“கண்டனத்திடையே வளரும் பிள்ளை
கண்டனஞ் செய்யவே பழகிக்கொள்ளும்”
உளவியல் தேவைகளைக் காலமறிந்து செய்த ஆச்சி, எமது உளவியல் தேவைகளையும் தவறாது நிறைவுசெய்தார்.
“ குறு குறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் துழவியும்….
வளருகின்ற பருவம் முதலாகச் சிறாருக்கு உள்ளது உளவியல் தேவை. அன்பான அணைப்பும் ஆதரவான பேச்சும் இன் முகமும் இவைபோன்ற இனிய அனுபவங்களும் சிறுவருக்கு அவசியம். அவை மட்டுமல்ல,
சகித்து வாழுஞ் சூழல் சிறாருக்கு அவசியம். சகிக்கும் சூழலில் வளரும் பிள்ளை தானும் சகித்து வாழும். பொறுமையை கடைப்பிடிக்கும் என்பது உளவியல் உண்மை. பாதுகாப்பு உணர்வுடன் வளரும் பிள்ளை தன்னம்பிக்கை பெற்று வாழும் எனவும், அன்பும் ஆதரவும் பெற்று வளரும் பிள்ளை அகிலத்தை நேசித்து வாழப்பழகும் என்பதுவும் மனித நேயத்தை மதிக்கும் என்பதுவும் உளவியல் தகவல்கள்.
இதை எல்லாம் இன்று நாம் படித்தறிகிறோம். அறிந்தும் கூட நடைமுறையிற் கடைப்பிடிப்பதற்கு வழியின்றி அல்லற்படுகிறோம். தேவையின்றி உரத்துப்பேசுதல் சிறுவர் மனசில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் படித்த யாவரும் இன்று அறிவர்
ஆயினும், இன்றைய அவசர உலகில் அவை அலட்சியப்படுத்தப்படுகின்றன. இந்த உளவியல் தத்துவங்களை ஆச்சி படித்தறிந்தது கிடையாது. நகரவாக்கமும் நவீனத்துவமும் பெறாத எமது கிராமத்திலே, அன்று இந்த உளவியல் தத்துவங்களை நடைமுறைப்படுத்தியவர், எமது ஆச்சி.
வளரும் சிறாரை வழிப்படுத்துவது அவர்கள் வாழுகின்ற சூழல். அந்தச் சூழல் மொழியையே அவர்கள் உள்வாங்கித் தமதாக்கிக்கொள்கின்றனர். சூழலில் அவதானிக்கும் நடத்தையே பிள்ளையின் நடத்தையாகிறது. பிள்ளை செவிமடுக்கும் சொற்களஞ்சியமே நாளடைவில் பிள்ளையின் சொற்களஞ்சியம் ஆகிறது. எடுத்ததற்கெல்லாம் கண்டித்தால்….
கண்டனத்திடையே வளரும் பிள்ளை
கண்டனஞ் செய்யவே பழகிக்கொள்ளும்
இன்று, தொழிலுக்குச் சென்ற தாயும் தந்தையும் எப்போது வீடு திரும்புவர் என்ற அங்கலாய்ப்புடன் பிள்ளை வீட்டிற் காத்திருக்கிறது. வந்தவுடன், இன்முகத்தையும் இன்சொல்லையும் எதிர்பார்க்கிறது. ஆனால், அப்பெற்றோர் என்ன செய்கிறார்கள்…? தம் வீட்டுக்கு வரும்போது தொழில் நிலையச் சுமைகளையும் சுமந்துகொண்டு வீடு வருகிறார்கள். வீடு வந்து சேர்ந்ததும் சேராததுமாக அம்மனச்சுமைகளை இறக்கும் சுமைதாங்கிகளாகப் பிள்ளைகள் அகப்படுகின்றார்கள். யார் மீதோ உள்ள சுமைகளை எல்லாம் இறக்கி வைத்தற்குப் பிள்ளைகளைச் சுமைதாங்கிகள் ஆக்கும் பெற்றோர் பலர்.
அவர்கள் சிறு பிள்ளைகளின் உளவியலையும் நம்பிக்கையையும் எத்துணை பாதிக்கின்றோம் என உணர்வதில்லை. பிள்ளைகள் வெறும் சடப்பொருள்கள் அல்ல. மாறாக, உயிரும் உணர்வும் உள்ளவர்கள். இன்று இந்த உளவியல் உண்மைகளை எல்லாம் அறிவதற்கு போதிய வாய்ப்பு எமக்குளது. ஆனால், அன்று இந்த உளவியல் தத்துவ அறிவுபெற்ற - படித்தறிந்தவர் அல்ல ஆச்சி. அனுபவம் என்ற ஒரே ஒரு கல்வி முறையிலேதான் ஆச்சி இவற்றைப்பயின்று நடைமுறைப்படுத்தினார்.
அடுத்து, என் ஆச்சியின் தர்ம சிந்தனை பற்றியும் விரும்பத்தகுந்த மனப்பாங்கு பற்றியும் உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய உயர்வு பற்றியும் குறிப்பிடுதல் பொருத்தமாகும். அதற்கு ஓர் இரு சம்பவங்களை நினைவு படுத்துதல் சான்றாக அமையும் என்பது எனது துணிபு.
சின்னவயசில் ஓடித்திரிந்த களைப்பில் ஏதும் தின்னக்கிடைக்குமா என்று சமயலறைக்கு ஓடுகிறேன். அங்கே மரக்கொத்தாலே அரிசி அளந்து உலையில்போட ஆச்சி தயாராகிறார்.
உலையில்போடுமுன் ஒரு பிடி அரிசி எடுத்து ஒரு மூலையிலே இருந்த ஓலைப்பெட்டியுள்ளே அதைப்போடுகிறார். “ அது ஏன் ஆச்சி…? “ எனக்கேட்டேன். தான தருமம் பற்றிய சிந்தனையையும் அதற்காக தம்மை ஒறுத்து தினமும் வாழ்கின்ற பாங்கையும் விளக்கும் பிடி அரிசி பற்றிய உயர்ந்த இலட்சியத்தை அவர் எனக்குச்சொன்னார்.
எமது உணவுக்கென்று அரிசியை எடுக்கிறோம். அதிலே ஒரு பிடியை பானையிலே போடாமல் பிடித்துவைத்தல் எம்மை ஒறுத்து தான தர்ம நினைவுடன் என்றும் வாழ்வதைக் குறிக்கும். அப்படி எம்மை கட்டுப்படுத்திவைத்து தினமும் சேமிக்கின்ற அரிசியிலே நாடிவரும் ஏழைகளுக்கு வழங்குதல்தான் உண்மையிலே தருமம்.
அவரின் அந்த இலட்சியம் பேச்சளவிலே நிற்கவில்லை. நடைமுறையிலும் இருந்தது. தினமும் சேமித்துவைக்கும் பிடி அரிசியை மட்டுமல்ல எதையும் முழு மனசுடன் எந்நேரமும் ஏழைகளுக்கு வழங்குதல் ஆச்சியின் இயல்பு – பெருந்தன்மை அதற்கும் ஓர் எடுத்துக்காட்டு இதோ:
ஒருநாள், பகல்வேளை, எமக்கெல்லாம் உணவு தந்து தனது கடமைகளை முடித்தபின், பகல் மூன்று மணியளவில் ஆச்சி பகலுணவு உண்ண அமர்கிறார். தட்டிலே உணவை எடுத்து, சாப்பிடுகின்ற வேளையில், ஒரு குரல் கேட்கிறது.
“ அம்மா, அம்மா ! பிச்சை போடுங்க அம்மா..! பிச்சை போடுங்க!
அக்குரலைக்கேட்டவுடன், ஆச்சி தாம் சாப்பிட்டதை நிறுத்தினார். தமது உணவுத்தட்டை ஒருபுறம் வைத்துவிட்டுக் கையைக்கழுவினார். பிச்சை இரந்து நின்றவருக்கு ஒரு சிறு உணவுப்பொதி கட்டிக்கொடுத்தார். அதன் பின்புதான் தமது சாப்பாட்டைத் தொடர்ந்தார். இத்தகைய பெருந்தன்மை பற்றி நான் எனக்குள்ளே வியந்த நாள்கள் பல!.
இச்சந்தர்ப்பத்தில் நான் முன்னர் எழுதிய கவிதையை இங்கு தருகின்றேன்.
பிடி அரிசி
சின்ன வயசில்.. திரிந்த களைப்பில் எதும்
தின்னும் விருப்பு எழவே செல்கின்றேன்- என் ஆச்சி
என்றும்போல் அங்கே எடுத்து மரக்கொத்தால்
அன்றும் அளக்கின்றாள் குத்தரிசி!- சென்று அடுத்தோர்
மூலை அருகினிலே மூடிக்கிடந்த பனை
ஓலைப் பழம்பெட்டி ஒன்றுள்ளே
கோலியவள் - ஓர்கை பிடி அரிசி
எடுத்து இட்டாள்: பின்மீதி
சீர்செய்து உணவுக்கு உலையில் இட்டாள்!- தேராமல்…
ஏன் ஆச்சி அஃதென்றேன்..? என்னை விளித்து அன்பாய்
“ மேனே கேள்… நாளும் ஒருபிடியை -
பானையிலே போடாமல் எம்மை
ஒறுத்துப்பிடித்து வைத்து
நாடிவரும் ஏழை எளியோர்க்கு- கோடாமல்
கிள்ளிக் கொடுத்தல்தான் தானமடா!
…. உள்ளதனால் அள்ளிக் கொடுத்தல் அல்ல அஃது
என்றாள். வள்ளல் அவள்!
தன்னை ஒறுத்து என்றும் தான உணர்வு ஓங்கும்
வன்மை அன்னாளின் வளம்!
இனிப்பெத்தாச்சி பற்றியுஞ் சில நினைவுகள், ஆச்சியின் ஆச்சிதான் எமது பெத்தாச்சி. இன்றெல்லாம் அம்மம்மா என அழைக்கப்படும் அந்தப் பாட்டி. புலம்பெயர்ந்த நாடுகளிலே இன்று வாழுகின்ற ‘ அம்மம்மாக்கள் ‘ பலர், விரிவான குடும்பத்திலே ‘கட்டுப்பட்டு ‘ வாழ்வதிலும் பார்க்க அரச உதவியுடன் தனியாக வாழ்வதை விரும்புவதை நாம் அறிவோம். பேரப்பிள்ளைகளின் நடத்தையும் தமது சொந்தப்பிள்ளைகளின் மனப்பாங்கும் தமக்குப்பிடிக்கவில்லை என்பர் சிலர். விரிவான குடும்பத்தில் வாழ்ந்தால் தமக்கு தேவையற்ற பொறுப்புகள் என்றும் தமது பேரப்பிள்ளைகளாலே தொல்லை என்றும் அவர்கள் குறைப்படுவர். ஆனால்…, நான் கூறும் பெத்தாச்சி பிறிதொரு சந்ததியினர்.
அவர் என் கடன் இயன்ற பணிசெய்தல் எனத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். எமது பெற்றோர் நிறைவுசெய்ய முடியாத சில தேவைகளை பேரருக்கு மனமுவந்து நிறைவு செய்தவர், எனது பெத்தாச்சி. என் தேவைகளை மட்டுமல்ல, ஏழு பேரப்பிள்ளைகளின் தேவைகளையும் நிறைவுசெய்து தாமும் மனநிறைவு பெற்றவர் அவர். இன்று பெத்தாச்சி என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அன்று அவர் காட்டிய கோலங்கள் பல மனசில் ஊர்ந்து வந்து மொய்க்கின்றன.
“ பழம்பாக்கு வெற்றிலையைப்
பக்குவமாய்த் தட்டிலிட்டு,
உளமொன்றிக் கோயில்செலும்
ஊர்வலமும் ஓர்கோலம்
கோலம் பல அமைத்துக்
கொள்கை நிலை நிறுத்தப்
பாலா வா பவளம் வா
பண்பிதெனப் பாதையிட்டாள் “
திண்ணையில் அமர்ந்தவாறு, பாக்கு நுங்குப்பாக்கு, நாறற் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு ஆகியவற்றைப் பாக்குரலில் இட்டு மெல்ல மெல்ல இடித்தவாறு பெத்தாச்சி சொன்ன கதைகள் பல. வெள்ளிக்கிழமை விரதம், புரட்டாசிச் சனி விரதம். ஆவணி ஞாயிறு விரதம் போன்றவற்றைச் செயல்மூலம் கற்பித்து மனதில் நிலை நிறுத்தி, அன்றாட வாழ்வில் இன்றும் அனுசரிக்கவைத்த பெருமூதாட்டி அவர் – எனது பெத்தாச்சி.
இனி, சமயக்கல்வி பற்றியதொரு கருத்துப்பற்றி – அது உண்மையிலே பயன் தரவேண்டின் போதனைக்கும் சாதனைக்கும் இடையே ஒருவித ஒருமைப்பாடு அவசியம் என்பர். அஃதின்றி அவற்றிடையே முரண்தோன்றின் இளைய தலைமுறையினரிடையே நம்பிக்கை இன்மை ஏற்படும். சமுதாயத்தைச் சீர் செய்யும் இலக்கில் சமயம் தோல்வியுறும். இந்த வகையிலும் பெத்தாச்சி தமது நினைவை நிலை நிறுத்தியுள்ளார். போதனைக்கும் சாதனைக்கும் இடையே பாலம் அமைத்து நடைமுறையில் உணர்த்திய பெத்தாச்சி இன்றும் இதயத்துணர்வில் மறைந்து நின்று வழிப்படுத்துகிறார்.
சுருக்கமாகக்கூறின், பெத்தாச்சியின் நினைவுகள் காலத்தாற் சாகாதவை.
“ பாட்டி மடியமர்ந்து
பழங்கதைகள் அவள் சொல்லக்
கேட்டு மகிழ்ந்திருந்த… “
காலத்தை நினைவு கூர்ந்தார், ஈழத்து முதுபெரும் கவிஞர் யாழ்ப்பாணன்.
“ நாட்டுப் பாட்டு என்றுள்ள
நற்கருப்பஞ் சாறதனை
பாட்டுப் பாட்டாக வயதோடு அளந்து
ஊட்டிய பாட்டியை “
போற்றினார். தமிழாகப் பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன். ஆனால், இன்று எத்தனை பாலருக்கு அந்தப்பெரும் பாக்கியம் கிடைக்கிறதோ..? புலம் பெயர்ந்த நாடுகளிலே முதியோர் காப்பகங்களில் அல்லவா பல மூதாட்டிகள் முடங்கிக்கிடந்து முனகுகின்றனர்.
( தொடரும் )
No comments:
Post a Comment