ஆர்வருவார் சித்திரையை ஆவலுடன் வரவேற்க ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


             
                           மனமெல்லாம் சித்திரையை வரவேற்கத் துடித்தாலும்
                            தினம்தினமாய் வரும்செய்தி செவிகேட்கக் கசக்கிறது 
                      புத்தாடை வாங்கலாமா பொங்கலுமே செய்யலாமா 
                             என்கின்ற அச்சநிலை எங்குமே தெரிகிறதே   ! 

                      கூடிநிற்றல் குற்றமென கொள்கையிப்போ இருக்கிறது
                             ஆடிப்பாடி மகிழுவதும்  அரசால் தடையாகிறது 
                      வீட்டினிலே சிறையிருக்கும் வேதனையில் இருக்கையிலே
                             நாட்டினிலே சித்திரையை  யார்வருவார்  வரவேற்க ! 

                     வழிபாட்டுத் தலமெல்லாம் மனிதநட மாட்டமில்லை 
                             வர்த்தக நிலையமெல்லாம் பாதுகாப்பு மயமாச்சு 
                    வெடிவாங்கி கொண்டாட   வேட்டுவைத்த கொரனோவால் 
                              வடிவான சித்திரையை வரவேற்க யார்வருவார்  ! 

                    பழம்வாங்கப் போவதற்கும் பயமாக இருக்கிறது
                         கிழப்பருவம் எய்தியவர் குலைநடுங்கி நிற்கின்றார் 
                  கொரனோவை எண்ணியெண்ணி கொண்டிருந்த மகிழ்வனைத்தும்
                         அடியோடு கலையும்நிலை ஆர்வருவார் வரவேற்க  ! 


                 கைதொட்டுப் பேசிவிட  கலங்கிநிற்கும்  காலமிது 
                      மெய்தீண்டும் நிலைவந்தால் விலகுப்போகும் காலமிது 
                கைதொட்டு மெய்யணைத்து ஆசிகூறும் நிலையின்று
                       கட்டுண்டு கிடப்பதனால் யார்வருவார் வரவேற்க  ! 

                  சிறப்பான பட்டிமன்றம் சீரான கவியரங்கு 
                       இன்னிசையால் கச்சேரி ஏற்றமுறும் கலைவிழாக்கள் 
                 சித்திரைய அலங்கரிக்கும் அத்தனையும் நின்றாச்சு 
                     
                         ஆர்வருவார் சித்திரையை ஆவலுடன் வரவேற்க ! 








No comments: