படித்தோம் சொல்கின்றோம்: பெண்களை காவியமாந்தர்களாக படைத்தவர்களும், பெண்ணாகவே பார்த்த சிந்தனையாளர்களும் ஓவியா எழுதிய “ கருஞ்சட்டைப் பெண்கள் “ முருகபூபதி


இராமாயணத்தில் வரும் சீதை, மகாபாரதத்தில் வரும்   குந்தி, காந்தாரி, திரௌபதி, சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, மாதவி, நளவெண்பாவில் வரும் தமயந்தி பற்றியெல்லாம் அறிந்திருப்பீர்கள்.
இவர்களை படைத்தவர்கள் யார்…?  என்று பார்த்தால், வால்மீகி – கம்பர் – வியாசர் – இளங்கோவடிகள் -  புகழேந்தி  முதலான ஆண்கள்தான்.  காளிதாசர்தான் சகுந்தலையையும் படைத்தார்.
இந்தப்பெண்களையெல்லாம்  கஷ்டப்படுத்திய  இந்த ஆண்களின்    படைப்புகளுக்கு  எமது சமூகம் காவியம் என்றும் பெயர் சூட்டிக்கொண்டது.
வள்ளுவரும் என்ன செல்கிறார்: அடிசிற்கினியாளே… அன்புடைய மாதே பதிசொற் தவறாத பாவாய்… அடிவருடி பின்தூங்கி முன் எழுந்த பேதையே…. “  என்று தனது மனைவி வாசுகி மரணித்த பின்னர்  அவளை சிதையிலே வைத்து தீவைப்பதற்கு முன்னர் பாடினாராம்!
அவளது மரணத்தின் பின்னர் வள்ளுவருக்கு அடிவருடியது யார்..?  என்பது தெரியவில்லை.
இந்தக்கதைகளைப்பற்றியெல்லாம் யோசிக்கவைத்திருக்கிறது -  மறுவிசாரணைக்குட்படுத்து கிறது ஓவியாவின் கருஞ்சட்டைப்பெண்கள் நூல்.
எமது  வாழ்நாளில் பலதரப்பட்ட இஸங்களை பார்த்துவருகின்றோம். கம்யூனிசம், மார்க்ஸிசம், ஷோசலிஸம், இவை தவிர,  
கிளாசிசம் -  மேனரிஸம்  - ரொமாண்டிசிசம் -  மொடர்னிசம், எக்ஸ்பிரஷனிசம் -  ரியலிசம் -  நச்சுரலிசம் – சிம்பலிசம் – இமேஜிசம் -  எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றெல்லாம்  ஏராளமான இஸங்கள் இருக்கின்றன.
ஆனால், ஆணிஸம் – பெண்ணிஸம் என்று எதுவுமில்லை.  பெண்ணியம் இருக்கிறது.
ஆண்ணியம் இருக்கிறதா..?
கம்யூனிஸ்ட்டுகளின் அடையாளம் சிவப்பு என்றால் சுயமரியாதை இயக்கத்தினரது அடையாளம் கருப்பு!
தந்தை  “ பெரியார் பெரியார்   என்று காலம்பூராவும் சொல்லிவருகின்றோம். சுயமரியாதை இயக்கத்தின் தந்தை எனப்போற்றுகின்றோம். ஆனால், அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை யார் சூட்டினார்கள்..?  என்று பார்த்தால், 1938 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்தான் அவருக்கு அந்தப்பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி இந்நூலில் தெரியவருகிறது.
அவருடைய கடவுள் மறுப்புக்கொள்கை பற்றி ஆன்மீகவாதிகளினால் பேசப்பட்டளவுக்கு அவரது பெண்களின் விடுதலை சம்பந்தமான சிந்தனைகள் பற்றி பேசப்படவில்லை. அந்தக்குறையை ஓவியாவின் கருஞ்சட்டைப் பெண்கள் நீக்கியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
உடற்கூற்றின்பிரகாரம் பார்த்தால், ஆண்களைவிட பெண்கள்தான் வலிமையானவர்கள். ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுக்கும் வலிமை மகத்தானது. அதனை தாய்மை என்று மென்மையாக சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகின்றோம்.
பெரியார் திடலில் சுமார் ஓராண்டுகாலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட உரையின் முழுவடிவமும் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
பாரதநாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களை படைத்த ஆண்கள்,  பெண்களை அவதானித்து சித்திரித்த போக்கிலிருந்து  முற்றிலுமாக மாறிய நிலையில் மேற்கத்தைய கார்ல்மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் முதலான ஆண்கள் பெண்கள் பற்றிக்  கொண்டிருந்த கருத்துக்களையும் இந்நூல் உரத்துப்பேசுகிறது.

அதேசமயம் காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனைகளையும் முன்வைக்கிறது.
தாய்வழிச்சமூகம்தான் முன்பு இருந்தது. அதாவது பெண்களை முதன்மைப்படுத்திய சமூகம். பிற்காலத்தில் அது எவ்வாறு ஆண்களை முதன்மைப்படுத்திய சமூகமாக மாறியது என்பதற்கான கேள்விகளுக்கும் இந்த நூல் விளக்கம் தருகின்றது.
அதற்கு ஏங்கல்ஸ் 1884 ஆம் ஆண்டில் எழுதிய  “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்  என்ற நூலிருந்து பல மேற்கோள்களை முன்வைக்கிறது.
பெண்களுக்கு நேரும் கருத்தரிப்பு மற்றும் பேறுகாலத்தை அவர்களுக்கு தரப்பட்ட ஓய்வுகாலமாக்கி, அத்தோடு படிப்படியாக ஆண்கள் அதுவரையில் அவளிடமிருந்த பொறுப்புகளை ஏற்பதிலிருந்து நிலைமை மாறிவிடுகிறது முதலான சுவாரசியங்களையும் இந்த நூல் பேசுகிறது.
இந்தியாவின் அரசியல் அமைப்பை உருவாக்கிய பிதாமகர் எனப்போற்றப்படும் அம்பேத்கார், ஒரு சமயம் அங்கு சாதியத்தின் உருவாக்கம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை புதைக்கின்றன?  என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வுசெய்து ஒரு கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்காக ஒரு உரையை எழுதுகிறார். அக்கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள், அதனை அவர் சமர்ப்பிக்கும் முன்னர் வாங்கிப்படித்துவிட்டு , சில மாற்றங்கள் செய்யவேண்டும் எனச்சொல்கின்றனர்.
 “அதில் எந்தவொரு வரியையும்  நீக்கமாட்டேன்   என்கிறார் அம்பேத்கார். இறுதியில் அவரது உரை அங்கு நிகழ்த்தப்படாமல் நிராகரிக்கப்படுகிறது.
அதனை அறிந்த தந்தை பெரியார்,  அந்த நூலை இந்தியாவிலே முதன் முதலில் தமிழிலே மொழிபெயர்த்து தனது பத்திரிகையில் வெளியிடுகிறார்.
இந்தியாவில் எத்தனை மொழிகள் இருக்கின்றன.?  என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரை முதல் முதலில் தமிழில்தான் வெளியாகியிருக்கிறது.
இந்த அரியதகவல்களையும் இந்த நூல் பேசுகின்றது.
இதனை இங்கு சுட்டிக்காண்பிப்பதற்கு முக்கிய காரணம், எனது  வாசிப்பு அனுபவத்தின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட காவியங்களை எழுதிய பாரத நாட்டின் ஆண்கள் அனைவரும் பெண்பாத்திரங்களை எவ்வாறு சித்திரித்தார்கள்..?  என்பதையும், பின்னாளில் வந்த பெரியாரும், அம்பேத்காரும் எவ்வாறு சமூகத்தை ஆய்வுசெய்தார்கள்..?  என்பதையும் நினைவுபடுத்துவதற்குத்தான்.
இந்த நூல் காந்தியை, வள்ளுவரை, தொல்காப்பியரை எல்லாம் கேள்விக்குட்படுத்துகிறது. காந்தி ஜெயந்தி, வள்ளுவர் விழா, தொல்காப்பிய விழா என்றெல்லாம் கொண்டாடுகின்றோம்.
ஆனால்,  இவர்கள் பெண்கள் குறித்து கொண்டிருந்த பார்வைகள் பற்றி பேசுவதற்கும் தயங்குகின்றோம். ஏன் அந்தத் தயக்கம் என்பதையும் இடித்துரைக்கிறார் ஓவியா.
இந்த நூலில் தொல்காப்பியமும் மனுதர்மமும் என்னும் அங்கம் சிந்தனைக்கு விருந்து படைக்கிறது.
இந்த அங்கத்தில் 37 ஆம் 38 ஆம் பக்கங்களை படித்து அடக்கமுடியாத சிரிப்பும் வந்தது. இந்த அங்கத்தில் வள்ளுவரும் தொல்காப்பியரும் பெண்கள் தொடர்பாக முன்வைத்துள்ள கருத்துக்களை பார்க்கும்போது,  இவர்களும் பெண்ணடிமைத்தனத்தை பேணிப்பாதுகாக்க முயன்றிருப்பது தெரிகிறது.
அவர்கள் இருவரும் சொல்லவந்த விடயங்களை ஒரு பெண் எழுதியிருந்தால் எவ்வாறிருந்திருக்கும் என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றது.
பெண்களுக்கு ஆங்கிலக்கல்வி அவசியமில்லை எனக்கருதும் காந்தி, அதே பெண்களை அகிம்சையின் வடிவமாகவும் பார்க்கிறார். அதனால் தனது போராட்டங்களில் பெண்களே அதிகளவில் பங்கேற்கவேண்டும் எனவும் விரும்புகிறார்.
இவ்வாறு காந்தியின் சிந்தனைகளில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளையும் இந்த நூல் பேசுகிறது.
காந்தியின் அரசியல் பொதுவாழ்க்கையில் அவருடன் இணைந்து பணியாற்ற வரும் சீடர்களான  சுசேதா என்ற பெண்ணும் கிருபாளினி என்ற ஆணும் காதலித்து திருமணம் செய்யவிரும்புகிறார்கள்.  ஆனால்,  காந்தி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்.
காரணம் காந்தியாரின் போராட்டத்திற்கு கிருபாளினி தேவை. இந்த அரிய தகவல்களை படைப்பிலக்கிய வாதி அம்பையிடமிருந்து பெற்று பதிவுசெய்துள்ளார் ஓவியா.
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் பங்கேற்ற பெண்கள் பற்றியும் நாம் அறியாத பல அரிய தகவல்களை ஓவியா தருகின்றார். தந்தை பெரியாரின் அம்மா, சின்னத்தாயம்மாவிலிருந்து பல பெண்களை அறிமுகப்படுத்துகிறார்.
இந்த நூல் பல விவாதங்களுக்கும் மறுவிசாரணைகளுக்கும் கதவு திறக்கிறது.
போராடப்புறப்பட்டு சிறைவாசம் அனுபவித்தபோதும் கொண்ட கொள்கைகளிலிருந்து மாறாமல் போராளிகளாக திகழ்ந்த பெண்கள் பற்றியும் சொல்கிறது.  இந்த நூல் பற்றி நிறைய பேசமுடியும். விரிவஞ்சி தவிர்க்கின்றேன்.
இந்த நூல் சமூகம் குறித்த தேடலுக்கும் பெண் – ஆண் சமத்துவம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும்  பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உசாத்துணையாக விளங்கும்.
 ( மெல்பன் வாசகர் வட்டத்தில் டிசம்பர் 01 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட  வாசிப்பு அனுபவப்பகிர்வு )
---0---





-->












No comments: