கோவிட்-19 பற்றி பேராசிரியர் பீட்டர் பியட்


தமிழில்: சிவதாசன் | ஆலோசனை: Dr. கனக சேனா, MD
பேராசிரியர் பீட்டர் பியட் பற்றி…
ஈபோலா வைரஸைக் கண்டுபிடித்த இணை விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் பீட்டர் பயட் லண்டன் ஸ்கூல் ஒஃப் ஹைஜீன் அண்ட் ட்றொப்பிக்கல் மெடிசின் ( London School of Hygiene and Tropical Medicine) பலகலைக்கழகத்தில் கற்பித்து வருபவர். உலக சுகாதார நலன்களில் மிகவும் அக்கறையோடு செயற்படும் ஒருவர். உலகின் மிகப் பிரபலமான ‘வைரஸ் வேட்டைக்காரர்களில்’ ஒருவர் என வர்ணிக்கப்படுபவர். 1976 இல் ஆபிரிக்க நாடான சாயரின் (Zaire) மக்களைக் கொன்று குவித்த கிருமி ஈபோலா வைரஸ் எனக் கண்டுபிடித்த இருவரில் ஒருவர். ஐ.நா. சபையின் செயலாளர் நாயகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட UNAIDS நிறுவனத்தை நிறுவி அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராக, 1995-2008 வரை செயற்பட்டவர். உலகப் புகழ்பெற்ற TED நிறுவனம் நிகழ்த்தும் வருடாந்த நிகழ்வான TEDMED மாநாட்டில் அதன் பணிப்பாளர் ஜே வாக்கர் அவர்களால் கொறோனாவரஸ் பற்றி டாக்டர் பயட்டிடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் தந்த பதில்கள் கீழே:



கே: வைரஸ் என்றால் என்ன?
ப: வைரஸ் என்பது, புரதத்தினாலான வெளிப்போர்வையைக் கொணட RNA அல்லது DNA மரபணுக் குறியீடு (code).
கே: வைரஸ்கள் எவ்வளவு தூரம் அறியப்பட்டவை?
ப: அவை எங்கும் பிரசன்னமானவை. எல்லா வைரஸ்களையும் ஒன்றுசேர்த்தால் அவற்றின் எடை, உலகத்திலுள்ள தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், பக்டீரியாக்கள் அத்தனையும் சேர்த்த எடையைவிட அதிகமானது. மனிதருடைய 10% மான மரபணுக்கள் வைரஸிலிருந்து பெறப்பட்டதுதான். உண்மையில் நாம் வாழும் இக் கிரகம் வைரசினுடையதுதான்.
கே: வைரஸ் பரவலைத் தடுப்பது ஏன் சிரமமாகவிருக்கிறது?
ப: அவை மிக நுண்ணியவை. ஒரு தடவை இருமும்போது மில்லியன் கணக்கில் வைரஸ்கள் நீர்த்துணிக்கைகளுடன் காற்றில் பறக்கிறது.
கே: வைரஸ் எத்தனை சிறியது?
ப: சாதாரண மைக்கிரோஸ்கோப் மூலம் கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு அவை சிறியவை. ஒரு ஊசி முனையில் 100 மில்லியன் கொறோனாவைரஸ்களை அமர்த்தலாம்.
கே: வைரஸ் நுண்ணுயிரிகள் எப்படியாகத் தாக்குகின்றன?
ப: அவை மனிதரின் உடற் கலங்களுக்குள் புகுந்துகொள்வதன் மூலம் தம்மை இனவிருத்தி செய்துகொள்கின்றன. அருகிலுள்ள இதர கலங்களையும், இதர மனிதர்களையும் இதே வழிகளில் தொற்றிக்கொள்கின்றன.
கே: ஏன் அவை கலங்களில் புகுந்துகொள்ள வேண்டும்?
ப: இனப்பெருக்கத்துக்காக. ஒட்டுண்ணிகளைப் போல, வைரஸ்களும் உயிர்க் கலங்களை தமக்குச் சாதகமாக (hijack) மாற்றி தம்மைப்போல் பல்லாயிரக்கணக்கான ‘பிரதிகளை’ச் செய்துகொள்கின்றன. இறுதியில் மனிதக் கலம் இறந்துபோகின்றது.
கே: SARS-CoV2 என அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனாவைரஸினால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?
ப: அதன் கருத்து SARS-CoV2 உங்கள் உடலில் தன்னைத்தானே இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்துவிட்டது என்று பொருள்.
கே: SARS-CoV2 இற்கும் COVID-19 இற்கும் என்ன வித்தியாசம்?
ப: SARS-CoV2 என்பது வைரஸ், COVID-19 என்பது வைரஸினால் பரப்பப்படும் வியாதி.
கே: கலங்களுக்குள் வைரஸ் புகுவது அவ்வளது எளிதானதா?
ப: அது கலங்களைப் பொறுத்தது. வைரஸ் கலங்களுக்குள் புகுவதற்கு முதல் அக்குறிப்பிட்ட வைரஸை ஏற்றுக்கொள்ளக்கூடிய receptor ஐக் கலம் கொண்டிருக்க வேண்டும். ஒரு திறப்பைப் ஏற்றுக்கொள்ளக்கூடிய துவாரம் எப்படியோ அப்படியான துவாரமே receptor. மனித உடலின் எதிர்ப்பாற்றலாகிய நிர்ப்பீடனம் ( immune system ) அநேகமான வைரஸ்களைத் தடுத்துவிடுகிறது. சரியான receptors இல்லாது போனாலும் அவற்றால் கலஙகளுக்குள் நுழையமுடியாது. இக்காரணஙகளுக்காக 99 % மான வைரஸ்கள் எங்களுக்குத் துன்பம் தருவதில்லை.
கே: எத்தனை விதமான வைரஸ்கள் உள்ளன, அவற்றில் எத்தனை மனிதருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை?
ப: பல மில்லியன் வகையான வைரஸ்களில் ஒரு சில நூற்றுக்கணக்கானவையே தீங்கு செய்யக்கூடியவை. ஆனால் புதிய வைரஸ்களும் காலத்துக்குக் காலம் உருவாகின்றன. பெரும்பாலானவை தீங்கு தருவதில்லை.

கே: சராசரியாக ஒருவரைத் தாக்குவதற்கு எத்தனை வைரஸ் துணிக்கைகள் தொற்ற வேண்டும்?
ப: இது பற்றி இன்னமும் அறியப்படவில்லை. ஆனாலும் SARS-CoV2 விடயத்தில் மிகச் சொற்பமானதே போதும்.
கே: வைரஸ் எப்படியான தோற்றமுள்ளது?
ப: ஸ்பகெட்டி (spaghetti) யைப் பந்துபோல் சுருட்டி புரதத்தினாலான கோது ஒன்றிற்குள் அடைத்துவைத்தால் எப்படியிருக்குமோ அதுதான் SARS-CoV2. இந்தக் கோதில் காணப்படும் முட்கள் போன்ற அங்கங்கள் சூரியனின் கதிர்களைப் போல இருப்பதால் அதற்கு ‘கொறோனா’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இக் குடும்பத்தைச் (corona) சேர்ந்த வைரஸ்கள் எல்லாம் அமைப்பில் ஒரே போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும்.
கே: எத்தனை விதமான கொறோனாவைரஸ்கள் மனிதரைத் தாக்குகின்றன?
ப: 7 வகையான கொறோனாவைரஸ்கள் மனிதரிலிருந்து மனிதருக்குத் தாவக்கூடியன. அவற்றில் 4 சிறிதாக தடிமனைத் தோற்றுவிக்கின்றன. மிகுதி 3 வகை மிகவும் ஆபத்தானவை. அவை SARS, MERS மற்றது புதிதாக வந்திருக்கும் SARS-CoV2.
கே: ஏன் அதை ‘novel’ கொன்றாவைரஸ் என ஏன் அழைக்கிறார்கள்.
ப: ‘Novel’ என்றால் மனிதருக்குப் புதிதானது என்று அர்த்தம். எங்கள் உடல் கடந்த 2 மில்லியன் வருடங்களாக இசைவாக்கமடைந்துகொண்டு வருகிறது. ஆனால் இந்த வைரஸ் எங்களுக்குப் புதிது. எமது உடல் இதற்குப் பரிச்சயப்படாததால் அதற்கு எதிரான நோயெதிர்ப்பாற்றலை உருவாக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. குறைந்த எதிர்ப்பாற்றலும், வேகம் கூடிய பரவலும் உயிராபத்தை விளைவிக்கும் அதன் தன்மையும் சேர்ந்த இந்த வைரசை ஒரு மிகவும் ஆபத்தான வகையாகக் கருதவேண்டியிருக்கிறது.
கே: இப்படியான வைரஸ்கள் அடிக்கடி வருகின்றனவா?
ப: அபூர்வமாகவே நடைபெறுகிறது. HIV, SARS, MERS மற்றும் சில இப்படியான வகையில் அடங்கும். இவை போன்று புதிய வைரஸ்கள் இனியும் தோன்றும். இது மனித குலம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை.
கே: புதிய வைரசினால் எவ்வளவு இலகுவாகப் பரவமுடிகிறது?
ப: SARS – CoV2 இருமலின் மூலமும், தொடுகையின் மூலமும் மனிதரிடையே இலகுவாகப் பரவிக்கொள்கிறது. இது ஒரு ‘சுவாசத்தின் மூலம்’ பரவலடையும் வைரஸ்.
கே: இதைவிட வேறு வழிகளாலும் வைரஸ் பரவ முடியுமா?
ப: மலம், சலம் கழிப்புகளுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது. இது குறித்து எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கே: முன்பு அறியப்பட்ட SARS , MERS வைரஸ்களிலிருந்து இது எந்த வகையில் வேறுபடுகிறது?
ப: இவற்றிலிருந்து SARS-CoV2 நான்கு முக்கிய வழிகளில் வேறுபடுகிறது. 1) நோய்த் தொற்றுள்ளவர்கள் முதல் சில நாட்களுக்கு எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லையாதலால் தங்களை அறியாமலேயே நோயைப் பரப்புகிறார்கள். இதனால் யாரைத் தனிமைப்படுத்துவது என்பது எமக்குத் தெரிவதில்லை. 2) 80 % மான தருணங்களில், கோவிட்-19 வியாதி தடிமன், இருமலைக் கொண்ட சாதாரண நோயாக இருப்பதால் நாம் நம்மைத் தனிமைப்படுத்துவதில்லை. அதனால் பலருக்கும் நோயைப் பரப்புகிறோம். 3) இதன் அறிகுறிகளைச் சாதாரண இன்ஃபுளுவென்சாவுடன் குழப்பிக்கொள்வதால் அதன் விளைவுகளைப்பற்றிக் கவலைப்படாமல் நோயைப் பரப்பிக்கொள்கிறோம். 4) தொற்றின் ஆரம்ப நிலையில், வைரஸ் தொண்டைப் பகுதியில் செறிந்து இருக்கிறது. இந்த நிலையில், இருமும்போதும், தும்மும்போதும், பில்லியன் கணக்கில் வைரஸ்கள் காற்றில் பறக்கின்றன. இதனால் தொற்று விரைவாக்கப்படுகிறது.
கே: வைரஸ் நிமோனியாவைத் தோற்றுவிக்கிறதென்றே நான் நினைத்தேன். எப்படி அது தொண்டையோடு தொடர்புபடுத்தப்படுகிறது?
ப: நோய் தொண்டையில்தான் ஆரம்பிக்கிறது. அதனால்தான் பரிசோதனை செய்யப்படும்போது தொண்டைக்குள் இருந்து சளி/திரவத்தை எடுத்து ஆராய்கிறார்கள். தொண்டையிலிருந்து வைரஸ் சுவாசப்பைகளுக்குப் பரவுகிறது. அப்போது அது ‘கீழ்ச் சுவாசப்பைத் தொற்று’ (lower respiratory infection) என அழைக்கப்படுகிறது.
கே: “asymptomatic” என்ற சொல் அடிக்கடி பாவிக்கப்படுகிறது. அதன் கருத்து என்ன?
ப: அதன் கருத்து ‘ஒரு அறிகுறிகளும் காட்டப்படவில்லை’ என்பதே.

கே: நோய்த்தொற்றுக்குள்ளாகியவர்கள் சிலர் எந்தவித அறிகுறிகளும் இல்லாமலேயே இருக்கமுடியும் என்கிறீர்களா?
ப: துரதிர்ஷ்டவசமாக அதில் உண்மை இருக்கிறது. நோய்த்தொற்றுள்ள பலர் முதற்சில நாட்களுக்கு எந்தவித அறிகுறிகளையும் காட்டமாட்டார்கள். பின்னர் சிறிதளவில் இருமலும், காய்ச்சலும் தோன்றுகிறது. இது SARS இற்கு எதிர்மறையானது. அங்கு, ஆரம்ப நாட்களில் தெரியப்படும்படியான அறிகுறிகள் இருக்கும் அதன் பிறகே அது தொற்றும் நிலைக்கு வரும்.
கே: அறிகுறிகள் இல்லாத நிலையிலும் ஒருவர் மற்றவர்களுக்கு நோயைப் பரப்ப முடியுமா?
ப: உண்மைதான். மெதுவாகப் பரப்ப வாய்ப்புண்டு என்பதே நமது பிரச்சினை.
கே: விஞ்ஞானிகள் இதற்கான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்கான சாத்தியமென்ன?
ப: பெரும்பாலும் சாத்தியமாகும். அதில் தோற்றுப்போகவும் கூடும். எதையும் உறுதியாகக் கூறமுடியாது. உதாரணத்திற்கு, HIV தடுப்பு மருந்துக்காக நாம் 35 வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியாமலிருக்கிறது. SARS-CoV2 விற்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முடியுமென்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனால் அதன் திறனையும், பாதிப்பையும் மிகவும் கடுமையாகப் பரிசோதிக்க வேண்டும். அது பலகாலத்தை விழுங்கிவிடும்.
கே: தடுப்பு மருந்தொன்று கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அதை மில்லியன் கணக்கில் மக்களுக்கு ஏற்றுவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கும்?
ப: ஓரிரு மாதங்களில் பரிசோதனைக்கான ‘நோயாளிகள்’ எங்களுக்குக் கிடைத்துவிடுவார்கள். ஆனால் அம் மருந்துகள் பாதுகாப்பானவை என நிரூபிப்பதற்கு குறைந்தது ஒரு வருடமாவது பிடிக்கும். அதன் பிறகு அம் மருந்துகளை அங்கீகரிக்கும் நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெறவேண்டும். எனவே மொத்தமாக 18 முதல் 24 மாதங்கள் பிடிக்கலாம்.
கே: இது ஒரு அவசரகால நிலைமை. அதற்கேன் இத்தனை கால அவகாசம் தேவை?
ப: தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் தாமதமிருக்காது. அதைப் பிறகு விலஙகுகளில் பரிசோதித்து, அதன் பிறகு குறிக்கப்பட்ட தொகை மனிதரில் பரிசோதிக்க வேண்டும். அதுவேதான் காலதாமதத்துக்குக் காரணம்.
கே: நாங்கள் ஏதாவது முன்னேற்றம் கண்டுள்ளோமா?
ப: ஜனவரி 2020 இல் SARS-CoV2 கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு வாரங்களிலேயே தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என்பது நல்ல செய்தி. உலகின் பல நாடுகளின் அரசாங்கங்களும், நிறுவனங்களும் இதற்கான பாரிய நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளார்கள். விஞ்ஞானிகளும் அயராது தடுப்பு மருந்து தயாரிப்பில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.

கே: இந் நாடுகளிலுள்ள விஞ்ஞானிகள் தமக்கிடையே ஒத்துழைக்கிறார்களா அல்லது போட்டி போடுகிறார்களா?
ப: இரண்டும் தான். அது பிழையான விடயமுமல்ல. அதே வேளையில் சர்வதேசங்களிடையேயான ஒத்துழைப்பு ஊக்கம் தருவதாயுள்ளது.
கே: தடுப்பு மருந்து தயாரிப்பதைத் துரிதப்படுத்த முடியாதா?
ப: துரதிர்ஷ்டவசமாக இதற்குக் குறுக்குவழி கிடையாது. மனித உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் சிக்கலானதும், புரியமுடியாததுமாகும். வைரஸ் தன்பாட்டுக்கு இம் மருந்துகளுக்கே இசைவாக்கமடைந்து தன்னையே மாற்றிக்கொண்டுவிடும். குழந்தைகள் முதியவர்களை விட வித்தியாசமானவர்கள். பெண்கள், ஆண்களைவிட, இம் மருந்துகளுக்கு வித்தியாசமான விளைவுகளைக் காட்டலாம். தடுப்பு மருந்து சகலரும் பாவிக்கக்கூடிய அளவுக்கு 100 % பாதுகாப்பாக இருக்கவேண்டும். இதற்காக, இம் மருந்துகளை, வித்தியாசமான அளவைகளில் (dose) ஆரோக்கியமான பல மனிதர்களில், கட்டுப்பாடான வழிகளில் பரிசோதிக்க வேண்டும்.
கே: புதிய வைரஸ் எவ்வளவு தூரம் ஆபத்தானது?
ப: நோய் தொற்றியவர்களில் 1% முதல் 2% வரையானவரை இது கொன்றுவிடுவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். உலக சுகாதார நிறுவனதின் அறிக்கை 3% எனச் சொல்கிறது. இது அண்ணளவானது. பதியப்படாத நோய்த்தொற்றாளர்களையும், தாக்கம் குறைந்த தொற்றாளர்களையும் சேர்த்தால், சிலவேளைகளில் இவ்விகிதாசாரம் குறையலாம்.
கே: சராசரி இறப்பு வீதத்தை நாம் இலக்குவைத்துப் பணிபுரிய வேண்டுமா?
ப: இதனால் வரும் ஆபத்தைப் புரிந்துகொள்ளச் சிறந்த வழி, இது சில குழுவினரைக் கடுமையாகவும், சிலரை இலகுவாகவும் தாக்குகிறது என்பதும் அதற்கேற்பவே விளைவுகளும் ஏற்படுகின்றன என்பதே.

கே: அப்போ எப்படியான இலக்கங்களை அல்லது குறியீடுகளை இலக்குவைத்துப் பணிபுரிவது?
ப: 80% மான தருணங்களில் இது ஒரு சாதாரணமான வியாதி, மீதி 20 % மான தருணங்களில் இது ஆபத்தான நிலைக்குள் சென்றுவிடுகிறது. அப்போது கடுமையான காய்ச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்படும். அவ்வேளைகளில் நோயாளிகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். சிலர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவேண்டி ஏற்படலாம். அவர்களது சுவாசப்பைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பின் பல நாட்கள் ஆபத்து நிறைந்ததாகவிருக்கும்.
கே: எந்தவகை மக்கள் குழுமம் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்?
ப: என்னைப்போல வயதில் முதியவர்கள் (எனக்கு 71 வயது). அடுத்து, நீரிழிவு, சுவாசப்பை சம்பந்தமான வியாதிகளை உடையவர்கள், இருதய வியாதியுடையவர்கள், நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்கள் போன்றோர் கவனமாக இருக்க வேண்டும்.
கே: இக் குழுமங்களைச் சேர்ந்தவர்கள் எப்படியான ஆபத்தை எதிர்நோக்குகிறார்கள்?
ப: அவர்களது இறப்பு வீதம் 10% முதல் 15% வரை செல்லலாம். பல வியாதிகளைக் கொண்டவர்களுக்கு ஆபத்தும் அதிகம். இணையத்தில் இப்படியான விடயங்கள் ஒழுங்காக வெளியிடப்படுகின்றன.
கே: அப்போ, நீரிழிவு போன்ற வியாதிகள் இருப்பவருக்கு ஆபத்து அதிகம், ஏன்?
ப: பொதுவாகவே எந்த வைரஸ் தொற்றுக்கும் இவர்களின் எதிர்ப்பு சக்தி திறமையோடு செயற்படுவதில்லை, குறிப்பாக இந்த வைரஸுக்கு இன்னும் மோசம்.
கே: குழந்தைகளும், இளையவர்களும் மோசமாகப் பாதிக்கப்படுவதில்லை எனக்கூறப்படுகிறது, ஏன்?
ப: அப்படியாகத்தான் கூறப்படுகிறது. கோவிட்-19 இன் இதர செய்திகளைப் போல் இதுவும் உறுதிப்படுத்தப்படவேண்டிய ஒன்று.
கே: அப்படியானால் குழந்தைகளையும், இளையவர்களையும் விட முதியவர்களை ஏன் அதிகமாக SARS-CoV2 தாக்குகிறது?
ப: எங்களுக்குத் தெரியாது. உண்மை தெரிவதற்குக் கொஞ்சம் காலம் எடுக்கும்.
கே: வேறு ஏதாவது அசாதாரணமாகத் தெரிகிறதா?
ப: எந்தவித அறிகுறிகளும் இல்லாதவர்கள்கூட மற்றவர்களுக்கு நோயைக் கொண்டுசெல்ல முடிகிறது என்பது அசாதாரணம்.
கே: கோவிட்-19 ஐப் பருவகால ப்ஃளூ வுடன் ஒப்பிடுகிறார்கள். இதைச் சரியாக ஒப்பிடும் வழியென்ன? அவை இரண்டுமே மோசமானவையா?
ப: பருவகால ப்ஃளூ , அமெரிக்காவில் வருடமொன்றுக்கு 30 மில்லியன் மக்களைத் தாக்குகிறது அவர்களில் 1% த்துக்கும் குறைவானவர்கள் இறக்கிறார்கள். இருப்பினும் அது கணிசமான அளவு. உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு 300,000 பேர் மரணிக்கிறார்கள். ஆனால், சராசரியாக, கொரோனாவைரஸ் 10 முதல் 20 மடங்கு உயிர்கொல்லும் தன்மையுள்ளது. தடுப்பு மருந்தினால்கூட நாம் இதிலிருந்து எம்மைத் தப்பவைக்க முடியாது.
கே: புதிய வைரஸ், ப்ஃளூ வைப் போல் இலகுவாகப் பரவக்கூடியதா?
ப: ஆம்.
கே: ப்ஃளூ வும் வைரசினால் தான் பரவுகிறதா?
ப: ஆம், அது இன்ப்ஃளுவென்சா வைரஸினால் உருவாகிறது. ஆனால் இரண்டு வைரஸ்களுமே வித்தியாசமானவை. ப்ஃளூவிற்கு எடுக்கும் தடுப்பு மருந்தினால் புதிய கொறோனாவைரஸைத் தடுக்க முடியாது. சாதாரண தடிமன் றைனோவைரஸ் (rhinovirus) எனப்படும் இன்னுமொரு கொறோனா வகையினால் உருவாக்கப்படுகிறது. அதற்குத் தடுப்பு மருந்தோ சிகிச்சையோ கிடையாது.

கே: ஒருவரது உடலில் வைரஸ் தொற்றியது முதல் வியாதி எப்படி முன்னெடுக்கப்படுகிறது?
ப: அது பொதுவாக இருமலுடன் ஆரம்பிக்கிறது. பிறகு அது காய்ச்சலாக மாறும். சாதாரணமான காய்ச்சல் பின்னர் கடுமையானதாக மாறும். அதைத் தொடர்ந்து மூச்சுத் திணறல் (shortness of breath) ஏற்படும்.
கே: எப்போது மருத்துவ உதவியை நாடவேண்டும்?
ப: காய்ச்சல் அதிகரிக்கும்போது உங்கள் சுவாசப்பைகள் பாதிக்கப்படுகின்றன. அப்போதுதான் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது. சுவாசிப்பதற்கு மேலதிக உபகரணம் தேவைப்படும். அதற்கு மருத்துவமனைக்குத் தான் செல்லவேண்டும்.
கே: அம்மை (measles), கூவக்கட்டு (mumps), சின்னம்மை (chicken pox) ஆகியவற்றிலிருந்து கோவிட்-19 எப்படி வேறுபடுமிறது?
ப: இந் நோய்களைவிட SARS – CoV2 ஆபத்துக் குறைந்தது. ஆனாலும் இவை பற்றி நிறையத் தகவல்கள் உண்டு. கோவிட்-19 பற்றி இனிமேல்தான் அறியவேண்டும்.
கே: புதிய வைரஸ் அந்தளவு தூரத்துக்கு ஆபத்தானதில்லை என்றால் மக்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
ப: எந்தப் புதிய வரவும் எம்மைக் கொல்கிறது அல்லது நோயாளியாக்கிறது என்றால் பயம் உண்டாகத்தான் செய்யும். இதற்கு ஒரே வழி, அமெரிக்காவில், அரசாங்கத்தின் அறிக்கைகளுக்குச் செவிமடுங்கள் (cdc.gov) இதர நாடுகளிலும் உங்கள் தேசிய சுகாதார அமைச்சுக்களின் அல்லது உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளை இணையத் தளங்களை ஒழுங்காகப் பாருங்கள்.
கே: எத்தனை நாளைக்கு ஒரு தடவை இத் தளங்களைப் பார்வையிட வேண்டும்?
ப: புதிய தகவல்கள் கிடைத்தவுடன் நாங்கள் பதிவேற்றிவிடுகிறோம். அடிக்கடி இத் தளங்களைப் பாருங்கள்.
கே: எப்போதாவது மனிதகுலம் வைரஸ்களை முற்றாக அழித்தொழித்திருக்கிறதா?
ப: ஆம். அம்மை நோய் (smallpox). இது 6 மில்லியன் மக்களைக் கொன்றது. அடுத்ததாகப் போலியோ வைரஸ். இது கிட்டத்தட்ட ஒழிக்கப்படும் நிலையிலிருக்கிறது. அதற்கு கேட்ஸ் அறக்கட்டளை (Gates Foundation) மற்றும் உலக நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். கொள்ளைநோயும் இப்படித்தான்.
கே: இப் புதிய வைரஸ் எப்படி உலகமெலாம் பரவுகிறது?
ப: விமானம், கப்பல், வாகனம். அநேகமாக பயணிகளுடன் ஒட்டிக்கொண்டுதான் செல்கிறது.
கே: அப்போ, ஒவ்வொரு சர்வதேச விமானநிலையமும் வைரஸ் தரையிறங்குவதற்கு வழிவகுக்கின்றனவா?
ப: உண்மையில், அமெரிக்கா உட்பட, அநேகமான நாடுகளில் SARS-CoV2 விமானநிலையங்களிலிருந்து நெடுந்தூர பிரதேசங்களில் ஏற்கெனவே நிலைகொண்டிருக்கிறது.
கே: இந் நோய்த்தொற்று சீனாவில் ஆரம்பித்ததால் அந்நாட்டுப் பயணிகளால்தான் அமெரிக்காவிற்குள் இவ் வைரஸ் கொண்டுவரப்பட்டது எனக் கருதலாமா?
ப: 2019 இல் சீனாவில் இவ் வைரஸ் வெளிப்பட்டதில் இருந்து, உலகநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் 20 மில்லியன் பயணிகள் வந்திருக்கிறார்கள். நான்கு வாரங்களுக்கு முன்னர் சீனாவிலிருந்து நேரடியாக வரும் விமானங்களை அமெரிக்கா தடை செய்திருந்தது. ஆனால் அது வைரஸ் வருவதைத் தடைசெய்யவில்லை. தற்போது சீனாவில் நோய்த் தொற்றுக் குறைந்துகொண்டு வருகிறது. இருப்பினும் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்குள் செல்பவர்களால்தான் புதிய கோவிட்-19 தொற்றுக்கள் அங்கு செல்கின்றன.
கே: எனவே, மூன்று மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையங்களினூடு நடைபெற்ற பயணங்களைக் கட்டுப்படுத்தியிருந்தால், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.
ப: ஆம். “குதிரை லயத்தை விட்டுப் புறப்பட்டுவிட்டது” என்று ஒரு பழமொழி அமெரிக்காவிலுண்டு. சர்வதேச பயணங்களை நிறுத்த இது ஒரு காரணமாக இருக்க முடியாது.

கே: யப்பான் போன்ற ஒரு நாடு ஏன் பாடசாலைகளை மூட வேண்டும்?
ப: இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் இதைச் செய்கின்றன. இதற்குக் காரணம், குழந்தைகள் கிருமிகளின் காவிகளாக இருக்கலாமா என்ற சந்தேகம் விஞ்ஞானிகளிடமுண்டு. கிருமிப் பரவலைத் தடுப்பதற்கு யப்பான் இயன்ற வழிகளையெல்லாம் பாவிக்கின்றது. குழந்தைகள், முதியவர்களைப் போல் கைகளைக் கழுவுவதோ, இதர சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கையாள்வதோ குறைவு. ப்ஃளூ பரவுவதில் அவர்களுக்கு பெரிய பங்குண்டு. இதனால்தான் பல நாடுகள் பாடசாலைகளை மூடுகின்றன.
கே: எனக்குத் தொற்று வந்தால், கிருமியை முற்றாக அழிப்பதற்கோ அல்லது அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கோ ஏதாவது மருந்துகள் உண்டா?
ப: இல்லை. கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை நிறுத்துவதற்கு இதுவரை எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல வித்தியாசமான மருந்துகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு (clinical trials) வருகின்றன. எனவே விரைவில் இதற்கொரு தீர்வு வரும்.
கே: சிகிச்சைக்குரிய மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படுமா? அப்படியானால் எப்போது?
ப: இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறலாமென நினைக்கிறேன். தர்போது பாவனையிலுள்ள சில மருந்துகள் நோயாளிகளிற் பாவிக்கப்பட்டாலும் (off label use) ஆச்சரியப்படுவதற்கில்லை. உதாரணத்திற்கு, HIV வைரஸ் தொற்றுக்குப் பாவிக்கப்படும் மருந்து. சீனாவில் சில மருந்துகள் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வேறு நாடுகளிலும் நடக்கலாம்.
கே: அண்டிபயோட்டிக்ஸ் பாவிக்க முடியாதா?
ப: அவசரமென்று வரும்போது எல்லோரும் அதையே தேடி ஓடுகிறார்கள். இக் கிருமி ஒரு புதிய வைரஸ், பக்டீரியா அல்ல. அண்டிபயோட்டிக்ஸ் பக்டீரியாத் தொற்றுக்காகவே பாவிக்கப்படுகிறது. வைரஸ் தொற்றுக்குப் பாவிக்க முடியாது.
கே: இணையத்தில் பலவிதமான சிகிச்சைகள் உண்டென்று சொல்கிறார்களே?
ப: பல பொய்யான செய்திகள் வருகின்றன. ஒரே செய்தி, நம்பிக்கையான இரண்டு மூன்று இணையங்களில் வந்தால் அதை நம்பலாம்.
கே: முகவாய்க் கவசங்கள் பாவிப்பது பற்றி? அறுவைச் சிகிச்சையின்போது பாவிக்கப்படும் நீல நிற வகை (surgical masks) அல்லது N95 முகவாய்க்கவசம் பாவனைக்கு ஏற்றவையா?
ப: சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தவிர, முகவாய்க் கவசங்கள் பயனற்றவை. N95 கவசங்கள் உள்ளே வரும் 50% மான வைரஸ்களை நிறுத்திவிடும். அதே வேளை காற்றில் வரும் ஈரத்துணிக்கைகளை அவை முற்றாகத் தடுத்துவிடும்.
கே: முகவாய்க் கவசங்களினால் வரும் நன்மை என்ன? யார் யார் இக் கவசங்களை அணிய வேண்டும்?
ப: முறையாகப் பொருந்தக்கூடிய, சரியான கவசங்களை அணிவதால் நோயாளிகள் இருமும்போது வெளிப்படும் கிருமிகளிலிருந்து ஒருவரைப் பாதுகாக்ககலாம். அதன் கருத்து, மற்றவர்களிடமிருந்து உன்னைக் காப்பதற்கானது அல்ல முகவாய்க் கவசம். உன்னிடமிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுவதற்கே அது அவசிமாகிறது. இக் கவசம் இன்னுமொரு நன்மையையும் தருகிறது – அதாவது நீயே உனது வாயையும் மூக்கையும் தொடாமலிருக்க வழிசெய்கிறது. உன்னுடைய கைகளில் வைரஸ் இருப்பின் அதிலிருந்து கவசம் உன்னையும் காப்பாத்துகிறது. கவசங்கள் முன்னணி சுகாதார சேவைகள் பணியாளரையும் பாதுகாக்கிறது. அவர்கள் அதை நிச்சயம் பாவிக்க வேண்டும்.
கே: இந்த உலகக் கொள்ளை நோய் தொற்றாமல் நான் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
ப: கைகளை அடிக்கடி கழுவுதல், உனது முகத்தைத் தொடாமலிருத்தல், முழங்கைகளுக்குள் அல்லது கடதாசி / கைக்குட்டைக்குள் இருமுதல் அல்லது தும்முதல், கைகளைக் குலுக்காமலிருத்தல், கட்டியணைக்காமலிருத்தல் ஆகியன நோய்த்தொற்றைக் குறைக்கும். சுகவீனமாக இருக்கிறாயென்று உணர்ந்தால், வீட்டில் இருந்து கொண்டு மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்து அடுத்து என்ன செய்யவேண்டுமென்பது பற்றி ஆலோசிக்க வேண்டும். மற்ற்வர்களைச் சந்திக்கும்போது முகவாய்க் கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.
கே: “mitigation” என்ற சொல்லை விஞ்ஞானிகள் அடிக்கடி பாவிக்கிறார்கள். அதன் கருத்து என்ன?
ப: “Mitigation” என்றால் நோய்ப் பரவலைத் தாமதப்படுத்தல் மற்றும் பொதுச் சுகாதாரச் சேவைகள், பொது வாழ்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் அதன் தாக்கத்தைக் குறைத்தல் என்பனவாகும். இதற்கொரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும்வரை, எம்மால் செய்யக்கூடியது நோய்ப்பரவலைத் தாமதப்படுத்துவது தான். அது மிக முக்கியம்.
கே: வேறு என்ன வழிகளில் நாங்கள் இவ் வைரஸின் பரவலைத் தாமதப்படுத்தலாம்?
ப: நல்ல சுகாதார முறை, மரியாதையான நடத்தை ஆகியன நோய்ப்பரவலைத் தாமதப்படுத்த உதவலாம். அத்தோடு, சமூக இடைவெளி (social distancing) எனப்படும் நெருக்கமற்ற சமூக வாழ்வு, அது வீட்டிலென்றாலும், வேலைத் தலங்களிலென்றாலும் கடைப்பிடித்தல், விமானங்களில் பயணம் செய்வதத் தவிர்த்தல், பாடசாலைகளை மூடுதல், பாரிய கூடல் நிகழ்வுகளைத் தடைசெய்தல் எல்லாமே தொற்றைத் தாமதப்படுத்த உதவி செய்யும்.

கே: சில வைரஸ்கள் மற்றவையைவிட விரைவாகப் பரவுமா?
ப: ஆம். அம்மை வைரஸ் (Measles) மிக வேகமாகப் பரவக்கூடியது. ஒரு அம்மை நோயாளி இருந்த அறைக்கு 2 மணித்தியாலங்கள் தாமதித்துப் போறவருக்கும் அந் நோய் தொற்றக்கூடியது. தடுப்பு மருந்து கொடுப்பது குறைக்கப்படும்போது அம்மை தொற்று அதிகரிக்கிறது. அது மிகவும் கஷ்டமான ஒரு தொற்றுநோய். தடிமனும் இலகுவாகப் பரவும் நோய். HIV மிகவும் தாமதமாகவே பரவுகிறது. இருப்பினும் அதனால் 32 மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ளார்கள்.
கே: இந்த SARS-CoV-2 வைரஸை நிறுத்த என்ன தேவைப்படுகிறது?
ப: இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. ஆனால் அதை நிறுத்த சீனாவுக்குத் தெரிந்திருக்கிறது. முற்றாக ஒழிப்பதற்கு தடுப்பு மருந்து ஒன்றினால்தான் முடியும்.
கே: அமெரிக்கா போன்ற சனத்தொகையுள்ள இடம் முழுவதற்கும் வைரஸ் பரவ எத்தனை காலம் எடுக்கும்?
ப: SARS-CoV-2 வைரஸ் ஒவ்வொரு வாரமும் தனது பரவலை இரட்டிப்பாக்கிறது. உதாரணத்திற்கு, 50 பேரில் ஆரம்பித்த நோய், 14 வாரங்களில் 1 மில்லியன் மக்களைத் தொற்றக்கூடியது.
கே: சுத்தமாக இருப்பதன் மூலம் எந்தளவுக்கு வைரஸ் பரவலைத் தாமதப்படுத்தலாம்? ஆலோசனைகளைப் பின்பற்றுவதால் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா?
ப: மக்கள் எவ்வளவுதூரம் கவனமாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இலக்கங்கள் மாறும். அம் மாற்றங்கள் சிறியனவாக இருந்தாலுங்கூட சுகாதார சேவைகளில் நோயாளிகள் தரும் தாக்கம் குறைக்கப்படும். அது மிக முக்கியம்.
கே: எமது சனத்தொகையில் சில ஆயிரம் நோய்த்தொற்றாளர்கள் மறைந்திருக்கச் சாத்தியமுண்டா?
ப: பல மில்லியன் ப்ஃளூ தொற்றுக்கள் ஒவ்வொரு வருடமும் எமது மக்களிடையே மறைந்திருக்கின்றன. இந்த வருடம் இவற்றில் கோவிட்-19 தொற்றுகளும் உண்டு. அத்தோடு பல நோய்த்தொற்றாளர்கள் அறிகுறிகளைக் காட்டுவதில்லை. அவர்களும் மறைந்திருப்பவர்களே.
கே: நோய்த் தொற்று ‘positive’ என்றால் அதன் சரியான அர்த்தம் என்ன?
ப: அதாவது ஒரு நபரின் உடற் திரவத்தில் வைரஸ் இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்பதே அதன் அர்த்தம்.
கே: எல்லோரும் முடிந்த வரையில் விரைவாகப் பரிசோதனைகளைச் செய்துவிட வேண்டுமென்கிறீர்களா?
ப: கோவிட் -19 இற்கான பரிசோதனைகள் போதுமான அளவில் தயாராக இருக்க வேண்டும். யார் யார் நோய் தொற்றாளர்கள் என்பதோ அல்லது வைரஸ் எப்படிப் பரவுகிறது என்பதோ இதுவரை எமக்குத் தெரியாது. பரிசோதனைகள் மூலமாகவே நாம் போதுமான தரவுகளைச் சேகரிக்கலாம்.
கே: ஏன் தென் கொரியா வாகனம் ஓட்டும்போதே (drive through) பரிசோதிக்கும் முறையை நடைமுறைப்படுத்தினார்கள்?
ப: நோய்ப்பரவலைத் தாமதப்படுத்துத்த அவர்கள் மிகவும் கடுமையாக உழைத்தார்கள். நோய்த் தொற்றுள்ள ஒவ்வொருவரையும் விரைவாகக் கண்டுபிடிக்க அவர்கள் கையாண்டது வாகனம் ஓட்டும்போதே பரிசோதிப்பது.
கே: மக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறி எது?
ப: இருமல் தான் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியது.
கே: காய்ச்சல் (சுரம்) நோயாளிகளில் அவதானிக்கப்படவேண்டிய அறிகுறிகளில் ஒன்றா?
ப: காய்ச்சல் அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட வேண்டியதும் அதற்கு மருத்துவரைப் பார்க்க வேண்டியதும் அவசியம். இருப்பினும், விமான நிலையங்களிலும், பாதுகாப்புக் கடவைகளிலும் காய்ச்சலை மட்டும் அவதானிப்பதன் மூலம் பல நோய்த்தொற்றாளர்கள் தப்பிப்போக வழிவகுக்கிறது.
கே: சில வைரஸ்கள் மற்றவையைவிட விரைவாகப் பரவுமா?
ப: ஆம். அம்மை வைரஸ் (Measles) மிக வேகமாகப் பரவக்கூடியது. ஒரு அம்மை நோயாளி இருந்த அறைக்கு 2 மணித்தியாலங்கள் தாமதித்துப் போறவருக்கும் அந் நோய் தொற்றக்கூடியது. தடுப்பு மருந்து கொடுப்பது குறைக்கப்படும்போது அம்மை தொற்று அதிகரிக்கிறது. அது மிகவும் கஷ்டமான ஒரு தொற்றுநோய். தடிமனும் இலகுவாகப் பரவும் நோய். HIV மிகவும் தாமதமாகவே பரவுகிறது. இருப்பினும் அதனால் 32 மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ளார்கள்.
கே: இந்த SARS-CoV-2 வைரஸை நிறுத்த என்ன தேவைப்படுகிறது?
ப: இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. ஆனால் அதை நிறுத்த சீனாவுக்குத் தெரிந்திருக்கிறது. முற்றாக ஒழிப்பதற்கு தடுப்பு மருந்து ஒன்றினால்தான் முடியும்.
கே: அமெரிக்கா போன்ற சனத்தொகையுள்ள இடம் முழுவதற்கும் வைரஸ் பரவ எத்தனை காலம் எடுக்கும்?
ப: SARS-CoV-2 வைரஸ் ஒவ்வொரு வாரமும் தனது பரவலை இரட்டிப்பாக்கிறது. உதாரணத்திற்கு, 50 பேரில் ஆரம்பித்த நோய், 14 வாரங்களில் 1 மில்லியன் மக்களைத் தொற்றக்கூடியது.
கே: சுத்தமாக இருப்பதன் மூலம் எந்தளவுக்கு வைரஸ் பரவலைத் தாமதப்படுத்தலாம்? ஆலோசனைகளைப் பின்பற்றுவதால் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா?
ப: மக்கள் எவ்வளவுதூரம் கவனமாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இலக்கங்கள் மாறும். அம் மாற்றங்கள் சிறியனவாக இருந்தாலுங்கூட சுகாதார சேவைகளில் நோயாளிகள் தரும் தாக்கம் குறைக்கப்படும். அது மிக முக்கியம்.
கே: எமது சனத்தொகையில் சில ஆயிரம் நோய்த்தொற்றாளர்கள் மறைந்திருக்கச் சாத்தியமுண்டா?
ப: பல மில்லியன் ப்ஃளூ தொற்றுக்கள் ஒவ்வொரு வருடமும் எமது மக்களிடையே மறைந்திருக்கின்றன. இந்த வருடம் இவற்றில் கோவிட்-19 தொற்றுகளும் உண்டு. அத்தோடு பல நோய்த்தொற்றாளர்கள் அறிகுறிகளைக் காட்டுவதில்லை. அவர்களும் மறைந்திருப்பவர்களே.
கே: நோய்த் தொற்று ‘positive’ என்றால் அதன் சரியான அர்த்தம் என்ன?
ப: அதாவது ஒரு நபரின் உடற் திரவத்தில் வைரஸ் இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்பதே அதன் அர்த்தம்.
கே: எல்லோரும் முடிந்த வரையில் விரைவாகப் பரிசோதனைகளைச் செய்துவிட வேண்டுமென்கிறீர்களா?
ப: கோவிட் -19 இற்கான பரிசோதனைகள் போதுமான அளவில் தயாராக இருக்க வேண்டும். யார் யார் நோய் தொற்றாளர்கள் என்பதோ அல்லது வைரஸ் எப்படிப் பரவுகிறது என்பதோ இதுவரை எமக்குத் தெரியாது. பரிசோதனைகள் மூலமாகவே நாம் போதுமான தரவுகளைச் சேகரிக்கலாம்.
கே: ஏன் தென் கொரியா வாகனம் ஓட்டும்போதே (drive through) பரிசோதிக்கும் முறையை நடைமுறைப்படுத்தினார்கள்?
ப: நோய்ப்பரவலைத் தாமதப்படுத்துத்த அவர்கள் மிகவும் கடுமையாக உழைத்தார்கள். நோய்த் தொற்றுள்ள ஒவ்வொருவரையும் விரைவாகக் கண்டுபிடிக்க அவர்கள் கையாண்டது வாகனம் ஓட்டும்போதே பரிசோதிப்பது.
கே: மக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறி எது?
ப: இருமல் தான் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியது.
கே: காய்ச்சல் (சுரம்) நோயாளிகளில் அவதானிக்கப்படவேண்டிய அறிகுறிகளில் ஒன்றா?
ப: காய்ச்சல் அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட வேண்டியதும் அதற்கு மருத்துவரைப் பார்க்க வேண்டியதும் அவசியம். இருப்பினும், விமான நிலையங்களிலும், பாதுகாப்புக் கடவைகளிலும் காய்ச்சலை மட்டும் அவதானிப்பதன் மூலம் பல நோய்த்தொற்றாளர்கள் தப்பிப்போக வழிவகுக்கிறது.


கே: சீன மருத்துவ மனைகளில் நோய்த் தொற்றாளர் என அடையாளப்ப்படுத்தப்பட்டவர்களில் எத்தனை பேர் காய்ச்சலின்றி வந்திருந்தார்கள்?
ப: மருத்துவ மனைக்கு வந்த நோயாளிகளில் 30% காய்ச்சல் இல்லாதவர்கள்.
கே: தொற்றுக் குறைந்து அருகிப் போனதன் பின்னர் இப் புதிய வைரஸ் திரும்பி வருவதற்கான சாத்தியஙகளுண்டா?
ப: அம்மையை ஒழித்தது போலவோ, போலியோவைக் கிட்டத்தட்ட ஒழித்தது போலவோ ஒழிக்காவிட்டால் SARS-CoV-2 நம்முடனே இருக்கத்தான் போகிறது.
கே: அதன் கருத்து, புதிய கொறோனாவைரஸை ஒழிப்பதற்கு நாங்கள் உலகளாவிய ரீதியில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதா?
ப: மக்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் உதவி செய்யலாம். ஆனால், வைரஸ் புதிய வடிவங்களில் தம்மை மாற்றிக்கொள்ளாத வரைக்கும், தடுப்பு மருந்தும் அவசியம்
கே: புதிய வைரஸ், இதர முந்திய வைரஸ்களைப் போலத் தானாகவே அழிந்துவிடாதா?
ப: அப்படின் நான் நினைக்கவிலை. SARS-CoV-2 ஏற்கெனவே உலகம் முழுவதும் வேரூன்றி விட்டது. இது இனி மேலும் சீன விடயமல்ல. பல்லாயிரக் கணக்கானவர்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகி ஆனால் இன்னும் பரிசோதிக்கப்படாமலிருக்கலாம். அது சீனாவில் மட்டுமல்ல, இன்னும் ஏறத்தாள 100 நாடுகளில் இதுதான் நிலைமை. இன்புளுவென்சாவைப் போல, SARS-Cov-2 வும் ஒரு பருவகாலம் சார்ந்த நோய். அது வெகு நீண்ட காலத்துக்கு எங்களுடன் இருக்கவும் வாய்ப்புண்டு.
கே: இப் புதிய வைரஸ் அலை அலையாக (wave) வரக்கூடியதா அல்லது சுழற்சி முறையில் (cyclic) வரக்கூடியதா?
ப: தெரியாது. ஆனாலும் அது ஒரு முக்கிய கேள்வி. 1918 இல் வந்த கொள்ளை நோய் உலகை மூன்று தரம் சுற்றி வந்தது. தற்போதைய வைரஸ் சீனாவில் , பாடசாலைகளும், தொழிற்சாலைகளும் மீளவும் திறக்கப்படுவதனால் அது இரண்டாவது தடவை வலம் வருகிறது. அதற்கு என்ன நடக்க்ப்போகிறது என்பதைப் பார்த்த பின்னர்தான் நாம் எதையும் உறுதியாகக் கூற முடியும்.
கே: வரப்போகும் ஓரிரு மாதங்களில் எங்களுக்கு ஏதாவது அதிர்அதிர்ஷ்டம் வருமாயின் அது எப்படி இருக்கும்?
ப: வெப்பமான கால நிலை சில வேளைகளில் பரவலைத் தாமதிக்கச் செய்யலாம். அப்படி நடக்குமென்பதற்கு இதுவரை ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லையென்பதும் உண்மை. சிங்கப்பூர் பூமத்தியரேகையிலிருந்து 70 மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கு சிறந்த, வைரஸ் பரவற் கட்டுப்பாடு நடைமுறையிலிருக்கிறது. இருந்தும் வெப்பமான காலநிலையால் அங்கு கிருமித் தொற்றை நிறுத்த முடியவில்லை. SARS-CoV-2 மெதுவாகவும் உறுதியாகவும் இசைவாக்கமடைந்து ஆபத்துக் குறைந்த கிருமியாக மாறினால் அதுவும் அதிர்ஷ்டகரமானது தான். 2009 இல் வந்த பன்றிக் காய்ச்சல் (swine flu) இப்படியாக இசைவாக்கமடைந்திருந்தது. ஆனாலும் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. விரைவாக சிகிச்சை மருந்து அல்லது மருந்துகளைக் கண்டுபிடிப்பதே எமக்குக் கிடைக்கக்கூடிய அதிர்ஷடம்.
கே: இலகுவாக நோய்த் தொற்றுக்குள்ளாகக்கூடியவர்கள் மரணிக்கும் வீதம் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியானதாக இருக்கிறதா?
ப: துரதிர்ஷட வசமாக, நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. நவீன மருத்துவனைகள், நல்ல பராமரிப்பு, போதுமான உபகரணங்கள் உள்ள நாடுகளில் இறப்பு வீதம் மிகவும் குறைவு.
கே: ஒருவருக்கு மருத்துவ மனைச் சிகிச்சை தேவையா அல்லது வீட்டுப் பராமரிப்பு போதுமா என்பதை எப்படி நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?
ப: ஒருவர் 70 வயதுக்கு மேற்பட்டவராயிருந்தாலோ, அல்லது ஒருவருக்கு இதர ஆபத்து விளைவிக்கக்கூடிய வேறு பிரச்சினைகள் இருந்தாலோ, நோய் தீவிரமாவதற்கோ அல்லது மரணத்தில் முடிவதற்கோ சாத்தியஙகளுண்டு. நோய்க்கிருமி பற்றி இன்னும் முழுமையாகத் தெரியாமையால் நாம் நிகழ்தகவைக் கொண்டே தீர்மானங்களை எடுக்கலாம்.
கே: எனக்கு கோவிட்-19 நோய் வரலாமெனப் பயப்பட வேண்டுமா? பீட்டர், நீங்கள் எவ்வளவு தூரம் பயப்பிடுகிறீர்கள்?
ப: நீங்கள் நோய்த் தொற்றுச் சாத்தியம் அதிகமுள்ளவரானால் மட்டுமே கவலைப்பட வேண்டும். ஆனால் முடிவுகளைப் பற்றி எதிர்பாராமல் நோய்த் தவிர்ப்புக்கான அத்தனை முயற்சிகளையும் ஒருவர் எடுக்க வேண்டும். தடிமன், ஃபுளூ நோய்களைப் போன்று, அடுத்த சில வருடங்களில் எல்லோருமே ஒரு வகையில் இத் தொற்றுக்கு ஆளாகவேண்டி வரும். எனவே அறிகுறிகள் தெரிந்ததும் நாமெல்லோருமே வீட்டில் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
கே: உலகிலுள்ள அனைவருமே இந் நோய்த் தொற்றுக்கு ஆளாவார்கள் என்று சொல்கிறீர்களா?
ப: சகல மனிதர்களும் சக மனிதர்களோடு உறவாடுகிறோம், அதனால் எல்லோருமே ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டவர்களே. உயிரியல் இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கிறது. அதிகம் அவலப்படாது ஆகவேண்டியதைச் செய்துகொள்வதே நன்மை பயக்கும்.

கே: நாம் எல்லோருமே இவ் வைரஸ் தொற்றுக்கு ஆளாகப் போகிறோமென்றால், ஏன் அதிலிருந்து தப்புவதற்கு முயல வேண்டும்?
ப: எமது நோக்கம், நோய்த் தொற்றைத் தாமதிக்கச் செய்வது. அதன் மூலம் முன்னணி சுகாதாரா சேவைகள், மருத்துவ மனைகள் மீது குவியும் பொறுப்புகளைக் குறைத்து தீவிர சிகிச்சை தேவைப்படுகிறவர்களுக்கும், இதர அவசர மருத்துவத் தேவைகளோடு வருகிறவர்களுக்கும் சேவைகளை வழங்கும் தயார் நிலையில் இருப்பதுமே எமது தேவை.
கே: நோய்த் தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகள் தொடர்ந்தும் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பும் சாத்தியங்களுண்டு என்று கூறுகிறார்களே?
ப: அப்படியாக இருக்கலாமென்ற சந்தேகம் உள்ளதுதான். ஆனால் இதை உறுதிசெய்ய இப்போதைக்கு எங்களால் முடியாதுள்ளது. மேலும் ஆராய்ச்சிகள் தேவை.
கே: அம்மை நோயைப் போல, ஒருவருக்கு, ஒரு தடவை இத் தொற்று வந்தால் மீண்டும் இந் நோய்த்தொற்று வராமலிருக்குமா?
ப: இன்னும் அதுபற்றிய உறுதியான பதில் எங்களிடம் இல்லை.
கே: இந் நோய்த்தொற்றுக்குள்ளால் வந்த ஒருவருக்கு நிரந்தர நிர்ப்பீடனம் முக்கியமானது. மொத்த சமுதாயத்துக்கும் இப்படியான நிர்ப்பீடனம் அவசியமானதா, ஏன்?
ப: மிக முக்கியமான கேள்வி. தடுப்பு மருந்துகள் எமது உடலின் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதிலும், வைரசிலிருந்து காப்பற்றுவதிலும் முக்கிய மங்காற்றுகின்றன. இதனால் காலம் போகப் போக நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவாகக் குறையும்.
கே: இப் புதிய வைரஸ், ஃபுளூவைப் போல் பருவகாலம் சார்பானதா?
ப: அதைக் கூறுவதற்கு வைரஸ் பற்றி அறிந்த காலம் போதாது. பல மில்லியன் மக்களூடு பரவிவரும் இவ் வைரஸ் எப்படியான புதிய மாற்றஙகளோடு இசைவாக்கமடையப் போகிறது என்பதை இப்போது கூறமுடியாது.
கே: அப்போ, இவ் வைரஸ் புதிய வடிவங்களில், புதிய நோயறிகுறிகளை உண்டாக்குவதற்கான சாத்தியங்களுண்டா?
ப: இது பற்றி முற்றிலும் தெரியாது. புதிய வடிவங்கள் தோன்றினால் அவை பரவுவதற்கு முதல் அவற்றையும் அழிப்பதற்கேற்ற தடுப்பு மருந்துகளை நாம் உடனடியாக உருவாக்க வேண்டும்.
கே: வைரஸ் இயற்கையாகப் புதிய வடிவங்களில் தோன்றினால், அவை உயிராபத்தை விளைவிக்கக்கூடியனவாகவோ அல்லது ஆபத்துக் குறைந்தனவாகவோ இருக்கலாமா?
ப: ஆம், எதுவும் நடக்கலாம். அதை நாம் எதிர்வுகூற முடியாது.
கே: கொறோனவைரஸ் ஆபத்தானதாக மாறினால், எனக்கோ எனது குடும்பத்துக்கோ என்ன நடக்கும்?
ப: அதன் கருத்து, நாமெல்லோரும் அதன் இருப்புக்குப் பழகிக் கொள்ள வேண்டும், அதைத் தவிர்க்கும் முறைகளைப் பேணும் பழக்க வழக்கங்களைக் கையாளப் பழகிக்கொள்ள வேண்டும். எமது முதியவர்களது நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.
கே: இந்த வைரஸ் சமையல் தட்டில் (counter top) 9 நாளைக்கு உயிர்வாழக்கூடியது எனக் கேள்விப்பட்டேன். அது உண்மையா?
ப: SARS-CoV-2 சில மேற்பரப்புக்களில் நீண்ட காலம் வாழக்கூடியது என்பது தெரியும் ஆனால் எத்தனை நாட்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்பட முடியாத ஒன்று.
கே: மானிடத்தின் அதி கொடிய கொள்ளை நோய் 1918 இல், முதலாம் உலகப் போருக்குப் பின்னால் வந்த ஒன்று. அப்போது, இன்ஃபுளுவென்சா வைரஸ் புதிய வடிவத்தை எடுத்தது. அது புத்தம் புதிய வைரஸ் அல்ல. அப்போதய வடிவ மாற்றத்தோடு ஒப்பிடும்போது SARS-CoV-2 எப்படியானது?
ப: 1918 கொள்ளை நோய்க்குக் காரணமான இன்ஃபுளுவென்சா வைரஸைப் போலவே SARS-CoV-2 வைரசும் இலகுவாகப் பரவக் கூடியதும் இறப்பைத் தரக்கூடியதுமாகும். ஆனால் காலம் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். ஒன்றை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். 1918 இல் தற்போதுள்ளது போல சிறப்பான மருத்துவ வசதிகள் இருக்கவில்லை, பக்டீரியாவால் வரும் நிமோனியாவைக் குணப்படுத்த அண்டிபயோட்டிக்ஸ் இருக்கவில்லை. அப்போது பெரும்பாலான மரணங்கள் இன் நிமோனியாவால் (secondary infections) தான் நிகழ்ந்தன.

கே: இப்போது நடப்பது எல்லாம், ‘தவறான எச்சரிக்கை மணிக்கு, நாமெல்லோரும் தேவையற்றுப் பயப்பட்டுச் செயற்பட்டுவிட்டோம்’ என இக் கோடை கடந்த பின்னர் நாம் நமது செய்கையைப் பார்த்து வெட்கப்படுவோமென்று நினைக்கிறீர்களா?
ப: இல்லை. கோவிட்-19 வியாதி ஏற்கெனவே 100 நாடுகளுக்கும் மேலால் பரவிவிட்டது. அது மிகவும் கொடிய தொற்று வியாதி. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாட்டிலும் புதிய தொற்றுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இது பயிற்சிக்காகச் செய்துபார்க்கும் ஒரு செயலல்ல. உண்மையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு.
கே: மனித குலம் கண்டிராத ஒரு புதிய வைரஸ் பல மில்லியன் மக்களைச் சடுதியாகத் தாக்கப் புறப்பட்டிருப்பது நம்ப முடியாத ஒன்று. இப்படியானதொரு நிகழ்வு கடைசியாக எப்போது நடைபெற்றது?
ப: SARS, MERS ஆகியன புதியன. ஆனால் இவ்வளவு தூரத்துக்கு அவற்றின் தாக்கம் இருக்கவில்லை. HIV யும் உலகத்துக்குப் புதியது. 70 மில்லியன் மக்களைத் தொற்றியது அவர்களில் 32 மில்லியன் மக்கள் இறந்து போனார்கள்.
கே: HIV வறிய நாடுகளிலுள்ள மக்களையே அதிகம் தாக்கியது. இந்த வைரஸும் அப்படியானதா?
ப: ஆம். அமெரிக்காவைப் போன்ற பணக்கார நாடுகளில் இறப்பு வீதம் குறைவாகவே இருக்கும். சிறந்த உபகரணங்களும், பராமரிப்பு வசதிகளும் , சேவைகளை நெறிப்படுத்தும் வசதிகளும் இங்கு அதிகமாகையால் வசதி குறைந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் நாம் அதிர்ஷ்டசாலிகள். ஆபிரிக்கா கண்ட நாடுகள் பல பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம். வசதியற்ற நாடுகளை இத் தொற்று அடையும்போது, நாம் பேரழிவுகளைச் சந்திக்கவேண்டி ஏற்படலாம்.
கே: பார்க்கப்போனால், இது குறித்து நீங்கள் நம்பிக்கையுடையவர் போலத் தெரியவில்லை.
ப: பொதுவாக நான் நம்பிக்கையை இழக்காதவன். அதே வேளை நடக்கும் பல சம்பவங்கள் என்னைச் சங்கடத்திலும், அச்சத்திலும் ஆழ்த்துகின்றன. மக்கள், குறிப்பாக நோய்த் தொற்றுச் சாத்தியம் அதிகமுள்ளவர்கள், பயப்படுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல செய்தியும் உண்டு. உலக ரீதியாக மருத்துவத்திலும், விஞ்ஞானத்திலும் பல ஒத்துழைப்புகள் தெரிகின்றன. பல விடயங்களில் அரசாங்கங்களிடையே வெளிப்படைத் தன்மை தெரிகிறது. சீனாவில் தொற்று வீதம் வேகமாகக் குறைந்துகொண்டு போகிறது. ஆனால் அதில் மாற்றங்கள் வரலாம். சிகிச்சை மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் வேகம் தெரிகிறது.
கே: பல விடயங்களில் உங்களுக்கு அதிருப்தி இருப்பதாகச் சொன்னீர்கள். இப் புதிய வைரஸ் பற்றி உங்களது ஆகக்கூடிய அச்சங்கள் என்ன?
ப: நிர்வாகப் போதாமை. கிருமித் தொற்று வேகமாக இருப்பதால், மருத்துவத் துறையை இலகுவாக அது தோற்கடித்துவிடும். உண்மையான தேவைகளுள்ளவர்களை அது புறந்தள்ளிவிடும். இன்னுமொரு அச்சம், மக்களின் தேவையற்ற நடத்தைகளால் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளாகலாம். அதுவும் மக்களின் இன்னல்களுக்குக் காரணமாகலாம்.
கே: அப்போ நாம் எப்படியான வகையில் உளவள ரீதியான தயார்நிலையில் இருக்க வேண்டும்?
ப: பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்போது அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய புதிய தொற்றுக்கள் அறிவிக்கப்படும் என்பதைக் கேட்பதற்கும், இறப்பு வீதம் அதிகரிக்கிறது, குறிப்பாக முதியவர்கள் மத்தியில், என்பதைக் கேட்பதற்கும் உள ரீதியாகத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். உண்மையில் அவை ஒன்றும் புதிய தொற்றுக்கள் அல்ல, அவை முதல் தடவையாக நீங்கள் அறியப்போகும் பழைய தொற்றுக்கள்.
கே: எப்படியான விடயஙகளை முன்னிட்டு நீங்கள் ஊக்கம் கொள்கிறீர்கள்?
ப: 1. நவீன உயிரியல் கழுத்தை முறிக்கும் வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது. 2. பொது மருத்துவ சமூகத்துக்கு அப்பால், உலக சுகாதார நிறுவனம், அரசாங்க தலைவர்கள் ஆகியோரும் இந் நெருக்கடியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள் 3. வைரஸை நாம் உடனடியாவே அடையாளம் கண்டு அதன் மரபணு வரிசையை அறிந்துகொண்டோம் 4. விரைவில் நாம் மருந்தொன்றைக் கண்டுபிடித்துவிடுவோம் என்ற எனது நம்பிக்கை 5. விரைவில் தடுப்பு மருந்தொன்று உருவாக்கப்படும் 6. இது ஒரு உண்மையிலேயே நவீன தகவல் பறிமாற்ற யுகம். பொய்யானதும், ஆபத்தை விளைவிக்கும் செய்திகளைத் தவிர்த்துப் பார்ப்பின் இது எங்களுக்குப் பல வழிகளிலும் உதவியாகவிருக்கப் போகிறது.
கே: அமெரிக்கா எந்தளவுக்குத் தயார்நிலையில் உள்ளது?
ப: அமெரிக்கா இந்தக் கொள்ளைநோயை எதிர்கொண்டு தன்னைத் தயார்செய்துகொள்ள போதுமான காலம் இருந்தது. அதே போலத்தான் இதர பல நாடுகளுக்குமிருந்தது. சீனாவின் எதிர்பாராத பாரிய தனிமைப்படுத்தல் மூலம் நோய்ப்பரவல் தாமதப்படுத்தப்பட்டது பற்றி நாம் நிறையக் கற்றிருந்தோம். இத் தயாரிப்புகளினால், அமெரிக்கா தனது தீவிர நோயாளிகளை ஆரம்பத்திலிருந்தே சரியாகக் கையாளும்.
கே: யார் அதிகம் கவலைப்படுகிறார்கள்?
ப: வசதி குறைந்த நாடுகள் பற்றியே நான் அதிகம் கவலைப்படுகிறேன். ஒவ்வொரு மரணமும் துன்பம் தருவது. சராசரியாக, கொறோனாவைரசினால் 1% முதல் 2% மான நோய்த் தொற்றாளர்கள் மரணமடைவர். அதுவே மிக அதிகம். 1 மில்லியனில் 1% என்பது 10,000 பேர். அதிலும் முதியவர்களைப் பற்றியே நான் அதிகம் கவலைப்படுகிறேன். ஆனால் 98% முதல் 99% மானோர் இந் நோயினால் மரணமடையப் போவதில்லை. எவ்வளவுதான் தடுப்பு மருந்துகளை எடுத்தாலும் பருவகால ஃபுளூ, அமெரிக்காவில் வருடா வருடம் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவிக்கிறது. அது குறித்து எவரும் அவலப்படுவதில்லை. ஃபுளூவோடு எப்படி நாம் வாழப்பழகிக்கொண்டோமோ அதேபோல, ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலும், இதற்கும் பழகிப்போய் வாழ்வைக் கொண்டுபோகவேண்டியது தான்.

கே: இப்படியான கொள்ளை நோய்கள் எதிர்காலத்தில் மேலும் தாக்குவதற்கான சாத்தியங்களுண்டா?
ப: கட்டாயம் உண்டு. ஒரு வைரசின் கிரகத்தில் வாழும் எங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் அதுவுமொன்று. இது முடியக்கூடிய போராட்டமல்ல. நாங்கள் எங்கள் தயாரிப்பில் முன்னேற்றம் காண வேண்டும். இனி வரப்போகும் கொள்ளை நோய்களை எதிர்கொள்ளவும், அடுத்த தடவை வீடு எரிவதற்கு முன்னரே தயார்நிலையிலுள்ள உலகத் தீயணைப்புப் படையொன்றை உருவாக்கவும் வல்ல முதலீடுகளில் இப்போதே நாம் இறங்க வேண்டும்.




No comments: