கலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)
ஈழத்தவரால் மரபுக் கலைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டு, நிகழ்த்திக் காட்டிய தருணத்தில் வில்லிசைக் கலை என்பது பள்ளிக்கூடத்தில் இருந்து கோயில்கள், வாசிகசாலைகள் என்று கடைக்கோடி ரசிகர்கள் வரை கட்டியெழுப்பப்பட்ட மரபாக விளங்கியது.
அந்த வகையில் இந்த வில்லிசைக் கலைக்குப் பெருமை சேர்த்தவரில் நாச்சிமார்கோயிலடி இராசன் அவர்களின் பங்கு புலம் பெயர் சூழல் வரை தடம் பதித்தது.

இன்று எங்களின் பெருமை மிகு ஈழத்துப் படைப்பாளி  நாச்சிமார்கோயிலடி இராசன் அவர்களது பிறந்த நாளில் அவர் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம நிதிக்கான வில்லிசை நிகழ்வு நடத்த அவுஸ்திரேலியாவுக்கு 2011 ஆம் ஆண்டில் வருகை தந்தபோது நான் எடுத்த பேட்டியைப் பகிர்கிறேன்.
நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்) குறித்து சகோதரி சந்திரவதனா செல்வகுமாரன் எழுதிய பகிர்வையும் தருகிறேன்.
நாச்சிமார்கோயிலடி இராஜன் ஈழத்தின் புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞர்களில் ஒருவர்.

தற்போது புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வருகிறார்.
இவர் இலங்கையின் யாழ்ப்பாணம், நாச்சிமார்கோயிலடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் தற்சமயம் ஜேர்மனியில் பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார். பாடசாலையில் பயின்ற காலத்திலேயே
இவரது கலை ஆர்வம் வெளிப்பட்டது. இவர் வில்லிசை நிகழ்ச்சிகளை 1968இல்
ஆரம்பித்து இற்றைவரை நடாத்தி வருகிறார். 1972இலிருந்து “நாச்சிமார்கோயிலடி இராஜன்
வில்லிசைக் குழுவை” நடாத்தி வருகின்கிறார். 1993இல் ஜெர்மனியின் றெயினை
ஜெர்மன் தமிழ்ச் சங்கத்தின் வாணி விழாவில் பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமனால்
“ஈழவில்லிசைச் செம்மல்” என்ற பட்டத்தைப் பெற்றார். 1996இல் கனடாவில் நிகழ்ந்த
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் அதன் தலைவர் வீரப்பனால் “வில்லிசைக் காவலர்”  என்ற பட்டத்தைப் பெற்றார்.  ரீ.ரீ.என் தொலைக்காட்சியில் வழக்கமான இதிகாச, புராணக்கதைகள் அல்லாமல் சமகால  புலம்பெயர் வாழ்வுபற்றி பல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளை இவர் வில்லிசைக்கென  உருமாற்றி பாடல்களையும் இணைத்து சிறப்பாக வழங்கியிருக்கிறார். இவற்றுள் சாந்தி ரமேஸ் வன்னியனின் “காசுமரம்”, இராஜன் முருகவேலின் “சாகாவரம்”  சந்திரவதனா செல்வகுமாரனின் “பாதை எங்கே” போன்ற சிறுகதைகளும் அடங்கும். நாடகத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. ஜெர்மனியில் 1993, 1994, 1995, 1998 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் நடைபெற்ற  நாடகப் போட்டிகளில் நான்கு முறைகளும் முதற்பரிசுகளைப் பெற்றுள்ளார்.
பிறேமன் தமிழ் கலை மன்றத்திற்காகபலநாடகங்களை எழுதி இயக்கியுள்ளார்.
மூன்று தடவைகள் சிறந்த இயக்குனருக்-கான தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
1994இல் இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றம் நடாத்திய நாடகப் போட்டியில் “எதிர்பார்ப்புகள்” நாடகம் இவரது இயக்கத்தில் முதற் பரிசு பெற்றது. அதற்காக சிறந்த

இயக்குநராக தெரிவுசெய்யப்பட்டு இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றத்தால்
இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.  1995இல் இராட்டிங்கனில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடாத்திய நாடகப் போட்டியில்

“நீர்க்கோலம்” நாடகம் முதற் பரிசுக்கு தெரிவானது. நீர்க்கோலம் சிறந்த நாடக
பிரதியாக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், அந்த நாடகத்தை
இயக்கியதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும்,
சான்றிதழும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தால் வழங்கப்பட்டது.

1998 இல் எசன் நகரில் ஈழமுரசு பத்திரிகை நடாத்திய நாடகப் போட்டியில் “சுமைகள்”

நாடகம் முதற் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டது. அதற்காக சிறந்த இயக்குநராக
தெரிவு செய்யப்பட்டு ஈழமுரசு பத்திரிகையால் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது
புகலிட திரைப்படத்துறையிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. நினைவுமுகம் திரைப்படத்
திற்கு திரைக்கதை, உரையாடல் எழுதி இணை இயக்கம், தயாரிப்பு ஆகியற்றில்
தடம் பதித்துள்ளார். தொடர்ந்து ஏ.ரகுநாதனின் தயாரிப்பில் பாரிசிலிருந்து தயாரிக்கப்பட்ட
தயவுடன் வழிவிடுங்கள் படத்திலும் நடித்துள்ளார். யாரிவர்கள், பொறி, இப்படியுமா?
ஆகிய குறும்படங்களை எழுதி இயக்கியுள்ளார்.
இவற்றுள் ‘இப்படியுமா’ என்ற குறும்படத்தில் மதி சாந்தி, கவிஞர் மட்டுவில் ஞானகுமாரன்,
பெனடிற்றா, ஞானசெல்வம், ரகுநாதன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஈழத் தமிழரின்
இன்னல்களில் ஒன்றான சீட்டுப் பொறிக்குள் சிக்குப்படுவதால் உண்டாகும் அவலங்களை
சித்தரிக்கும் “பொறி” என்ற குறும்படத்தை சுவிசைச் சேர்ந்த அஜீவன் ஒளிப்பதிவு செய்ய,
ஜேர்மனி ரமேஷ் தொகுக்க நாச்சிமார் கோவிலடி ராஜனின் கதை வசனம் நெறியாள்கையில் 
ராமகிருஷ்ணன் (கொலண்ட்) தங்கராசா, சித்திரா பெனடிற்றா, நவரட்ணராஜா, யோகநாதன், 
பிரசன்னா மோகன், ஞானச்செல்வன் ஜர்மி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இவற்றோடு இலண்டனில் தயாராகி வரும் ஈழவர் திரைக் கலை மன்றத்தின் நீர்க்கோலம்
திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். பாரிசிலிருந்து தயாரிக்கப்பட்ட ஈழத்தவரின் 
முதல் திரைத் தொடர் “நேசங்களு”க்காக திரைக்கதை, உரையாடலில் பங்கெடுத்திருக்கிறார்.
அன்புச் சகோதரர் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்) அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கானா பிரபா
06.04.2020

No comments: