேகத்தை இருவரும் ரசித்தனர்.
“ என்னுடைய முழுப்பெயர் இந்த மின்னஞ்சலில் இருக்கிறது தெரியுமா..? ஜீவிகாதான் அதனை க்ரியேட் பண்ணித்தந்தாங்க. அபிதகுசலாம்பிகை பார்த்திபன். முதலில் இருப்பது எங்கட அம்மா அப்பா வைத்தபெயர். இறுதியில் இருப்பது என்ர அவரின் பெயர். நடுவில் இருப்பது எனது குழந்தையின் பெயர். எப்படி நன்றாக இருக்கிறதுதானே… என்னிடம் இப்போது எஞ்சியிருப்பது நானும் அவர்களும்தான். “ அபிதா கண்கள் கலங்கச்சொன்னாள். அதனைக்கேட்டதும் மஞ்சுவின் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்தன.
“ மஞ்சு, எங்கட சுபாவுக்கும் பெரும்பாலும் இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் கலியாணம் நடக்கலாம். அவவின் அம்மாவும் வருத்தக்காரியாகிவிட்டா. இந்த கொரோனா காலத்தில் யாருக்கு என்ன…? எப்போது..? நடக்கும் என்பதும் தெரியாது. அதுதான் தன்ர தம்பிக்கும் வரன் பார்க்கத் தொடங்கிட்டா… “
மஞ்சுளா தலைகுனிந்தவாறு தரையில் வலதுகால் பெருவிரலினால் கோலம் வரைந்தாள்.
வீட்டின் பின்புற வாயிலுக்கு வந்து நின்ற சண்முகநாதன், உரத்தகுரலில் “ அபிதா… ஒருக்கால் வந்திட்டுப்போகமுடியுமா…? நான் நாளைக்கு யாழ்ப்பாணம் புறப்படப்போகிறேன். “ சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
“ இதோ வாரேன் அய்யா… “ அபிதாவும் குரல்கொடுத்துவிட்டு, “ அடுத்த டிக்கட்டும் புறப்படப்போகிறது “ என மெதுவாகச்சொல்லிவிட்டு, “ மஞ்சு… நான் சொன்ன விடயத்தைப்பற்றி கொஞ்சம் யோசியும். வாரும் உமக்கு சுபாவின் தம்பியின் படம் காட்டுறன். “ அபிதா வேப்பமரக்குற்றியிலிருந்து எழுந்தாள்.
“ நீங்க போங்க… நான் வாறன். வீட்டில் தேசிக்காய் இருந்தால் ஜூஸ் செய்யமுடியுமா… “
“ ஓகே…. எலுமிச்சம்பழ நிற அழகிக்கு எலுமிச்சை ஜூஸ் கேட்குது….” அபிதா சிரித்துக்கொண்டு சென்றாள்.
சண்முகநாதன், ஜீவிகாவின் அறையிலிருந்து சிறிய சூட்கேஸில் தனது உடைகளை மடித்து அடுக்கிக்கொண்டிருக்கிறார். ஜீவிகா, மடிக்கணினியில் வேகமாகத் தட்டி செய்திக்கட்டுரை எழுதியவாறு இருந்தாள்.
“ அய்யா, தேசிக்காய் தண்ணீர் கரைக்கப்போறன். உங்களுக்கும் சேர்த்து கரைக்கட்டுமா..? “ அபிதா கேட்டவாறு அந்த அறையின் உள்ளே வந்தவள் “ ஏன் அய்யா கூப்பிட்டனீங்கள்…? என்ன வேணும்….? “
“ இப்பத்தான் செவ்விளநீர் குடித்தேன். வேண்டாம். நாளைக்கு காலையில் பெரியமுல்லையிலிருந்து கொழும்பிலிருந்து வரும் காரைநகர் பஸ்ஸில் யாழ்ப்பாணம் போகவிருக்கிறன். நாளை காலையிலும் மதியமும் சாப்பிடுவதற்கு ஏதும் செய்து தரவேண்டும். ஏதும் ஷொப்பிங் செய்யவேண்டியிருந்தால் சொல்லு… போய் வருவோம். ஜீவிகா பிஸியாக இருக்கிற. என்ன.. வாரியா…? “
“ வேண்டாம் அய்யா. வீட்டில் எல்லாம் இருக்கிறது. உங்களுக்கு காலைச்சாப்பாட்டுக்கு சப்பாத்தியுடன் மதியச்சாப்பாட்டுக்கு லெமன் ரைஸ் செய்து தாரனே… எல்லாம் காலை ஐந்து மணிக்கே ரெடியாக இருக்கும். எங்களுக்காக வழக்கமாக வரும் ஓட்டோ ரிஸ்வானுக்கு சொல்லி வைத்துவிடுவோம்… சரியா அய்யா….” அபிதா எலுமிச்சை ஜூஸ் செய்வதற்கு தயாரானாள்.
“ என்ன… வசந்தமாளிகை வாணிஶ்ரீயுடன் மகாநாடு முடிந்துவிட்டதா..? “ மடிக்கணினியை பார்த்து எழுத்துக்களை தட்டிக்கொண்டே ஜீவிகா கேட்டாள்.
“ என்னம்மா செய்யிறது. இன்னமும் அவளுக்கு தன்ர தாயின்மீதான ஆத்திரம் குறையவில்லை. அந்த ஆத்திரத்தைத்தான் அடிக்கடி வெளிப்படுத்துறா மஞ்சு. “
“ யாரும் எதனையும் நினைவுபடுத்தினால்தானே… அது மனதை பாதித்த விடயம் என்றால் கோபம் வருகிறது. உங்களுக்கும் அபிதா… அப்படித்தானே…? “ ஜீவிகாவின் குத்தல் அபிதாவுக்கு புரிந்தது.
“ அவ பாவம்… சின்ன வயசு. யாருக்கும் அப்படி நடக்கக்கூடாது. சில நாட்களாக மஞ்சுவின் தாயிடமிருந்து கோல் ஏதும் வரவில்லை. அன்றைக்கு இவ, இங்கிருந்து போட்ட காட்டுக்கூச்சலுக்குப்பிறகு ஒரு சத்தமும் இல்லை. மஞ்சுவின் கலியாண விடயம்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தன் அம்மா. “
“ அபிதா, ஒருவிடயத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேணும். யாரும் யாருக்கும் வழிகாண்பிக்கமுடியாது. யாரும் யாரையும் திருத்தவும் முடியாது. இவையள் சின்னப்பிள்ளைகள் இல்லை. நீங்க உங்கட வேலைகளை மாத்திரம் பார்த்துக்கொண்டிருங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது “ கணினியிலிருந்து முகத்தை திருப்பி எலுமிச்சை ஜூஸ் தயாரிக்கும் அபிதாவைப்பார்த்து ஜீவிகா சொன்னாள்.
‘ அதில் தொனித்த - எவரும் சின்னப்பிள்ளைகள் இல்லை என்ற வார்த்தையை அறையிலிருக்கும் லண்டன்காரரும் கேட்டிருக்கலாம் என்று அபிதா நம்பினாள்.
இதனைக்கேட்கும் அவரது முகத்தில் எத்தகைய ரேகைகள் படரும் என்றும் அபிதா கற்பனை செய்து பார்த்தாள்.
ஜீவிகாவுக்கு ஏதும் பதில் சொல்லத்தான் வேண்டுமென்று தீர்மானித்த அபிதா, எலுமிச்சை ஜூஸையும் ஒரு கண்ணாடித்தம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு வந்து ஜீவிகாவின் மேசையில் வைத்து, “ குடிங்க… அம்மா… இந்த வீதியின் கோடியில் நின்றுகொண்டிருக்கும் கடற்கரை வீதி என்ற தமிழ் – சிங்கள – ஆங்கில மொழியில் எழுதப்பட்ட வழிகாட்டி மரமும் நகருவதில்லை அம்மா. முன்பின் தெரியாதவர்களுக்கு இந்த வீதிக்குள் வருவதற்கு அதுதான் வழிகாட்டி அம்மா. வாய்பேசாத அந்த மரக்கம்பம் செய்யும் சேவையை பற்றி அதனைக்கடந்து செல்பவர்களும் உணர்வதில்லை. “ என்றாள்.
அதற்குமேல் ஜீவிகா எதுவும் பேசவில்லை.
எழுதிக்கொண்டிருக்கும் செய்திக்கட்டுரையில் அபிதா சொன்ன அந்த வார்த்தைகளை எங்கே புகுத்திப்பார்க்கலாம் என்ற சிந்தனையும் அவளுக்கு வந்தது.
முதல் முதலில் தலைகுனிந்தவாறு கண்கள் கலங்க இந்த வீட்டுக்குள் ஒரு காலைநேரத்தில் அடியெடுத்து வைத்த இவளா, இன்று இப்படியெல்லாம் பேசுவதற்கு பழகிவிட்டாள்.
நாமெல்லாம் வீட்டில் இல்லாத வேளைகளில் நிறைய வாசிக்கிறாள் போலும். இவளது ரிஷிமூலம் – நதிமூலம் என்னவாக இருக்கும். கடுகுதான் - காரம் பெரிசாகத்தான் இருக்கிறது. இதுவரையில் இவளால் எந்தப்பிரச்சினையும் வந்ததில்லை. அதுவே நிம்மதி. முன்பிருந்த வேலக்காரிகளுடன் ஒப்பிடும்போது, இவள் தனித்துத் தெரிகிறாள். இந்த வீட்டில் முன்னர் பிரச்சினைகளை உருவாக்கியவர்கள் கற்பகமும் மஞ்சுளாவும் சுபாஷினியும்தான். இவள் வந்தபின்னர் எல்லாம் குறைந்துவிட்டது.
பெனடோலுக்கும் வேலை குறைந்துவிட்டது.
ஜீவிகாவின் செய்திக்கட்டுரை வளர்ந்துகொண்டிருந்தாலும், அபிதா நிழலாக அடிக்கடி அதற்குள் தலைநீட்டியவாறிருந்தாள்.
பின்புற வாயிலுக்கு வந்த அபிதா, “ மஞ்சு வாங்க… ஜூஸ் ரெடி “ எனக்குரல் கொடுத்தாள்.
சண்முகநாதனுக்கும் ஜீவிகா – அபிதாவின் உரையாடல் கேட்டது. தானும் தனது மனைவி பிள்ளைகளும் இந்த வீட்டில் முன்பிருந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறார். கட்டுநாயக்காவிலிருந்து இந்த வீட்டுக்கு வந்தபின்னர் ஒரு சில நாட்களும் - சில வாரங்களும் - சில மாதங்களும் வேலைக்கு வந்து நின்ற பெண்களையும் அபிதாவையும் மனதில் ஒப்பிட்டுப்பார்த்தார்.
சிலரது முகம் அவருக்கு மறந்துவிட்டிருந்தது. சில வேலைக்காரிகளின் செயல்கள் நினைவுக்கும் வந்தன. குளியலறையிலிருந்து காணாமல்போன மனைவியின் ஒரு சோடி காப்பு. மகள் குழந்தையாக இருந்தபோது செய்து போட்ட வெள்ளி அறுநாக்கொடி, மனைவியின் சில சேலைகள், அலுவலக அறையிலிருந்த பார்க்கர் பேனை… முகம் மறந்துபோன அந்த வேலைக்காரிகளுடைய செயல்களை மாத்திரம் சண்முகநாதனால் மறக்கமுடியவில்லை.
அபிதா பற்றி, ஜீவிகாவிடமிருந்து இதுவரையில் எந்தப்புகாரும் இல்லை. “ கொஞ்சம் வாயாடி அவ்வளவுதான் பெரியப்பா…” இதுதான் ஜீவிகா தந்திருக்கும் சான்றிதழ்.
யாழ்ப்பாணம் புறப்படுவதற்கு முன்னர் கற்பகத்தையும் ஒருதடவை பார்த்துவிடவேண்டும் என்று அவரது மனம் குறுகுறுத்தது. அங்கிருக்கும் அவளது உறவுகளுக்கு இங்கிருந்து ஏதும் எடுத்துச்செல்லவேண்டுமா…...? எனக்கேட்கும் சாட்டில் அவளிடமும் பயணம் சொல்லிவிடுவதற்கு விரும்பினார்.
அதற்கும் அவருக்கு அபிதாவின் துணைதான் தேவைப்பட்டது.
அபிதாவை அறைக்கு அழைத்துச்சொன்னார்.
“ அய்யாவுக்கு கற்பகம் ரீச்சரில் அப்படி என்ன ஸெஃப்ட் கோனர்…? நாளைக்கு நீங்கள் புறப்படப்போறீங்க. சுபாஷினியும் தாயை பார்க்கப்போயிட்டாங்க. அறைகள் சும்மாதான் இருக்கிறது. அதிலும் கற்பகம் ரீச்சரின் அறை திறக்கப்படாமல் அப்படியேதான் இருக்கிறது. நீங்கள் புறப்படவும், உங்கட பெறாமகள் இந்த அறைக்கு வந்திடுவாங்க. அடுத்த வாரமளவில் ஸ்கூலும் தொடங்கிவிடும். ரீச்சரும் வந்துவிடுவாங்க….வேண்டுமென்றால், இன்றைக்கே வரச்சொல்லட்டுமா… அய்யா…. நீங்களும் அவவுக்கு பயணம் சொல்லிவிடலாம். “ அபிதா வேகமாகச்சொன்னபோது, அவளது குரலை வெளியே கூடத்திலிருக்கும் ஜீவிகாவும் மஞ்சுளாவும் கேட்டுவிடக்கூடாது என்பதற்கு சுட்டுவிரலை வாயில் வைத்து சைகை காண்பித்தார்.
அபிதா, வாய்வரையில் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.
அப்போது அவளது இடுப்பில் இருந்த கைப்பேசி சிணுங்கியது.
மறுமுனையில் கற்பகம் ரீச்சர்.
“ அய்யாவுக்கு ரெலிபத்தியில் நம்பிக்கை இருக்கிறதா..? “ கண்ணைச்சிமிட்டி சொல்லிக்கொண்டு வெளியே வந்தாள் அபிதா.
சண்முகநாதன் பிரமை பிடித்தவாறு நின்றார்.
( தொடரும் )
No comments:
Post a Comment