“லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற்றார்



அம்புலிமாமா காலத்தில் இருந்த என்னைப் புரட்டிப் போட்ட படைப்பு லங்கா ராணி.
துயர் தோய்ந்த ஈழ வரலாற்றுப் பக்கங்களில் “லங்கா ராணி” நாவல் இன்று வரை தனித்துவமாக நோக்கக் கூடியதொன்று.
பின்னாளில் ஈழத்தில் இனப் பிரச்சனை கொழுந்து விட்டெரிந்த காலத்திலும் எமது அவலத்தை இம்மாதிரியானதொரு நிகழ் நடப்புகளோடு ஒட்டி எழுதவில்லையே என்றதொரு ஏக்கம் எழுந்தது இரண்டு படைப்புகளைப் படித்ததன் அனுபவ வெளிப்பாடாக. 
ஒன்று செங்கை ஆழியானின் “தீம்  தரிகிட தித்தோம்” என்ற நாவல், இன்னொன்று அருளரின் “லங்கா ராணி”. பின்னாளில் ஈரோஸ் இயக்கத்தினர் இந்த நூலைத் தாமே மறு பதிப்புச் செய்யுமளவுக்கு மதிப்பு மிக்க பெறுமதியான ஆவணம் இது.

1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்துக்கு முன்பே நம் தமிழினம் சிறிதும் பெரிதுமாகப் பல இனக் கலவரங்களுக்கு முகம் கொடுத்தது. அப்படி ஒன்று தான் 1977 ஆவணி மாதத்தில் ந்ழுந்த இனக் கலவரம். அப்போது கொழும்பிலிருந்து இனவெறிக் கோரத்தாண்டவத்தில் இருந்து எஞ்சிப் போன அபலைகள் லங்கா ராணி என்ற கப்பலில் ஏறித் தம் தாய் மண் நோக்கிப் பயணப்படும் அவல வாழ்வியலின் பக்கங்கள் லங்கா ராணியில் சாட்சியம் பறைகின்றன. இது புனை கதை அல்ல என்ற உண்மையை இன்றும் அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கும் தமிழர் இயல்பாய் உணர்வர்.

நான் சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்று நெடு நாள் கனவு கண்ட “லங்கா ராணி” எழுதிய அருளர் என்ற அருளர் தன் சொந்த மண்ணிலேயே விடை பெற்று விட்டார். லங்கா ராணி இறக்கிய இடத்திலேயே முற்றுப் புள்ளி வைத்து விட்டுப் போயிருக்கிறார்.
எம் ஆதர்ச எழுத்தாளர், போராளி அருளரின் பிரிவால் வாடும் மகள்கள் என் பேஸ்புக் நட்பு சகோதரி Kali Arulpragasam கலி அருள்பிரகாசம் மற்றும் நம் இனத்தின் விடுதலை வேண்டி உலக அரங்கில் குரல் கொடுக்கும் பாடகி மாயா அருள்பிரகாசத்துக்கும் அன்னாரின் பிரிவில் எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்கிறேன்.

லங்கா ராணியை ஈழத்து நூலகத்தில் படிக்க


அகிலனின் பார்வையில் "லங்கா ராணி"

(இது அகிலன் அவர்களால் 1981-இல் எழுதப்பட்டது என்பதை நினைவில் நிறுத்தவும்) பகிர்வுக்கு நனறி கனக்ஸ் இன் தமிழ் வலையின் மினி நூலகம்

1977 ஆகஸ்டில் இலங்கையில் இனக்கலவரம் நடந்ததல்லவா? அதில் பாதிக்கப்பட்ட 1200 தமிழ் அகதிகளைச் சுமந்து கொண்டு 'லங்கா ராணி' என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, தெற்கு நோக்கி வந்து, இலங்கைத் தீவைச் சுற்றிக் கொண்டு, வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறைத் துறைமுகத்துக்குச் செல்கிறது. கப்பல் கொழும்பில் புறப்படுவதுடன் தொடங்கும் கதை, இரண்டு நாட்களில் பருத்தித்துறையைச் சென்றடைவதோடு முடிகிறது.

இது கற்பனைக் கதையல்ல. முற்றிலும் உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட உயிர்த் துடிப்புமிக்க கதை. இரண்டே நாட்களில் நடக்கும் கதையைப் போலத் தோன்றினாலும், இதில் அங்கங்கே 2500 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இலங்கை எப்படி இருந்தது? விடுதலை பெற்ற பிறகு - ஏன் 1958ல் ஒரு பயங்கரமான இனக் கலவரமும், பிறகு 1977 ஆகஸ்டில் ஓர் இனக்கலவரமும் அங்கே ஏற்பட்டன. கலவரங்களின் விளைவுகளை மறந்து, தமிழர்களும், சிங்களவர்களும் இனி எதிர்காலத்தில் அங்கு இணைந்து வாழ முடியுமா? இவை போன்ற பல அடிப்படைப் பிரச்சனைகள் இந்த நாவலில் அலசி ஆராயப்படுகின்றன.

இந்த நூலின் ஆசிரியர் அருளர், வெறும் உணர்ச்சித் துடிப்புமிக்க இளைஞராகத் தோன்றவில்லை. காரிய காரணங்களை மிகவும் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார். நாட்டு நடப்பைக் கூர்ந்து நோக்கியிருக்கிறார். வகுப்புக் கலவரங்களுக்குள்ள அடிப்படைக் காரணம், இந்த அரசியல் அமைப்பு - இதன் அரசியல் கட்சிகள் - தேர்தலில் இனவெறியைத் தூண்டிவிட்டு, மறு இனத்தைப் பகைக்கச் செய்து ஓட்டு வாங்கும் முறை என அவர் சான்றுகளுடன் கூறும் போது, நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

சரவணன், குமார், தவன் மூவரும் கொழும்பு இந்துக் கல்லூரி அகதிகள் முகாமில் தொண்டர்களாகப் பணியாற்றிய இளைஞர்கள். அவர்களுடன் கப்பலில் ஒரு வெள்ளை வேட்டி இளைஞனும் சேர்ந்து கொள்ளுகிறான். இவர்களோடு பலதரப்பட்ட வாழ்க்கை நிலையில் உள்ள தமிழ் அகதிகளும் கப்பலில் வருகிறார்கள். கலவரங்கள் எங்கெங்கே எவ்வளவு கொடூரமாக நடைபெற்றன எனும் சோகக் காட்சிகள் கண்முன்னே நடைபெறுபவைபோல் வருணிக்கப்படுகின்றன.

இளைஞர்களின் உரையாடல்களின் வாயிலாகவே காரிய காரணங்கள் நமக்கு விளக்கப்படுகின்றன.

1958-ல் நடந்த முதல் கலவரத்தை அடுத்து 1961-ல் நான் இலங்கைக்குச் சென்றிருந்தேன். அதற்கு முன்பாக யாழ்ப்பாணத்துத் தமிழர்கள், தோட்டங்களிலே வேலை செய்த இந்தியத் தமிழர்களிடமிருந்து பிரிந்து, உயர்ந்தும் ஒதுங்கியும் வாழத் தலைப்பட்டது மல்லாமல் தொழிலாளர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் காரணமாக இருந்தார்கள் எனக் கேள்வியுற்றேன். இந்தப் போக்கு அவர்களையே மிகச் சிறுபான்மையோராக மாற்றி விட்டது. இப்போது தமிழர்களுக்கிடையே வேற்றுமை குறைந்து வருவதாகத் தெரிகிறது. இலட்சிய ஆவேசங் கொண்ட புதிய தலைமுறை இளைஞர்கள் அங்கே தோன்றியிருக்கிறார்கள்.

அண்மைய வரலாற்று நிகழ்ச்சிகள் நிறைந்த ஓர் அற்புதப் படைப்பு இது. ஈழத்து விடுதலைப் புரட்சியாளர்களின் சிந்தனையும் செயலும் சரியானவைதாமா என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர்களை அப்படி உருவாக்கி விட்ட பின்னணி நிகழ்ச்சிகளை நம்மால் மறந்துவிட முடியாது.

படித்து முடித்தபின் நம்மை உணர்ச்சி வயப்படுத்தும் நாவல் இது, சிந்திக்கச் செய்யும் நாவல் இது; செயல்படத் தூண்டி ஒரு நல்ல முடிவு காணும் உந்துதலை ஏற்படுத்தத் தூண்டும் நாவல் இது.

கானா பிரபா
03.12.2019








No comments: