அன்பின் மாயம் நிறைந்த வீடு - கவிதை - வித்யாசாகர்!


ந்த வீடு அப்படித்தான்
அன்பின் மாயம் நிறைந்தது
எங்களின் சிரிப்பெல்லாம் செங்கற்களுள் புதைந்து 
அழுகையின் சத்தங்களில் 
இறுகி இருந்த வீடு அது. 

அந்த வீட்டில் சிவப்பு செம்பருத்தி
தலை தாழ்ந்திருந்தாலும் நாங்கள் 
தலைநிமிர்ந்து வாழ்ந்தோம் அன்று.

இரண்டு மாடுகள் போட்ட 
சாணங்களால் கூட வீட்டில் அன்று அடுப்பெரிந்தது,
ஊருக்கு பால்கறந்து விற்றுவிட்டு
வாங்கிய கையளவு அரிசியில்
வாழ்க்கையின் நீதியையும்
பாதையையும் காட்டிய வீடு அது, 

அந்த வீட்டில் 
வெய்யில் என்றால் வரட்டி காயும் 
மழை வந்தால் பால் விற்கும்
குப்பைக்கீரையில் சோறு வேகும்
பொன்னாங்கண்ணியில் வயிறு தாளம்போடும்
எது நொந்தாலும் நாங்கள் நோவோம் 
யாருக்கும் தெரியாமல் விறகின்றி எரிவோம்,

பசியில் அப்படியெறிந்த நாட்கள் எத்தனையோ 
அதைவிட அவ்வீட்டில்
சிரித்த நாட்களே அத்தனையும்.

மழை எல்லோருக்கும் வரும்
எங்களுக்கு மட்டும் மழை வந்தால் வீடும் நனையும் 
நாங்களும் நனைவோம்
அப்பா எங்களின் ஈரத்தைக் கண்டு எரிவார் 
கோணி மூடி திரிவார்
ரோட்டு வெள்ளம் வீடெல்லாம் புகும் 
ஓரம் நின்று அம்மா பால் கறப்பாள் 
அவர்களுக்கு உடம்பு நனையும், காய்ச்சல் வரும் 
எங்களுக்கு மனசு நனையும் கண்ணீர் வரும்
ஆனாலும், ஊருக்கு எங்களின் வறுமை 
வியாபாரமாகும்.

ஒரு மாட்டின் கன்றுக்குட்டிக்கு 
அன்று மாரி என்றுப் பெயர்
ஐஸ்கிரீம் தின்றுகொண்டுபோகும் பணக்கார வீட்டு 
பிள்ளைகளைப் பார்த்தவாறு 
நாங்கள் விளையாட அந்த வீடு அருளியது 
எங்கள் மாரியைத் தான்.

யாரோ தின்று போட்ட நுங்கு மட்டை 
என்றோ கிழிந்துவிட்ட அம்மா புடவை 
எதற்கும் உதவாத 
குப்பைப் பொருட்களெல்லாம் தான்
அந்த வீட்டில் எங்களுக்கிருந்த ஊஞ்சலும் 
உருட்டு வண்டியும் 
விளையாட சொப்புப்புக்களும், விட்டுத்தர
மிச்சமிருந்த அன்பும் என்பது 
அந்த மாய வீட்டிற்கு மட்டுமே தெரியும்.

எல்லோருக்கும் அது வீடென்றாலும் 
அது ஏன் எங்களுக்கு மட்டும் மாயவீடு?
ஏனெனில் அந்த வீட்டில் எங்களுக்கொரு 
தேவதை கூட இருந்தாள்
எங்களுக்கு எஜமானியும் எல்லாமும் 
எங்களுக்கந்த தேவதை தான், 
எனது அண்ணந் தம்பிகளுக்கும் சரி 
எனக்கும் சரி 
அவள் தான் நாங்கள் கண்ட ஒரே தேவதை;
அவள் ஒரே தங்கை;
அவள் ஒரே மகள்; அவள் தான் உயிரும் கூட. 

அவள்
எங்களுக்குப் பின்னே பிறந்தாலும் 
அவளை முன்வைத்துத் தான்
அன்றெங்கள் வீடே இருந்தது.. இயங்கியது.. எல்லாமே.

எங்களோடு மாரி சேர்த்து 
ஒரு ஜூலி யென்னும் அன்பு நாயும் 
கறுப்பி சிவப்பியென்று சில கோழிகளும் இருந்தன
அவைகளெல்லாம் இருந்தன என்பதைவிட 
எங்களோடு வாழ்ந்ததும் 
நாங்கள் அவைகளோடு வளர்ந்ததும் தான் 
அந்த மாயவீட்டின்
யாருக்கும் தெரியாத வரலாறு,

மதியம் சாப்பிடுகையில் 
சாம்பாரில் வரும் குண்டு மிளகாய் போடுவோருக்குத்தான் 
அந்த சிவப்பியின் முட்டை
ஒரு நாள் கருப்பியின் முட்டை 
எனவே, சாம்பாருக்கு காத்திருந்து 
மிளகாய்க்கு தவமிருந்து 
கறுப்பி சிவப்பியிடமும் 
ஜூலி மாரியிடமும் கற்ற வாழ்க்கை பாடமானது 
வீடு கோயிலாக இருந்தது அன்று.

குருவிகள் கத்தும்
குக்கூ சத்ததைப்போல, 
கோழிகள் கத்தும் கொக்கோ சத்தமும் 
ஜூலி குழையும்
லொள் லொள் மொழியும் தான் 
எங்களுக்கான அந்த வீட்டின் பிரியங்களன்று.,

அந்த வீட்டில் ஆயிரம் இருந்தாலும் 
அதிக வெளிச்சம் மிக்கவள்
அந்த தேவதை தான்
இன்றந்த தேவதையும் இல்லை 
அந்த மாயவீடும் இல்லை.

வாழ்க்கை தடம்புரளுகையில் 
வீடும் பணத்துள் வீழ்வது இயல்பு
அதை வருடங்கள் கடந்தும் 
மறக்கமுடியாதது தான் பெரு வலி.

இன்றங்கே யார் யாரோ 
இடத்தை துண்டு போட்டு 
யார் யாரோ யாருக்கோ விற்று 
பலர் வாங்கி பலர் மாறி
இப்போதிரண்டு கடைகளும்
ஏதோ ஒன்றிரண்டு 
வாடகை வீடுகளும் அவ்விடத்தில் இருக்கிறதாம்,

அங்கே இருப்பவர்களுக்கு தெரியாது 
அந்த வீட்டில் 
நாங்கள் வைத்திருந்த செம்பருத்தி செடியையும் 
விளக்கில்லா இருட்டில்
அன்பால் ஒளிர்ந்த  எங்கள் தேவதையையும்.

இன்றந்த வீட்டில்
கொக்கோ சத்தமும் ஜூலியின் ஆர்பாட்டமும் 
மாரியின் அன்பைப் பற்றியெல்லாம் 
யாருக்குத் தெரியும் ?
அவர்களுக்கு அது ஒரு இடம் 
எங்களுக்கு இன்றும்; அது எங்கள் வீடு.

வீட்டிற்கும் சுவற்றிற்கும் 
உயிருக்கும் பொம்மைக்கும் போல 
நிறைய வித்தியாசங்களுண்டு
அது வாழ்ந்தோருக்கு மட்டுமே தெரியும்.

அதனாலென்ன
எல்லோர் வாழ்வும் கூட இப்படித்தான் போல 
காலம் செல்லரித்துவிட்டு 
கொஞ்சம் கனவாகவும்
மீதி நினைவாகவும் மட்டுமே நம்மை
வாழ வைத்திருக்கிறது.

இனி அழுதாலோ புரண்டாலோ அது
மீண்டு வருமா ? 
அந்த மழைநாட்களும்
அந்த வீடும் வருமா ?
நாங்கள் சிரித்த அழுத நாட்கள் 
திரும்பக் கிடைக்குமா ? 
எங்களை விட்டு
என்றோ போன எங்களின் தேவதை கிடைப்பாளா ?
கிடைக்காது;
அந்த வீடு தான் ஒரு 
அன்பின் மாய வீடாயிற்றே!!
---------------------------------------------------
வித்யாசாகர்

No comments: