சிட்னியை மெல்ல விழுங்கும் காட்டுத்தீ



வேலை முடிந்து ரயிலில் ஏறி சன்னலோரமாக அமர்ந்து Darling Harbour பக்கம் பார்க்கிறேன். முப்பது பாகை வெப்பத்தில் தக தகக்கும் சூரியனின் முகமே மாறிச் செஞ்சிவப்பாக இருக்கிறது.
வானமெங்கும் பெரு மழை கொட்டுவதற்கான கரு மேகங்கள் போலக் கருக்கட்டிச் சூழ்ந்திருக்கின்றன போலியான புகை மண்டலங்கள். 

ரயிலில் இருந்து இறங்கிக் கார் தரிப்பிடம் நோக்கி நடக்கும் போது அருகிலேயே குப்பையை எரித்துப் பிரியும் துகள்களாய் பறந்து பறந்து கொட்டுகின்றன.
ஒரு துகள் வந்து கண்ணையும் பதம் பார்த்தது.
கண்ணைக் கசக்கிக் கொண்டே நடந்தால் காரின் முன் கண்ணாடியில் திட்டுத் திட்டாய் எரிந்த இலைகளின் துகள்கள் ஒட்டியிருக்கின்றன.  கடந்த வாரமும் இது போல ஒரு காட்டுத் தீப் பரவலின் வழியே வந்த ஒரு துகள் என் கண்ணைப் பதம் பார்த்து அதன் உறுத்தல் நிற்கவே சில மணி நேரம் ஆயிற்று.
போன கிழமையை விட இந்தக் கருந்துகள்கள் இன்று கொஞ்சம் பருமனாக, தார் போல இருக்கின்றன.

சிட்னியில் இது கோடை காலம். இருட் படவே எட்டு மணிக்கு மேலாகி விடும். ஆனால் இந்தக் கால நிலை ஏதோ அந்தரத்தில் நிற்பது போல ஒரு அனுபவத்தைக் கொடுக்கிறது. 

கடந்த சில வாரங்களாகவே சிட்னியைத் தலை  நகராகக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத் தீ பரவல் உயிரினங்களில் இருந்து உடமைகள் வரை காவு கொடுத்தாலும்
இன்று இன்னும் நெருக்கமாக அதன் தாக்கத்தை அனுபவிப்பது போல ஒரு பயப் பீதியை உண்டு பண்ணுகிறது.

கடந்த வாரங்களோடு இதுவரை 680 வீடுகளுக்கு மேல் இங்கே காட்டுத் தீக்கு இரையாகிப் போயிருக்கின்றன. இன்னும் நிலமை மோசமாகப் போகிறது என்ற எதிர்வு கூறலை நேரே காண முடிகிறது. 300,000 ஹெக்டேர் நிலப்பரவைத் தாண்டி இன்னமும் தீ நாக்குகள் நியூ சவுத் வேல்ஸ் மா நிலத்தின் சூழவுள்ள புதர்க் காடுகள் வழியே பரவிப் பாய்கின்றன. அவை இப்போது தம் எச்சங்களை சிட்னியின் நகரப் பகுதிகளுக்குள்  பதிக்கின்றன. ஆண்டாண்டு காலம் அமைதியான, இயற்கை வழிக் காட்டுச் சூழலிலும், புதர் சூழ்ந்த பூந்தோட்டம், மரஞ் செடி கொடி கொண்டு வந்த மக்கள் ஆயிரமாயிரம் பேர் தீயினால் அகதிகளாக்கப்பட்டு நடுத் தெருவில். 

இயல்பாகவே நடக்கவே முடியாத,  மரங்களில் படுத்துறங்கி வாழ்ந்த குவாலா (Koala) குட்டிகள் இந்தத் தீயில் கறி முருங்கை மரத்தில் சூடு போட்ட மசுக்குட்டிகள் போலப் பொத்துப் பொத்தென்று மரங்களில் இருந்து விழும் அந்தக் கோரத்தைப் பார்க்க மனம் ஒப்பவில்லை. அவற்றுக்கு ஓடவும் தெரியாதே.
கங்காரு போலப் பாயவும் சக்தியில்லை.
எஞ்சித் தப்பிய குவாலாக்கள் அச்சம் கலந்த கண்ணீரோடு போத்தல் தண்ணியைக் குடிக்கும் காட்சியைப் பார்த்தால் பெற்ற பிள்ளையைப் பார்க்கும் தாய்மைக்கு நிகரான வேதனையே பிறக்கிறது. இந்த குவாலா உயிரினத்தின் எதிர்காலப் பிறப்பையும், இருப்பையும் கூடக் கேள்விக் குறியாக்கி விட்டது இந்தக் காட்டுத்தீ.

எமது மேலதிகாரியின் குடும்பத்தினர் இப்படியொரு புதர்க்காடு சூழ்ந்த கிராமத்தில் இருக்கிறார்கள். சென்ற கிழமை முதல் நாள் 
இரு மருங்கும் பச்சைப் பசேலோடு பயணித்தவர் திரும்பும் போது எரிந்த விறகுக் கூழங்களாக அவை இருந்ததைக் கண்டு அச்சத்தோடு தான் சிட்னி நோக்கிய அந்த ஆறு மணி நேரத்தைத் தொடர்ந்தாராம். 

சீன தேசங்களில் முகத்தை மூடி முன்னெச்செரிக்கையோடு பயணிக்கும் பாதசாரிகள் போல ஆங்காங்கே முகமூடிகள் வந்து விட்டார்கள். மூச்சிழுப்பு வியாதி கொண்டோரை நினைத்தால் இன்னும் பயங்கரம்.

இந்த இயற்கை இனிமேல் எப்படிப் போகப் போகிறது என்ற அச்ச உணர்வே மேலோங்குகிறது.

கானா பிரபா
06.12.2019



நன்றி


No comments: