நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம் - வித்யாசாகர்


தோ
மீண்டும் அத்தை மாமா பேசுகிறார்கள்
தொலைபேசியில் யார் யாரோ அழைத்து
நலம் விசாரிக்கிறார்கள்,

மீண்டும் குருவிகள் கீச்சிடுகின்றன
மீண்டும் மழை பெய்கிறது
மீண்டும் ஏசியை அணைத்துவிட்டு 
சன்னலைத் திறந்து உலகத்தை
கம்பிகளின் வழியே பார்த்து அமர்ந்திருக்கிறோம்,

ஊர்குருவிகள் கத்துவதும்
குயில் விடிகாலையில் கூவுவதும்  
இப்போதெல்லாம்
காற்றின் அசையும் சத்தத்தோடு
காதினிக்கக் கேட்கிறது,
மரக் கிளைகளின்
இலைகளில்
உறங்கும் பனிநீரை
மீண்டும் உலுத்துக் கொட்ட
உள்ளூர ஆசை வருகிறது,

ஓட்டு வீடுகளைத் தான்
விட்டுவிட்டோம்,
ஒன்றோ இரண்டோ ஆங்காங்கே இருந்திருந்தால்
எட்டிப் பாருங்களேன்,
ஓட்டின் மேலே ஒரு சின்ன செடியேனும்
அதிசயமாய் துளிர்த்திருக்கும்,

லைஃபாய் சோப்பும்
பல்லாங்குழியும் இல்லை,
தெருவிலிறங்கி கூட்டாக
கபடி விளையாட முடியவில்லை,
மற்றபடி நினைவெல்லாம்
பழைய நாட்களே நிறைந்து கிடக்கிறது,மீண்டும் அதே மண் மணம்
மழை நனைத்த நீல வானம் 
இரவில் மின்னும் மின்மினி 
காலையில் முகம் சுடும் மஞ்சள் வெயில் 
அத்தனையும் புதியதாகவும் 
பழையதெல்லாம் மீண்டதாகவும் இருக்கிறதுவாழ்க்கை
ஒரு பக்கத்தில் பயமாக இருந்தாலும்
இன்னொரு பக்கத்தில்இனிக்கிறது,

பிள்ளைகள்
மீண்டும் நொண்டி விளையாடுகிறார்கள்
அண்ணன் அக்காவெல்லாம் வீட்டிற்குள்
ஓடி ஒளிந்து விளையாடுகிறார்கள்
கண்ணாமூச்சு ரேரே காட்டுப்பூச்சு ரேரே
என்றெங்கோ தூரத்தில்
குழந்தைகள் விளையாடும் சத்தம்
சன்னமாக கேட்கிறது,

நிறைய புத்தகங்கள் படிக்க
இதோமீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது
பழைய புத்தகங்கள்
படித்த கதைகளைக் கூட படித்துக்கொண்டே
இருக்கலாம் போலிருக்கிறது,
அம்மா அப்பாவிற்கு இனி
பொழுது மிக நன்றாகப் போகும்,

எல்லோரும் சொல்கிறார்கள்
ஏதோ கரோனாவாம்,கரோனா வந்தால் கொல்லுமாம்
எங்களுக்கு
அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை,
நாங்கள்
இதோ மீண்டும் மனிதர்களாகி விட்டோம்
நாங்களிதோ
மீண்டும் வாழத் துவங்கிவிட்டோம்!

எங்கள் வாழ்க்கையில் இனி 
மழை வரும் 
விவசாயம் மருந்தின்றி நடக்கும் 
விவசாயிகள் தலைநிமிர்வார்கள் 
மரங்கள் வெட்டப்படாது 
நதிகள் கடலெல்லாம் மாசுபடாது 
மனத்திற்குள் மதமிருக்காது சாதிப்
பிளவிருக்காதுமாறாக எங்கும் அன்பிருக்கும் 
ஆறு ஏறி குளங்களெல்லாம் 
வணங்கத் தக்கதாகும்
ஆம்நாங்கள் தான் மனிதர்களாகி விட்டோமே!!!
------------------------------------------------------
வித்யாசாகர்

No comments: