இலங்கை தமிழர் விவகாரம் ; இந்திய ஆங்கில தேசிய பத்திரிகைகளின் ஆசிரிய தலையங்கங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளதென்ன ?


04/12/2019  இலங்­கையின் வடக்கு–கிழக்கு பகு­திகள் தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ கொண்­டி­ருக்கும் மனப்­பாங்கு இந்­தி­யா­வினால் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­படும் என்­கின்ற அதே­வேளை அதி­கார பர­வ­லாக்­கத்­திற்கு மேலாக பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கின்ற அவ­ரது விருப்பம் புது­டில்­லிக்கும் சென்­னைக்கும் கவலை தரு­வ­தாக இருக்கும்.
மேலும்  தமிழர்  பிரச்­சினை  இரு­த­ரப்பு உற­வு­களை மீண்டும்  பாதிக்­கக்­கூ­டிய “ஒரு வெடி­குண்­டாக” தொடர்ந்­தி­ருக்கும் தமிழர் பிரச்­சி­னை­யிலும் ஏனைய விவ­கா­ரங்­க­ளிலும் இரு நாடு­களும் பொது­வான நிலைப்­பாட்டை கண்­ட­றிய வேண்­டி­யி­ருக்கும் என்றும் இந்­தி­யாவின்  முக்­கி­ய­மான ஆங்­கில தேசிய பத்­தி­ரி­கைகள் அவற்றின் ஆசி­ரிய தலை­யங்­கங்­களில்  குறிப்­பிட்­டுள்­ளன.
த இந்து, இந்­துஸ்தான்  டைம்ஸ், டெகான் ஹெரால், இந்­தியன் எக்ஸ்பிரஷ் ஆகிய  பத்­தி­ரி­கை­களே ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் இந்­திய விஜயம் குறித்து  தமது ஆசி­ரிய தலை­யங்­கங்­களில் சுட்­டி­யி­ருக்­கின்­றன.
அந்த ஆசி­ரிய  தலை­யங்­கங்களில் இலங்­கைக்கும் இந்­தி­யா­விற்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உற­வு­களில் தற்­போது தோன்ற ஆரம்­பித்­தி­ருக்கும் நன்­மை­ய­மான சூழ்­நிலை  பாதிக்­கப்­ப­டாமல் இருப்­பதை உறுதி செய்ய இரு­நாட்டு தலை­வர்­களும் நடை­முறை சாத்­தி­ய­மா­னதும் இரு­த­ரப்பு நலன்­க­ளுக்கும் உகந்­த­து­மான அணு­கு­மு­றை­யினை கடைப்­பி­டிக்க வேண்டும் என்ற வலி­யு­றுத்தல் பொது­வான அம்­ச­மாக காணப்­ப­டு­கி­றது.
         
த இந்து பத்­தி­ரிகை
த இந்து பத்­தி­ரிகை “சமா­தா­னத்தை வென்­றெ­டுத்தல், கோத்­த­பா­யவின் இந்­திய விஜயம் குறித்து” என்ற தலைப்பில் எழு­தி­யி­ருப்­ப­தா­வது,
இலங்­கையின் புதிய ஜனா­தி­பதி கடந்த வாரம் இந்­தி­யா­வுக்கு மேற்­கொண்ட விஜயம், பிர­தமர் நரேந்­திர மோடி­யுடன் அவர் நடத்­திய பேச்­சுக்­க­ளும்  இரு­த­ரப்பு உற­வு­களை வளர்த்துக் கொள்­வ­தற்கு இரு நாடு­களும் முன்­னு­ரிமை கொடுக்­கின்­றன என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமை­கின்­றன.
இலங்­கையும் இந்­தி­யாவும் நெருக்­க­மாக அடுத்­த­டுத்து உள்ள நாடுகள் என்ற கார­ணத்­தி­னாலும் ஒன்­றுடன் ஒன்று தொடர்­பு­பட்­டதும் சிக்­க­லா­ன­து­மான மக்­களின் வர­லாற்­றினை கொண்­டவை என்ற கார­ணத்­தி­னாலும் உறவு முறை­களில் முகங்­கொ­டுக்க வேண்­டிய பிரச்­சி­னை­களை ராஜ­பக் ஷ நன்கு அறிவார்.
கடந்த கால  பிரச்­சி­னைகள் போன்று மீண்டும் உரு­வா­வதைத் தடுப்­ப­தற்கு இந்­தி­யா­வுடன்  தொடர்ச்­சி­யா­னதும் உறு­தி­யா­ன­து­மான தொடர்­பா­டலை தான் விரும்­பு­வ­தாக
த இந்து பத்­தி­ரி­கைக்கு  புது­டில்­லியில் அளித்த நேர்­கா­ணலில் ராஜ­பக் ஷ தெளிவாக கூறி­யி­ருந்தார். தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற  வடக்கு மற்றும் கிழக்கு பிர­தே­சங்­களில் நல்­லி­ணக்க செயன்­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட வேகம் குறித்து இந்­தி­யா­வுக்கு இருந்த விசனம், அம்­பாந்­தோட்டை  துறை­முகம், கொழும்பு துறை­முகம் மற்றும் இரா­ணுவ தொடர்­புகள் உள்­ளிட்ட  முக்­கிய திட்­டங்­க­ளுக்­காக சீனாவின் முத­லீ­டுகள் வர­வேற்­கப்­பட்­டமை இந்­திய திட்­டங்­க­ளுக்­கான அனு­மதி வழங்­கு­வதில் காட்­டப்­பட்ட தாமதம் தொடர்­பான  அதி­ருப்தி மற்றும் இரு­த­ரப்பு பிரச்­சி­னைகள் கடந்த 10வரு­டங்­களில் எதிர்­நோக்­கப்­பட்ட பிரச்­சி­னை­களில் அடங்­கு­கின்­றன.
2015ஆம் ஆண்டு  ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷவின் தோல்வி உட்­பட உள்­நாட்டு அர­சி­யலில் இந்­திய புல­னாய்வு நிறு­வ­னங்கள்  பாத்­தி­ர­மொன்றை வகிக்­கின்­றன என்ற சந்­தேகம் கொழும்பில் நீடித்­தி­ருக்­கின்­றது. பிர­தமர்  நரேந்­திர மோடியும், ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷவும் நடத்­திய ஒரு­மணி நேர சம்­பா­ஷ­ணையில் சகல பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் ஓர­ளவு தெளிவு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்று தெரி­கி­றது. புதிய ஒரு எதிர்­கா­லத்தை கட்­டி­யெ­ழுப்­பவும் இரு­வரும் நாட்டம் கொண்­டுள்­ளார்கள். விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ராக இரு­த­ரப்­பி­னரும் நெருக்­க­மாக சேர்ந்து பணி­யாற்­றி­ய­தற்கு பிறகு  இப்­போது  புதிய அச்­சு­றுத்­தல்கள் குறிப்­பாக இந்­திய தொடர்­பு­களை கொண்­டதும் இஸ்­லா­மிய அர­சுடன் இணைந்­த­து­மான குழு­வொன்றின் உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் குறித்து தோன்­றி­யி­ருக்­கின்­றன என்ற யதார்த்­தமும் இரு­வ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.
அபி­வி­ருத்­தி­க்காக 40கோடி அமெ­ரிக்க டொலர் உத­வி­யுடன் சேர்த்து பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான  பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக 5கோடி  அமெ­ரிக்க டொலர் நிதியும் வழங்­கு­வ­தாக இந்­தியா விடுத்த அறி­விப்பு இரு நாடு­க­ளி­னதும் பாது­காப்பை பிரிக்க முடி­யாது என்­ப­தற்கு நிரூ­ப­ண­மாகும். கூடு­த­லான அள­வுக்கு உயர்­மட்ட தொடர்­பு­களின் தேவை­க­ளையும் பிர­தமர் நரேந்­திர மோடி  வலி­யு­றுத்­தினார்.
மோடியின் அழைப்பை ஏற்று கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி என்ற வகையில் தனது முத­லா­வது வெளிநாட்டு விஜ­யத்தை மேற்­கொண்டு புது­டில்­லிக்கு வந்தார். தான் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற பிறகு கொழும்­புக்கு விஜயம் மேற்­கொள்ளும் முத­லா­வது  வெளிநாட்டு தலை­வ­ராக  மோடி இருக்க வேண்டும் என்ற விருப்­பத்தை வெளிப்­ப­டுத்­திய ராஜபக் ஷ  அதற்­கான அழைப்­பி­னையும் விடுத்தார்.
ஆனால் புது­டில்­லியின் அக்­க­றை­களை  இலங்­கையின் புதிய அர­சாங்கம் எந்­த­ள­விற்கு  கரி­ச­னை­யுடன் கையாளும் என்­பதை அடுத்த சில மாதங்­களில் இடம்­பெறும் நிகழ்வுப் போக்­கு­களே வெளிக்­காட்டும். வடக்கின் உட்­கட்­ட­மைப்பு திட்­டங்­களும் திரு­கோ­ண­மலை துறை­முக திட்டம், மத்­தள விமான நிலைய அபி­வி­ருத்தி ஆகி­ய­வற்­றுக்­கான உட்­கட்­ட­மைப்­புக்­க­ளுக்­கான அனு­ம­திக்கு  அப்பால் சீனா­விற்கு மீள் செலுத்த வேண்­டிய கடன்­க­ளையும்  அதன் முத­லீ­டு­க­ளையும் கோத்­த­பாய ராஜ­பக் ஷ எவ்­வாறு  ஒழுங்­க­மைப்பார் என்­ப­தையும் பொறுத்தே அவர் மதிப்­பி­டுவார்.
எல்­லா­வற்­றுக்கும் மேலாக தனக்கு வாக்­க­ளிக்­காத சிறு­பான்­மை­யின மக்கள் வாழ்­கின்ற அபி­வி­ருத்­தி­ய­டை­யாத வடக்கு– கிழக்கு பகு­திகள் தொடர்பில் ராஜ­பக் ஷவின் மனப்­பாங்கு உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­படும். அதி­கார பர­வ­லாக்­கத்­திற்கு மேலாக  அபி­வி­ருத்­திக்கு முன்­னு­ரிமை கொடுப்­ப­தற்­கான அவ­ரது விருப்பம் புது­டில்­லியும் சென்­னையும் கவலை கொள்­வ­வ­தற்­கான ஒரு கார­ணி­யாக அமையும்.
தமி­ழர்­க­ளுக்கு கௌர­வமும் சமா­தா­னமும் சமத்­து­வமும் நீதியும் கிடைப்­பதை இலங்கை அர­சாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று இந்­தியா தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கி­றது. 3தசாப்­த­கால போரின்­போது மோச­மான இழப்­புக்­களை சந்­தித்த தமி­ழர்­களின் பகு­திகள்,  இலங்­கையின்  எஞ்­சிய பகு­திகள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி குறைந்த பகு­தி­க­ளா­கவே இருந்து வரு­கின்­றன. போர் ஒன்றில் வரை­ய­றுக்­கப்­பட்­டதும் குறு­கி­ய­து­மான கால­கட்­டத்துக்குள் வெற்­றி­ய­டைந்து விடலாம். ஆனால் சமா­தா­னத்தை வென்­றெ­டுப்­பதில் மக்­களின் மனக்­கா­யங்­களை குணப்­ப­டுத்­து­வ­திலும் பல தசாப்­தங்­களை குறிக்­கின்ற விரி­வான  செயன்­மு­றை­யாகும். இலங்­கையின் இச்­செ­யன்­மு­றை­யினை இந்­தியா மிக உன்­னிப்­பாக  அவ­தா­னிக்கும்.
             
இந்­துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை
“டில்­லியின் கொழும்பு சவால்” என்ற மகு­டத்தில் இந்­துஸ்தான் டைம்ஸ் எழு­தி­யி­ருக்கும் ஆசி­ரிய தலை­யங்கம் வரு­மாறு,
இந்­தியா தானா­கவே முந்­திக்­கொண்டு கடைப்­பி­டித்த அணு­கு­முறை இலங்­கையின் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தேர்­தலில் வெற்றி பெற்று பத­வி­யேற்ற  பிறகு இரு­வா­ரங்­க­ளுக்குள் குறைந்த கால­கட்­டங்­க­ளுக்­குள்­ளாக அவர் முதன்­மு­த­லாக வெளிநாட்டு விஜ­யத்தை மேற்­கொண்டு வந்­த­டைந்த இட­மாக புது­டெல்லி விளங்­கு­கி­றது. கோத்­த­பாய  ராஜ­பக் ஷ   பத­வி­யேற்று மறு­நாளே வெளியு­றவு  அமைச்சர் சிவ­சங்கர் இலங்­கையின் புதிய அர­சாங்­கத்­துடன் தொடர்­பு­களை  ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும், ராஜ­பக் ஷ சகோ­த­ர­ருடன் புதிய ஆரம்பம் ஒன்றை செய்­வ­தற்­கான புது­டில்­லியின்  விருப்­பத்தை தெரி­விப்­ப­தற்கும் கொழும்­புக்கு விஜயம் செய்தார்.
இந்­தியா தனக்கு  விருப்­ப­மா­ன­வர்­க­ளுக்கு முட்டு கொடுப்­ப­தற்கு பதி­லாக அயல் நாடு­களில் மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்கள்  யாராக இருந்­தாலும் அவர்­க­ளுடன் இணைந்து பணி­யாற்றும் புதிய அணு­கு­மு­றை­யினை  கடைப்­பி­டிக்­கின்­றது. கோத்­த­பா­ய­வுக்கு  இந்­தியா நீட்­டிய நேசக்­கரம்  இந்த புதிய அணு­கு­மு­றை­யாகும். தனது அர­சாங்­கத்தை பொறுத்­த­வ­ரையில் இந்­தி­யாவோ முன்­னு­ரி­மைக்­கு­ரி­ய­தாக  இருக்கும் என்றும் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பின் பணியில் குறுக்கே நிற்க ஒரு 3ஆம் சக்­திக்கு அனு­ம­திக்கப்  போவ­தில்லை என்று கூறி­யதன் மூல­மாக ஜனா­தி­பதி  ராஜ­பக் ஷவும் கூட சரி­யான செய்­தி­யையே விடுத்தார். இது மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். ஏனென்றால் கோத்­த­பா­ய­வு­டனும் முன்னாள்  ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய பிர­த­ம­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷவு­டனும் புது­டில்லி முன்னர் கசப்­பான உற­வு­மு­றை­களை கொண்­டி­ருந்­தது. மஹிந்த ராஜ­பக் ஷ  தனது  ஆட்சிக் காலத்தில் சீனா­விற்கு மிகவும் நெருக்­க­மா­னவர் என்று நோக்­கப்­பட்டார். இந்­தி­யா­வு­ட­னான தார்ப்­ப­ரி­யங்கள் தனது சகோ­தரர் ஜனா­தி­ப­தி­யாக இருந்த கால­கட்­டத்­துக்கு உரி­யவை என்­பதை இந்­திய ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சம்­பா­ஷ­ணை­களில் ஏற்­றுக்­கொண்ட கோத்­த­பாய ராஜ­பக் ஷ பாக்­கிஸ்தான் அல்­லது சீனா ஆகிய நாடு­க­ளு­ட­னான  இலங்­கையின் உறவில் இந்­தியா  கவலை கொள்ள தேவை­யில்லை என்றும் கூறி­யி­ருக்­கிறார். ஆனால் சீனா குவிக்கும் பெரு­ம­ளவு முத­லீட்­டுக்கு மாற்­றாக பிராந்­தி­யத்தின் ஏனைய நாடுகள் இலங்­கையில் கூடு­த­லான முத­லீ­டு­களை செய்ய வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினார்.
தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற இலங்­கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகு­தி­க­ளுக்­கான அதி­காரப் பர­வ­லாக்கம் குறித்து தனது அர­சாங்கம் மீள் பரி­சீ­லனை செய்யும் என்­ப­தையும் ராஜ­பக் ஷ சாடை காட்டி குறிப்­பிட்டார். அவரை பொறுத்­த­வ­ரையில் தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வு அபி­வி­ருத்­தியே தவிர வெறு­மனே அதி­கார பர­வ­லாக்கம்  அல்ல. தமி­ழர்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­வ­தற்கு நல்­லி­ணக்க செயன்­மு­றை­களை இலங்­கையின் புதிய அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்டும் என்று இந்­திய தரப்­பினால் விடுக்­கப்­பட்ட கோரிக்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்கும் போது  இந்த பிரச்­சி­னை­யிலும் ஏனைய விவ­கா­ரங்­க­ளிலும் இரு நாடு­களும் பொது­வான நிலைப்­பாட்டை கண்­ட­றிய வேண்டி இருக்கும் என்­பது தெளிவாகத் தெரி­கி­றது. கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த கடல் பாதை­க­ளுக்கு நெருக்­க­மாக இலங்கை அமைந்­தி­ருப்­ப­தையும் இந்து சமுத்­திர பிராந்­தி­யத்தில் அதி­க­ரிக்கும் சீனாவின் பிர­சன்­னத்­தையும் கருத்தில் கொண்டு பார்க்­கும்­போது இரு நாடு­களும் அத்­த­கைய ஒரு விட்டுக்­கொ­டுப்பை செய்து அணுக வேண்­டி­யது மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். இந்­திய இரா­ஜ­தந்­தி­ரத்­துக்கு இது மிகவும் சிக்கல் நிறைந்த பணி­யாக இருக்கும்.
டெகான் குரோ­னிக்கில் பத்­தி­ரிகை
இதே­வேளை டெகான் குரோ­னிக்கில் பத்­தி­ரிகை நேற்­றைய தினம் “இலங்­கைக்கு செயல் நோக்­க­மு­டைய அணு­கு­மு­றையே முக்­கி­ய­மா­னது” என்ற தலைப்பில் தீட்­டி­யி­ருக்கும் ஆசி­ரிய தலை­யங்­கத்தில் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது:
இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் அறி­விக்­கப்­பட்­ட­வுடன் இந்­திய வெளியு­றவு அமைச்சர் எஸ்.ஜெய­ஷங்கர்  கொழும்­புக்கு  பறந்து சென்று கைய­ளித்த அழைப்பை அடுத்து இலங்­கையின் புதிய ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தனது முத­லா­வது வெளிநாட்டு விஜ­யத்தை மேற்­கொண்டு புது­டில்லி வந்தார். இந்த விஜயம் இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உறவை சுமு­க­மா­ன­தாக்­கு­வ­தற்கு நீண்ட காலத்­துக்கு பிறகு கிடைத்த சந்­தர்ப்­ப­மாக அமை­கி­றது.
ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஒரு முன்னாள் இரா­ணுவ அதி­காரி. தனது சகோ­தரர் மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்சிக் காலத்தில் பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்த அவர் 2009ஆம் ஆண்டில் உள்­நாட்டு போரை முடி­வுக்கு கொண்டு வரும் வகையில் விடு­தலைப் புலி­களை இரா­ணுவ ரீதியில் தோற்­க­டிப்­ப­தில் முக்­கி­ய­மான ஒரு பாத்­தி­ரத்தை வகித்தார். அதில் அவர் கேள்­விக்­கி­ட­மான வழி­மு­றை­க­ளையும் பயன்­ப­டுத்த தயங்­க­வில்லை. அதனால் அவர் உல­க­லா­விய கண்­ட­னங்­க­ளுக்கும் ஆளானார்.
கோத்­த­பாய ராஜ­பக் ஷ இலங்­கையின் சிங்­கள பெரும்­பான்­மை­யி­னரின் ஆத­ரவை அடிப்­ப­டை­யாகக் கொண்ட பிரம்­மாண்­ட­மான ஆணை­யுடன் ஜனா­தி­ப­தி­யாக  தெரி­வா­கி­யி­ருக்­கிறார். இது அவரை ஒரு பெரும்­பான்மை திசை மார்க்­கத்தில் திருப்பி விடலாம் என்று எதிர்­பார்க்க முடியும்.  இலங்கை அர­சி­யலில் தலை­யீடு செய்­வ­தாக தோன்­றா­தி­ருக்கக் கூடிய முறையில் மித­மான செல்­வாக்கை இந்­தியா செலுத்­து­வதால்  மோடி அர­சாங்கம் நடை­முறை சாத்­தி­ய­மான வழி­யிலும் விவே­கத்­து­டனும் செயற்­பட வேண்டும்.
சீனா மற்றும் பாகிஸ்தான் தொடர்பில் இந்­தி­யா­வுக்கு இருக்கக் கூடிய அக்­க­றை­களை  தான் கவ­னத்தில் எடுத்து செயற்­ப­டுவார் என்று ராஜ­பக் ஷ டில்­லிக்கு கூறி­யி­ருக்­கிறார். இந்­திய பத்­தி­ரி­கைக்கு அளித்த நேர்­கா­ணலில் சீனா மீதான தனது நாட்டின் அக்­கறை முற்­றிலும் வர்த்­தக நோக்­கி­லா­னது என்று கூறி­யி­ருக்­கிறார். அதனால் இலங்கை கடல் பரப்­புக்கு சீன நீர்­மூழ்­கிகள் உட­ன­டி­யாக வரு­வ­தற்கு வாய்ப்­பில்லை என்று நம்­பலாம்.
நல்ல ஒரு ஆரம்பம் நடத்­தி­ருக்­கி­றது. ஆனால் இலங்­கையில் பெரி­ய­ளவில் முத­லீடு செய்ய இந்­தி­யா­வையும் ஜப்பான், அவுஸ்­தி­ரே­லியா, சிங்­கப்பூர் போன்ற ஏனைய நாடு­க­ளையும் மிகவும் எச்­ச­ரிக்­கை­யான முறையில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார். அந்த நாடுகள் அவ்­வாறு முத­லீடு செய்­யா­விட்டால் சீனாவின் முக்­கி­யத்­து­வத்தை இலங்கை புறந்­தள்ள முடி­யாது என்­பதே அவர் மறை­மு­க­மாக கூறி­யி­ருக்கும் விட­ய­மாகும்.
இலங்­கையின் தமிழ் பகு­தி­க­ளுக்கு பொரு­ளா­தார உத­வி­களை பெரு­ம­ளவு வழங்கப் போவ­தாக ராஜ­பக் ஷ உறு­தி­ய­ளித்­துள்ள அதே வேளை வடக்கு–கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு அதி­காரப்  பர­வ­லாக்­கத்தை செய்ய முடி­யாது என்­பதை அவர் பர­வ­லாக தெரி­வித்­தி­ருக்­கிறார்.
பெரும்­பான்மை சமூகத்­த­வர்கள் அதை ஏற்றுக் கொள்ளப்போவ­தில்லை என்­பதே அவர் அதற்கு கூறி­யி­ருக்கும் கார­ண­மாகும். பிர­தா­ன­மாக தமிழ் நாட்டின் உணர்­வுகள் கார­ண­மாக தமிழர் பிரச்­சி­னையில் இலங்கை மீது புது­டில்லி நெருக்­க­டி­களை பிர­யோ­கித்து ஐக்­கிய இலங்கை ஒன்­றுக்குள் பாது­காப்பு, பத்­தி­ர­மான அர­சியல், இட அமைவை யாழ்ப்­பாணம் வரு­வ­தற்கு உத­வு­வ­தாக இருந்தால் புது­டில்லி சென்­னையை மிகுந்த ஆவ­தா­னத்­துடன் கையாள வேண்டி இருக்கும்.
புதிய இந்­தியன் எக்ஸ்­பிரஸ் பத்­தி­ரிகை
புதிய இந்­தியன் எக்ஸ்­பிரஸ் பத்­தி­ரிகை “மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான ஒரு தளம்” என்ற தலைப்பில் எழு­தி­யி­ருக்கும் ஆசி­ரிய தலைப்பில் கூறி­யி­ருப்­ப­தா­வது:
இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்த இலங்கை ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வு­ட­னான தனது பேச்­சுக்­களின் முடிவில் பிர­தமர் நரேந்­திர மோடி எமது இரு நாடு­க­ளி­னதும் பாது­காப்பும் அபி­வி­ருத்­தியும் பிரிக்க முடி­யா­தவை என்றும் அதனால் ஒருவர் மற்­ற­வரின் பத்­திரம் மற்றும் உணர்­வு­களை தெரிந்து கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டி­யது இயல்­பா­னது என்றும்  உறு­தி­படக் கூறினார். இந்த நிலைப்­பாடு தெளிவாக தெரிந்­தது என்­றாலும் இலங்­கையில் நீண்ட கால உள்­நாட்டு போரில் இந்­தி­யாவின்  தலை­யீடு கார­ண­மாக அண்­மைய தசாப்­தங்­களில் டில்­லிக்கும் கொழும்­புக்கும் இடையே கடு­மை­யான கசப்­பு­ணர்­வுகள் நில­வின என்­பதே யதார்த்­த­மாகும்.
1980களின் ஆரம்­பத்தில் இலங்­கையில் தமிழ் தீவி­ர­வாத குழுக்­க­ளுக்கு இந்­தியா அளித்த ஆத­ரவு அதைத் தொடர்ந்து 1987–- 1990 கால கட்­டத்தின் போது இடம்­பெற்ற இந்­திய இரா­ணுவ தலை­யீடு தமிழ் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள் தொடர்பில் இலங்­கை­மீது இந்­தியா பிர­யோ­கித்த அர­சியல் நெருக்­கு­தல்கள் ஆகி­யவை கார­ண­மாக இலங்­கைக்கு டில்லி எதி­ரா­காது என்று சிங்­கள பெரும்­பான்­மை­யினர் நம்­பினர்.
ஒரு தசாப்­தத்­துக்கும் முன்னர் தமி­ழர்­களின் ஆயுத கிளர்ச்­சிக்கு எதி­ராக இலங்கை அர­சாங்கம் தீர்க்­க­மான முறையில் கண்ட வெற்­றிக்கு பிறகு தமிழ் மக்­க­ளு­ட­னான அர­சியல் நல்­லி­ணக்கம் தொடர்பில் முன்­னேற்றம் இல்­லா­தி­ருந்­தமை ஆகி­யவை கார­ண­மாக டில்­லியும் அதன் மனக் குறை­களைக் கொண்­டி­ருக்­கி­றது.
இந்த சர்ச்­சைக்­கு­ரிய விவ­கா­ரங்­களை தீர்ப்­ப­தற்கு கடந்த சில வரு­டங்­க­ளாக எடுக்­கப்­பட்ட முயற்­சிகள் எந்த பய­னையும் தர­வில்லை. கொழும்பில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் நில­விய உட்­பூசலே இதற்கு கார­ண­மாகும்.  அண்­மையில் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில்  கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வுக்கு கிடைத்த தீர்க்­க­மான ஆணை இரு தரப்பு உற­வு­களை மீளக் கட்­டி­யெழுப்­பு­வ­தற்கும் முயற்­சி­களை புதுப்­பிப்­ப­தற்­கு­மான ஒரு வாய்ப்பை தொடக்­கி­விட்­டி­ருக்­கி­றது.
இந்­தி­யாவின்  பாது­காப்பு நலன்­க­ளுக்கு பாத­க­மான எந்த காரி­யத்­தையும்  இலங்கை செய்ய போவ­தில்லை என்றும்  சீனா­வு­ட­னான  தனது அர­சாங்­கத்தின் ஊடாட்டங்கள் முற்றிலும் வர்த்தக நோக்கத்திலானவையே என்றும் டில்லியில் கோத்தபாய ராஜபக் ஷ உறுதி கூறினார். கைமாறாக இந்தியா இலங்கையில் பயங்கரவாதம் மீண்டெழுவதற்கு எதிரான கோத்தபாய ராஜபக் ஷவின் திட்டங்களுக்கும் அவரின் பேரார்வம் மிக்க பொருளாதார குறிக்கோள்களுக்கும் உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழர் பிரச்சினை இருதரப்பு உறவுகளில் மீண்டும் பாதிக்க கூடிய ஒரு  “டைம் பாம்” ஆக தொடர்ந்தும் இருக்கிறது. தமிழ் சிறுபான்மை  இனத்தவர்களின் அக்கறைகளை கவனிப்பதற்கான தனது திட்டங்கள் குறித்து கோத்தபாய ராஜபக் ஷ தனக்கு விளக்கி கூறியதாக  தெரிவித்த மோடி, தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை  ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
ஆதிகாரப் பரவலாக்கம் பற்றிய பேச்சு சிங்கள பெரும்பான்மையை சீற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதே தவிர தமிழர்களுக்கு எந்த பயனையும்  அளிக்கவில்லை  என்று கோத்தபாய ராஜபக் ஷ வாதிடுகிறார். தமிழ் மக்களின் பொருளாதார நிலைமைகளை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொண்டு வருவதன் மூலம் இலங்கையில் இனத்துவ அரசியலுக்கு அப்பால் செயற்பட விரும்புவதாக அவர் கூறுகிறார். சென்னையில் இருக்கின்ற பலருக்கு இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல. ஆனால் இலங்கை பிரச்சினைகளுக்கு வெளித்தீர்வுகளை தன்னால் நிராகரிக்க முடியாது என்பதை டில்லி நிச்சயமாக அறியும்.
தமிழர்களுக்கு எதையுமே செய்யாவிட்டால் இலங்கையில் உள்நாட்டு அரசியலில் தலையிடுமாறு டில்லிக்கு சென்னை தவிர்க்க முடியாத வகையில் நெருக்கடிகளை கொடுக்கும் என்பதை கொழும்பு அறியும். அவ்வாறான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் இரு நாடுகளும் பழைய நிலைக்கே செல்லும். ஒன்றுடன் மற்றது பின்னிப்பிணைந்திருக்கும்  இந்த அரசியல் சிக்கலை கையாள்வதற்கு ஒரேயொரு வழியே இந்தியா அவ்வாறு தமிழர்களின் நிலையில் தெளிவாகத் தெரியக்கூடிய முன்னேற்றங்களை கொழும்பு காண்பிக்க வேண்டும் என்பதாகும். இலங்கையின் அரசியலில்  நல்லிணக்கத்துக்கான  சர்வதேச தீர்வினை டில்லி ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 










No comments: