மாவீரர் நாள் ; உறுதிப்படுத்தப்பட்ட உரிமை


02/12/2019  அழுத்­தங்கள், கெடு­பி­டிகள் இருந்த போதும், வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்­வுகள், பெரும்­பாலும் தடை­யின்றி நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன.
ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், கேள்­விக்­கு­றி­யாக இருந்த பல  விட­யங்­களில், மாவீரர் நாள் நிகழ்­வு­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டுமா என்­பதும், ஒன்று.
2009இல் போரை முடி­வுக்குக் கொண்டு வந்து – விடு­தலைப் புலி­களை அழித்து விட்­ட­தாகப் பிர­க­டனம் செய்­த­வர்கள், அதில் நேர­டி­யாகப் பங்­க­ளித்­த­வர்கள் அனை­வரும் இப்­போது நாட்டின் மிக­முக்­கிய பதவிப் பொறுப்­பு­களில் இருக்­கி­றார்கள்.
அப்­போது ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ இப்­போது பிர­த­ம­ராக இருக்­கிறார். அப்­போது பாது­காப்புச் செய­ல­ராக இருந்த கோத்­தா­பய ராஜபக்ஷ இப்­போது ஜனா­தி­ப­தி­யாக இருக்­கிறார்.
போரின் இறு­திக்­கட்­டத்தில் 53 ஆவது டிவி ஷனை வழி­ந­டத்­திய மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன இப்­போது பாது­காப்புச் செய­ல­ரா­கவும், 58ஆவது டிவி­ஷ­னுக்குத் தலைமை தாங்­கிய லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா இரா­ணுவத் தள­ப­தி­யா­கவும் இருக்­கின்­றனர்.
இவர்கள் எல்லாம் அதி­உச்ச அதி­கா­ரத்தில் இருக்­கின்ற நிலையில், அவர்­க­ளா­லேயே அழிக்­கப்­பட்ட விடு­தலைப் புலி­களை நினைவு கூரும், மாவீரர் நாள் நிகழ்­வுக்கு புதிய அர­சாங்கம் அனு­மதி அளிக்­குமா என்ற சந்­தே­கங்கள் இருந்­தன.
போர் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்ட பின்னர், விடு­தலைப் புலி­களை நினைவு கூர அனு­ம­திப்­ப­தில்லை என்ற உறு­தி­யான கொள்­கையை கடைப்­பி­டித்­தது மஹிந்த ராஜபக்ஷ அர­சாங்கம்.
விடு­தலைப் புலி­களின் நினைவுச் சின்­னங்­க­ளாக இருந்த துயிலும் இல்­லங்கள் அழிக்­கப்­பட்டு, பெரும்­பாலும் அவற்றின் மீது இரா­ணுவத் தளங்கள் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டன.
புலி­களை நினை­வு­ப­டுத்தக் கூடிய எந்­த­வொரு நினைவுச் சின்­னத்­தையும், விட்டு விடாமல் எல்­லா­வற்­றையும் துடைத்து அழித்­தி­ருந்தார் இப்­போ­தைய ஜனா­தி­ப­தியும் அப்­போ­தைய பாது­காப்புச் செய­ல­ரு­மான கோத்­தா­பய ராஜபக் ஷ .
அவை அழிக்­கப்­பட்ட போது கடு­மை­யான விமர்­ச­னங்­களும் எதிர்க்­க­ருத்­துக்­களும் வந்த போதும் அவர் அதில் உறு­தி­யாக இருந்தார்.
விடு­தலைப் புலி­களின் தட­யங்­களே இருக்­கக்­கூ­டாது என்றும் அது எதிர்­கா­லத்தில் இன்­னொரு எழுச்­சிக்கு கார­ண­மாகி விடும் என்றும் அவர் நியாயம் கற்­பித்­தி­ருந்தார்.
அது­மாத்­தி­ர­மன்றி, மாவீரர் நாள் நினைவு கூரல்­க­ளையும் அவர் பாது­காப்புச் செய­ல­ராக இருந்த காலத்தில் நடத்­து­வ­தற்கு அனு­ம­திக்­க­வில்லை.
மாவீரர் நாளை அண்­டி­ய­தாக, இந்­துக்­களின் கார்த்­திகை விளக்­கீடும் வரு­வது வழக்கம். அவ்­வாறு கார்த்­திகை விளக்­கீட்­டுக்கு வீட்டின் முன்­பாக விளக்­கேற்­றி­ய­வர்கள் பலர் தாக்­கப்­பட்ட சம்­ப­வங்­களும், விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வங்­களும் நடந்­தே­றி­யி­ருந்­தன.
அந்தக் கால­கட்­டத்தில் மிக இர­க­சி­ய­மா­கவே வீடு­களில் மாவீ­ரர்­க­ளுக்கு விளக்­கேற்­றப்­பட்­டன.
மாவீரர் நாள் நிகழ்வை நடத்­தி­ய­தற்­காக யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மீது தாக்­கு­தல்­களும் நடத்­தப்­பட்­டன. இவ்­வா­றான ஒரு சூழலே, 2014ஆம் ஆண்டு வரை இருந்­தது.
ஆனால் 2015ஆம் ஆண்டில் ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர் மாவீ­ரர்­களை நினைவு கூர அர­சாங்கம், அனு­மதி அளிக்­கா­வி­டினும், அதற்குத் தடை விதிக்­க­வில்லை.
சில இடங்­களில் நீதி­மன்ற உத்­த­ரவைப் பெற்று தடை­வி­திக்கும் முயற்­சிகள் இடம்­பெற்ற போதும், அவை பெரும்­பாலும் மாவீரர் நாள் நிகழ்­வு­களை தடை செய்யும் அள­வுக்கு வீரி­ய­மான முயற்­சி­க­ளாக இருக்­க­வில்லை.
இதனால் பெரும்­பா­லான துயிலும் இல்­லங்­களில் மீண்டும் மாவீரர் நாள் நிகழ்­வுகள் நடந்­தேறி வந்­தன.
கடந்த 2018ஆம் ஆண்டு மாவீரர் நாள் கூட கேள்­விக்­கு­றி­யான ஒன்­றா­கவே இருந்­தது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால், ஆட்சிக் குழப்பம் ஏற்­பட்­டி­ருந்த காலம் அது.
பிர­த­ம­ராக மஹிந்த ராஜபக் ஷ  பத­வியில் இருந்தார். அதனால் ஏதேனும் குழப்­பங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டுமோ என்ற கவலை இருந்­தது. எனினும், ஜனா­தி­ப­தி­யா­கவும் பாது­காப்பு அமைச்­ச­ரா­கவும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே இருந்­ததால், கடந்­த­முறை எந்தப் பிரச்­சி­னை­யு­மின்றி மாவீரர் நாள் நிகழ்­வுகள் நடந்­தே­றி­யி­ருந்­தன.
இந்­த­முறை எல்­லாமே மாறி விட்­டது. விடு­தலைப் புலி­களை அழித்து விட்­ட­தாக பிர­க­டனம் செய்­த­வர்கள் அனை­வரும் அதி­கா­ரத்தில் இருக்­கின்ற நிலையில், இந்­த­முறை மாவீரர் நாளை நடத்­து­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டுமா என்ற கேள்வி இருந்­தது.
ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும், அவ­ரது இடைக்­கால அர­சாங்­கத்­துக்கும் கூட இது ஒரு சிக்­க­லான விட­ய­மா­கவே இருந்­தது.
கடந்த காலங்­களில் மாவீரர் நாளை நினை­வு­கூர, மைத்­திரி- – ரணில் அர­சாங்கம் அனு­மதி அளித்­தி­ருந்த போது, மீண்டும் புலிகள் வந்து விட்­ட­தா­கவும், அவர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­ப­டு­வ­தா­கவும், கூட்டு எதி­ர­ணியில் இருந்­த­வர்கள் கூச்சல் எழுப்­பினர்.
விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில, தினேஸ் குண­வர்த்­தன போன்ற இன­வா­திகள் கடு­மை­யான எதிர்ப்­பு­களை வெளி­யிட்­டனர். கடந்த ஆண்டு அவர்கள் ஆட்­சியில் இருந்த போதே, மாவீரர் நாள் நிகழ்­வுகள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன.
இந்த முறையும், அர­சாங்­கத்தைப் பொறுத்­த ­வ­ரையில் முள்ளில் விழுந்த சேலை போல, பக்­கு­வ­மா­கவே அதனை எடுக்க வேண்­டி­யி­ருந்­தது. ஏற்­க­னவே, இந்த அர­சாங்கம் சிறு­பான்­மை­யி­னரின் நம்­பிக்­கையை பெற்­ற­தல்ல என்ற அடை­யா­ளத்­துடன் தான் பத­விக்கு வந்­தி­ருக்­கி­றது.
எனவே, அவர்­களை இனி­மேலும் பகைத்துக் கொள்­ளாமல், அர­வ­ணைத்துக் கொள்ளும் அவ­சியம் அர­சாங்­கத்­துக்கு இருக்­கி­றது.
மாவீரர் நாள் போன்ற உணர்­வு­பூர்­வ­மான விட­யங்­களின் மீது கை வைக்கும் போது, அது பார­தூ­ர­மான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தும் என்­பதை அர­சாங்கம் நன்­றா­கவே அறிந்து வைத்­தி­ருக்­கி­றது.
போரில் இறந்து போன உற­வு­க­ளுக்கு நினை­வு ­கூரும் உரிமை வழங்­கப்­பட வேண்டும் என்­பது சர்­வ­தேச நிலைப்­பா­டா­கவும் இருந்து வரு­கி­றது.
தற்­போ­தைய அர­சாங்கம் சர்­வ­தேச நம்­பிக்­கையைப் பெற்ற ஒன்று அல்ல. அதன் நிலைப்­பா­டு­களும், கருத்­துக்­களும், இன்­னமும் சர்­வ­தே­சத்­துக்கு நம்­பிக்­கையை அளிக்­க­வில்லை.
அதற்­குள்­ளா­கவே, நினை­வு­கூரல் உரி­மை­களை பறித்­தெ­டுத்து விட்டால், சர்­வ­தேச அளவில் நெருக்­கு­தல்­களைச் சந்­திக்க வேண்­டிய நிலை வரக் கூடும் என்ற சிக்­கலும் இருந்­தது.
இதற்கு அப்பால், மாவீரர் நாளுக்கு அடுத்த நாளான, கடந்த 28ஆம் திகதி ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ  இந்­தி­யா­வுக்குப் புறப்­பட திட்­ட­மிட்­டி­ருந்தார்.
மாவீரர் நாள் நிகழ்­வு­களை இந்­தியா அங்­கீ­க­ரிக்­காது போனாலும், தமிழ் மக்­களின் நினை­வு­கூரல் உரி­மைகள் பறிக்­கப்­பட்டால், அது இந்­தியப் பய­ணத்தின் போது, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு சங்­க­ட­மான சூழ்­நி­லை­களை ஏற்­ப­டுத்தும் என்­ப­தையும் அர­சாங்கம் கவ­னத்தில் கொண்­டி­ருக்கும்.
தமிழ்­மொழி பெயர்ப்­ப­ல­கைகள் அழிக்­கப்­பட்­ட­தையே, கோத்­தா­பய ராஜபக் ஷ வின் இந்­திய பய­ணத்தை சீர்­கு­லைக்க முனையும் சக்­தி­களின் சதி என்று பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ  கரு­து­கிறார் என்றால், நினை­வு­கூரல் உரிமை தடுக்­கப்­ப­டு­வதை எந்­த­ள­வுக்கு பார­தூ­ர­மா­ன­தாக எடுத்துக் கொண்­டி­ருப்பார் என்­பதை உணர்ந்து கொள்­ளலாம்.
இவை எல்­லா­வற்­றுக்கும் அப்பால், போர் முடிந்து 10 ஆண்­டு­க­ளாகி விட்ட நிலையில், தமிழ் மக்­களின் உணர்­வு­களை மதிக்க வேண்­டிய ஒரு பக்­குவ நிலையை தற்­போ­தைய அர­சாங்கம் அடைந்­தி­ருக்கக் கூடும்.
தமிழ் மக்கள் போரில் இழந்­த­வைகள் ஏராளம். அவர்கள் தமது உற­வு­களை, பலர் தமது தலை­மு­றை­களை, இழந்­தி­ருக்­கி­றார்கள்.  அவர்­களின் காயங்­களை ஆற்­று­வ­தற்கு ஒரு வழி தேவை.
நீதி விசா­ரணைப் பொறி­மு­றை­களும், பொறுப்­புக்­கூ­றலும் இத்­த­கைய காயங்­களை ஆற்­று­கின்ற ஒரு வழி­மு­றை­யாக இருந்­தாலும், அவ்­வா­றான ஒரு சூழல் இன்­னமும் உரு­வாக்கிக் கொடுக்­கப்­ப­ட­வில்லை.
இவ்­வா­றான நிலையில் மாவீரர் நாள் போன்ற நினை­வேந்தல் நிகழ்­வு­களில் தான், உற­வு­களை இழந்­த­வர்கள் அழுது புரண்டு தமது காயங்­க­ளுக்கு மருந்­திடும் ஆறுதல் கிடைக்கும்.
துயிலும் இல்­லங்­களில் கேட்­கின்ற அழு­கு­ரல்கள் ஆறு­த­லையும், தேறு­த­லையும் அவர்­க­ளுக்கு கொடுக்­கி­றது என்­ப­தையே உணர்த்­து­கின்­றது.
இவ்­வா­றான அழு­கு­ரல்­களை அடக்கி வைப்­பதும், ஆறுதல் அடை­வதை தடுப்­பதும் தான், மக்கள் மத்­தியில் இன்னும் இன்னும் முரண்­பாட்டை வளர்த்­தெ­டுக்கும்.
இதனை புதிய அர­சாங்கம் புரிந்து கொண்டி ருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் அப்பால், மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கப்பட்டதால் எங்கும் சட்டம் ஒழுங்கு மீறப்படவோ, வன்முறைகள் நிகழவோ இல்லை. அதிகபட்சம் ஒரு மணி நேரம்  அமைதியான நினைவு கூரலுடன் மக்கள் கலைந்து செல்கின்றனர்.
இதனை முன்வைத்து விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி பற்றி கவலை கொள்வது மிகையான கற்பனை. இதனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டதாக யாரும் கூறவும் முடியாது. ஏனெனில் அவ்வாறான எந்த நிகழ்வும் நடக்கவில்லை.
அரசாங்கம் இன்னொரு போரைத் தடுப்பதற்கான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது.
இவ்வாறான நிலையில், மாவீரர் நினைவுகூரல் போன்ற தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்கின்ற வகையில் அவர்களையும் அனுசரித்துச் செல்வது, நிலையான அமைதியை ஏற்படுத்தும் அதன் இலக்கை இன்னும் இலகுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
- சுபத்ரா - நன்றி வீரகேசரி 


No comments: