டோக்கியோ ஒலிம்பிக் 2020; அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா தொற்று!
வூஹான் நகரம் 65 நாட்களின் பின் திறப்பு
ஸ்பெயினில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 5,000 ஐ தாண்டியது
டோக்கியோ ஒலிம்பிக் 2020; அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு
Tuesday, March 24, 2020 - 11:46am
கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்று காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டிக் பவுண்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் குழுவிடமிருந்து கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இதனை உறுதியாகக் கூற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் இவ்வருடம் ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஓகஸ்ட் 09 ஆம் திகதி வரை இடம்பெற ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ கோடைகால ஒலிம்பிக்கில் தமது விளையாட்டு வீரர்கள் பங்கேற்பது நிச்சயமற்றது என, பிரிட்டிஷ் ஒலிம்பிக் சபை கூறியதை அடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியன தாங்கள் இவ்வருட ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என ஏற்கனவே அறிவித்துள்ளன. நன்றி தினகரன்
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா தொற்று!
Wednesday, March 25, 2020 - 5:29pm
பிரிட்டிஷ் மகுடத்திற்கான இளவரசர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ், சார்ள்ஸ், கோவிட்19 நோயினால் பீடிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
71 வயதான அவரின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படவில்லை என, ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
வூஹான் நகரம் 65 நாட்களின் பின் திறப்பு
Saturday, March 28, 2020 - 6:32pm
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவினுடைய வூஹான் நகரின் ஒரு பகுதி மீளத் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று உருவெடுத்ததை அடுத்து, குறித்த நகரம் சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டிருந்தது.
குறித்த நகரம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நகரத்தினுள் பொதுமக்கள் உள்நுழைய அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், வெளியேற அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தற்போது வூஹான் நகரிலுள்ள புகையிரத நிலையத்தில் பொதுமக்கள் ஒன்றுகூடியதை அவதானிக்க கூடியதாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹுபே மாகாணத்தின் தலைநகரான வூஹானில் 62,098 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். இவர்களில் 3,177 பேர் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
ஸ்பெயினில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 5,000 ஐ தாண்டியது
Saturday, March 28, 2020 - 5:54pm
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5,000 ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 832 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், இந்நோய்த் தொற்றுக் காரணமாக 5,690 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதோடு, 72,248 பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
உயிரிழப்புகளை பொறுத்தவரையில் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதி வரை அந்நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, அங்கு கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அத்தோடு பொதுமக்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அந்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும், இந்நோய்த் தொற்றிலிருந்து 2,928 பேர் குணமடைந்து இது 12,285ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 31 சதவீத அதிகரிப்பு எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நன்றி தினகரன்
No comments:
Post a Comment