அபிதா, சற்று நிலைதடுமாறிவிட்டாள்.
சுபாஷினியிடமிருந்து அப்படி ஒரு செய்தி வரும் என்று அவள் எதிர்பார்க்காதமையால் வந்த
தடுமாற்றம். சுபாஷினி தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள்.
அவள் அருந்திய கோப்பி கப்பின் மீது
ஒரு இலையான் வந்து அமர்ந்தது. அதற்குத்தேவையானது
எப்படியும் இருக்கலாம். எச்சில்படுத்தியது, எச்சில்படுத்தாதது என்ற வேறுபாடே அதற்கு
இல்லை.
அபிதா, அதனை கலைத்துவிட்டு, கப்பை
எடுத்துச்சென்று சமையலறை சிங்கில் கழுவினாள். அங்கிருந்து கூடத்தை எட்டிப்பார்த்தாள். சுபாஷினி, இப்போது நெற்றியில் வலது கரம் வைத்து
அழுத்திக்கொண்டிருக்கிறாள். தலையிடிக்கிறதோ..? இரவு நல்ல உறக்கம் இல்லையோ…?
தன்னிடம் சொல்லக்கூடாத ஒன்றை சொல்லிவிட்டோம்
என்று கலங்குகிறாளோ தெரியவில்லை. அபிதா விரைந்துவந்து சுபாஷினியை அணைத்துக்கொண்டு, “ எதுவும்
இப்போது பேசவேண்டாம். எழும்புங்க. போய் தோய்ந்துவிட்டு
வாங்க. நேற்று அரைத்துவைத்த தோசை மாவு இப்போது
புளித்திருக்கும். சுடச்சுட சுட்டுத் தாரன்.
வாங்க. “ சுபாஷினியை அபிதா எழுப்பினாள்.
‘ இவள் கடந்துவிட்ட இராத்திரியில்தான் எத்தனை வேலைகளை செய்துவிட்டாள்.
இவளது காலில் சக்கரமா..? அல்லது இவள் ஒரு உயிருள்ள பம்பரமா..? ‘ அபிதா மீதான வியப்பை சுமந்தவாறு, ஆசனத்தின் பிடியில் கைவைத்து எழுந்த சுபாஷினி, “ கற்பகம் ரீச்சரிடமிருந்து நேற்று இரவு கோல் வந்தது.
அவுங்க இன்னும் ஒரு வாரத்திற்கு வரமாட்டாங்களாம். டெங்கு காய்ச்சலாம். எல்லா இடங்களிலும்
டெங்கு பரவியிருக்கு. எங்களையும் அவதானமாக இருக்கச்சொன்னாங்க. அபிதா, நீங்களே அந்தப்பிள்ளைகளுக்கு பேச்சுப்போட்டிக்கான உரையை எழுதிக்கொடுத்தது நல்லதாப்போச்சுது. “ என்றாள்.
“ ரீச்சர் வேறு ஏதும் சொன்னாங்களா..? “
“ இல்லை. அங்கேயும் கடும்மழையாம். மின்னல் வெட்டுது.
கணநேரம் பேசமுடியாது என்று சொல்லி வைச்சிட்டாங்க. ஸ்கூல் அதிபருக்கு இன்று கோல் எடுத்து, தனது நிலைமையை சொல்வாங்களாம். “ சுபாஷினி
எழுந்து குளியலைறக்குச்சென்றாள்.
சுபாஷினி தோய்ந்துவிட்டு
திரும்பிவந்ததும் அவளது வாழ்வில் நடந்த விபரீதம் எதனையும் கேட்கக்கூடாது என்பதில் அபிதா தீர்மானமாயிருந்தாள்.
ஆனாலும் மனதில் , “ என்ன நடந்திருக்கும்? “ என்ற
கேள்வி அரித்துக்கொண்டிருக்கிறது.
அபிதா, கூடத்திற்கு வந்து தொலைக்காட்சியை இயக்கினாள். நாடெங்கும் வெள்ள அநர்த்தம், நிவாரணம் , டெங்கு காய்ச்சல், அதனை தடுக்கும் பிரயத்தனங்கள்
பற்றிய செய்திகளே காணோளிக் காட்சியாகிக்கொண்டிருக்கிறது.
சிறிதுநேரம் நின்று தொலைக்காட்சியை
பார்த்துவிட்டு, வீட்டின் பின்புறக்காணியில் நிற்கும் பப்பாசி மரங்களைப் பார்த்தாள். இங்கும்
டெங்கு பரவினால், அதன் தேவை உணரப்படலாம். பப்பாசி இலையை அவித்துக்குடிப்பதும் டெங்கு
காய்ச்சலுக்கு நிவாரணி என்று அபிதா அறிந்துவைத்திருந்தாள்.
மழை விட்டு விட்டு தூரிக்கொண்டே இருக்கிறது.
மழைக்காக ஜீவிகா எடுத்துச்சென்ற குடையை ஓட்டோவில் மறந்து விட்டு வந்தமையால் உருவான
வாதங்களே இங்கு ஒருத்தியை கலங்கடித்துவிட்டிருக்கிறது. கடந்தபோன கசப்பான அனுபவங்களை
கிளறச்செய்துவிட்டது.
நிகும்பலைக்கு தான் வந்திறங்கியபோதிருந்த
மழைக்காலம் இன்னும்தான் முடிவுக்கு வரவில்லையே. ஜீவிகா – சுபாஷினி சிக்கலும் தொடர்ந்து மின்னியவாறு
இடிமுழங்கிக்கொண்டிருந்துவிடப்போகிறதோ என்ற கவலையும் அபிதாவை பற்றிக்கொண்டது.
வீட்டின் கூடத்தில் அபிதாவை காணாமல்,
அறையெங்கும் தேடிப் பார்த்துவிட்டு பின்பக்கம் எட்டிப்பார்த்தாள் சுபாஷினி. இவள் வந்த
அரவம் கேட்டுத்திரும்பிய அபிதா , “ பப்பாசி மரங்களைப் பார்த்தேன். இங்கும் டெங்கு பரவியிருக்கிறது. காய்ச்சல்
வந்தால், பப்பாசி இலைகளை அவித்து குடிக்கலாம்.
பப்பாசி இலையின் மகத்துவம் பற்றி, கற்பகம் ரீச்சர் திரும்பவும் கோல் எடுத்தால் சொல்லுங்க. யாழ்ப்பாணத்தில் பப்பாசிக்கு
குறைவிருக்காது “ என்றாள் அபிதா.
சுபாஷினி பின்புற வாசல் கதவு நிலையை
பிடித்துக்கொண்டு புன்னகைத்தாள். அந்தப்புன்னகையில் விரக்தியின் சாயல் படிந்திருந்தது.
“ பப்பாசி இலைகளுக்கு அப்படியும் மருத்துவ சிகிச்சைக்குரிய
குணம் இருக்கிறதா.. அபிதா…? பப்பாசிக்கு இன்னும்
என்ன என்ன குணம் இருக்கிறதோ… ?! வாங்க சாப்பிடுவோம்.
எனக்கு பசிக்கிறது. “ சுபாஷினி சமையல் கூடத்திற்குள்
நகர்ந்தாள்.
அபிதா அவளை பின்தொடர்ந்து வந்து, அவளுக்காக
அடுப்பில் தேசைத்தட்டு வைத்து தோசை வார்க்கத்தொடங்கினாள்.
குளிர்சாதனப்பெட்டியில் முதல் நாள்
செய்துவைத்திருந்த சட்னி நிரம்பிய பாத்திரத்தையும் மேசையில் எடுத்துவைத்தாள். அடுப்பிலிருந்து நெய்வாசத்துடன் தோசைகள் மேசைக்கு வந்துகொண்டிருந்தன.
சுபாஷினி இனிப்போதும் எனச்சொல்லும்
வரையில் அபிதா சுட்டுக்கொண்டிருந்தாள்.
“ அபிதா… உங்களுக்கு பப்பாசி மரம் பற்றி வேறு என்ன
தெரியும்..? “ எனக்கேட்ட சுபாஷினி தலையை உயர்த்தாமலேயே நெய்யில் முறுகியிருந்த தோசையை சட்னியில் தொட்டு
சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்.
“ பப்பாசிப்பழம் நல்ல சுவையாக இருக்கும். அவ்வளவுதான்
தெரியும். “ என்றாள் அபிதா.
“ பிஞ்சுப்பப்பாசி என்ன செய்யும் தெரியுமா..?
“
“ தெரியாதே… “
“ கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.. “
“ ஏன் சாப்பிடவேண்டும். யாருமே சாப்பிடமாட்டார்களே.
பப்பாசி பழம்தான் சாப்பிடுவார்கள். “ என்றாள்
அபிதா.
“ கர்ப்பத்தை அது சிதைத்துவிடும் “
இவ்வாறு சுபாஷினி சொன்னதும், “ என்ன…. என்ன
சொல்றீங்க…. “ எனக்கேட்டவாறு அடுப்பை அணைத்தாள்
அபிதா.
எதனை சுபாஷினியிடம் தூண்டித் துருவிக்கேட்கக்கூடாது என்று அபிதா தீர்மானமாக
இருந்தாளோ, அதனையே இப்போது சுபாஷினி சொல்லத்தொடங்கினாள்.
நான் வேலைசெய்யும் சுதந்திர வர்த்தக
வலயத்தில்தான் அவனை சந்திக்கநேர்ந்தது. விமான நிலையத்திற்கு சமீபமாக ஒரு வீட்டில் அறையெடுத்து
தங்கியிருந்தேன். அங்கு இதேபோல வேறும் சில
சிங்களப் பெண்பிள்ளைகள் தங்கியிருந்து வேலைக்கு வந்தார்கள். நானொருத்திதான்
அங்கே தமிழ்.
அதுபோன்று பல வீடுகள் அந்தப்பகுதியில்
வர்த்தக வலயத்தில் வேலைசெய்யும் பெண் பிள்ளைகளுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன. அவன்,
விமானநிலையத்தில் டியூட்டி ஃபிரீ கடையொன்றில்
வேலையில் இருந்தான். பெயர் நிமால் செனவிரட்ண. சிங்களம்தான். அவனுடைய தங்கை ஒருத்தி – ஷிராணி எங்களோடு வேலைசெய்தாள்.
அவளும் நான் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில்தான் அறையெடுத்திருந்தாள். அவளும் நானும்
பணியகத்தில் சிநேகிதிகளாகிவிட்டோம்.
பாணந்துறையில் அவர்களின் குடும்பங்கள்
இருந்தன. விடுமுறை காலங்களில் அவன்தான் வந்து ஷிராணியை ஊருக்கு அழைத்துச்செல்வான்.
எனக்கு சொந்த ஊர் நுவரேலியா. அங்கேயிருந்துதான் இங்கு வேலைக்கு வந்தேன். ஷிராணிதான்,
அவனை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தாள். அழகாக பேசுவான். அந்தக்கலையை விமான நிலைய டியூட்டிஃபிரீ
ஷொப்பில் சந்திக்கும் விமானப்பயணிகளிடம் பேசிப்பேசி கற்றிருப்பான்.
எப்படியோ காதலர்களாகிவிட்டோம். அடிக்கடி
சந்தித்தோம். இது ஷிராணிக்கு தெரியவந்தது. அவள் தடுத்தாள். “ நீங்கள் தமிழ். நாங்கள் சிங்களம். இந்த உறவு சரிவராது.
சொன்னால் கேள் “ என்று பலதடவை எனக்கு புத்திமதியும்
சொன்னாள்.
“ நிமால் எனக்காக உயிரையும் கொடுப்பான் “ என்றேன். அதற்கு அவள், “ வயிற்றிலா..? “ என்றும் கேட்டிருக்கிறாள். இறுதியில் அதுதான்
நடந்தது.
ஷிராணிக்குத் தெரியாமல் நாமிருவரும் ஊர் சுற்றினோம். நுவரேலியாவிலிருக்கும்
சீத்தா எலிய, ரோஜா தோட்டம், றம்பொடை அனுமார் கோயில் எங்கும் போய்வந்திருக்கின்றோம். அவன் அனுமார்கோயிலில் வைத்து என்னையே மணம்முடிப்பதாக
சத்தியமும் செய்திருந்தான்.
அவனது சத்தியம் பற்றியும் ஒரு சந்தர்ப்பத்தில்
ஷிராணியிடம் சொன்னேன். அதற்கு அவள், “ அடி
பைத்தியமே, அனுமாரே திருமணம் முடிக்காதவர். அவரிடத்திற்கு அழைத்துச் சென்று சத்தியம்
தந்தானா..? “ என்றும் கேலியாகச்சொன்னாள்.
நுவரேலியா விடுதியில் அது நடந்துவிட்டது. நான் எவ்வளவோ
தடுத்தும் நடந்துவிட்டது. பின்னரும் நடந்துவிட்டது. நான் அதனை ஷிராணிக்கு மறைத்துவிட்டேன். எங்கள் ஊர்சுற்றலை
ஷிராணி - அக்கா, அண்ணன்மாரின் காதில் போட்டுவிட்டாள்.
ஒருநாள் அவர்கள், எமது வேலைத்தலத்திற்கு
வந்து இனத்தைச்சொல்லி திட்டித்தீர்த்துவிட்டுப்போனார்கள். கேவலப்படுத்தி பேசினார்கள்.
எனக்கு மாசம் நின்றபிறகு, நிமாலைச்சந்தித்து
நிலைமையை சொன்னேன். “ கலைத்துவிடலாம் “ என்றான். அதற்கு நான் முடியாது. நீயும் உழைக்கிறாய்.
நானும் உழைக்கிறேன். திருமணம் முடிப்போம். தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்தை
நடத்துவோம். குழந்தையை பெற்று வளர்ப்போம் – என்று அழுது மன்றாடிக்கேட்டேன்.
தனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றான்.
வயிற்றில் உருவாகியிருக்கும் குழந்தைக்கு அவகாசம் இல்லை என்றேன். தற்போதைக்கு குழந்தைவேண்டாம்
என்றான். என்னால் ஊருக்கும் போகமுடியவில்லை. தனியாக ஏதோ பிஸினஸ் செய்யப்போவதாகவும்
முன்பு சொல்லியிருந்தான். அதற்கு அவனுக்கு பணம் தேவைப்பட்டபோது, நம்பிக்கையினால், காதலினால், எனது சேமிப்பிலிருந்து ஒரு இலட்சம் ரூபாவும்
பேங்கிலிருந்து எடுத்துக் கொடுத்திருந்தேன். அவனைக்காதலிக்கத் தொடங்கியபின்னர், திருமணத்திற்காக
நான் சேமித்து வைத்திருந்த பணம். மாதம் நின்றதுடன்
சத்தியும் குமட்டலுமாக இருந்தது. வேலைக்கும் சென்றுவரமுடியாமல் சில நாட்கள் லீவுபோட்டேன்.
பப்பாசி பிஞ்சு கொண்டு வந்து கொடுத்து சாப்பிடச்சொன்னான். முதலில் மறுத்துவிட்டு, அவனது
பசப்பு வார்த்தைகளை நம்பி சாப்பிட்டேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
சுதந்திர வர்த்தக வலயம் பற்றி ஏதோ
செய்தி எழுதுவதற்காக வந்திருந்த ஜீவிகா, அவ்வேளையில் அறிமுகமானாள். அங்கிருந்த பெரும்பாலானவர்கள்
பெரும்பான்மை இனத்தவர்கள். நான் ஜீவிகாவுக்கு சுதந்திர வர்த்தக வலயத்தில் பெண்களின் செயற்பாடுகள் பற்றி விளக்கமாக சொல்லிக்கொடுத்தமையால்,
அவளுக்கு அந்தக்கட்டுரை எழுதுவதற்கு எளிதாக இருந்திருக்கவேண்டும். எங்கள் கைத்தொலைபேசி இலக்கங்களையும் பரிமாரிக்கொண்டோம்.
ஒருநாள் என்னை ஒரு ஞாயிற்றுக்கிழமை
இந்த நிகும்பலைக்கும் அழைத்து உபசரித்தாள். இங்கிருக்கும் கடற்கரை, உல்லாசப்பயணிகள் வந்து செல்லும் பெரிய பெரிய நட்சத்திர
விடுதிகள் எல்லாம் காண்பித்தாள். நாம் நல்ல சிநேகிதிகளாகிவிட்டோம்.
அவ்வேளையிலும் எனக்கும் நிமாலுக்கும்
தொடர்பு நீடித்திருந்தது. அது பற்றியும் ஒருநாள் ஜீவிகாவிடம் சொன்னேன். ஆனால், வேறு
ஏதும் சொல்லவில்லை. அவன் நிமால் என்னை மோசம் செய்துவிட்டு மறைந்துவிட்டான். சுமார்
ஆறுமாதப்பழக்கத்தில் அவனை நம்பி ஏமாந்துவிட்டேன்.
அவனைத்தேடி விமான நிலையம் சென்றேன்.
அவன் டியூட்டி ஃபிரீ ஷொப்பிலிருந்து விலகிவிட்டதாக
அறிந்தேன். அவனது தங்கை ஷிராணியிடம் சென்று எனது நிலைமைய சொன்னேன். “ என்ன
… நான் சொன்னதுபோலவே உனது வயிற்றில் உயிரைக்கொடுத்துவிட்டானா..? அல்லது வேறு யாரிடத்திலும்
வாங்கிவிட்டு, அவன் தலையில் கட்டப்பார்க்கிறாயா..? என்று என்னை ஏசி விரட்டிவிட்டாள்.
நிமால் தலைமறைவாகிவிட்டான் என்று அறிந்தபின்னர்தான்
வழிதெரியாமல், ஜீவிகாவிடம் வந்தேன். இவள்தான் இங்குள்ள ஒரு டொக்டரிடம் அழைத்துச்சென்று
கருவை கலைக்க உதவினாள். நிமால் எனது சேமிப்பிலிருந்த பணத்தையும் சுருட்டிக்கொண்டு ஒரு
ஏஜன்ஸிக்கு கொடுத்து, அவுஸ்திரேலியாவுக்கு படகில் போய்விட்டான் என்பதை பிறகுதான் அறிந்தேன்.
அவனுடன் எந்த தொடர்பும் இல்லை. எல்லாம்
வெறும் கனவாகவே முடிந்துவிட்டது. அடிக்கடி லீவு எடுத்தமையால் சுதந்திர வர்த்தக வலயத்தின்
வேலையையும் இழக்கநேர்ந்தது. அதன்பிறகு ஜீவிகாவின் இந்த வீட்டில் அடைக்கலமாகி, இங்கிருக்கும்
கார்கில்ஸ் சுப்பர் மார்க்கட்டில் சேல்ஸ் கேர்ளாகச்சேர்ந்து, இப்போது உதவி மனேஜர் தரத்திற்கு
உயர்ந்திருக்கின்றேன்.
ஜீவிகா நல்லவள். அவள் எனக்கு எவ்வளவோ
உதவி செய்திருக்கிறாள். ஆனால், திடீரென்று, “ நான் பத்திரப்படுத்தவேண்டியதை பத்திரப்படுத்தவில்லை “ என்று குத்திக்காண்பித்துவிட்டாள்.
அந்த வார்த்தையைத்தான்
தாங்கமுடியவில்லை. “
சுபாஷினியின் கண்கள் கலங்கின. பெருமூச்செறிந்தவாறு
எழுந்து சென்று தண்ணீர் அருந்தினாள்.
அபிதா, திக்பிரமை பிடித்தவாறு அவளையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
“ இந்த விஷயம் எல்லாம் கற்பகம் ரீச்சருக்கும் மஞ்சுளாவுக்கும்
தெரியுமா… ? “ எனக்கேட்டாள் அபிதா.
“ தெரியாது. ஆனால், இனித்தெரியவரலாம். இன்றைக்கு
ஜீவிகாவும் மஞ்சுளாவும் ஒன்றாகத்தானே வேலைக்குப்புறப்பட்டாங்க. பேசிக்கொள்ள சந்தர்ப்பம்
இருக்கலாம். மற்றும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது மஞ்சுளாவும் குத்திக்காண்பிக்கலாம்.
அதுதான் வேறு இடம்பார்த்து போயிடலாம் என்றிருக்கிறன் அபிதா. “ எனச்சொல்லியவாறு சுபாஷினி விம்மினாள்.
“ வேண்டாம்…வேண்டாம்… இனி அப்படி இங்கே யாரும் பேசமாட்டாங்க….
நான் பார்த்துக்கொள்ளுறன். நீங்க போகவேணாம் சுபாஷினி. நான் இருக்கிறன். ஒருவர் மீது கோபம் – வெறுப்பு வரும்போது, அவர்கள்
முன்னர் நமக்குச்செய்த நன்மைகளும் நினைவுக்கு வரல்வேண்டும் என்று எங்கட அப்பா சொல்லியிருக்கிறார்.
அந்த நல்ல நினைவுகள் வந்தால், கோபமும் வெறுப்பும் மறைந்துவிடுமாம். ஜீவிகா நெருக்கடியான
வேளையில் உங்களை கைவிடாமல் காப்பாற்றியிருக்கிறாள். சில வேளை நீங்கள் அந்தச்சந்தர்ப்பத்தில்
அவமானம் தாங்கமுடியாமல், நுவரேலியாவுக்கும் போகமுடியாமல் தற்கொலையும் செய்வதற்கு வாய்ப்பிருந்திருக்கும். அது சரி, இவ்வளவு கதையும் உங்கட வீட்டுக்குத் தெரியுமா..? “
“ தெரியாது… எனக்கு திருமணம் பேசுறாங்க…. நான்தான்
வேண்டாம் என்று இழுத்தடித்துக்கொண்டிருக்கிறன். அம்மாவும் அப்பாவும் போன் எடுத்தால்
முதலில் அந்தப்பேச்சைத்தான் தொடங்குவாங்க.
“ எனச்சொல்லிவிட்டு எழுந்தாள் சுபாஷினி.
அபிதா அருகில் வந்து அவளை மார்போடு
அணைத்து நீர்கோர்த்திருந்த அவள் கூந்தலை வருடினாள்.
அக்கூந்தலிலிருந்து மலர்ந்த ஷாம்பு வாசனையை
நுகர்ந்தாள். அந்த வாசனையில் அபிதாவின் குழந்தை
நினைவுக்கு வந்தாள்.
வாசனைகள் சில நினைவுகளை நினைவூட்டும்.
( தொடரும் )
No comments:
Post a Comment