கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -08


யாழ். பரி.யோவான் கல்லூரியில் நல்வழிகாண்பித்த  ஆசிரியப் பெருந்தகைகள்
                                                                                
ரி.யோவான் கல்லூரி என்ற அப்பழம்பெரும் பிரசித்தி பெற்ற கல்வி நிலையம் பற்றி எழுதப்பேனா பிடிக்கும்போது, எழுகின்ற எண்ணங்கள் பல்பல. உயிர்க்கின்ற உணர்வுகள் பலப்பல.  வளரிளம் பருவத்திலே தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு பெற்ற கற்றல் அனுபவங்களும் மற்றும் நினைவுகளும் நெஞ்சுணர்வில் மெல்லெனச் சலசலக்கின்றன.
மிகவும் அக்கறையுடனும் ஆதரவுடனும், எனது அறிவும் மனப்பாங்கும் விருத்தி அடைய அயராது உழைத்த நல்லாசான்களின் கோலங்கள் மனத்திரையில் உயிர்க்கின்றன. அன்னார்தம் குரல்கள் கணீரென்று எதிரொலிக்கின்றன. அவற்றுள் எதை எழுதவேண்டும், எதை எப்படி எழுதவேண்டும் என்ற இடர்ப்பாட்டுடன், பரி. யோவான் நனவோடை சுரக்கின்றது.
1938 ஆம் ஆண்டு, அங்கு கல்வி பயிலத்துவங்கிய காலத்தில், கீழ் நிலைப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி என மூன்று பிரிவுகள் இருந்தன. கீழ் நிலைப்பள்ளியில், துவக்கம் – முதலாண்டு – இரண்டாவதாண்டு – ஐந்தாம் தரம் என நான்கு வகுப்புகள். துவக்க வகுப்பிலேதான் நான் அனுமதிக்கப்பட்டேன். கிராமப் பாடசாலை ஒன்றிலிருந்து ஆங்கில அறிவு எதுவுமின்றி விதியின் கையினால் அங்கு தூக்கி வைக்கப்பட்டவன் நான்.   புத்தம் புதிய சூழலையும் புதிய பல அனுபவங்களையுந் தந்து ஊரிலேயே என்னைக் கலாசாரத் திகைப்புக்குள் மூழ்கவைத்த அனுபவம் அது.
கிராமப் பள்ளியிலிருந்து, நகரப்பள்ளிக்குச் சென்ற புதிய அனுபவம். சூழல் புதிது, சக மாணவர் புதியவர், ஆசிரியர்கள் புதியவர்கள். இத்தனைக்கும் மேலாக, குடும்பத்தவரைப் பிரிந்து, கல்லூரி விடுதியிலே வாழவேண்டிய நிலை. இந்த நிலையிலும், அன்றைய அந்த விடுதி வாழ்க்கை அனுபவம், பள்ளிக்கூடத்துக் கல்வி அனுபவம் போல முக்கியத்துவம் வாய்ந்தது என்பது என் நெடுநாளைய கணிப்பு. குறிப்பாக, ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகப்பயின்று வாழ்வதற்கு களம் அமைத்த காலம்  அந்த விடுதி வாழ்க்கைக் காலம் என்பேன்.
ஒன்பது வயதுச்சிறுவன். இரவோடு இரவாக வீட்டாரைப்பிரிந்து வாழவேண்டிய நிலை.  கிராமத்து வாழ்வை மறந்து நகர வாழ்க்கை    முறையுடன் இணங்கி வாழவேண்டும். படுக்கை, உடைகள், சொந்தப்பொருள்கள் போன்றவற்றை பேணுதற்கும் சில அன்றாட விதிமுறைகளை அனுசரித்து வாழ்வதற்கும் பயிலவேண்டும்.
காலையில் எழுந்து கடன்களை முடித்தபின் காலைப்படிப்பு நேரம் படிக்கவேண்டும். பின்பு உணவுக்குச்செல்லல் வேண்டும்.  அதன்பின் வகுப்புகளுக்குச் சென்று, பின்னேரங்களில் விளையாடி, குறித்த நேரம் திரும்பிக் குளித்து, இரவுப்படிப்பு நேரம் படித்து, இரவுணவு நேரம் போசன சாலைக்குச் சென்று உணவுண்டு… இவ்வாறாக, அன்றாடக்  கருமங்களை எல்லாம் செவ்வனே பயின்ற காலம் அது. படுக்கையை சுத்தமாக வைத்திருத்தல், உடைகளைச் சுத்தமாக வைத்துப் பாவித்தல், சலவைத் தொழிலாளியிடம் துணிகளைக் கணக்கெழுதிக்கொடுத்து மீளப்பெறுதல்… இவைபோன்ற பலவற்றுக்கும் பொறுப்பேற்கப் பயிற்சி பெற்ற காலம் அது.

அத்தகைய அனுபவம் வீட்டில் வசித்து, பெற்றோரும் மற்றோரும் பணிவிடை செய்யும் வேளை பெறமுடியாத ஒரு வளமான பயிற்சி.
இவை தவிர, ஞாயிற்றுக்கிழமைகளில் சென். ஜோன்ஸ் தேவாலய வழிபாட்டிலும் ஞாயிறு சமயக் கல்வி வகுப்புகளிலும் பெற்ற இன்னொரு அனுபவமும் உண்டு. குறிப்பாக போதகர் அருளானந்தரின் பாரியார் நடத்திய ஞாயிறு சமய வகுப்பு,  அனுபவத்துக்குப் புதிய பரிமாணம் ஒன்றை அளித்தது. சைவ சமயத்தவனான நான் விவிலிய நூற் கதைகள் பலவற்றை ஊன்றிக்கேட்டேன். சுவைத்தேன். அவை எல்லாம் மனத நேயக்கதைகள். மனவிழிப்பை ஏற்படுத்தி நோக்கை விரிவுபடுத்திய கதைகள். அறிவை விசாலமாக்கிய அனுபவத்தின் ஆரம்பம் அது என்பதை இன்று உணர்கிறேன்.
யாழ். பரியோவான் கல்லூரியில் நான் சேர்ந்தவேளை, அதிபராகப்பணியாற்றியவர், ஹென்றி  பீற்றோ  பாதிரியார்.  அவர் ஒரு பிரித்தானியர். கிராமத்துச் சிறுவனாக வளர்ந்த நான், வெள்ளையர் ஒருவரைக்கண்டு புதினம் பார்த்தேன் அன்றி வேறு எதுவிதத்திலும் அணுகிப்பழகிய அனுபவம் இல்லை. ஆயினும், ஒரு நினைவுண்டு. நடக்கும்போது நொண்டுவார்.  காலில் ஓர் ஊனம் இருந்தது. காலைச்செவ்வனே அசைத்து நடப்பதற்காகச் சப்பாத்திலிருந்து முழங்கால் வரை ஒரு கம்பிச்சுருள் இணைக்கப்பட்டிருந்தது. முதலாவது உலக மகா யுத்தத்தின்போது பட்ட காயத்தால் ஏற்பட்ட ஊனம் அது என்பதைப்பின்னர் அறிந்தேன்.
நான் கல்லூரியிற் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில், அவர் திடீரென அகால மரணமடைந்தார்.  தொண்டமனாற்றில் நீந்தும்போது சிக்கலில் மாட்டிக்கொண்ட சிறுமியைக்காப்பாற்றினார். எனினும், தன்னுயிரைக்காப்பற்ற முடியவில்லை.  அந்த மரணம் ஓர் உயிர்த்தியாகம்!
அதனால், 1940 ஆம் ஆண்டிலே, வண. ஜே. ரி. அருளானந்தம் கல்லூரி அதிபராகப் பதவி ஏற்றார்.
1950 ஆம் ஆண்டு நான் கல்லூரியிலிருந்து விலகும்வரை, அவரே கல்லூரி அதிபராக இருந்தார். பரி. யோவான் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்ற முதலாவது இலங்கையர், வண. அருளானந்தம் அவர்களே. அவரது காலத்தில், கல்லூரி துரித வளர்ச்சி அடைந்து, நாட்டின் பிரபல்யமான கல்லூரிகளில் ஒன்றாகத் தொடர்ந்து  விளங்கியது. இன்றும் விளங்குகிறது.
தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகிய பல்லின மாணாக்கர் ஒன்றாகக் கல்வி பயின்ற கலாசாலை அது. இந்துக்கள் , கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், பௌத்தர்கள் எனப்பல்வேறு  மத மாணாக்கர் அங்கு பயின்றனர். அதேபோல, ஆசிரியருள்ளும் தமிழர், சிங்களவர், பறங்கியர், மலையாளிகள் எனப்பல்லினத்தவர் பணியாற்றினர். அக்காலத்தில் போதனா மொழி ஆங்கிலம். அதனால் இது நடைமுறையிற் சாத்தியமாக இருந்தது. ஈழத்தின் பல்வேறு மாகாணங்களிலிருந்தும் வந்து, இன – மத – பிராந்திய வேறுபாடின்றி அங்கு வந்து கல்வி பயின்றனர்.
நாட்டிலே பிரபல்யமான கல்வி நிலையமாக அது  விளங்கியதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆசிரியர் கடமை உணர்வு, மாணாக்கர் ஒழுக்கம், பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளின் கவர்ச்சி, விளையாட்டுத்துறை மேம்பாடு, மாணாக்கர் முன்னேற்றத்தில் ஆசிரியர் காட்டிய அக்கறை எனப்பலவற்றைக் குறிப்பிடலாம். 
ஆசிரிய – மாணாக்கர் நல்லுறவும் புரிந்துணர்வும் சிறப்பாகக் கூறவேண்டிய இன்னொன்று. சுருக்கமாக, பரி. யோவான் கல்லூரிப்பாரம்பரியம் என்று ஒன்று அங்கு உயர்ந்து பருத்து நின்ற  ‘மகோகனி  ‘ மரங்கள் போல வேரூன்றி வியாபித்திருந்தது.   
ஆசிரியர் – மாணாக்கர் நல்லுறவும் புரிந்துணர்வும் பற்றிச் சிறப்பாகக் கூறும்போது, சில எடுத்துக்காட்டுகள் அச்சிறப்பைத் தெளிவுபடுத்தும்.
#  நான் ஐந்தாம் தரம் படித்த காலம். வகுப்பாசிரியராக கடமை ஆற்றியவர் ஏ.ஜி.சார்ள்ஸ் என்னும் பறங்கியர். அவரை நாம்                  ‘ சாளி பப்பா  ‘  என்று அழைப்பதுண்டு. தமது வகுப்பிற் படிக்கும் பிள்ளைகளின் வீடுகளுக்குச்சென்று, வீட்டுச்சூழல், வசதிகள் போன்றவற்றை அவதானித்து பெற்றோருடன் உறவாடல் அவரது வழக்கம். முதிர்ந்த வயதினரான அவர், தமது  பழைய சைக்கிள் ஒன்றிலேதான் வீடுகளுக்குச் செல்வார். நேரடி உறவுகொண்டு, தன்னம்பிக்கையைத் தந்த பெரியார் அவர்.
# மேல் வகுப்புகளில் படிக்கும்போது, கணிதம் கற்பித்தவர்  பி.ரி. மத்தாய் என்னும் கேரள வாசி. நீல சிவப்பு நிறப்பென்சில்களால் மிகக் கவனமாக எமது பயிற்சி வேலைகளைத் திருத்துவார். பென்சிலைச்சீவும்போது, வகுப்பு மூலையிலே இருந்த குப்பைக் கூடை அருகே சென்று, அதனுள் சீவுதல் எம்மைக்கவர்ந்த நடத்தை. வகுப்பறையிலே காகிதத்துண்டுகள் சிதறி இருந்தால்,   “ இங்கே வா, அதை எடுத்துக் கூடையிற் போடு “ என்று கூறுவதில்லை.  தாமே அவற்றைப் பொறுக்கிக் கூடையில் இடுவார். அவரின் சிறப்பான வழிகாட்டல் – செயல்மூலம் உணர்த்தல். அதனால் அவர் வருமுன் நாமே அதைக்கவனித்துச் சுத்தஞ் செய்தற்கு முந்துவோம்.
வகுப்பறைக்கு மலர்ந்த முகத்துடன் வந்து இருகை கூப்பி,              ‘வணக்கம்  ‘ என்று பண்புடன் கூறும்   கடவுள் சுப்பிரமணியம் எமது தமிழ் ஆசான். தமிழ்ப்பாட  வேளையில் ஆங்கிலம், லத்தீன் ஆகிய மொழிகளிலும் எடுத்துக்காட்டுகள் கூறிச் சுவை ததும்பக் கற்பித்ததுடன் தூய வெள்ளை வேட்டி சால்வையுடன் தமிழ்க் கலாசார பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவஞ் செய்து நின்ற பேராசான்.
#  ‘ மற்றிக்குலேஷன்  ‘ லண்டன்  ‘இன்ரர் சயன்ஸ்  ‘ வகுப்புகளிற் கற்ற காலத்தில், தூய கணித , பிரயோக கணித பாடங்கள் முடிந்ததும், ஏதும் உதவி தேவை என்றால் சனிக்கிழமை வீட்டுக்கு  வாருங்கோ என்று அன்பழைப்பு விடுத்து தனிச்சிக்கல்களைத் தீர்த்த  பீற்றர் சோமசுந்தரம் என்ற ஆசான், மிகப்பண்பான தர்மவானாக இன்றும் மனத்திரையில் ஒளிர்பவர். ரியூஷன் மூலம் பணம் சேர்த்தவர் அல்லர்!
கல்லூரி வளவிலே வழியிற் சந்திக்கும் போதெல்லாம்  “அப்பு எப்படி..? தம்பிமார் நன்றாகப் படிக்கிறான்களா..? என்று நலன் விசாரித்த அதிபர் ஜே.ரி. அருளானந்தம். இரத்த உறவினர் போன்று உறவுமுறையை வளர்த்த அரும்பெரும் அதிபர்.
 பெயர் குறிப்பிட்ட நல்லாசிரியர் போல, இன்னும் பலரிடம் அங்கு பெற்ற பாடங்கள் உள. அவற்றை எல்லாம் விவரித்தல் எனது குறிக்கோள் அல்ல. நடைமுறையில் சாத்தியமுமல்ல.
ஆசிரியர் பெருமை மட்டுமல்ல. அன்று எமக்குப் பல்வேறு வாய்ப்புகளையும் தந்த பாடவிதானமும் பெருமைப்படத்தக்க ஒன்று. உதாரணமாக, இன்றுள்ள பாடவிதானங்களில் இருந்து அது எவ்விதத்தில் வேறுபட்டிருந்தது என்பதைக் காட்டுதற்குச் சில எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. அவற்றை அடுத்த அங்கத்தில் பாரக்கலாம்.
( தொடரும் )











No comments: