இயற்கை உணவு - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.
  இன்றோ எமக்குக் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் பலவும் இரசாயன உரம் இட்டு வளர்க்கப்பட்டவைகளாகவே உள்ளன. கடைகளின் ஒரு மூலையில் இயற்கை உரம் மூலம் வளர்க்கப்பட்டவை என எழுதிவைக்கப் பட்டிருக்கும். இவற்றின் விலையோ அதிகம். அத்துடன் நமக்கு வேண்டிய காய் கனிகள் யாவும் இங்கு கிடையா. இப்படி பல சிக்கல்கள். இவற்றில் இருந்து விடிவுண்டா? நகரப்புறவாசிகளால் பயிர்களை வளர்க்க முடியுமா? அவர்கள் வாழும் சிறிய நிலப்பரப்பைக் கொண்ட வீடுகளில் இது சாத்தியமாகுமா? ஆம் என்கிறார் எனது தோழி கீதா மதிவாணன். சின்னஞ்சிறிய தோட்டம் ஆனால் அதில் இருந்து எதை எல்லாம் பெற்றேன், எவ்வாறு சமைத்தேன் என சுவாரசியமாக முகநூலில் படங்களுடன் பகிர்ந்துவந்தார். அதை அடுத்து, தான் வளர்த்த பயிர்களையும் அவற்றால் பெற்ற பயனையும் இயங்குபடமாக்கினார். அது சிட்னியில் ஒரு தமிழ்த்தோட்டம்என்ற பெயரில் நிலாச்சாரல் குழுமத்தின் சார்பில் youtube-ல் வெளியிடப்பட்டது. அவரது வலைப்பூவான கீதமஞ்சரியில், தன் தோட்டத்திற்கு வரும் சின்னஞ்சிறிய பூச்சி வகைகள் பற்றியும் அவை ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்படுகின்றன எனக் கூறி அவற்றால் தோட்டத்தில் ஏற்படும் நன்மைகள் எவை என சுவாரசியமாக எழுதியும் வருகிறார். ஆகாஅவரது சின்னஞ்சிறிய தோட்டத்தில் இத்தனை விந்தையா? நாமும் இயற்கை உரத்துடன் வீட்டில் சமையல் கழிவுகளையும் வைத்து இப்படி தோட்டம் போடலாமே எனத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அவரது சிட்னியில் ஒரு தமிழ்த்தோட்டம்’.
  வீட்டிலேயே இரசாயன சேர்க்கை அற்று வளர்க்கும் இவை அப்பொழுதே பறித்து உண்ணக்கூடியவை. இவற்றை சமைக்காமல் உண்ண முடியுமா? இதற்கு பதில் ஆமாம், முடியும் என்பதே. எனது சென்னை வாழ் நண்பர்கள் இவ்வாறு செய்தும் வருகிறார்கள். எனது அனுபவத்தைக் கூறுகிறேன்.

  நாம் சென்னையில் வாழ்ந்தபொழுது எமது எழுத்தாள நண்பன் பசுமை குமார் வீட்டிற்கு வந்திருந்தான். என்றுமே இல்லாத களையாக காட்சி தந்தான் பையன். புது கல்யாணம் பண்ணியவன். என்ன, பெண்டாட்டி நன்றாக சமைத்துப் போடுகிறாளா, ஆளே மாறிப் போய்விட்டாய். இனிமேல் இயக்குநர் வேலையை விட்டுவிடு. நீயே நடிக்கலாம். M.G.R. போன்று செக்கச் செவேல் என்று இருக்கிறாயேஎன்றேன். (பசுமை குமார் சில படங்களில் உதவி இயக்குநராகவும் இருந்துள்ளார்.)

  பசுமை குமாரோ நான் இப்பொழுது சமைத்த உணவை உண்பவன் அல்ல. எனது மனைவி எனக்கு சமைப்பதே கிடையாது.என்றான். நானும் என் கணவரும், “என்ன, சமைக்காமலே உண்பதா?” எனக் கேட்க, பசுமை குமாரோ தானும் மனைவியும் சமைக்காமலே உண்பதாகவும் அதனால்தான் இத்தனைக் களையுடன் இருப்பதாகவும் கூறினார். அது பற்றி நாம் மேலும் விபரம் கேட்டபோது காய்கனிகளை மட்டுமே உண்பதாகஉம், மற்றும் தானியங்களை ஊறவைத்து முளையுடன் இருப்பவற்றை நன்றாக மென்று உண்ணமுடியும் என்றார். இது போன்று இப்பொழுது பலர் உண்கிறார்கள் என்றார். இவ்வாறு செய்வதால் நோய்நோடி இன்றி வாழலாம் என்றார். எனது கணவரோ எமது சமையல் பாகமானது மூவாயிரம் வருடப் பாரம்பரியத்தைக் கொண்டது. அதை அப்படியே விட்டுவிடலாமா எனவும் வாதாடினார்.

  இது நடந்த சில நாட்களிலே எனது நண்பர் கண்ணன் வந்தார். இவரோ ஒரு நூல் வெளியீட்டாளர். அகிலன் என்ற பிரபல எழுத்தாளரின் மகன். அழகிய தொப்பை அழகான வட்ட வடிவமான முகமும் குழந்தை சிரிப்புடன் கூடிய குட்டிக்கண்ணனையே ஞாபகப்படுத்துவார். அவரோ இளைத்த மனிதரகாக் காணப்பட்டார். என்ன கண்ணன், என்னாச்சு, ஏன் இப்படி இளைத்துவிட்டீர்கள்?” எனக் கேட்டேன். அவரும் பசுமை குமார் போலவே சமையாத உணவையே பச்சையாக உண்கிறாராம். இப்பொழுது சோம்பல் எதுவும் இல்லாது சுறுசுறுப்பாக இருப்பதாகக் கூறினார். அத்துடன் விடாது தனது நண்பர்கள் பலரும் இவ்வாறே உண்பதாகக் கூறினார். ஊரில் பல பிரபலங்களின் பெயர்களைக் கூறி அவர்கள் யாவரும் ஒரு சங்கமாக இயங்கி இந்த வாழ்வுமுறையை பலரிடம் பரப்பி வருவதாக கூறினார். இந்த இயக்கத்தில் பல மேற்கத்திய வைத்தியர்களும் (Allopathy) உண்டு எனவும் கூறினார்.

  இவர்களின் பேச்சால் கவரப்பட்ட நான் அவ்வாறே உணவு உண்ணத் தொடங்கினேன். சில வாரங்களுக்குள்ளாகவே வேண்டாத அதிகப்படியான கனம் குறைந்தது மட்டுமல்லாது, உடலில் ஒரு சுறுசுறுப்புடன் இருந்தேன். என்னைப் பார்த்து எனது கணவரும் என்னுடன் இணைந்தார்.

  சென்னையில் உணவை சமைக்காமல் அப்படியே பச்சையாக உண்பவர் பலர் இருந்தனர். அவ்வாறு உண்பவர்கள் கூறுவது, தாம் சமைக்காமல் பச்சையாகவே உண்ண ஆரம்பித்த பின் தமக்கு இருந்த சிறு சிறு உடல் உபாதைகளும் தம்மை விட்டு அகன்றுவிட்டன என்பதே. சமூகத்தில் பல்வேறு துறைகளில் இருந்தவர்களும் இவ்வாறு தமது உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்திருந்தனர். இவர்களில் சிலர் ஒரு இயக்கமாகவே இணைந்துகொண்டார்கள்.

  அவர்களில் ஒருவர் விவசாயியாகவும் இருந்தார். அவர் தனது காணி ஒன்றிலே கூரை வேய்ந்த குடிசைகளை நிறுவினார். நிலமோ சாணத்தால் மொழுகப்பட்டது. அந்த காணியிலே பல வகையான பழச் செடிகளும் காய்கறித் தோட்டமும் இருந்தது. தென்னை மரங்களுடன் கூடிய காற்றோட்டமான இடம். இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு போய் தங்கலாம். ஆனால் அங்கு சமைக்கக்கூடாது. மரம் செடிகளில் இருந்து பசிக்குத் தேவையான அளவு பறித்து உண்ணலாம். சில சமயங்களிலே காய்களைப் பறிக்க மரத்தில் ஏறவேண்டும் அல்லது கொக்க தடியால் பறிக்கவேண்டும். இப்படி பல உடல் உழைப்பு தேவையாக இருந்தது. பலர் தமது விடுமுறையை இங்கு போய் கழிப்பதாக கூறினார்கள். நகர சந்தடியில் இருந்து விடுபட்டு இயற்கையான காற்றை சுவாசித்து இயற்கையுடன் இணைந்த வாழ்வை தாம் மகிழ்ச்சியாக கழித்ததாக கூறினார்கள்.

  நீரிழிவு நோய் வைத்தியர் (Diabetologist) பத்து நீரிழிவால் தாக்கப்பட்ட நோயாளிகளை மூன்று வாரங்கள் பரிட்சார்த்தமாக இந்த இடத்தில் தங்கவைக்க அழைத்துப் போனார். அவர்கள் தமக்கு வேண்டிய உணவைப் பெறுவதற்கு ஒவ்வொரு வேளையும் அலைந்து, உடல் உழைப்பால் பெற வேண்டியிருந்தது. உணவைத் தேடி நீண்ட தூரம் நடந்தார்கள். அவர்கள் சிறு சிறு தேவைகளும் உடல் உழைப்பு இல்லாமல் கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல, அவர்கட்கு தேவைக்கு அதிகமாக உணவும் கிடைக்கவில்லை. பசி ஆறப் போதுமான உணவே கிடைக்கப் பெற்றது. அங்கு வாழ்ந்த நாட்களில் அவர்கள் சிறுநீரிலோ இரத்தத்திலோ அளவுக்கு அதிகமான சர்க்கரை காணப்படவில்லை என்கிறார் Dr. றம சுப்ரமணியம். தான் இங்கு பரீட்சார்த்தமாக செய்ததைக்கொண்டு மேலும் ஆய்வு நடத்தப் போவதாக Dr. றம சுப்ரமணியம் கூறினார்.

  நாம் வீட்டுத் தோட்டம் வைத்தால் காய்கனிகள் புதியதாகவும் இரசாயன கலப்பற்றும் கிடைக்கும். பின் அவற்றை புதிதாகப் பறித்து உண்டால் வாய்க்கும் ருசியாக இருக்கும். சமைக்காது உண்ணும் பொழுது அதிகப்படியாக உண்ணமுடியாது. இது நான் அனுபவத்தில் உணர்ந்தது. முயன்றுதான் பாருங்களேன்.

No comments: