சுவீட்சிக்ஸ்டி - மன்னாதி மன்னன் - சுந்தரதாஸ்

.


தமிழ் திரை உலகில் ஆடை வடிவமைப்பாளராகத் திகழ்ந்தவர  எம் நடேசன். தயாரிப்பாளராகவும் டைடக்டராகவும் பின்னர்  அவதாரம் எடுத்த இவர்  தனது நடேஷ் ஆர்ட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்த படம் மன்னாதி மன்னன். நடேசனின் இலட்சிய படமாக இது உருவானது, 

புரட்சி நடிகர் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த இப்படத்துக்கு எம்ஜிஆரின் இமேஜுக்கு பொருத்தமாக மன்னாதி மன்னன் என்று கவிஞர் கண்ணதாசனால்   பெயரிடப்பட்டது காரணம் அவரே படத்திற்கான கதை, வசனம் இரண்டையும் எழுதி இருந்தார் கவிஞர் எழுதிய ஆட்டனத்தி ஆதிமந்தி என்ற நாடகமே இவ்வாறு பெயர் மாறி படமானது. சேர சோழ மன்னர்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய அரசில் பகடைக்காயாக உருட்டப்படும்  ஒரு நடனப் பெண்ணின் காதலையும் இளவரசன் மீது அவளுக்கு ஏற்படும் அன்பையும், பக்தியையும் கொண்டு படம் உருவானது.




 படத்தில் கதாநாயகியாக நடனப் பெண் சித்ராவாக  பத்மினி நடித்திருந்தார் பாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாகவும் அமைந்திருந்தார்.  உருக்கமான நடிப்பு பரவசமூட்டும் நடனம் இரண்டையும் பத்மினி வழங்கியிருந்தார். படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வருபவர் அஞ்சலிதேவி.  திரையுலகில் எல்லோரையும் ஆட்டுவிக்கும் எம்ஜிஆரை இந்த படத்தில் ஆட்டுவித்தார் நடேசன் ஆம் இதில் எம்ஜிஆர் பரத நடனம் ஆடுகிறார்,  அதிலும் பத்மினி உடன் போட்டியாக வேறு ஆடுகிறார்  படத்துக்கு கண்ணதாசன் எழுதிய வசனங்கள் காதலையும் பேசியது,  கனலையும் கக்கியது,  இலக்கியச் சுவையுடன் கருத்துள்ள வசனங்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.  மருதகாசி,  கண்ணதாசன் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்தவர்கள்  விஸ்வநாதன் ராமமூர்த்தி.  அவர்களின் இசையில் கனியக் கனிய மழலை பேசும் கண்மணி,  ஆடாத மனமும் உண்டோ கண்கள் இரண்டும் இன்று உம்மைக் கண்டு  ஆகிய பாடல்கள் மிக வரவேற்பைப் பெற்றன.  



குறிப்பாக கண்ணதாசன் இயற்றிய அச்சம் என்பது மடமையடா பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது,  ஈழத்தில் மக்களின் கொள்கை முழக்க பாடலாக ஒலித்தது காதலுடன் அரசியல் சூழ்ச்சி ஏமாற்றம் என்பவற்றை சொல்லும் இப்படத்தில் வில்லனாக வீரப்பா  நடித்திருந்தார் இவருடன் எம் ஜி சக்கரபாணி குலதெய்வம் ராஜகோபால் ஜீ சகுந்தலா ஆகியோரும் நடித்தனர் பிற்காலத்தில் தமிழகத்தின் மன்னாதி மன்னனாக திகழ்ந்த எம்ஜிஆரின் வெற்றிக்கு கட்டியம் கூறுவதுபோல மன்னாதி மன்னன் அமைந்தது.



No comments: