இப்போதைக்கு ஏது வழி? (கன்பரா யோகன்)



கண்ணுக்குத் தெரியாத  இந்த வைரஸ் நுண் எதிரியின் தாக்கத்தை வரலாற்றில் மக்கள் வெவ்வேறு கட்டங்களில் கடந்தே வந்துள்ளனர் என்பது வரலாறைப் பின்னோக்கிப் பார்த்தால் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் இப்பேரழிவுகளில் மில்லியன் கணக்கில்  இறந்த போதும் அக்கட்டம் கடந்த பின்னரே இவற்றுக்கான நோயெதிர்ப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப் பட்டு வந்ததும் மனித உடல்  தானாகவே  எதிர்ப்புச் சக்தியைக் கட்டமைத்துக் கொண்டதும் தெரிய வருகிறது.

ஒரு காலத்தில்  அம்மை, வாந்திபேதி , காசநோய், எயிட்ஸ் உட்பட  பல்வேறு காலப் பகுதிகளில்   இன்ஃபுளுயென்சா  வகையினைச் சேர்ந்த பல்வேறு வகைப்பட்ட  சளிக் காய்ச்சல் ரகங்கள் வந்து உலக சனத்தொகையின் ஒரு பகுதியை  அள்ளிச் சென்றிருந்தன. 1918 இல் பரவிய ஸ்பானிஷ் காய்ச்சலில் பல மில்லியன் வரை மக்கள் இறந்ததாக கணிப்பிடுகிறார்கள்.  இதில்  மிக அண்மைக்  காலத்தில்  பரவியிருந்ததென்று  பார்த்தால்  அது 2009 இல்  தோற்றிய பன்றிக் காய்ச்சல் மற்றும் 2014 இல் தோன்றிய இபோலாவும்தான் குறிப்பிடத்தக்கவையாகவுள்ளன. ஆனால் இவை  கூட இன்றைய COVID-19  வைரஸைப் போல  ஒரே நேரத்தில் எல்லா உலக நாடுகளுக்கும்   ஒரே நேரத்தில் பரவியிருக்கவில்லை.

டிசம்பர், ஜனவரி மாதங்களில் காட்டுத்தீ அவுஸ்திரேலியாவை சுட்டுக் பொசுக்கிக் கொண்டிருந்த வேளையில் பத்திரிகைகள்  அவுஸ்திரேலியக்  கண்டத்தினை  சிவப்பு மையில்  வர்ணமிட்டிருந்ததையும், இன்று உலக வரைபடம் முழுவதையுமே சிவப்பினால் வர்ணமிட்டு உலகளாவிய  இந்த வைரஸின் தாக்கத்தை காட்டி வருவதும் ஒரு வேதனை கலந்த வேடிக்கை.  
இந்த வருட ஆரம்பத்திலிருந்தே அவுஸ்திரேலியாவுக்கு சோதனை காலம் ஆரம்பித்திருந்தது, தனியார் வர்த்தக மற்றும் உற்பத்தி , உல்லாசப் பயணத்துறை சார்ந்த பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டிருந்தன. கால் நடைப்  பண்ணைகள் பலவும், மரக்கறிகள், மற்றும் பழத்தோட்டங்களும் தீக்கிரையாகியிருந்தன. கன்பராவுக்கு அண்மையிலுள்ள வைன் தயாரிக்கும் வைனரிகள் பல நீண்ட கால தீயின் புகையினால் பாதிக்கப்பட்டதால் இந்த சீசனுக்கு பழங்கள் வைன் தயாரிப்புக்குதவாது என்று  உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து இதனால் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குரிய நெருக்கடிகள் பலவற்றை  எதிர் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளது அரசு. இதை விட வேலையிழந்துள்ள பலரையும், தொழில் ஸ்தாபனகளையும் மீட்டெடுக்க வேண்டிய நிலையிலுள்ளது அரசு.
உண்மையில் வறிய நாடுகளில் அடி மட்ட  மக்கள் அடையும் பாதிப்பு சொல்லும் தரமன்று. அன்றாட உழைப்பில் சீவனம் நடாத்தும் குடும்பங்களுக்கு மிகக் கடினமான காலம் இது. அவர்களுக்கு அரசாங்க கொடுப்பனவுகள் என்று கொடுப்பதற்கு அந்த நாடுகளின் திறைசேரிகள் அவ்வளவு  செழிப்பானதல்ல. இதனால் புலம் பெயர்ந்த மக்கள் இதற்கான நிதி சேகரிப்புகளிலும் ஈடுபடுகின்றனர். இலங்கை போன்ற நாடுகளும் இதில் அடங்கும்.
இப்படி வந்து சேரும் யார் எதிர்பார்த்திருப்பர்.?  இதுவும் கடந்து போகும் என்று சொல்லி விடுவது இப்போது எல்லோருக்கும் இலகுவாக இருக்காது, யதார்த்தத்தில் அதுதான் உண்மையாக இருந்தபோதிலும்.

கடைகளில் பெரும்பாலும் கோதுமை மா, சீனி , கைகழுவும் சுத்தமாக்கிகள், மற்றும்   முகத்துக்கான, கழிவறைக்கான மென் திசுக் காகிதங்கள் என்று பல பொருட்கள் நான் போகும் நேரத்தில் அவற்றை காண முடிவதில்லை.
ஆயினும் மது விற்பனையில் அதிகரித்த தொகை அண்மைக்  காலங்களில் அவதானிக்கப் பட்டுள்ளது. மதுப் பிரியர்கள் ஸ்கைப்  போன்ற தொடர்பூடகங்களில் சந்தித்து தங்கள் தொடர்புகளை பேணி வருகின்றனர். மது அருந்தும் பப்புகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளமையே இதன் காரணமாக சொல்லப்படுகிறது. இப்போதைக்கு எது வழி  என்று தெரியவில்லை.
இருபத்தைந்து வருட வேலை அனுபவத்தில் பல்வேறு கட்டிடங்களில் வேலை  செய்திருக்கிறேன். சுற்றிலும் கம் மரக்  காடுகளும், கங்காருகளும் சூழ்ந்த கட்டடம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த தெருவோரக  கட்டடம், கடைகளைப் பார்த்தது போலவும் செயற்கை தடாகத்தை பார்த்தது போலவும் நிமிர்ந்து நின்ற கட்டடம், தரை இறங்கும் விமானங்களைப்  பார்த்தபடி நின்ற இன்னொரு கட்டடம் என்று பல கடந்து போய் இப்போது நான் வேலை செய்யும் கட்டிடம் எனது படிப்பறைதான். 
வீட்டுக்குள்ளயே சிறைப்பட்ட வாழ்வு இங்கு எவருக்கும் ஏற்கத்தக்கதாக இல்லை.

இது எமக்கொன்றும் புதியதல்ல என்று சில நண்பர்கள் சொன்னார்கள். எண்பதுகளிலிருந்து ஈழத்தில்  தொடர்ந்த யுத்த காலத்திலும், அதற்கு முன்னைய  ஜேவிபி ஊரடங்கு காலங்களிலும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த எமக்கு  இது புதியதல்ல என்பதிலும் உண்மையொன்றுள்ளது.

நேரத்தை விரயம் செய்யாது  பயனுள்ளதாகும் வகையில் நவீன தொழிநுட்ப தொடர்பாடல் முறைகளைக் கையாண்டு பலர் முயல்கின்றனர். பாடகர் பாடுகின்றனர். வாத்தியக்கலைஞர்  மீட்டுகின்றனர். எழுத்தாளர், கவிஞர்  எழுதுகின்றனர், ரசிகர்களுக்கு, வாசிப்பவருக்கு இதனால் பொழுது போகிறது. வீட்டு தோட்டம் செய்வோர் அதில் நேரம் செலவிடுகின்றனர். விளையாட்டு வீரர்களும் வீட்டுக்குள் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஒரு வருடம் பின் போடப்பட்ட  டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளுக்காக தண்ணீர்க்  குட்டையொன்றில் கயிறு கட்டி நீச்சல் பயிற்சி எடுத்து வருகிறார் ஒரு இளைஞர். அவருக்கு ஒரு பாதம் இல்லை. இது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.
முயற்சி உள்ளோர்க்கு காலம் எப்போதும் பெறுமதியானதே.


No comments: