இப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம் ------------ பிரமபுத்திரன்


இப்போதே  நீபோனால் நிம்மதி அடைவார்களாம் ------------
கண்ணுக்குத்   தெரியாத    கனமான   சோதனை
காலத்தின்   துன்பம்     கொரோனா  வைரசுக்கு
அறிவியல்  அறிஞர்கள்   மருத்தவர்கள்  மேற்பார்த்து
அவசரமாய்   அனுப்பும்   அவசிய    மடலொன்று------
உலகெல்லாம்  அதிர்ந்து  மக்களெல்லாம்  முடங்கி  
பொழுதெல்லாம்  நினைந்து  பேச்செல்லாம்  நீயாகி
கனவிலும்  கலங்கி   நினைவிலும்   பயந்து
வரப்போறாய்  நீயென்று  வாசல்கள்  மூடி
வருவோரை  தவிர்த்து  ஏக்கத்தில்  தவித்து
வெறுப்போடு  வீட்டுக்குள்  தவிப்போடு  இருந்து
எழுதுகிறேன்  ஓர்மடல்  ஏற்பாயோ  தெரியவில்லை  
கைதொட்டால்  மெய்பட்டால்  உடைகண்டால்  உடன்தொற்றி  
காய்ச்சலுடன்  வருவாயாம்  யாக்கைநோக   வைப்பாயாம்
வரவேண்டாம்  என்றுனக்கு  வலுவாக  சொன்னாலும்
வந்தெமக்கு  கொடுந்துயரை  தந்தேதான்  போவாயாம்
கவனமாக  இருக்கட்டாம்  கதைக்கவும்  வேண்டாமாம்
மெலிதான  இருமல்  சிறிதாக  கேட்டாலும்  
ஓடுகிறோம்  மருத்துவரை  தேடுகிறோம்  அங்கே
திரைக்கப்பால்  அவரும்  இஞ்சலை  நாங்களும்
“இசுக்கை”ப்பில்  இணைந்து  இம்சையைக்   கூறினால்
காய்ச்சல்   குளிருடன்  களைப்பு   மேலிட
மூச்சுத்   திணறி   நெஞ்சும்   நோகுதெனில்
வந்தது   நீதானாம்   வாழ்க்கையே   போச்சுதாம்
செத்தாலும் கண்ணிலை காட்டாமல் எரிக்கினாமாம்  
இளையோர்  முதியோர்  இருவரிலும்  அதிவிருப்பாம்
வந்திட்டால் மீட்சியில்லை வானகம்தான் செல்வோமாம்
வகைவகையாய்  கதைகள்    தொகைதொகையாய்  உலாவுகிது  எல்லோரும்  வைத்தியர்தான்  புத்திசொல்லும்  பெரியவர்தான்
“வாட்சப்பு”  “யுரியூப்பூ”  இன்னும்பல  வழிகள்தேடி  
சுடச்சுடவே  செய்திகளை   சுற்றிச்சுற்றி  பரப்புகினம்
கடைப்பிடிக்க  மறுக்கினம்  மற்றவையை   முடுக்குகினம்
ஐயையோ  கொடுமையென்று  ஆண்டவனை  தேடினால்
அங்கேயும்  நீதானாம்  ஆதிக்கம்  செய்கின்றாய்
எட்டத்தே  நின்று  கையாட்டிக்   காட்டி
சென்றிடுக  அப்பிடியே  சேதியிது   நல்லதென
கும்பிடாது  திரும்பி  கூட்டமில்லா வீதியில்
உள்ளிமல்லி இஞ்சிகாயம் உண்டால்நீ  வாராயென்று
கடைப்பக்கம் தேடியோடி  அடிச்சுபிடிச்சு  உள்ளேபோய்   கட்டிப்புரண்டு  சண்டையிட்டு கடைக்குள்ளே  தேடினால்  அங்கேயும்    ஒன்றுமில்லை அவலமே என்றெண்ணி

வெறுங்கையை  வீசிக்கொண்டு   வேதனையாய்   வீடுவர
வல்லமை  இல்லையென  வாழ்கைத்துணை  குறைசொல்ல  எங்கள்நிலை  கொஞ்சம்   நல்லாவே  நீகேளன்  
ஆளுக்காள்  சினந்து   கைகொடுக்க  மறுத்துவிட்டு  
பக்கத்தில்   இருப்பவனை  பார்க்காமல்  மனம்வெறுத்து
என்கையே  எனக்கு  எதிரியென்று  உருவாக்கி
வருத்தத்தை  போக்கிடவே  “வக்சீன்”ஐ  தேடவைத்து
“வக்சீன்”  கிடைக்காமல்   அறிவியலை  குழம்பசெய்து
சீவி   உண்டென்றால்  வேலையுண்டு  என்றவனை
சீவி  உண்டென்றால்  தூரே   ஓடவிட்டு
எப்போதும்  உன்எண்ணம்    எங்குமே  உன்நினைப்பு   கொடுமைக்காரன்  நீயென்று  கோபமாய்  திட்டுவேறு  
அடிக்கடி  கைகழுவி  அற்ககோல்  கைக்குப்பூசி
முகமூடி  அணிந்துகொண்டு    ஆவிபோல  நடந்துசென்று   
சுத்தத்தை   காத்தால்  சுகமான  வாழ்வென்று
சத்தமாய்   சொல்லி  சனங்களை  உருவேற்றி  
நித்தமும்   கத்தி  நிலமையை விளக்கியும்  
பயனின்றி  இன்னும்  பரம்பல்  கூடுதாம்
மருந்தில்லை  என்று  மனங்கலங்கி  வாடி  
வைத்தியம் பார்க்கின்ற மருத்துவரும்  ஏங்க
சாட்சியிடம் உதவி  கேட்பதைக்  காட்டிலும்
சண்டைக் காரனை பார்த்துக் கேட்கிறேன்
கல்லிலும் இருப்பாயாம் காற்றிலும் பறப்பாயாம்
இரும்பிலும் அமர்வாயாம்  உடம்புள்ளும் வாழ்வாயாம்  
காதுகள்  நோக  கதைகளும் பரவுது
போதனைகள் பெருகி  மனம்நொந்து வாடுது
பாரினில்  மக்களை பயப்பட செய்யாமல்   
பழிகாரன் ஆகி பாவத்தை சுமக்காமல்
பட்டினி போட்டு மனிதரை  வதைக்காமல் 
சாவுகளை கூட்டி வரலாறு படைக்காமல்
தரணி முழுவதும்  ஓடியோடிப் பரவாமல்  
இப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம்








No comments: