இப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம்----------- பாகம் 3 பரமபுத்திரன்


காற்றில் செய்திகள் நாளும் பரவுது  
கொரொனா கலைந்து குறைந்து போகுதாம்   
இருப்பினும் கொரொனா  சொல்றேன் கேட்பாய்  
ஊருக்கு நீவந்த காலத்தின் கோலம்   
தேவைக்கு தேடினோம் கழிப்பறை சுருள்களை
தொற்றுவாய் நீயென்று ஒழித்தன போலும்
கிடைக்கவே இல்லை ஏனென அறியோம் 
காலையில் போனால் கிடைக்குமாம் கடையில்  
கழிந்தால் பார்த்து தருவினம்  போல
அதற்குள்ளும் சிலபேர் சட்டையை பிடித்து
அடிபிடி சண்டை அதுவும் நடக்குது
அளவில் அறியா  உருவம் உனக்கு
ஐந்தடி காற்றில் பறக்கவும் மாட்டியாம்  
அதற்குள் நிலத்தில்  விழுந்தும் போவியாம்
தூயவர் வீட்டுக்கு போகவும் மாட்டியாம்
போனவர் வீட்டில் பாதிப்பு தந்ததால்    
உலகத்தில்  மாற்றங்கள் பெரிதாய் நடக்குது
காட்டினுள் வாழும்  விலங்குகள் வந்து
நாட்டினுள்  பார்க்கும் மாட்சிமை செய்தாய்
எங்கள் இடமென  உரிமைகள் பேசி  
எதிர்ப்பட்ட உயிர்களை கொன்று குவித்து
ஆட்சிகள் புரிந்த ஆணவக் காரர்  
வீட்டுக்குள் அடைபடும் காட்சிகள் தந்தாய்
பயத்தின் விழிப்பில் உயிர்களை மதித்து
உயிரை கொல்லுதல் தவறென மனதில்   
உயிரின் வலியை  உணர்ந்தரோ  அறியோம்

காற்று வெளியிடை உலவிட வேண்டின்
கவனமாய் தனியாய் நடக்கிறோம் நாங்கள்
நாட்டை ஆள்வோர் கோட்டையில் இருப்போர்
எல்லோர் நிலையும் இதனுள் அடக்கம்
வீட்டினுள்  இருக்க  விருப்பம் இல்லையாம்
சலிப்பு மேலிட அலுப்பாய்  இருக்குதாம்
சிறப்பாய் சிலபேர் சொல்லித் தருகினம்
அல்லும் பகலும் அயராது உழைத்து
காசினை  சேர்த்து கடனும் வாங்கி
போட்டிகள் போட்டு ஏலங்கள் கூறி  
ஓட்டமாய் ஓடி  பேச்சுகள் நடத்தி
வாங்கிய வீட்டில் காலடி வைத்திட
ஊரினைக் கூட்டி பாலினைக்  காய்ச்சி
எங்கட வீடென கொண்டாடி  மகிழ்ந்து 
போற்றிய  வீடும் வெறுத்துப் போகுதாம்
கட்டிய மனைவி பெற்றிட்ட பிள்ளைகள்
உயிர்தந்த  பெற்றோர்  உறவினர் என்போர்
மகிழ்ச்சியை சிதைத்து நெகிழ்ச்சியை குலைத்து
வெளியே சென்றிட ஏவுகிறார்  போலும்
தனிமை வாட்டுது  என்பது பொதுவில்
தனியே ஒருவன் இருப்பதை குறிக்கும்
குடும்பமாய் கூடி வீட்டில் இருப்போர்
தனிமை யானவர் அல்ல எனலாம்
தனித்து வாழ்தல் முடியாது உலகில்  
ஒத்து வாழ்தல் வேண்டும் என்று
கத்திக்  கத்திச்  சொன்னதை மறுத்து
பணத்தால் பொருளால் இனத்தால் மதத்தால்
அறிவால் தொழிலால் இடத்தால் பிழைப்பால்
பெரியவர் சிறியவர் பேதமை காட்டி
தமக்குள் தாமே கோடுகள் போட்டு  
மனதால் உயர்ந்து மகிழ்ந்து  வாழந்தவர்  
பயத்தால் உறைந்து வீட்டினுள் அடங்க
பெயரால் மட்டும் சாதித்த கொரொனா
நின்னது பெருமையை  எப்படிச்  சொல்ல   
இன்னொரு செய்தி முக்கிய செய்தி
இயம்ப  வேண்டும்  கொரொனா  உனக்கு  
கணக்கற்று சேவைகள் பெருக்குற்று உள்ளதால்
தலைப்புகள்  தேடி செய்திக்காய் அலைய
வந்தாய் தலைப்பாய் வாழ்விக்க எங்களை
இரவும் பகலும் இடைவிடா தகவல்கள்
உரிமை போற்ற ஆளில்லை என்பதால்
உன்னைச் சுற்றியே ஆக்கங்கள் அமையும்
கவிதைகள் தொடக்கம் கட்டுரை  மற்றும்
பேச்சுகள் பாட்டுகள் ஆட்டங்கள் இணைத்து
விமர்சனம் விளக்கங்கள் வலையொலி மூலம்  
எங்களைத்  திருத்த  எடுக்கினம் முயற்சி
காலத்திற் கேற்ப கோலத்தை நிறுத்தி
ஞாலத்தில் தங்களை உயர்த்திறார் கண்டீர்  
தமிழர் கொண்ட அறிவியல் இன்னும்
பசுமையாய் நினைவினில் இன்றும் உண்டு
தொற்றும்  நோயினை ஒருவர் பெற்றால்
சற்று விலக்கி தனிமையில் இருத்தி
தேவை நோக்கி பணிவிடை செய்து
மற்றவர் அருகே  நாட  விடாது
நோயையும் மாற்றி பிறரையும் காத்து
வாழ்ந்திட்ட எங்களின் நிலையினை பழித்து
வழமைகள் மாற்றி பழமையை இழித்து
புதுமையாய் வாழ்வதாய்  புழுகப் பட்டவை
புதுசாய் சொல்லுகினம்  மருத்துவக் குறிப்பு
பசியினை போக்க தேங்காய் எடுக்க
பதைக்க அடித்து  துடிக்க வைக்கும்
பாவிகள் என்றும்  திருந்த மறுக்கிறார்
புத்தன் வந்து சொன்ன செய்தியும்  
சுத்தமாய் இங்கு புரியவே  இல்லை
சித்தம் குழம்பி மக்களை வதைத்து
வெற்றிக் களிப்பில் துள்ளிக் குதிப்பு
யேசு  காட்டிய பாதையை தொட்டு   
வேறு வழிகள் சொல்வோர் ஓர்புறம்  
சாமியை சொல்லி கோவிலைக்  கட்டி
கோவிலை பூட்டி விழாக்களும் நடக்குது
இணைய வழியிலும்  பிரார்த்தனை தொடருது
இப்பவும் சனம் அவையளை நம்புது
சொல்லக் கதைகள் நிறையவே உண்டு -நாம்
ஒதுங்கி இருப்பது திருந்தி அல்ல – நீ
ஒழிந்து போனதும் விரைந்து பாய
மருந்து கண்டால் விரைவாய் அதுவே
பணமாய் மாறும் தொகையாய் சேரும்
மீண்டும் நாங்கள் ஓடுவோம் தேடுவோம்
மருத்துவம் ஒன்றே காக்கும் என்போம்
மக்களை வாழ பயிற்றப் பார்க்கிறாய்
பாரினை நீயும் திருத்த நினைக்கிறாய்
இவர்களை திருத்துதல் இலகு அல்ல
இப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம்.----------

  No comments: