03/12/2019 நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், மொத்தமாக 160 தேர்தல் தொகுதிகளில் சஜித் பிரேமதாஸ 46 தேர்தல் தொகுதிகளில் வெற்றிப் பெற்றதுடன் ஏனைய 114 தொகுதிகளிலும் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். சஜித் வென்ற தேர்தல் தொகுதிகளில் 22 தொகுதிகள் வட கிழக்கைச் சார்ந்தன. தென்னிலங்கையில் வென்ற 24 தொகுதிகளில் தமிழர்களும் முஸ்லிம்களும் கணிசமாக வாழும் தேர்தல் தொகுதிகளிலேயே வெற்றிப் பெற்றுள்ளார்.

பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளின் படி 10,000 பௌத்த பிக்குகள் நாடு முழுவதிலுமுள்ள சிங்கள கிராமங்களில் கோத்தாபயவிற்கு வாக்களிக்கும் படி கோரியுள்ளனர். நாட்டையும், பௌத்த மதத்தையும் பாதுகாத்துக் கொள்ள கோத்தாபயவிற்கு வாக்களிக்கும்படியே கோரியுள்ளனர்.
இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரை, பௌத்தபிக்குகள் காலனித்துவ காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளமையை காணமுடிகின்றது. காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் ஏனைய நாடுகளைப் போல் பௌத்த மதகுருமார்களே ஆட்சியாளர்களின் ஆலோசகர்களாக இருந்துள்ளனர். சிங்களமக்களது வரலாற்றில் கி.மு. 140 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற துட்டகைமுனு – எல்லாளன் போரின் வெற்றிக்கு பௌத்தபிக்குகளே பக்கபலமாக இருந்துள்ளனர். போரின் வெற்றிக்குப் பின்னர் துட்டகைமுனு பௌத்தமதத்திற்கும் பௌத்தபிக்குகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் ருவன்வெலிசாய தாதுகோபுரத்தைக் நிர்மாணித்து அர்ப்பணம் செய்துள்ளார்.
காலனித்துவத்திற்கு பிந்தைய வரலாற்றில் ஜனநாயகத்தை மையப்படுத்தி தோற்றுவிக்கப்பட்ட
(மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளைத் தவிர) அரசாங்கங்களில் மதவாதிகள் தலையீடு செய்வதை உலகின் பல நாடுகள் நீக்கின அல்லது ஓரங்கட்டின. இன்னும் சில நாடுகள் மதச் சார்பற்ற நாடுகளாக பிரகடனப்படுத்திக்கொண்டன. பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற இலங்கை மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தா விட்டாலும் இலங்கை பௌத்தநாடு என்ற அடையாளத்தை கொண்டிருக்கவில்லை. ஆனால் பௌத்தபிக்குகள் இலங்கையை பௌத்த நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தனர்.
அதேவேளை இலங்கையின் ஆட்சியாளர்களை தெரிவு செய்வதில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஏனைய பௌத்த நாடுகள் போலல்லாது இலங்கையில் பௌத்த மடாலயங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பதுடன் அவ் மடாலயத்திலுள்ள பிக்குகளுக்கு உணவு மற்றும் தேவையானவற்றை கிராமத்தவர் வழங்குவதுடன் கிராமத்தவரின் அனைத்து மத,சமூக, கலாசார சடங்குகளிலும் பௌத்தபிக்குகள் பங்கு கொண்டு வருகின்றனர். இதனால் பௌத்தபிக்குகள் கிராமத்தவர்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்வோராக இருந்து வருகின்றனர். கிராமத்தவர்களும் பெரும்பாலும் கிராம பௌத்த பிக்குவின் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இன்றும் இருந்துவருகின்றனர்.
இலங்கை பலமுறை தென்னிந்திய படையெடுப்புகளுக்கும் பின்னர் ஐரோப்பியரின் படையெடுப்புக்கும் ஆளாகியமையே அதற்கான அடித்தளம். இலங்கையை கைப்பற்றியவர்கள் தத்தமது மதங்களை அறிமுகப்படுத்திய வேளை பௌத்தபிக்குகள் அதனை பலமாக எதிர்த்துள்ளனர். பௌத்த மதத்தை காப்பதே அன்றைய அரசனின் பிரதான பொறுப்பு என்பதை வலியுறுத்தி வந்துள்ளனர். இறுதியாக ஆங்கிலேயர் கண்டிய இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திலும் பௌத்த மதத்தை காப்பாற்றும் படி வலியுறுத்தியுள்ளனர்.
மன்னர் காலம் முதல் பௌத்த பிக்குகள் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக இருந்து வருகின்றனர். இவ்வொழுங்கமைப்பு காலனியாதிக்க காலத்திலும் வலுவாக இருந்துள்ளது. இது சாதியடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. உயர் சாதி எனக் கூறப்படும் வேளாளர் (கொவிகம) சியம் நிகாய பிரிவினர் என்றும் ஏனைய பிறசாதிகள் எனக் கூறப்படுவோர் அமரபுர மற்றும் ராம்மான்ய நிகாய பிரிவினராக ஒழுங்கமைந்துள்ளனர். அந்தந்த கிராமத்தின் சாதிக்கேற்ப கிராமங்களில் பௌத்த மடாலயங்கள் உள்ளன. சாதிகளாக பிரிந்திருந்த போதிலும் பௌத்த நாடு, பௌத்த மதம் என்றதன் அடிப்படையில் இவர்கள் ஒன்றாகச் செயற்படுகின்றனர்.
இப்பின்புலத்தில் சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் தமிழ் அரசியில் கட்சிகள் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைக்கும் போது அவை பௌத்த மதம் மற்றும் பௌத்த நாடு என்ற கோரிக்கையை முறியடிப்பதாகவே பௌத்த பிக்குகள் கருதினர். 1956 இல் ஆட்சியை கைப்பற்றிய பண்டாரநாயக்க சிங்களம் மற்றும் தமிழ் மொழியை ஆட்சிமொழியாக பிரகடனப்படுத்த முனைந்தார். அப்போது அதனை எதிர்த்த பௌத்த பிக்குகள் அவரது வீட்டின் முன் உண்ணாவிரதம் இருந்ததுடன் பண்டாரநாயக்க தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவதை கைவிட்டு சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழியாக்கினார். அதன் பின்னர் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் 1957 இல் அதிகாரத்தை பகிரும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டார். இவ்வொப்பந்தத்தையும் பௌத்தபிக்குகள் எதிர்த்தனர். பௌத்தபிக்குகளின் எதிர்ப்பு காரணமாக இவ்வொப்பந்தமும் கைவிடப்பட்டது.
(பௌத்த பிக்குகளின் எதிர்ப்பினை சாதகமாக்கிக் கொண்டு ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினரும் அதனை எதிர்த்தனர்). இதன் பின்னர் அதிகாரப் பகிர்வினைக் கைவிட்டு வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியை அரச கரும மொழியாக்கும் வகையில் தமிழ் மொழி அமுலாக்கல் சிறப்பு சட்டத்தை பண்டாரநாயக்க 1958 இல் அறிமுகப்படுத்தினார். இதனையும் பௌத்தபிக்குகள் எதிர்த்தனர். பௌத்த பிக்குகளின் எதிர்ப்புக்கு மத்தியில் இச்சட்டத்தினை கொண்டு வர பண்டாரநாயக்க முனைந்தார். பௌத்த பிக்குகளின் கோரிக்கையை மறுத்தமையினால் அவரை ஆட்சி பீடத்தில் ஏற்றிய பௌத்த அமைப்பே அவரை படுகொலை செய்தது.
1956 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பண்டாரநாயக்க தனது வெற்றிக்காக ஐம்பெரும் சக்திகளாக சங்க (பிக்கு), வெத (வைத்தியர்), குரு (ஆசிரியர்), கொவி ( விவசாயி), கம்கரு (தொழிலாளி) என்பவர்களை அடையாளப்படுத்தியதுடன் பிக்குகளையே தனது பிரதான அமைப்பாளர்களாகக் கருதி செயற்பட வைத்தார். களனி ரஜமகா விகாரையின் தலைமை பிக்கு புத்தரகித்த, பண்டாரநாயக்கவிற்கான பிக்கு அணியை உருவாக்கி அவரை வெற்றியடையச் செய்தார். பண்டாரநாயக்க பௌத்த பிக்குகளின் விருப்பிற்கு மாறாக தமிழ் மொழிக்கு அந்தஸ்து வழங்க முயல்கின்றமையை அவதானித்த புத்தரகித்த பிக்கு பண்டாரநாயக்கவை கொலை செய்ய திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்தினார்.
புத்தரகித்தவின் திட்டத்திற்கமைய 1959 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி அன்று பிரதமர் பண்டார நாயக்க தல்துவே சோமரத்ன என்ற பௌத்த பிக்குவினால் சுடப்பட்டார். மறுநாள் அவர் இறக்கலானார். அவரது மரணத்தின் பின்னர் பௌத்த பிக்குகள் சில காலம் அரசியலில் மௌனத்தை கடைபிடித்ததுடன் அறுபதுகளின் பின்னிறுதியில் மீண்டும் தமது கோரிக்கைகளை முன் வைக்கலாயினர். பௌத்தபிக்குகளின் கோரிக்கையான இலங்கையை சிங்கள பௌத்த நாடாக பிரகடனப்படுத்தல் மற்றும் பௌத்த மதத்திற்கு அரச அந்தஸ்து வழங்குதல் என்ற கோரிக்கைகள் தொடரலாயின.
இலங்கையை பௌத்த நாடாக பிரகடனப்படுத்துவது மற்றும் பௌத்த மதத்திற்கு அரச அந்தஸ்து வழங்குவது என்ற இரு கோரிக்கைகளை இரு பெரும் சிங்களக் கட்சிகளைச் சார்ந்த அரசியற் தலைவர்கள் விரும்பிய போதிலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாதிருந்தனர். சோல்பரி அரசியலமைப்பு அதற்கான வாய்ப்பினை அளிக்கவில்லை. எனினும், அதற்கான வாய்ப்பு 1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் கிடைத்தது. பௌத்த பிக்குவினால் கொல்லப்பட்ட பண்டாரநாயக்கவின் மனைவியான திருமதி சிறிமா பண்டாரநாயக்கவின் தலைமையின் கீழ் போட்டியிட்ட இடதுசாரி கூட்டணிக் கட்சியினர் 1970 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றனர். இவ்வெற்றிக்கு பக்கபலமாக பௌத்த அமைப்புகளே செயற்பட்டன. அதன் விளைவாக 1972 ஆம் ஆண்டு இலங்கைக்கான புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் முயற்சியில் கூட்டணி அரசாங்கம் ஈடுபட்டது. இவ்வேளை பௌத்த பிக்குகளும் பல சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் பௌத்த மதத்தை அரசாங்க மதமாக்கும்படி கோரினர். பிக்குகளின் வேண்டு கோளுக்கிணங்க, புதிய அரசியலமைப்பில் பௌத்த மதம் அரசமதமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இப்புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதில் முன்னணி பாத்திரம் வகித்த இடதுசாரியான கலாநிதிகொல்வின் ஆர்.டி. சில்வா பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் முதலிடமளித்தப் பின்னர் தமது கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கையில், தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் அழுத்தத்தினாலேயே இதனை செய்ததாகவும் அதனை நியாயப்படுத்துவதற்காக 1815 ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட கண்டி உடன்படிக்கையை கையாண்டதாகவும் கூறியுள்ளார். 1815 ஆம் ஆண்டு பிரித்தானியருடன் கைச்சாத்திட்ட கண்டிய ஒப்பந்தத்தில் ஐந்தாவது சரத்து பிரித்தானிய அரசாங்கம் பௌத்த மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்கும் என்பதாகும். எனவே அதனை ஆதாரமாக வைத்தே தாம் பௌத்த மதத்தை அரச மதமாக்குவதை நியாயப்படுத்தியதாக தமது கட்சி உறுப்பினர்களுக்கு கலாநிதி கொல்வின் ஆர் . டி சில்வா கூறியுள்ளார். எனவே பௌத்த மதத்தையும் கலாசாரத்தையும் அரசாங்கம் பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பௌத்த பிக்குகளால் தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டு வந்துள்ளது.
இவ்வரலாற்று பின்னணியுடன் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை நோக்குவோமாயின், 1956 இல் பண்டாரநாயக்கவை வெற்றிப் பெறச் செய்தது போல், அனைத்து பௌத்தபிக்கு அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கோத்தாபயவை வெற்றிப் பெறச் செய்துள்ளனர். மறுவகையில் கூறுவதாயின், 1956 க்குப் பின்னர் பௌத்த பிக்குகள் சீரமைக்கப்பட்ட பண்டார நாயக்க ஒருவரை வெற்றிப்பெறச் செய்துள்ளனர். கோத்தாபயவின் வெற்றியானது பௌத்த பிக்குகளினதும் சிங்கள பௌத்த அறிவு ஜீவிகளினதும் 71 வருட போராட்டத்தின் வெற்றியாகும். கோத்தாபய தம்மை வேட்பாளராக அறிவிக்க முன்னரே பௌத்த அமைப்புகளும் சிங்கள பௌத்த அறிவுஜீவிகளும் அவருக்கான பொருளாதார வேலைத் திட்டத்தை வியத்மக மற்றும் எளிய என்ற பெயரில் வெளியிட்டனர்.
இது போலவே 56 இல் பண்டாரநாயக்க தேசிய மயமாக்கும் கொள்கைத்திட்டத்தை முன்வைக்க அன்றைய பௌத்த பிக்குகளும் அறிவு ஜீவிகளும் பண்டாரநாயக்கவிற்கு ஒத்துழைத்தனர். பண்டாரநாயக்க பௌத்த பிக்குகளை தமது பிரசாரத்திற்கான ஆயுதமாக பயன்படுத்திய போதிலும் அவர்களது அரசியல் நிலைப்பாட்டினை ஏற்கவில்லை. தமக்கென ஒரு அரசியல் நிலைப்பாட்டினை கொண்டிருந்தவராவார். அவரே முதன் முதலாக இலங்கையில் சமஸ்டி ஆட்சிமுறையை முன்வைத்தவர். ஐம்பதுகளில் பண்டாரநாயக்கவை வெற்றிப் பெறச்செய்த பௌத்த பிக்குகள் பௌத்த நாடு,பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கும்படி கோரியவேளை பண்டாரநாயக்க தமிழுக்கு சமஉரிமை, சுயாட்சி போன்ற நிலைப்பாட்டை கொண்டவராக இருந்தார். அதுவே அவரது மரணத்திற்கு வழிவகுத்தது. ஆனால்
தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய அவ்வாறல்ல. அவர் முன்னாள் இராணுவ வீரர் என்பதுடன் ஒரு போதும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக எவ்வித கருத்தினையும் முன்வைக்காதவர். மேலும் தமது தேர்தல் பிரசாரத்தின் போதும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக எவ்வித கருத்தினையும் முன்வைக்காதவர். அவ்வகையில் கோத்தாபய பௌத்த பிக்குகளினது கோட்பாட்டை முழுமையாக ஏற்றுக் கொண்டவராகத் திகழ்கின்றார். தமது வெற்றியின் பின்னர் எல்லாளன் என்ற இந்து மன்னனை தோல்வியுறச் செய்த பின் பௌத்த மதத்திற்காக கட்டப்பட்ட ருவன்வெலிசாய தாதுகோபுரத்திற்கு முன்னால் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம் தாம் பௌத்த பிக்குகளின் ஆணைக்கு கட்டப்பட்டு செயற்படுவதாக வெளிப்படுத்தியுள்ளார். எனவே, நாட்டின் பௌத்த பிக்குகள் 56 ஆம் ஆண்டு தமக்கான ஆட்சியாளனை உருவாக்குவதில் தோல்வி கண்டபோதிலும் இம்முறை தமக்கான ஆட்சியாளனை நிலை நிறுத்துவதில் வெற்றிப் பெற்றுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இவ் பின்புலத்தில், எதிர்வரும் அரசியல் செல்நெறியை நோக்குவோமாயின் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு என்பது அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்கு வெறும் பேசுபொருளாகவே இருக்கலாம். நடந்து முடிந்த ஜனாபதிபதித் தேர்தல் பெறுபேறுகளை கருத்திற் கொள்ளும் போது பொதுஜன பெரமுன அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிப் பெறும் என ஊகிக்க முடிகின்றது. தேர்தலுக்காக கோத்தாபய முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் அதற்கு முன்னர் அவரது அறிவுஜீவிகளால் நாட்டின் அபிவிருத்திக்காக முன்வைக்கப்பட்ட வியத்மக மற்றும் எளிய போன்ற திட்டங்களிலும் அதிகாரப் பகிர்வு பற்றி எதனையும் குறிப்பிடவில்லை.
எனவே அதிகாரப்பகிர்வு என்பது எதிர்வரும் ஐந்து வருடங்களில் தமிழர்களின் பேசுபொருளாகவே அமையும். ஆனால் வடகிழக்கில் பாரிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படலாம் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் முதலீடு செய்ய பாரிய வாய்ப்புகள் அளிக்கப்படலாம்.
இன்றைய ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி பௌத்த அமைப்புகள் பெற்ற வெற்றியேயாகும். பௌத்த வெற்றியின் தலைவனாகத் திகழும் ஜனாதிபதி கோத்தாபய சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அதாவது நீதி, நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு, மனித உரிமை போன்றவற்றினை வலியுறுத்தும் சர்வதேசத்திற்கு எவ்வாறு முகம் கொடுக்கப் போகிறார் என்பதிலேயே அவருக்கும் பௌத்த அமைப்பிற்கும் இடையிலான உறவு தங்கியுள்ளது. சர்வதேசத்தின் ஜனநாயக கோரிக்கைகளுக்கு இசைவாராயின், பௌத்த அமைப்பினருக்கும் அவருக்கும் இடையில் முறுகல் ஏற்படும். மாறாக, பௌத்த அமைப்பினரின் வழிகாட்டலில் மட்டும் செயற்படுவாராயின் சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிடலாம்.
பெ.முத்துலிங்கம் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment