தமிழ் சினிமா - இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்

ரஞ்சித் எப்போதும் தரமான கருத்துக்களை தன் படங்களில் மூலம் சொல்லி வந்தவர். அவரை போலவே அவருடைய கண்டுப்பிடிப்பான மாரி செல்வராஜும் அப்படியான ஒரு தரமான கருத்தை கூற, இவர்கள் வரிசையில் அதியன் ஆதிரை வந்துள்ளார். இவர் சொல்ல வந்த கருத்தியல் ரஞ்சித், மாரிசெல்வராஜ் போல் ஜெயித்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

இரும்பு கடையில் லாரி ட்ரைவராக வேலைப்பார்க்கும் தினேஷ், டீச்சராக இருக்கு ஆனந்தியை காதலிக்கின்றார். ஆனால், ஆனந்தி வீட்டில் சாதி ரீதியாக பிரச்சனை இருக்க எதிர்ப்பு இருக்கிறது.
ஆனால், இதைவிட பெரிய பிரச்சனை அந்த இரும்பு கடைக்கு இரண்டாம் உலகப்போரில் இருந்து மிஞ்சிய குண்டுகளில் ஒன்று கரை ஒதுங்கி இவர்கள் கடைக்கு வருகிறது.

அந்த குண்டை கைப்பற்ற அரசாங்கம் ஒரு பக்கம், இதை கண்டுப்பிடித்து மக்களின் முன்பு ஆபத்தை நிரூபிக்க சமூக நல மாணவர்கள் ஒரு பக்கம், கடைசியில் அந்த குண்டு யார் கைக்கு கிடைத்தது, இல்லை வெடித்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அட்டக்கத்தி தினேஷ் நடித்தால் தரமான படம், இல்லையென்றால் நடிக்காமல் இருக்கிறேன் என்று இருப்பார் போல, அந்த அழுக்கு லுங்கியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, குண்டை பாதுக்காக்க பதறி, காதலியை தேடி பதட்டத்தில் என நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழ் சினிமாவை பயன்படுத்த தேவையில்லை, இவரை தான் தமிழ் சினிமா இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆனந்திக்கு ட்ராவலுக்கும் அப்படி என்ன ஒற்றுமை தெரியவில்லை, அவர் நடித்தாலே ஒரு பயணத்திலேயே தான் உள்ளார், கடைசி வரை கட்டினால் இவரை தான் கட்டுவேன் என கங்கனத்துடன் கிளைமேக்ஸில் கூட வீட்டை விட்டு வெளியேறும் காட்சி அப்லாஸ் அள்ளுகிறார்.
முனிஷ்காந்த் இவரின் இன்னஸண்ட் தான் பெரிய பலம், இரண்டாம் பாதி முழுவதும் கலகப்பிற்கு பஞ்சமில்லை இவரிடமிருந்து. அதே நேரத்தில் காமெடியாகவே 'இது நம்ம நாட்டு குண்டு நம்மளை கொல்லாது, பாகிஸ்தானில் வெடிக்கும்' என கிண்டலடிப்பது எல்லாம் அதியன் ஆதிரையின் உள்குத்துக்கள். அதோடு படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் வரும் ரமேஷ் திலக், மெட்ராஸ் ஜானி கூட இயல்பான நடிப்பை அளித்து செல்கின்றனர்.
படத்தின் மிகப்பெரிய பலமே வசனங்கள் தான், மனுஷே எத்தன பேர் செத்தாலும் கவலையில்லை, இப்படி ஒரு விஷயம் தெரியக்கூடாது என்று நினைக்கும் அரசாங்கம், எவன் எப்படி போனால் என்ன எனக்கு என் சாதி கௌரவம் முக்கியம் என்று நினைக்கும் கயல் ஆனந்தி அண்ணன் இருவரும் வேறில்லை என தோன்ற வைக்கின்றது.
மேலும், படத்தின் முதல் பாதியில் குண்டு தினேஷ் கையில் கிடைத்ததுமே இடைவேளை விடுவதற்கு நல்ல இடமாக இருந்தும், காட்சிகள் இன்னும் சில நிமிடங்கள் நீள்கின்றது, இவை நாட்டை அழிக்கும் குண்டு முக்கியமா? இல்லை தன் காதல் முக்கியமா? என்று தினேஷ் பார்வையில் கதையை நகர்த்தி இடைவேளைவிட்ட இடமும் நன்றாக இருந்தது.
உலகில் மற்ற நாட்டு அனு கழிவுகளை இந்தியாவில் எப்படி இறக்கினர், அது எப்படி கரை ஒதுங்கி, எத்தனை ஆயிரம் பேரை பழியாக்குகிறது என்பதை காட்சியால் விளக்கிய விதம் அருமை.
உலகின் எப்பேற் பட்ட போர்களை காட்டி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை, சொல்லியே அதன் வீரியத்தை புரிய வைக்கலாம் என்று கிளைமேக்ஸில் அந்த ஜப்பான் காரர் பேசுவது நாடு கடந்து கண்டிப்பாக நம்முள் இருக்கும் மனிதாபிமானத்தை தூண்டும் காட்சிகள்.
டென்மாவின் இசையில் பின்னணி மிரட்டல், அதிலும் குண்டை காட்டும் போதெல்லாம் வரும் இசை நமக்கே இது வெடிக்க கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது, பாடல்களில் காதல் பாடலை விட, கூத்து பாடல்கள் அதை படமாக்கிய விதம் கவர்கிறது, ஒளிப்பதிவு பற்றி புகழ, கடைசியில் குண்டு லாரியில் இருக்க, போலிஸ் துரத்தும் அந்த டாப் ஆங்கிள் காட்சி ஒன்று போதும் கிஷோர் குமாரின் ஒளிப்பதிவிற்கு பாராட்டுக்கள் குவிய, அதிலும் முதல் படம் என்பது கூடுதல் சிறப்பு.

க்ளாப்ஸ்

படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும்.
படத்தில் எடுத்துக்கொண்ட களம், இன்றைய இந்தியாவிற்கு தேவை என்பதை மிக தெளிவாக சொன்னது.
படத்திம் வசனங்கள் மேலும் கூத்து கலைகள் வழியாக முதலாளிகளின் ஆதிக்கத்தை காட்டிய விதம்.
இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.
படத்தின் எடிட்டிங் செல்வா ஆர்.கே, முதல் பாதி காட்சிகள் நீண்டாலும், அவை கதைக்கு தேவை என்பதால் எங்கும் கத்திரி போடாமல் விட்டது, இரண்டாம் பாதி அத்தனை விறுவிறுப்பாக கொண்டு சென்றது.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதியில் இடைவேளைக்கு முன்பு தினேஷ்-ஆனந்திக்கு இடையே வரும் டூயட் பாடல்.
தினேஷ் தூக்கி திரியும் குண்டு வெடித்ததா? இல்லையா? என்பதை விட மொத்தத்தில் அதியின் ஆதிரையின் கருத்தியல் புரட்சி குண்டு அழுத்தமாக வெடித்துள்ளது, ரஞ்சித்தின் மற்றொரு புரட்சி படைப்புக்கு ஒரு பூங்கொத்து. நன்றி CineUlagam.







No comments: