இரு பனை மரங்கள் - பொன் குலேந்திரன் (கனடா)


 Image preview

.

இயற்கையை ஊடுறுவிப் பார்! அப்போது உனக்கு எல்லாம் நன்றாகப் புரியும் அல்பேர்ட் ஐன்ஸ்டையினின் பொன்வாக்கு  
மனிதர்கள் எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டவர்களாக இருப்பதில்லை. அவர்களது சிந்தனைகள் அவர்கள் செய்யும் தொழில் சம்பந்தப்பட்டதாகவே பெரும்பாலும் இருக்கும். எந்த காட்சியைiயும் பார்த்து வெவ்வேறு விதமாகச் சிந்திப்பார்கள். உதாரணத்துக்கு அறிவியல் அறிஞன் அல்லது ஒரு விவசாயி இயற்கையைப் பார்க்கும் பார்வயிலிருந்து ஒரு கவிஞனின் பார்வை வேறுபட்டது. அறிவியல் அறிஞன் இயற்கையை ஆராய்ச்சி நோக்குடன் பார்ப்பான். விவசாயி தனது விவசாய தொழில் நோக்கத்தோடு பார்ப்பான். சாதாரண மனிதன் இயற்கைக் காட்சியைப் பார்த்து மகிழ்வான். ஆனால் கவிஞனோ தான் மாத்திரம் பார்த்து மகிழாமல்  பிறரும் வாசித்து இரசிக்கும் சொல்லோவியம் ஆக்குகிறான். இதை அடிப்படையாக வைத்த உருவகக் கதை இது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வட்டுக்கோட்டை என்ற ஊருக்குச்  செல்லும் பாதையின் ஒருபுறம் வாவி, மறுபுறம் கற்கள் நிறைந்த கல்லுண்டாய் வெளி. வல்லைவெளிக்கு ஈடாகத் தோற்றமளித்த அந்த அமைதியான வெளியில் வாவிக்கு அருகே  17 கி மீ  பயணித்த  வழுக்கை ஆறு  அராலிக்கு அருகே எரிகயுடன் கலக்க முன் இரு உயர்ந்த பனைமரங்கள் ஒன்றை ஒன்று பிரியாத நிலையில் அருகருகே வானத்தில் உள்ள முகில்களை முத்தமிடுவது போல் காட்சியளித்தன. இம்மரங்கள் இப்போது இருக்கிறதோ தெரியாது, ஏன் என்றால் நான் பார்த்தது 199இல்   சடைத்த பனம் ஓலைகள் சோழகக் காற்றின் தழுவலில் ஒரு இதமான  ரீங்காரத்தைக் காற்றில் பரவச் செய்தன. அம் மரங்களுக்கு அடியில் உள்ள பற்றைகள் தங்களுக்கும் அது போன்ற கம்பீரமான நிலை ஏற்படாதா என ஏங்கின. பாதையின் ஓரிடத்தில் இருந்து அவ்விரு மரங்களைப் பார்த்தால் ஒரு தனி மரமாகக் காட்சியளிக்கும். சற்று விலகி நின்று பார்த்தால் இரு மரங்களாகத் தோன்றும். இத்தோற்றத்தை இடமாறுதோற்றம் (Parallax) என்பர். வீதியில் செல்லும் பலதரப்பட்ட வழிப்போக்கர்கள் சற்றுநேரம் நின்று இயற்கையின் சிருஷ்டிப்பை ரசித்து தங்கள் கற்பனைரதத்தை ஓடவிட்டு,  மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்தினர். அவ்வெண்ணங்களின் பிரதிப்புகளைச் சற்று உற்று நோக்கின்:



இளம் தம்பதிகள்: "ஆகா... இதுவல்லவோ நெருக்கம். எம் வாழ்க்கை முழுவதும் இம் மரங்களைப் போல நெருக்கத்தோடு என்றும் நாம் பிரியாது இருக்க வேண்டும்.  என்ன அத்தான் சொல்லுகிறீர்கள்?
இளம் காதலர்கள்: "ஒரு நிலையில் இரு மரங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மரமாகக் காட்சி தருவது எம்மிரு மனங்களும் ஒரு மனமாவது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது இது காதலியின் கருத்து. “இருமனங்கள் ஒன்று சேர்ந்தால் இனி என்ன, திருமணம்தானே! இது காதலனின் பதில்.
அவ்வழியே காரில் சென்ற ஒரு அரசியல்வாதி: "அடேயப்பா எவ்வளவு உயர்ந்த மரங்கள். நானும் அரசியலில் அந்த மரங்களைப் போல் எவ்வளவுக்கு உயர்ந்த நிலையை அடையமுடியுமோ அவ்வளவுக்கு அடையவேண்டும். செழிப்பான அந்த மரங்களைப் போல் நானும் செல்வத்தில் செழிக்க வேண்டும். எலலோரும் என்னைப் போற்றிப் புகழவேண்டும்."
ஒரு மூடநம்பிக்கையுள்ள சமயவாதி: "நிச்சயமாக இந்த இரண்டு மரங்களும் முற்பிறவியில் கணவன் மனைவியாகத் தான் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் இப்பிறவியிலும் இணை பிரியாது தோற்றமளிக்கின்றன. அவை செய்த கர்மாவின் பிரதிபலன் இது."

சூழ்நிலையைச் தனக்குச் சந்தர்ப்பமாக பாவிக்கும் திறமையுள்ள ஒரு வியாபாரி: "வீதி ஓரங்களில் தான் தோன்றி பிள்ளையார், வைரவர்,  முனியப்பர் போன்று இவற்றிற்கும்  தான்தோன்றிக் காதலர்கள் என நாமம் சூட்டி, இரண்டு சிலைகளும் உண்டியலும் வைத்து - இந்த இணைபிரியாத மரங்களைத் தரிசித்து உண்டியலில் பணம் போட்டுச் செல்பவர்கள், பூவும் மணமும் போல் பிரியாது வாழ்வார்கள் என்று விளம்பரம் போட்டால் ஏராளமான பணம் சேர வாயப்பு உண்டு.”
அவ்வழியே சென்ற வீடுகளுக்குக் கூரை செய்யும் தச்சன் தங்கராசு: "அழகான, முதிர்ந்த, வைரமான மரங்கள். இப்படியொன்றை அதிக காலமாகத்  தேடிக் கொண்டிருக்கிறேன். ஓவசியர் ஓங்காரமூர்த்தியின் இரண்டுமாடி வீட்டுக்கு உகந்த மரங்கள் இவை. இம் மரங்களை வெட்டித் துப்புரவாக்கி சிலாகை செய்தால் நல்ல விலைக்கு ஓவசியருக்குத் தள்ளி விடலாம்."
மதுவெறியில் தள்ளாடித் தள்ளாடி அவ்வழியே செல்லும் பொன்னுத்துரையின் மப்புக் கண்களுக்கு: "இதென்ன உவை இரண்டு பேரும் தள்ளாடினம். ஊவை இரண்டு பேருக்கும் நல்ல வெறிபோல தெரியுது. உவையளொடு ஒப்பிட்டுப் பாக்கும்போது எனக்கு அவ்வளவுக்கு வெறியில்லை போல இருக்குது. என்றை மனுசியைக் கொண்டுவந்து உந்தக் காட்சியைக் காட்ட வேணும். அப்ப தெரியும் அவளுக்கு ஆருக்கு வெறி அதிகம் எண்டு  ஒவ்வொரு நாளும் நான் குடிககிறன் என்று என்னோடு  அவள் சண்டை ."
கோவில் திருவிழாவில் நடனமாடிவிட்டு அவ்வழியே செல்லும் சின்னமேளக்காரி சிந்தாமணியின் கண்களுக்கு: "இதென்ன சோழகக் காற்றிலை கூத்து ஆடினம். என்னை விடவே நல்லாய் ஆடினம்என்றை இடுப்பை விடவே உவை இரண்டு பேரிண்டை இடுப்புகளும் மெல்லிசு?. அவர் மைனர்  மாணிக்கம் கூட  என் இடுப்பை  ரசித்து கிள்ளினவர் ”.
அவ்வழியே சென்ற சவரத் தொழிலாளி வினாசியின் கண்களுக்கு: "கனகாலம் உவை இரண்டு பேரும் முடிவெட்டவில்லை போல இருக்கு. தலைமுடி நல்லாய் வளர்ந்திருக்கு. எந்தக் கோயிலுக்கு நேத்திக்கடனோ தெரியாது. என்ன கூப்பிட்டிருந்தால் நான் வந்து வடிவாக வெட்டி விட்டியிருப்பேனே. கொஞ்சம் செலவு அவ்வளவு தான்."
அவ்வழியே ஜீப்பில் சென்ற இராணுவ அதிகாரி ஒருவர்: "உவை இரண்டும் சரியாக ஈராக் செய்த சுப்பர் துவக்குகளைப் (Super Gun)  போல அல்லவா இருக்குது. இது போல இரு சூப்பர் துவக்குகளை அரசு மூலம் வாங்கினால் மந்திரிக்கும் எனக்கும் நல்ல கொமிசன் கிடைக்கும். கன விடுதலைப் புலிகளைச் சுட்டு விழுத்தலாம்.
 அவ்வழியே சென்ற ஒரு கவிஞன் எண்ணத்தில தோன்றிய கவிதை:
மரத்துக்கு மரம் துணையா?
தனிமையில் சுகம் பெறுதலா?
தழுவலில் இன்பம் தேடலா?
வளர்ச்சியில் குளிர்ச்சி காண்பதா?
பலரின் பார்வைகளை ஈர்ப்பதா ?
சிந்தனைகள் பலர் மனதில் பூப்பதா?

அவ்வழியே சென்ற பொளதிக ஆசிரியர்: "அடடா என்ன அதிசயம். இன்று நான் வகுப்பில் வில்லைகளோடு  இணைந்த பரிசோதனையில் இடமாறுதோற்ற வழு (Parallax Error) பற்றி விளக்க எவ்வளவு கஸ்டப்பட்டேன். இது நல்ல உதாரணம். மாணவர்களைக் கொண்டு வந்து அவசியம் காட்ட வேண்டும்."
அவ்வழியே சென்ற சூழலியலாளன் (Environmentalist)ஆகா இது போன்ற உயர்ந்த சடைத்த மரங்கள் சூழலுக்கு மிக முக்கியம். எவரும் இதை வெட்டாமல் பாதுகாக்க அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
அவ்வழியே சென்ற ஒரு புகைப்பிடிப்பாளன்: இப்படி ஒரு காட்சியைத் தான் நான் இவ்வளவு காலமும் தேடிக்கொணடிருந்தேன். இம்மரங்களைப் படம் எடுத்துகண்டுகொண்ட காதல் என்ற தலைப்போடு  போட்டிக்கு அனுப்பினால் நிச்சயம் பரிசு கிடைக்கும்.”
சிறுகதை எழுத்தாளர் ஒருவரின் பார்வையில்: "இவ்விரு மரங்களை வைத்து ஒரு காதல் கதையையே புனைந்துவிடலாம். தலைப்பு என்ன கொடுக்கலாம்? "கல்லுண்டாய் காதலர்கள்என்ற பெயர் நல்ல பொருத்தம். கதையின் கருவில் அராலிக் கிராமத்திலசாதி வெறி காரணமாகத் தற்கொலை புரிந்த காதலர்களை இணைத்து எழுதவேண்டும். அப்போது தான் கதையில் மண்வாசனை வீசும்.
அவ்வழியே காரில் சென்ற உயர் அதிகாரி ஒருவர்: "இந்த இரு மரங்களையும் பார்த்தால் குறைந்தது எழுபது வருடங்ளுக்கு மேல் வயசு உள்ளதாகத் தெரியுது.  ஒரு வேளை பிரித்தானியர் இலங்கையை ஆண்ட காலத்தில் நட்ட மரமோ தெரியாது. எதுக்கும் அரசாங்க அதிபருக்கு இந்த இடத்தைச் சரித்திரப் பிரசித்தம் பெற்ற இடமாகப் பிரகடணப்படுத்த மனு கொடுப்போம். எனக்கும் பதவி உயர்வு கிடைக்கும்."
அவ்வழியே சென்ற தெய்வானை ஆச்சியின் பார்வையில்: "அங்கை பார்  கீழே கிடக்கும் காய்ந்த பனை ஓலைகளையும், மட்டையையும். எவரும் கவனிப்பார் அற்று கிடக்கு. ஒருத்தரும் இன்னும் காணவில்லையாக்கும். அப்ப நான உதை வீட்டுக்குக் கொண்டு போய் அவன் கனடாவில் இருந்து வந்திருக்கிற பேரனுக்குச் சுடுதண்ணி வைச்சு குடுக்கலாம். பனம்பழத்தில் பினாட்டும் பனங்காய் பணியாரமும் செய்து பழஞ்சோற்றுக்குக் கொடுக்கலாம். அவன் கனடாவிலை உதெல்லாம் கண்டவனே?"
******
இரு காகங்கள் எங்கிருந்தோ பறந்து வந்து பனைமர உச்சிகளில் இருந்தன. அந்தச் சமயம் தொப் என்ற சத்தத்தோடு இரு பனம் பழங்கள் மரங்களில் இருந்து கீழே பத்தைக்குள் விழுந்தன. பத்தைக்குள் இருந்து இரண்டு முயல்கள் திக்குதிசை தெரியாது ஓட்டம் பிடித்தன. ஒரு காகம் மற்றைய காகத்தை பார்த்து சொல்லிற்று:
"பார்த்தியே பார்த்தியே... நாங்கள் இரண்டு பேரும் உந்த இரண்டு மரங்களை விட எவ்வளவு பலசாலிகள் என்றுநாங்கள் இருந்தவுடன் எங்களுக்கு பயந்து தங்கள் பிள்ளைகளைக் கூட கீழே தள்ளிப்போட்டினம்அது மட்டுமே, அங்கை பார் அந்த இரண்டு முயல்கள் தலைதெறிக்க ஓடுவது கூட எங்களுக்குப் பயந்துதான்இப்ப தெரியட்டும் யார் பலசாலி என்று."
அந்த நேரம் வீசிய சோழகக் சுழிக் காற்றில் இரு காகங்களுக்கு மரத்தில் இருக்கமுடியவில்லை. "சீ சீ,  இவைமேல் இருந்தால் நாம் பலமற்றவையாகிவிடுவோம்போவோம் வாஎன்ற கூறிக்கொண்டு பறந்து போயின.
                                                         *****
வருடங்கள் பல உருண்டோடின. அவ்வழியே சென்ற கிழவர் ஒருவர் தன் பேரனுக்கு மரங்கள் இருந்த இடத்தைக் காட்டி, “ரமேஷ்.. அந்த முறிந்து கீழே கிடக்கிற பனை மரங்களைப் பார்த்தாயா?” என்றார்.
"ஓம் தாத்தா...அவைக்கு என்ன நடந்தது? – என் அப்பா அடிக்கடி சொல்லுவார்- தான் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு சைக்கிளிலை படிக்கப் போகும் போது இந்த மரங்களைப் பார்த்து அடிக்கடி அவற்றின் அழகை இரசிப்பதாக”
 ஏன் தாத்தா இந்த மரங்களுக்கு இந்த கதி?
"அதேன் கேட்கிறாய். குண்டு வீச்சில் உந்த இரண்டு மரங்களையும் Anti Air Craft Gun என நினைத்து Air Force குண்டுவீசி அழித்துவிட்டார்கள். அந்த மரத்துக்கு கீழே மலம்சலம் கழிக்க வாயில் சுருட்டோடு இருந்த ஒரு கிழவனும் அந்த இடத்திலேயெ சரி. ஓரு வேளை அந்தக் கிழவனை Anti Air Craft Gun னை இயக்கும் விடுதலைப் போராளி என்று நினைத்தினமோ தெரியாது.
                                                                     ******
( யாவும் புனைவு)

No comments: