செல்வேந்திரனின் “பாலை நிலப் பயணம்” 📕 நூல் நயப்பு - கானா பிரபாஇந்தக் கொரோனாக் காலத்தில் வீட்டுச் சிறையில் இருக்கும் நாம் அதிக பட்சம் என்ன செய்து விட முடியும் என்பதற்கு நம்மைச் சுற்றியே பல வாய்ப்புகளும், தொழில் நுட்பங்களும் விரவிக் கிடக்கின்றன. இவையெல்லாம் இல்லாத பதுங்கு குழி நாட்கள், பொருளாதாரத் தடை, மின்சாரத் தடை என்று ஐந்து ஆண்டுகள் தொண்ணூறுகளின் முதற் பாகத்தை ஈழத்தில் கழித்தவர்கள் அனுபவ ரீதியாக ஒப்பு நோக்குவர்.

இந்த யுகத்தின் அரியதொரு சாதனம் கிண்டில் எனும் மின்னூல் பதிப்பு. நெருக்கடியான சூழலில் நமக்குத் தேவையானதை அமேசனில் கிண்டினால் கொட்டுகிறது பல நூறு புத்தகங்கள். வல்லிக்கண்ணனின் “நல்ல மனைவியை அடைவது எப்படி?” (தேவையா இது 😀) முதல் போன வாரம் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் யாரோடு மல்லுக்கட்டினார் போன்ற அக்கப்போர் ஈறாகக் கொட்டிக் கிடக்கிறது.
அவற்றுள் இன்றைய கால நேரத்துக்கு ஏற்றது என்று பொறுக்கியதில் வந்து விழுந்தது செல்வேந்திரனின் “பாலை நிலப் பயணம்” என்ற பயண நூல்.

வானொலியில் நேயர் ஒருவர் வந்து சோக ரசம் பிழியும் பாட்டொன்றைக் கேட்டார்.
நான் அதை மறுதலித்து 
“நல்ல சந்தோஷமான, மன அமைதிக்கான பாட்டைக் கேளுங்கோ இப்போது நமக்குத் தேவை அதுதான்”
என்றேன். அமைதி தரும் நல்லிசை போலத் தான் இந்தப் “பாலை நிலப் பயணம்” படித்து முடித்ததும் எழுந்தது ஒரு திருப்தி.

2019 ஆம் ஆண்டு நவம்பர் முதல் வாரத்தில்
செல்வேந்திரனும், நண்பர்களுமாக எழுத்தாளர் ஜெயமோகன் சகிதம் ஜெய்ப்பூரில் இருந்து அகமதாபாத் வரை சாலை வழியாகச் சென்ற பயணத்தின் நனவிடை தோய்தலாகவே இந்தப் பயண நூல் அமைந்திருக்கிறது. தேதி வாரியாக ஏதும் குறித்து வைத்திருப்பாரோ என்று சந்தேகம் 

நண்பர் செல்வேந்திரனை வலைப் பதிவு காலத்தின் ஆரம்பத்தில் இருந்து பரிச்சயம் 
என்றாலும் அவர் எழுதிய முழு நூலைப் படிப்பது இதுவே முதன் முறை.
தான் ராகுல சாங்கிருத்தியன், ஏ.கே.செட்டியார், ஜெயமோகன் உள்ளிட்டோரைப் படித்ததாகத் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் இந்த நூலைப் படிக்கும் போது இவர்களிடமிருந்து விலகித் தற்கால வாசிப்பு நுகர்தலுக்கேற்ப எப்படித் தன் எழுத்தின் போக்கை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கங்கணம் கட்டியிருப்பாரோ என்ற எண்ணமே எழுகிறது. 

வலைப்பதிவு எழுத்துகளுக்கே உரிய எள்ளல், நக்கல், இணைய உலகக் குறிச் சொற்களை உவமானப்படுத்திய விதம் போன்ற தன்மைகளோடு பயணிக்கிறது இந்தப் பயண எழுத்து. ஜெயமோகன் உட்பட கூடப் பயணிக்கும் நண்பர்களை சகட்டு மேனிக்கு அவர்களின் குணாதிசியங்களோடு பொருத்திச் சகட்டு மேனிக்கு வாருகிறார். அதில் வன்மமோ, தனி நபர் தாக்குதலோ இல்லாத சக நட்பின் எள்ளல் என்பதால் குறித்த இடங்களில் நின்று நிறுத்திக் கலகலக்க வைக்கிறார். சில இடங்களில் அவர் காட்டும் உவமை சமூக வலைத்தளங்களில் அதிகம் புழங்குபவர்களுக்குச் சட்டெனப் பிடிபட்டு விடும் (உதாரணம் சிலைத் திருடர்கள்), அத்தோடு படிப்பதை நிறுத்தி விட்டு இந்த விஷயத்தைத் தேடிக் கூகுளுக்குப் போகாதீங்க வலையுலக கலாய் மொழி வேறு.

குஜராத்தைப் பற்றி எவ்வளவு தெரியும் நமக்கு? அதிகபட்சம் காந்தி குறைந்த பட்சம் மோடி என்ற அளவிலேயே பூகோள ரீதியான தொடர்பில் இருக்கும் நமக்கு இந்த நூல் குஜராத்திலிருந்து அதன் அண்டை அயலின் புவியியல் கூறுகளில் இருந்து அந்தந்தப் பிரதேசங்களின் பண்பாடு, வரலாற்று எச்சங்கள், என்று
பாலை நிலத்தில் அளையும் கால்கள் போல வெகு நிதானமாகப் பயணிக்கும் வாசிப்பனுபவம் கிட்டுகிறது. தான் போன இடங்களில்  கற்பனையில் நம்மை இருத்தும் சரளமான நடை என்பதால் இரண்டு நாட்கள் இரண்டு மணி நேரம்
என்று விறு விறுவென்று படித்து முடித்து விட்டேன்.

செல்வேந்திரனின் பாலை நிலப் பயணத்தில் கவிதைகளோடு பிரமிளும் ஆங்காங்கே வருகிறாரே என்று பார்த்தால்,  பாலை நிலத்தின் அக, புற ஒழுக்கங்களை சங்கப் பாடல்களின் வழியே காட்டுகிறார். இங்கேயும் நாசூக்காக ஒரு இலக்கிய சர்ச்சைக்கு நாட்டாமையாக விளக்கம் கொடுக்கிறார் 😀

வரலாற்றைக் கொடுக்கும் போது தன் பயணம் நெடுக அவற்றைத் தூவி விடுவதால்  ஒரு வரலாற்றுப் புத்தகத்துக்கான கொட்டாவி எழுப்பாத சுவாரஸ்யம் காட்டுகிறது. அங்கேயும் வரலாற்று மாந்தரை ஜாலியாக வம்பிழுத்தும், கலாய்த்தும் பார்க்கிறார்.
புதைந்து போன இந்திய வரலாற்றுப் பொக்கிஷங்கள் மேலை நாட்டு ஆய்வாளர்களின் வழி காட்டலின் பயனாய் தோண்டி எடுக்கப்பட்ட பாங்கை விபரித்த விதம் இவரின் பரந்து பட்ட வாசிப்பனுபவம் வாய்க்கால் வழியே வழிந்தோடி புல்லுக்கும் 
ஆங்கே பொசியும் பாங்கில் நமக்கும் ஒரு அறிவியல் தீனி போடுகிறது.
பாலை நிலப் பயணம் மூலமாக பல்வேறு நூல்களில் படிக்க வேண்டிய வரலாற்றுக் கதைகளின் சுருக்க விளக்கங்கள் முன்னோட்டம் போடுகின்றன.

பிற்சேர்க்கையாக ராஜஸ்தான் ஓவியங்கள் பற்றி எழுதிய குறிப்பை பயண நூலில்
இருக்கும் மொழி நடையில் இருந்து விலகிக் கட்டுரை வடிவில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

இந்த மாதிரிப் பயண நூலுக்கு வலுச் சேர்ப்பது அழகான புகைப்படங்கள், என்னதான் செல்வேந்திரனின் வர்ணனைகள் அவற்றை அகக் கண்ணில் காட்சிப்படுத்தினாலும் கிண்டில் கருவியில் இருக்கும் பெருங் குறை அது காட்சிப்படுத்துவது கருப்பு வெள்ளைப் படங்கள், ஆனால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. உங்கள் கைப்பேசியிலோ அல்லது iPad போன்ற சாதனங்களிலோ Kindle App ஐ நிறுவினால் படங்களை உள்ளது உள்ளவாறான நிறங்களில் காட்டும். இந்த நூலையும் அவ்வாறே வண்ணப் படங்களுடன் பார்வையிட முடியும்.

செல்வேந்திரனின் “பாலை நிலப் பயணம்” இந்த இக்கட்டான காலத்தில் அருமையான வாசிப்பனுவத்தோடு நீட்சியாக அதை அசை போடவும் வைக்கிறது.

கானா பிரபா
09.04.2020


No comments: