தொடர்பற்றிருந்த வூஹான் நகரம் 76 நாட்களின் பின் திறப்பு
உறுதியுடன் எதிர்கொண்டால் வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வரமுடியும்
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,970 பேர் பலி
பிரான்ஸில் கொரோனாவினால் 10,000 பேர் பலி
சுமார் 15 இலட்சம் பேருக்கு தொற்று; ஸ்பெயினில் 15,000 பேர் பலி
ஊரடங்கை மீறிய நியூசிலாந்து அமைச்சர் பதவியிறக்கம்
வழமைக்கு திரும்பியது சீனா: மகிழ்ச்சியில் வுஹான் மக்கள்
ICU இலிருந்து வெளியேறினார் பொரிஸ் ஜோன்ஸன்
உலகில் 195 மில்லியன் பேர் தொழிலை இழக்கும் ஆபத்து!
தொடர்பற்றிருந்த வூஹான் நகரம் 76 நாட்களின் பின் திறப்பு
Tuesday, April 7, 2020 - 11:47pm
கொரோனா வைரஸ் தொற்று உருவெடுத்த சீனாவின் வூஹான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 76 நாட்களாக முற்று முழுதாக வெளிநகர தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த சீனாவின் ஹுபே மாகாணத்தில் அமைந்த நகரமே வூஹான் நகரமாகும்.சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்படுவது இல்லாத நிலையில், அங்கு கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஆயினும் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தவாறே தங்களது கடமைகளை மேற்கொண்டு வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
சீனாவில் பாடசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளன.
சீனாவின் சான்ஜி மாகாணத்திலுள்ள, சியான் நகரில் உள்ள பாடசாலை இன்று திறக்கப்பட்டது. இதன்போது ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு முகக் கவசங்களை வழங்குவதை காணலாம்.
வூஹானில் திருமண பதிவுகளும் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், ஹுபே சென்ற 162 பேரைக் கொண்ட இறுதி மருத்துவக் குழுவும் சிச்சுவான் திரும்பியுள்ளது.
First batch of vehicles left Wuhan after the city lift 76-day travel ban in response to #COVID19 control.
முற்று முழுதாக மூடப்பட்ட வூஹானின் எல்லை பகுதியில் அமைந்த அதி வேக நெடுஞ்சாலைகள் மூலம் வாகனங்கள் முதன் முதலாக வெளியேறிச் செல்லும் காட்சியை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இவர்களில் பெரும்பாலானோர், தேவைகளுக்காக வூஹான் வந்து அங்கு சிக்கிக் கொண்ட நபர்கள் தற்போது தங்களது சொந்த இடங்களை நோக்கிச் செல்கின்றனர்.
வூஹானிலிருந்து புறப்படத் தயாராகும் புகையிரதம்...
நன்றி தினகரன்
உறுதியுடன் எதிர்கொண்டால் வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வரமுடியும்
Tuesday, April 7, 2020 - 10:35am
68 ஆண்டுகளில் 5வது உரை நிகழ்த்தினார் எலிசபெத் மகாராணி!
நாட்டு மக்கள் அனைவரும் உறுதியுடன் எதிர்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வர முடியும் என பிரித்தானிய மகாராணி எலிசபெத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவது பாரிய பாதிப்பினை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் பிரித்தானியா பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக பிரித்தானிய முடிக்குரிய மகாராணி கடந்த ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தேசமெங்கும் வியாபித்திருந்த இரண்டாம் உலகப்போர் நெருக்கடி நிலையின் போது செயற்பட்டது போல இப்போது நாட்டு மக்கள் உறுதியுடன் செயற்பட்டால் கொரோனா பாதிப்புக்களில் இருந்து மீண்டு வரமுடியும்.
மேலும், குறித்த உரையின் போது நாட்டு மக்கள் அனைவரும் தலைமுறை தலைமுறையாக கடைப்பிடித்து வந்த தங்களது பொறுமை மற்றும் உறுதியினை மீண்டும் வெளிக்காட்டுவதற்கு மகாராணி அழைப்பு விடுத்தார்.
அத்துடன், ‘நாம் மீண்டும் சந்திப்போம்’ எனக் குறிப்பிட்ட எலிசபெத் மகாராணி, 1940ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர் சூழ்நிலையில் வெளிவந்த “Better days will return.” எனும் பாடலையும் சுட்டிக்காட்டி பேசினார்.
மேலும், “நம் அனைவரும் ஒன்றாக இந்நோயினைக் கையாள்கிறோம். நான் மீண்டும் உறுதியாகச் சொல்கிறேன் தொடர்ச்சியாக நாம் ஒற்றுமையாகவும் திடமாகவும் பயணித்தால் நாம் இதனை வெல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.
“நாம் ஏற்கனவே சவால்களை சமாளித்திருந்தாலும் குறித்த விடயமானது மிகவும் வித்தியாசமானது. உலக மக்கள் அனைவரையும் குணப்படுத்தும் ஓர் பொது முயற்சிக்காக விஞ்ஞானத்தின் முன்னேற்றங்களோடு, இம்முறை உலகளாவிய அனைத்து நாடுகளுடனும் நாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம். நாம் வெற்றி பெறுவோம் என்பதுடன் குறித்த வெற்றி நம் அனைவரையும் சாரும்” என அவர் தெரிவித்துள்ளார்.
எலிசபெத் மகாராணியின் உரையானது அவரது 68 ஆண்டுகால ஆட்சி காலத்தில் ஐந்து தடவைகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்ட உரைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,970 பேர் பலி
Wednesday, April 8, 2020 - 11:09am
- தொற்றுக்கு உள்ளானோர் 4 இலட்சத்தை எட்டியது
- உலக அளவில் 82,000 பேர் மரணம்
- உலக அளவில் 82,000 பேர் மரணம்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஒரே நாளில் 1,970 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,907 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு அமெரிக்காவில் 399,886 பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உலகம் முழுவதும் 14 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 14 இலட்சத்து 31 ஆயிரத்து 691 பேருக்கு (1,431,691) வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று உலக அளவில், ஒரே நாளில் சுமார் 7,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 78 (82,078) ஆக உயர்ந்துள்ளது. 3 இலட்சத்து 2150 பேர் குணமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகளில் 10 இலட்சத்து 47 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
பிரான்ஸில் கொரோனாவினால் 10,000 பேர் பலி
Wednesday, April 8, 2020 - 3:49pm
பிரான்ஸில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000 ஐ எட்டியுள்ளது.
கடந்த மார்ச் முதலாம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியினுள் இந்நோய்த் தொற்றுக் காரணமாக உயிரிழந்தோர் 10,238 பேர் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, கடந்த 24 மணி நேரத்தில் வைத்தியசாலைகளில் 607 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன.
தாதியர் விடுதிகளில் 820 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸில் கடந்த மார்ச் 15ஆம் திகதி முதல் முற்றுமுழுதாக இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதோடு, இதை மீறுவோருக்கு எதிராக அபராதம் அறவிடப்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
சுமார் 15 இலட்சம் பேருக்கு தொற்று; ஸ்பெயினில் 15,000 பேர் பலி
Thursday, April 9, 2020 - 7:07pm
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை15,238ஆக அதிகரித்துள்ளது. ஆனால் புதிதாக இத்தொற்று நோய்க்கு உள்ளாகுபவர்களின் வீதம் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய (09) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5,756 தொற்று நோயாளர்கள் இனங் காணப்பட்டிருந்தனர். நேற்று (08) 6,180 தொற்று நோயாளர்கள் இனங் காணப்பட்டிருந்தனர். ஸ்பெயினில் நேற்றைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய நிலவரம் சற்றுக் குறைவடைந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தை தாண்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 15 இலட்சத்து 26 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 96 ஆயிரத்து 66 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி தினகரன்
ஊரடங்கை மீறிய நியூசிலாந்து அமைச்சர் பதவியிறக்கம்
Thursday, April 9, 2020 - 4:14pm
நியூசிலாந்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தனது குடும்பத்துடன் கடற்கரையில் காரில் உலா வந்த சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க், இணை சுகாதாரஅமைச்சராக பதவியிறக்கம் செய்யப்பட்டார்.
நியூசிலாந்தில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 25-ம் திகதி அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க் ஊரடங்கு உத்தரவை மீறி தனது குடும்பத்துடன் கடற்கரையில் காரில் உலா வந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள் டேவிட் கிளார்க்கை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டனர்.
இதையடுத்து தனது தவறை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க், அதற்காக வருத்தம் தெரிவித்ததோடு பிரதமர் ஜெசிந்தாவிடம் தனது இராஜினமா கடிதத்தை வழங்கினார்.
ஆனால் அவரது இராஜினாமா கடிதத்தை பிரதமர் ஏற்கவில்லை. அதே சமயம் அவர் இணை சுகாதார அமைச்சராக பதவியிறக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து பிரதமர் ஜெசிந்தா கூறுகையில், “டேவிட் கிளார்க் செய்த குற்றத்துக்கு அவரை நானே பதவி நீக்கம் செய்திருப்பேன்.
ஆனால் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க அவரது பங்களிப்பு தேவை என்பதால் அவரை பதவியிறக்கம் செய்துள்ளேன்” என கூறினார். நன்றி தினகரன்
வழமைக்கு திரும்பியது சீனா: மகிழ்ச்சியில் வுஹான் மக்கள்
Thursday, April 9, 2020 - 3:56pm
சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் நீண்ட முடக்கத்துக்கு பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
உலகை ஆட்கொண்டு பல அழிவுகளை நிகழ்த்திவரும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தில் தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது.
அங்கு மிக பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் வைரஸ் பரவளினால் பாரிய அழிவுகளுக்கு முகம் கொடுத்தமையினைத் தொடர்ந்து சீன அரசாங்கத்தால் குறித்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டது.
வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் யாரும் உட் செல்வதற்கோ உள்ளிருந்து யாரும் வெளியேறுவதற்கோ அனுமதி முற்றாக மறுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 76 நாட்கள் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைக்கு முகம் கொடுத்து வந்த மக்கள் பட்டினி, மருத்துவ மற்றும் சுகாதார நெருக்கடி என பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவலின் வேகம் வெகுவாக குறைந்துள்ளது.
அதனடிப்படையில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மரணித்து வரும் நிலையில் ஒற்றை இலக்கங்களிலான மரணங்கள் சீனாவில் தேசிய ரீதியாக பதிவாகி வருகின்றன. இந்நிலையில் 76 நாட்கள் முடக்கப்பட்டிருந்த வுஹான் நகரம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. குறித்த நகரின் எல்லைகள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் திறந்துவிடப்பட்ட நிலையில், மக்கள் மாகாணத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 11 மில்லியன் மக்களை உள்ளடக்கிய இந்த நகரம் கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி முடக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் மகிழ்ச்சியுடன் தமது அன்றாட கடமைகளில் ஈடுபடுவதனை அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் இதுவரை குறித்த வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி 3,333 பேர் மரணித்துள்ள அதேவேளை நேற்று 2 மரணங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
ICU இலிருந்து வெளியேறினார் பொரிஸ் ஜோன்ஸன்
Friday, April 10, 2020 - 3:51pm
கொரோனா வைரஸ் தொற்றினால் ICU இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனின் தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனுக்கு (55) கொரோனா வைரஸ் பரவியது கடந்த மார்ச் மாதம் உறுதி செய்யப்பட்டது.
இதை அடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் இம்மாதம் 06ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறு நாளே பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனின் உடல்நிலை மோசமடைந்தது.
இதனால் சாதாரண வார்டில் இருந்த பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவரது உடல்நிலையில் கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
இதனை அடுத்து, நல்ல உடல்நிலையில் உள்ள பொரிஸ் ஜோன்ஸன், இன்று அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டாலும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
உலகில் 195 மில்லியன் பேர் தொழிலை இழக்கும் ஆபத்து!
Saturday, April 11, 2020 - 6:00am
கொரோனா ஏற்படுத்த போகின்ற மறைமுக தாக்கம் வறுமை!
உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவின் தாக்கத்தினால் அரண்டு போயுள்ள நிலையில், மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. ஒருபுறம் மக்கள் தங்களது வருமானத்தினை இழந்து தவிக்கும் நிலையில், சர்வதேச பொருளாதாரமும் முடங்கிப் போயிருக்கிறது.
மறுபுறம் வேலைவாய்ப்யின்மையும் தனது பங்குக்கு ஆட்டம் போடத் தொடங்கியுள்ளது. இப்படி கொரோனாவின் ஒட்டுமொத்த தாக்கமும் ஒவ்வொரு துறையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒட்டுமொத்த எதிரொலியும் மக்கள் மீது விழத் தொடங்கியுள்ளது. ஏனெனில் உலகில் நஷ்டம் காணும் நிறுவனங்கள் முடிந்த அளவு செலவினை குறைக்க பணி நீக்கம், சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஏற்கனவே உலகம் முழுக்க இது எதிரொலிக்கத் தொடங்கி விட்டது. இதற்கு சிறந்த உதாரணமே வல்லரசு நாடான அமெரிக்காதான். பொருளாதாரத்தில் மட்டும் அல்ல எல்லாவற்றிலும் நாங்கள்தான் முதன்மை என்று அமெரிக்கா கூறி வந்தது. ஆனால் அங்கு அதிகரிக்கும் வேலையின்மை உலகின் மற்ற நாடுகளில் இல்லாத அளவு கடந்த சில வாரங்களில் கிடுகிடுவென அதிகரித்து வருகின்றது. இப்படி ஒரு நிலையில்தான் சர்வதேச தொழிலாளர் அமைப்பு 195 மில்லியன் முழு நேர தொழிலாளர்கள் உலகில் தங்களது வேலையினை இழக்கலாம் என்றும் கணித்துள்ளது.
பணி இழப்பு பல மடங்கு அதிகரிக்கலாம். கொரோனாவினால் ஏற்படும் இடையூறுகளால் பல்வேறு துறைகளில் பணி நீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் ஜூலை - டிசம்பர் காலத்தில் அதிகரிக்கும்.
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்படுபவர்கள் அல்லது வேலை இழப்பானது அரபு நாடுகளில் 8.1மூ வீதத்தினர், அதாவது 5 மில்லியன் முழு நேர ஊழியர்கள் பணியினை இழக்கலாம். ஐரோப்பாவில் 7.8மூ பேர், அதாவது 12 மில்லியன் முழு நேர தொழிலாளார்கள், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் 7.2மூ பேர், 125 மில்லியன் முழு நேர தொழிலாளர்கள் தங்களது பணியினை இழக்க நேரிடலாம் எனவும் கணித்துள்ளது.
வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்களில் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்கள் பேரழிவை எதிர்கொள்கின்றன. நாம் மிக வேகமாக செயல்பட வேண்டிய நேரம் இது. உலகளவில் 5 தொழிலாளர்களில் நான்குக்கு மேற்பட்டவர்கள் முழு அல்லது பகுதி மூடல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடுத்தர மக்களுக்கு பாதிப்பு உள்ளது. மாறுபட்ட வருவாய் உள்ள குழுமங்கள் அதிகளவு நஷ்டத்தினை எதிர்கொள்ள வாய்ப்புண்டு.
குறிப்பாக உயர்ந்த வருமானம் உடைய நடுத்தர மக்களுக்கு இதில் அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது சுமார் 100 மில்லியன் முழு நேர ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பாக அமையும் என்றும் ஐ.எல்.ஓ தெரிவித்துள்ளது. அதி
3.3 பில்லியன் தொழிலாளர்களில் ஐந்தில் நான்கு பேர் (81மூ பேர்) தற்போது முழு நேரமோ அல்லது தற்காலிக பணியிடை நீக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டும் அல்ல இவ்வாறு பணி நீக்கங்கள் செய்யப்படும் ஊழியர்களில் 1.25 பில்லியன் தொழிலாளர்கள் அதிகளவு பாதிப்பினை எதிர்கொள்ளும் துறைகளில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இதில் பலர் குறைந்த ஊதியம் பெறும் குறைந்த திறமையான வேலைகளிலும் உள்ளனர். ஆக அங்கு திடீரென வருமான இழப்பு பேரழிவுகளை ஏற்படுத்தும் என்றும் ஐ.எல்.ஓ தெரிவித்துள்ளது. உலகளவில் முறைசாரா தொழில்களில் 2 பில்லியன் மக்கள் உள்ளனர். அவர்கள் பெரும் பிரச்சனையைச் சந்திக்க நேரிடும். கொரோனா நெருக்கடி காரணமாக உலக மக்களில் பெருமளவானோர் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நன்றி தினகரன்
No comments:
Post a Comment