ஜப்பான் நிஜ ஏவுகணையொன்றை காணும் காலம் தொலைவில் இல்லை - வட கொரியா எச்சரிக்கை
ஈரான் ஆர்ப்பாட்டம் : 208 பேர் பலி : சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு
கண்டனத் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான விசாரணையில் ட்ரம்ப் ஆஜராகப் போவதில்லை
வட கொரியாவில் புனித மலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நகர்
டிரம்பிற்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணையை கொண்டுவருவதற்கான போதிய ஆதாரங்கள் - அமெரிக்க குழு அறிக்கை
ஐ.என்.எக்ஸ் .மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் பிணை
நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்
நத்தார் பரிசாக எதனைப் பெறுவது என்பது அமெரிக்காவின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது - வடகொரியா எச்சரிக்கை
தனது கனவு நகரை திறந்து வைத்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்
பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை
ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு !
ஜப்பான் நிஜ ஏவுகணையொன்றை காணும் காலம் தொலைவில் இல்லை - வட கொரியா எச்சரிக்கை
02/12/2019 ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே மனோதிடம் இல்லாத அரசியல் குள்ளர் ஒருவர் என வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில் தாம் ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளை ஏவக் கூடிய வல்லமையைக் கொண்ட இரு ஏவும் உபகரணங்களையே கடந்த வியாழக்கிழமை ஏவிப் பரிசோதித்ததாக வட கொரியா வலியுறுத்தியுள்ளது. புகைப்படம் சகிதம் அந்தப் பரிசோதனை நடவடிக்கை குறித்து அறிக்கையிடப்பட்டிருந்த நிலையில் ஏவுகணையொன்றையும் பல ஏவுகணைகளை ஒரே சமயத்தில் ஏவுவதற்கு பயன்படும் உபகரணமொன்றையும் வேறுபடுத்தி அறிய முடியாத அபே உலகிலேயே ஒரேயொரு மூடராகவும் வரலாற்றிலேயே மிகவும் முட்டாளாகவும் உள்ளதாகக் கூறமுடியும் என வட கொரிய அரசாங்க ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.
"அபே நிஜமான கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையை அதிக தொலைவில் அல்லாது விரைவில் தனது மூக்கிற்கு அருகே நெருக்கமாக காண நேரிடலாம். மனோதிடம் அற்ற அரசியல் குள்ளனாக இருப்பதற்கு அபேயை விடவும் பொருத்தமானவர் எவரும் இல்லை" என வட கொரிய அரசாங்க ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் பிரகாரம் வட கொரியாவுக்கு ஏவுகணைகளை ஏவுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் அமெரிக்க மஸாசுஸெட்ஸ் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான இணைப் பேராசிரியர் விபின் நராங் தெரிவிக்கையில், இரு தரப்பினரும் உரிமை கோருவது போல் வடகொரியாவால் ஏவிப் பரிசோதிக்கப்பட்ட உபகரணம் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையோ அன்றி ஏவுகணைகளை ஏவும் உபகரணமோ அல்ல எனவும் அது ஏவுகணை ஏவும் பாதையில் பயணிக்கும் கே.என். 25 உபகரணம் எனவும் இதனை ஒரு ஏவுகணையாகவே பல நிபுணர்கள் கருதுவதாகவும் கூறினார். நன்றி வீரகேசரி
03/12/2019 ஈரானில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 208 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஈரானில் எரிவாயுப் பொருட்களின் விலை உயர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டு பொதுமக்களை அந்நாட்டு அரச படையினர் கட்டுப்படுத்த முயன்றபோது பொதுமக்கள் மீது மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
இதில் 208 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததோடு , பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நேற்றைய தினம் சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள அறிக்கையில் ஈரானில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அந்நாட்டுப் படையினரின் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக நம்பகத்தன்மையான ஆதாரங்கள் கிடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
எனினும் கடந்த வாரம் உக்கிரம் அடைந்த ஆர்ப்பாட்டத்தின்போது சுமார் 731 வங்கிகளும், 140 அரசு அலுவலகங்களும் எரிக்கப்பட்டன. 70 பெற்றோல் நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 20 ஆயிரம் பேரில் 7ஆயிரம் பேர் வன்முறைகளில் ஈடுபட்டனர் என அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அத்தோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொதுமக்கள் வன்முறைகளில் ஈடுபடுக்கின்றனர் என அந்நாட்டு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் . இதில் பலர் கொல்லப்பட்டனர் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தது.
இவ்வாறு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பில் அறிந்து உண்மை தன்மையை வெளிபடுத்த முடியும் என மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
03/12/2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வரும் முகமாக பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ள விசாரணைகளில் ஆஜராகப் போவதில்லை என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ட்ரம்ப் மேற்படி விசாரணைகளில் பங்கேற்க எதிர்பார்க்கவில்லை என வெள்ளை மாளிகை சட்ட ஆலோசகர் பட் சிப்பலோன் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் நீதி சபைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவர் ஜெர்ரோல்ட் நட்லர் கூறுகையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசாரணையில் ஆஜராக வேண்டும் அல்லது அது தொடர்பில் முறைப்பாடு செய்வதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
அதேசமயம் இரண்டாவதாக இடம்பெறும் விசாரணையில் ட்ரம்ப் கலந்து கொள்வாரா இல்லையா என வெள்ளை மாளிகை எதனையும் குறிப்பிட்டுக் கூறவில்லை.
மேற்படி விசாரணையில் செயற்கிரமம் மற்றும் அடிப்படை நீதி என்பவற்றில் முழுமையான குறைபாடு உள்ளதாக சிப்பலோன் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். நாளை 4ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும் விசாரணையில் ஆஜராக விடுக்கப்பட்ட அழைப்பில் விசாரணைக்கு தயாராகும் சரியான நேரம் மற்றும் சாட்சிகள் தொடர்பான தகவல்களை வெள்ளை மாளிகைக்கு வழங்கத் தவறியுள்ளமை காரணமாக ட்ரம்ப் அந்த விசாரணையில் கலந்து கொள்ளும் சாத்தியமில்லை என அவர் கூறினார்.
பாராளுமன்ற கீழ் சபையால் 3 சாட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஒரேயொரு சாட்சிக்கு மட்டுமே அழைப்பு விடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள விசாரணை ட்ரம்பிற்கும் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்க்குமிடை யில் கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற தொலைபேசி அழைப்பை மையமாகக் கொண்டமையவுள்ளது.
இந்தத் தொலைபேசி அழைப்பின் போது ட்ரம்ப் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட எதிர்பார்த்துள்ள வேட்பாளரான ஜோ பிடெனுக்கும் அவரது மகன் ஹன்டருக்கும் எதிரான விசாரணைகளை ஆரம்பிக்க உக்ரேனிய ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஹன்டர் முன்னர் உக்ரேனிய சக்தி வளக் கம்பனியான புறிஸ்மாவில் பணியாற்றி யிருந்தார். நன்றி வீரகேசரி
வட கொரியாவில் புனித மலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நகர்
04/12/2019 வட கொரியாவின் புனித மலைப் பிராந்தியத்துக்கு அருகில் அந்நாட்டுத் தலைவர் கிம் யொங் உன்னால் கைச்சாத்திடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட புதிய நகரொன்றை ஸ்தாபிப்பதற்கான நிர்மாணத் திட்டம் பூர்த்திசெய்யபட்டுள்ள நிலையில் அதனை அந்நாட்டு மக்கள் ஒரு விழாவாக நேற்று செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
சம்ஜியொன் பிராந்தியத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மேற்படி நகரை கிம் யொங் நாடாவை வெட்டி வைபவ ரீதியாக நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
வட கொரியாவின் அடையாளமொன்றாகவும் கிம் யொங் உன்னின் தந்தையும் அவருக்கு முன்னர் அந்நாட்டை ஆட்சி செய்த மறைந்த தலைவருமான கிம் யொங் இல்லின் பிறப்பிடமாக பேக்து மலைக்கு அருகில் இந்த நகர் அமைந்துள்ளது.
மேற்படி புதிய நகரானது எரிமலையொன்றுக்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பி டத்தக்கது. அந்நகரானது புரட்சிகர செயற்பாடுகளை வெளிப்படுத்தும் அருங்காட்சியகம், பனிக்கால விளையாட்டு பயிற்சி நிலையத் தொகுதி, புளுபெரி பழங்கள் மற்றும் உருளைக் கிழங்கு செய்கைக்கான வசதிகள், ஹோட்டல்கள் மற்றும் 10,000 குடியிருப் புக் கட்டிடங்களை உள்ளடக்கியுள்ளது.
பேக்து மலைப் பிராந்தியத்துக்கு பல தடவைகள் விஜயம் செய்த கிம் யொங் உன், கடந்த ஒக்டோபர் மாதம் அந்த மலைச் சிகரத்தில் வெள்ளைக் குதிரையொன்றில் சவாரி செய்து உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்திருந்தார். நன்றி வீரகேசரி
டிரம்பிற்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணையை கொண்டுவருவதற்கான போதிய ஆதாரங்கள் - அமெரிக்க குழு அறிக்கை
04/12/2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் தவறான விதத்தில் நடந்துகொண்டார் என்ற அடிப்படையில் அவருக்கு எதிராக அரசியல் குற்ற பிரேரணையை கொண்டுவருவதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன என விசாரணைகளை முன்னெடுத்துள்ள குழு தெரிவித்துள்ளது.
சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களிற்கான அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள குறிப்பிட்ட குழு அமெரிக்காவின் தேசிய நலன்களை விட டிரம்ப் தனது தனிப்பட்ட நலன்களிற்கு முக்கியத்துவம் அளித்தார் என தெரிவித்துள்ளது.
2020 இல் தான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக வெளிநாட்டின் உதவியை பெறமுயன்றார்-உக்ரைனின் உதவியை பெற முயன்றார் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
டிரம்பினை ஜனாதிபதி பதவியிலிருந்து ஏன் வெளியேற்றவேண்டும் என்பதற்கான காரணங்களை முன்வைப்பதற்காக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
சனப்பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குறித்த நிரந்தர தெரிவுக்குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2020 இல் தான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக டிரம்ப் பல மாதங்களாக உக்ரைனின்உதவியை பெற முயன்றார் என்பதை கண்டுபிடித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி டிரம்ப் உக்ரைன் தொடர்பான அமெரி;க்காவின் வெளிவிவகார கொள்கையை பலவீனப்படுத்தினார்,தான் மீண்டும் ஜனாதிபதியாவதை உறுதி செய்யக்கூடிய இரு அரசியல் நோக்கங்களிற்காக அமெரிக்காவின் நலனை விட தனது நலனை முன்னிலைப்படுத்தினார் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில்; முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனை தான் சந்திக்கவேண்டியிருக்கும் என அஞ்சிய டொனால்ட் டிரம்ப பிடெனிற்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுகின்றன என பகிரங்கமாக அறிவிக்குமாறு உக்ரைன் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார் என
சனப்பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குறித்த நிரந்தர தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
ஐ.என்.எக்ஸ் .மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் பிணை
04/12/2019 ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பான அமுலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் .மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமுலாக்கத்துறை கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி கைது செய்தது.
இந்நிலையில், ப.சிதம்பரம் தொடர்ந்த பிணை மனுவை டில்லி நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று ப.சிதம்பரத்திற்கு நிபந்தனையுடனான பிணை வழங்கியுள்ளது.
முன்னதாக, சி.பி.ஐ. தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒக்டோபர் 22ஆம் திகதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு பிணை வழங்கியிருந்தது.
தற்போது, அமுலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் பிணை வழங்கப்பட்டுள்ளதால் அவர் திஹார் சிறையிலிருந்து வெளியே வரவுள்ளார்.
இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன் மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை விடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்
04/12/2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் நேட்டோ நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாக பிரித்தானியாவுக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை விஜயம் செய்துள்ளார்.
அவர் தனது மனைவி மெலானியா சகிதம் அமெரிக்க விமானப் படை விமானத்தில் லண்டனுக்கு வெளியிலுள்ள ஸ்ரான்ஸ்ரெட் விமான நிலையத்தில் தரை யிறங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து மத்திய லண்டனிலுள்ள அரசாங்க வதிவிடமான வின்பீல்ட் மாளிகைக்கு மோட்டார் வாகன பவனியாக சென்றார்.
பிரித்தானியாவின் முக்கிய பொதுத் தேர்தல் இடம்பெறுவதற்கு 10 நாட்களேஉள்ள நிலையில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
தான் இந்த விஜயத்தின் போது ஐரோப்பிய நேச நாடுகளது பாதுகாப்பு செலவினம் தொடர்பான பங்களிப்பை ஊக்குவிக்கப் போவதாக இந்தப் பயணத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தான் பதவியேற்றது முதற்கொண்டு நேட்டோ நேசநாடுகள் பாதுகாப்பு செலவினத்தை இரு மடங்கிலும் அதிகமாக பொறுப்பேற்பது தொடர்பான தமது கடப்பாட்டை பூர்த்தி செய்து வருவதாக ட்ரம்ப் டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்பின் மேற் படி விஜயம் பொதுத் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில் தன்னைப் பாதிக்கக் கூடும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள தேர்தலில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு ஆதரவளித்து வரும் போரிஸ் ஜோன்ஸன் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றிபெற வாய்ப் புள்ளதாக கருத்துக் கணிப்பு வாக்கெடு ப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜெரேமி கோர் பைன், போரிஸ் ஜேனான்ஸனுக்கும் ட்ரம் புக்குமுள்ள நெருக்கத்தை அவருக்கு எதி ரான பிரசார தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகிறார்.
போரிஸ் ஜோன்ஸன் அமெரிக்க வர்த்தக உடன்படிக்கையொன்றுக்குப் பதிலீடாக பிரித்தானிய தேசிய சுகாதார சேவைகளை அமெரிக்க மருந்துக் கம்பனிகள் மேலும் இலாபமீட்டும் வகையில் அணுகுவதற்கு வழியேற்படுத்தித் தருவதற்கு தயாராவ தாக தொழிற்கட்சியினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர். ஆனால் போரிஸ் ஜோன் ஸன் அந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
நத்தார் பரிசாக எதனைப் பெறுவது என்பது அமெரிக்காவின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது - வடகொரியா எச்சரிக்கை
04/12/2019 அமெரிக்கா தனது விரோத கொள்கைகளை மாற்றிக்கொள்வதற்கான வருட இறுதி காலக்கெடு நெருங்கி வருகிறது என வட கொரிய வெளிநாட்டு அமைச்சு நேற்று செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருட இறுதியில் நத்தார் பரிசாக எதனைப் பெறுவது என்பதை அமெரிக்காவே தீர்மானிக்க வேண்டும் என அந்த அமைச்சால் வடகொரிய அரசாங்க ஊடகமான கே.சி.என்.ஏ. இல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அமெரிக்காவால் விடுக்கப்பட்ட அழைப்பு வட கொரியாவை பேச்சுவார்த்தைக்குள் கட்டுப்படுத்தி அதனை அமெரிக்க அரசியல் நிலைமை மற்றும் தேர்தலுக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கான முட்டாள் தனமான தந்திரம் அன்றி வேறு எதுவுமி ல்லை என அமெரிக்காவுடனான உறவுகளுக்கு பொறுப்பாகவுள்ள வடகொரிய வெளிநாட்டு விவகார உப அமைச்சர் றி தே சோங் தெரிவித்தார்.
வட கொரியா தனது சொந்த பூர்வாங்க வேலைத் திட்டங்களில் தான் எடுத்துள்ள முக்கிய முன்னடியெடுத்துவைப்புகளில் பின்வாங்குவதில்லை என்ற ஆகக்கூடிய விடா முயற்சியுடன் தன்னால் இயன்றளவில் அதிக பட்சத்தைச் செய்துள்ளது எனத் தெரிவித்த சோங், "தற்போது என்ன செய்வது என்பது அமெரிக்காவின் தெரிவாகவுள்ளதுடன் எதனை நத்தார் பரிசாக பெறத் தெரிவுசெய்வது என்பதும் அமெரிக்காவிலேயே முழுமையாகத் தங்கியுள்ளது" என்று கூறினார்.
அணு ஆயுதக் களைவு குறித்து வட கொரிய மற்றும் அமெரிக்கத் தலைவர்களிடையே 3 முறை சந்திப்புகள் இடம்பெற்றுள்ள போதும், அது தொடர்பில் மிகவும் சிறியளவான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து தனது கடும் நிலைப்பாட்டை அமெரிக்கா தளர்த்த வேண்டும் என வடகொரியா கோரியுள்ளது. நன்றி வீரகேசரி
தனது கனவு நகரை திறந்து வைத்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்
04/12/2019 வட கொரியாவின் கனவு நகரம் என பெயர் பெற்ற சம்ஜியோன் நகரத்தை அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் திறந்து வைத்துள்ளார்.
கிம் ஜோங் உன் குடும்பத்தினரின் பூர்வீகமாக கருதப்படும் பேக்ட் மலைக்கு அருகே, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் சொகுசு வசதிகளுடன் அமைந்துள்ள இந்த நகரத்தை கிம் ஜோங் உன் திறந்து வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 4000 குடும்பங்கள் வாசிக்க கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஹொட்டல்கள், சொகுசு விடுதிகள், கலாசார மையம் மற்றும் உயர்தர வைத்தியாசைகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை
06/12/2019 இந்தியாவின், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27ஆம் திகதி இரவு கால்நடை பெண் வைத்தியர், பாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தச்செய்ததுடன், பெரும் பதற்றத்தையும் தோற்றுவித்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க கோரிக்கை எழுந்திருந்த நிலையில், பெண் வைத்தியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
இக்கொலை வழக்கில் கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டிய போது , குறித்த 4 பேரும் தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனை தடுக்க முயன்ற பொலிஸாரை குறித்த கசந்தேக நபர்கள் தாக்கியுள்ளதோடு, மறுபடியும் தப்பிசெல்ல முயன்றதால் 4 பேர் மீதும் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகத்தில், சந்தேக நபர் நால்வரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. நன்றி வீரகேசரி
ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு !
05/12/2019 ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அ.தி.மு.க.வினர் பேரணியாக சென்று, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. சார்பில் சென்னை அண்ணா வீதியிலிருந்து வாலாஜா வீதி வழியாக மெரினா கடற்கரை நோக்கி அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியில் முதலமைச்சரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கறுப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். கூட்டணி கட்சியினரும் இதில் கலந்துகொண்டனர்.
பேரணியின் முடிவில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான ஜெ.தீபா, தன் கணவருடன் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. கிளை அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் ஜெயலலிதாவின் திருவுருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. ஜெயலலிதா நினைவு தின பேரணி மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment