மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 29 - முருகபூபதி


ரடங்கு  உத்தரவு தளர்த்தப்பட்ட வேளையில், அபிதா, அருகிலிருக்கும் மரக்கறி கடைக்கு விரைந்தாள். கிடைத்துள்ள சந்தர்ப்பத்தில்  வாங்கவேண்டியதை வாங்கிவிடவேண்டும் என்பதில் துரிதமாக இயங்கினாள்.
வீடு அமைதியாக உறங்கியது. லண்டனிலிருந்து வந்துள்ள சண்முகநாதன் இன்னமும் லண்டன் நேரத்தில் உறங்குகிறார். முதல் நாள் இரவு பன்னிரண்டு மணிவரையும்  கொரோனோ வைரஸ் பற்றி பேசிக்கொண்டிருந்த ஜீவிகாவும் மஞ்சுளாவும் சுபாஷினியும்  காலை எட்டுமணியாகியும் இன்னமும் துயில் எழவில்லை.
வீட்டிலிருந்திருக்கவேண்டிய கற்பகம் ரீச்சர், தற்காலிகமாக இடம்பெயர்ந்து மங்களேஸ்வரி ரீச்சரின் வீட்டுக்குப்போய்விட்டாள். ஜீவிகாவின் பெரியப்பா திடுதிப்பென வந்திருக்காவிட்டால், கற்பகம் ரீச்சர் இங்கேயே இருந்திருப்பா.  பாவம், நிலவுக்கு அஞ்சி பரதேசம் செல்வதுபோன்று அவ போனது அபிதாவை வருத்தியது.
எதிர்பாராமல் வந்துவிட்ட கொரோனோவும் லண்டன் காரரும் இந்த வீட்டின் அன்றாட நிகழ்ச்சிநிரலையே மாற்றிவிட்டனர்.  கற்பகம் ரீச்சர் தன்னுடன் இடைவெளியோடு பழகியிருந்தாலும், எடுத்தெறிந்து பேசியிருந்தாலும், அவள் மீது அபிதாவுக்கு பரிவுதான் வந்தது.
மங்களேஸ்வரி ரீச்சர் வீட்டில் எப்படி இருக்கிறாவோ…தெரியவில்லை. தினமும் இரவில் அவவின்  பாதங்களுக்கு பூசிவிட்ட இலுப்பெண்ணெயையும் புறப்படும் அவசரத்தில் விட்டுவிட்டுப்போய்விட்டாவே.
அபிதா,  மரக்கறி வாங்கும் பேக்கையும் எடுத்தவாறு, கற்பகத்தின் அறையிலிருந்த இலுப்பெண்ணெய் போத்திலையும் கையோடு எடுத்துக்கொண்டு வாசல் கதவை சாத்திவிட்டு கேட்டைத்திறந்து வெளியே வந்தாள்.
வீதியில் சனநடமாட்டம் இருந்தது. முன்னாலிருந்த கோயிலில் மணியோசை கேட்டது. ஒலிபெருக்கியில் பெங்களுர் ரமணி அம்மாள் பாடிக்கொண்டிருந்தார். இரவு ஊரடங்குவேளையில் அங்கே அர்த்த சாமப்பூசையும் நடக்கவில்லை. 
மங்களேஸ்வரி ரீச்சரின் வீடு அந்த வீதி முடிவடையும் முச்சந்தியிலிருந்து பிரியும் ஒழுங்கையில் இருக்கிறது என்பது அபிதாவுக்குத் தெரியும்.  மரக்கறி கடையை கடந்துதான் அங்கு செல்லவேண்டும்.  அக்கடை  வாசலில்  ஒருசிலர்தான்  நின்றனர். ஊரடங்கு மீண்டும் வருமுன்னர் சனம் அங்கு கூடிவிடும்.

அபிதா, வீட்டுக்கு அவசியம் தேவையானவற்றை மாத்திரம் வாங்கிக்கொண்டாள். எலுமிச்சம் பழத்திற்கும்  வெள்ளைப்பூண்டிற்கும்தான் தட்டுப்பாடு தெரிந்தது. அபிதாவுக்கு இரண்டு எலுமிச்சம் பழங்கள்தான் கிடைத்தன. இருநூறு கிராமுக்குத்தான் வெள்ளைப்பூடு கிடைத்தது.
எலுமிச்சம் ஜூஸ் ,   பூண்டு  ரசம் குடிப்பதற்கு சனம் அள்ளியிருக்கவேண்டும். 
முச்சந்திக்கு வந்து, ஒழுங்கையில் திரும்பி மங்களேஸ்வரி வீட்டின் கேட்டில் தட்டினாள். கற்பகம் ரீச்சர் இந்த நேரத்தில் தன்னை எதிர்பார்த்திருக்கமாட்டா என்பது அபிதாவுக்கு தெரியும். எல்லோரும் அவவவை மறந்துவிட்டிருந்ததாகவே அவள் மனதிற்கு பட்டது.
சுபாஷினிக்கும் மஞ்சுளாவுக்கும் லீவு எடுத்திருந்தும் நுவரேலியாவுக்கு செல்லமுடியாமல் போய்விட்டதே என்ற ஏமாற்றம். மினைக்கெட்டு தாயகம் வந்தும், ஊரடங்கு உத்தரவினால் யாழ்ப்பாணம் போகமுடியாமல் போய்விட்டதே என்று லண்டன்காரருக்கு ஏமாற்றம். இந்த  ஆள் இப்படி இருக்கும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வந்திறங்கி பயமுறுத்துகிறதே என்று கற்பகம் ரீச்சருக்கு ஏமாற்றம்.  ஜீவிகாவுக்கும் எனக்கும் எதில் ஏமாற்றம்…?  என்று அபிதா யோசித்துப்பார்த்துக்கொண்டே கேட்டில் தட்டினாள்.
மங்களேஸ்வரி ரீச்சரின் கணவன், தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வந்து கேட்டைத்திறந்து,  “ யார்… நீங்கள்..?  “ எனக்கேட்டார்.
 அபிதா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். அதற்கிடையில்,  “ இது  கற்பகம் ரீச்சர் வீட்டிலிருக்கும் சேர்வண்ட்  “ எனச்சொல்லியவாறு மங்களேஸ்வரி வந்து அழைத்தாள்.
 “ மார்க்கட் திறந்திருக்கிறதா..?  “ என்று அபிதாவிடமிருந்த மரக்கறி பேக்கை பார்த்தவாறு மங்களேஸ்வரியின் கணவர் கேட்டார்.
 “ திறந்திருக்கும் அய்யா. கெதியா போங்கோ. நான் உதில கோயிலடியில்  இருக்கும்  கடையில்தான்   வாங்கினேன்  “
            வெளியே பேச்சரவம் கேட்டு, கற்பகம் ரீச்சர் வாசலுக்கு வந்து, “ வா… வா…என்ன இந்தப்பக்கம். வீடு எப்படித்தெரியும்..?  “
“  வாயிருந்தால் வங்காளம் போகலாம் ரீச்சர்  “
 “ ஓமோம். அதனால்தானே, வன்னியிலிருந்து இந்த புதிய ஊருக்கு வந்து சேர்ந்திருக்கிறாய்…! வா… வா… என்ன புதினம்..?  “
 “ ரீச்சர், நீங்க இலுப்பெண்ணெய்யை விட்டிட்டு வந்திட்டீங்க. அதுதான் கொண்டு வந்தேன். இப்போது பித்தவெடிப்பு எப்படி இருக்கு..? அது சரி… ஊருக்குப்போகவில்லையா…?  “
அபிதாவின் அக்கறையான விசாரிப்பினால், கற்பகம் ஒரு கணம் நெகிழ்ந்துவிட்டாள்.  இந்தச்  சீவனை எத்தனை தடவை எடுத்தெறிந்து பேசியிருப்பேன். எதனையும் மனதில் தேக்கிவைத்திருக்காமல், நேசத்துடன் வந்துவிட்டாள். 
மங்களேஸ்வரி அவர்கள் இருவரையும் பேசவிட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
 “ ஏன்… ரீச்சர் வந்தனீங்கள். வாங்கோ ரீச்சர், வீட்டை போவோம். எல்லோரும் வெளியே போகமுடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கியிருக்கிறோம். நீங்கள் அங்கே இல்லாமல் வெறிச்சோடிப்போயிருக்கிறது.  உங்கட திட்டுதல்கள் கேட்காமல் போரடிக்கிறது ரீச்சர்… வாங்கோ போவோம்.  “
அபிதா அவ்வாறு சொன்னதும்,  ‘ இவள் என்ன புதிரான பெண்ணாக இருக்கிறாள்! ‘  இப்படி ஒரு வெகுளியை கற்பகம் அதற்கு முன்னர் பார்த்ததில்லை.
திட்டமிட்டவாறு ஊருக்குப்போகமுடியாமல் போய்விட்ட ஏமாற்றம் கற்பகத்தின் முகத்தில் படிந்திருப்பதை அபிதா அவதானித்தாள்.
“  தொடர்ச்சியாக ஊரடங்கு இருக்கும்போது எப்படி ரீச்சர் உங்கட செமினார் நடக்கும்…? “  என்று நினைவுபடுத்தினாள் அபிதா.
 “ அது ஒரு முழுப்பொய்.  அங்கேயிருந்து  கழன்று வருவதற்கு போட்ட திட்டம். அந்த மனுஷனை எனக்கு கண்ணிலும் காட்டக்கூடாது அபிதா. அதுதான் இப்படி ஒரு பொய். “ 
 கற்பகத்தின் வெறுப்பு கண்களில் ஒளிர்ந்தது.
“  சரி ரீச்சர்… நீங்களும் வெளியே போகவேண்டாம். ஏதும் தேவையென்றால் எனக்கு போன் பண்ணுங்கோ, உடனே வந்துவிடுவேன். இங்கே உங்களுக்கு சாப்பாடெல்லாம் ஓகேதானே ரீச்சர். ரசம் வைத்துக்குடியுங்கோ.  கவனம்… கவனம்… “ அபிதாவின் அக்கறையை கற்பகம் சிரமப்பட்டு ஜீரணித்தாள்.  கண்ணில் துளிர்க்கவிருந்த கண்ணீரை  முகத்தை திருப்பி மறைத்தாள்.
 “ எல்லோரையும் நான் கேட்டதாகச்சொல்லு அபிதா “
 “ சரி… ரீச்சர்…  “
அபிதா அங்கிருந்து வீடு திரும்பும்போது, வீதியில் நடமாட்டமும் வாகனப்போக்குவரத்தும் செறிந்திருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், மக்கள் மூச்சுவிட்டுக்கொண்டு விரைந்து பறந்தனர். 
 “  எல்லாம் கடந்துபோகும்  “ அபிதா தலைகுனிந்தவாறு நடந்தாள். வன்னி இறுதி யுத்தத்தில் நாம் கடக்காத அனுபவமா…? அதனையும் எவ்வளவோ இழப்புகளுடன் கடந்தோம்தானே…!  இந்தப்  பேரவலமும் கடந்துபோகும்.
ஆதிலட்சுமியின் முன்னுரையுடன் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த வழி  -  தமிழீழப்பெண்களின் கதைத் தொகுப்பு -  அபிதாவுக்கு நினைவுக்கு வருகிறது.  அவளது கணவன் பார்த்திபன் தந்திருந்த அந்தப்புத்தகத்தையும் இடப்பெயர்வின் அவலத்தில் எங்கோ தவறவிட்டவள். எல்லாம் கடந்துபோகும்.  ஆனால்,  நினைவுகள் கடந்துபோகுமா…!? 
ஜீவிகா  உரத்த குரலில் பேசிக்கொண்டிருக்கிறாள்.  அவளுக்கு முன்னால் மஞ்சுளாவும் சுபாஷினியும் ஆளுக்கொரு கோப்பி கப்புடன் அமர்ந்திருக்கின்றனர்.  ஜீவிகா மடிக்கணினியில் ஏதோ தட்டித்தட்டி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசுகிறாள்.
மஞ்சுளா, கைத்தொலைபேசியின் தொடுதிரையை தடவிக்கொண்டே,  “  ஜீவிகா கொஞ்சம் பொறு. உன்னுடைய லெக்‌ஷரை பிறகு கேட்கிறோம்.  இதோ, வாட்ஸ் அப்பில் வந்திருப்பதை வாசிக்கிறன் கேளு.  ஏய் பெண்டுகளா, வீடடங்கியிருக்கும் எல்லோருக்கும் இப்போது பேசுபொருளாக இருப்பது வடிவேலுவும் கவுண்டமணியும் செந்திலும்தான். கொரோனாவால் சனம் சாவது ஒரு பக்கம் இருக்கும்போது,  இதில் வரும் மீம்ஸ் தொல்லைகள்,  மனுஷரை கொரோனாவுக்கு முன்பே  சாகடிச்சிடும்போல் இருக்கிறது. “  எனச்சொன்ன மஞ்சுளா,  “  அபிதா, வாங்க நீங்களும் கேளுங்க -  எங்கள் எல்லோருக்கும் மட்டுமில்லை முழு உலகத்திற்குமே ஒரு செய்தி சொல்லுது.. “
“  சரி… சரி… சும்மா பீடிகை போடாமல் சொல்லு மஞ்சு “  என்றாள் ஜீவிகா.
கைத்தொலைபேசியை பார்த்து மஞ்சுளா பேசத்தொடங்கினாள்.
 “ கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள் அலறல்கள் கதறல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஆச்சரியமானது. ஆம், பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு சொல்கிறது.
1950 இற்குப்பிறகு வேகமாக மாறிய உலகிது. அதுவும் 1990 இற்குப்பிறகு பணமே பிரதானம் என்றாயிற்று. எப்படியும் சம்பாதித்து கொண்டாடு என்ற அளவுக்கு நிலைமை மாறியது.
குறிப்பாக இந்தத் தலைமுறைக்கு பந்த  பாசம், பக்தி, ஞானசிந்தனை என எதுவுமில்லை. மனமும் குணமும் பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலேயே இருந்தது.
உலகின் உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்கவேண்டும் என்ற வெறியோடு இயங்கியது.  அது பாசத்தை மறந்து, கடமையினை மறந்து, கடவுளை மறந்து பணம் எல்லாவற்றையும் காக்கும் என நம்பியது.
இதோ மாநகரங்களின் இன்னொரு பக்கம்:
ஆம், பப்புகள் என குடியும் ஆட்டமும் பாட்டமுமான மையங்கள் காலியாகி கிடக்கின்றன. மசாஜ் சென்டர் என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்த மையங்கள் மூடிக்கிடக்கின்றன.
மது குடி மையங்கள் மூடிக்கிடக்கின்றன. விபச்சாரிகள் சும்மாவே வந்தாலும் வாடிக்கையாளன் தலைதெறிக்க ஓடுகிறான். கடன் சொல்லக்கூடத்  தோன்றவில்லை.
மது ஆலைகள் சானிட்டைசர்கள் தயாரிக்கின்றன.
இளம் தலைமுறையிடம் பெரும் கலாசார சீர்கேட்டை விளைவித்த திரையுலகம் மூடிக்கிடக்கிறது.  தாங்கள்  கடவுளுக்கு நிகர் என கருதிய நட்சத்திரங்கள் மல்லாக்க கிடக்கின்றன.
அவர்களை ஆட்டிவைத்த சக்திகள் ஒடுங்கி இருக்கின்றன.
அய்ரோப்பிய நிலை இன்னமும் மோசம்.
ஆயுத கம்பனிகள் அடைபட்டுக்கிடக்கின்றன. போதை மருந்து பித்தர்கள் தனித்திருந்து தங்களை தாங்களே குணமாக்குகின்றனர்.
அட குடிக்கவில்லை என்றால் சாகமாட்டோம் என சிந்திக்கிறது குடிகாரத் தலைமுறை.
பியூட்டி பார்லர் செல்லாமல் மேக் அப் செய்யாமல்  வாழமுடியுமா? அது சாத்தியமா..? அட ஆமாம் ஆமாம் என ஒப்புக்கொள்கிறது மங்கையர் இனம்.
அரை டவுசர் போடும் வெள்ளைக்காரர் முதல் புடவை கட்டும் தமிழச்சி வரை எல்லா நாட்டு மக்களுக்கும் அவரவருக்கான உண்மையான தேவை என்னென்று இப்பொழுது புரிகிறது.
ஆடம்பரம், ஆட்டம் பாட்டம் வெட்டி பந்தா, நிலையா அழகு , வற்றிவிடும் செல்வம் பின்னால் ஓடிய கூட்டம் ஞானத்தை மெல்ல உணர்கின்றது.
பணம், பணம் என ஓடிய தாயும் தந்தையும் அருகிருக்கக் கண்டு மகிழ்கின்றது மழலையர் கூட்டம்.
நெடுநாளைக்குப்பின்னர், தன் மக்கள் நலம் விசாரித்து ஊட்டிவிடுவதில் கண்ணீர் விடுகின்றது முதியோர் கூட்டம்.
பாவகாரியங்கள் விலக்கப்படுகின்றன. பாவத்தின் கொண்டாட்ட மையங்கள் மூடப்படுகின்றன.
தொழிற்சாலை இயக்கமில்லை. விமானமும் ரயிலும் இயக்கமில்லை என்பதால், காற்றின் தரம் உயர்ந்ததாயிற்று.
ஆட்டமும் பாட்டமுமாய் நான் காண்பதே உலகம், தெய்வம் எனக்கு கைகாட்டி வழிவிடும் என சவால் விட்டவனை எல்லாம் அஞ்சி ஒடுங்கி துப்பாக்கி முனையில் அமரவைத்துவிட்டது காலம்.
தனித்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஞானம் பிறக்கிறது.
உணவு முதல் தொழில் வரை தன் பாரம்பரியத்தை நினைத்துப்பார்க்கின்றான். எவ்வளவு தூரம் விலகி விட்டோம் என்பதை உணர்கிறான். உண்மையில் எது தேவை என்பது அவனுக்குத் தெரிகிறது.
கொரோனாவினை அனுப்பிய சக்தி அதில் சிரிக்கின்றது.
தன் திட்டம் கனவு வேகம் ஆசை எதிர்பார்ப்பு எல்லாம் கண்முன் உடைந்து  அதெல்லாம் மாயை என உணர்ந்து அடங்கியிருக்கிறான் மனிதன்.
பிரமாண்டமான இயற்கையின் முன்னால் தான் தூசு என்பதும் நீர்க்குமிழி வாழ்வு எப்பொழுதும் உடையும் என்பதும் மானிடனுக்கு புரிகின்றது.
அடங்கா யானையினை தனிசெல்லில் பட்டினிபோட்டு அடித்து வழிக்கு கொண்டுவரும் பாகனைப்போல மனிதனை  கட்டி வைத்து பாடம் சொல்லிக்கொடுக்கிறது காலம்.
ஜல்லிக்கட்டு காளையாக வலம் வந்த அவனுக்கு சரியான மூக்கணாங்கயிறு போட்டுக்  கட்டுகிறது காலம்.
சிரியா – துருக்கி போர், சவூதி – ஏமன் போர் கூட நின்றிருக்கிறது. எல்லோருக்கும் பொதுவான காலம்,  அடிக்கும் அடியில் அடங்கி நிற்கிறது போர் வெறிக்கூட்டம்.
எச்சரிக்கின்றது. ஆம், இது எச்சரிக்கை. மானிட இனத்தை மெல்ல எச்சரிக்கின்றது. அதில் மெல்ல ஞானம் பெற்றுக்கொண்டிருக்கிறான் மனிதன். இந்த ஞானம் உலகில் நிலைக்கவேண்டும். உண்மையான மானுடம் மலரவேண்டும்.. “
மஞ்சுளா சொல்லாச்சொல்ல கேட்டுக்கொண்டே ஜீவிகா தனது மடிக்கணினியில் தொடர்ந்து ஏதோ எழுதிக்கொண்டே இருக்கிறாள்.
 “ மஞ்சு,  அந்த வாட்ஸ் அப் மெசேஜை எனக்கும் அனுப்பிவிடு  “ என்றாள் சுபாஷினி.
அபிதா, அவர்கள் மூவரும் அருந்திவிட்டு வைத்திருந்த கப்புகளை எடுத்துக்கொண்டு கழுவச்சென்றாள்.  ஜீவிகா கைகளை உயரத்தூக்கி சோம்பல் முறித்தாள்.அபிதா அவள் அருகில் வந்து  அதுவரையில் ஜீவிகா வேகத்துடன் பதிவுசெய்திருந்ததை  பார்த்தாள்.அக்கட்டுரையின் தலைப்பு:  மரண தண்டனையும் பொது மன்னிப்பும் ! ?  என்றிருந்தது.
( தொடரும் )



No comments: