பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்தரதாஸ் - பகுதி 23


மகனே நீ வாழ்க

1969ம் ஆண்டு தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்ட ஜெய்சங்கருக்கு பொன்னான ஆண்டாக அமைந்தது.  இந்த ஆண்டின் பதின்மூன்று படங்களில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அதாவது மாதம் ஒரு படம் என்ற ரீதியில் அவர் நடித்த படங்கள் வெளிவந்தன.  இது வேறு எந்த கதாநாயக நடிகனும் இது வரை முறியடிககாத இனியும் முறியடிக்க முடியாத சாதனையாகும்.  படத்தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் ரசிகர்களின் ஆதரவை ஜெய்சங்கர் பெற்றிருந்ததினாலேயே இது சாத்தியமானது.  


அந்த வகையில் ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த படம்தான் மகனே நீ வாழ்க.  அவருக்கு ஜோடியாக லட்சுமியும் விஜயகுமாரியும் நடித்திருந்தார்கள்.  இவர்களுடன் நாகேஷ் சச்சு சுந்தரராஜன் எஸ். என். லட்சுமி ஆகியோரும் இடம் பெற்றார்கள்.  

தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் தாய் வேடத்தில் நடிக்க வழமையாக அம்மா வேடத்தில் நடிக்கும் பண்டரிபாய், எம். வி. ராஜம்மா போன்றோர் தெரிவு செய்யப்படவில்லை.  அதற்கு பதிலாக பழைய கதாநாயகியான அஞ்சலிதேவி தாயார் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.  பாசமும் கண்டிப்பும சேர்ந்த குணாம்சத்தை அவர் வழங்கியிருந்தார்.  ரசிகர்களுக்கும ஒரு புதிய தாயைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது.  

இரட்டை வேடக் கதை என்றலே ஆள் மாறாடடக் கதைதானே பிரபலம்.  இதில் அனாதையான மாணிக்கம் பணக்கார வீட்டு இளைஞனான செல்வமாக நடிக்க வேண்டிவருகிறது.  செல்வத்தின் தாயின் பாசம் அவனை தொடர்ந்து அங்கேயே தங்கச் செய்கிறது.  ஆனால் ஒனறன்பின் ஒன்றாக வரும் செல்வத்தின் ஒரு காதலி, மனைவி ஒரு கொழல வழக்கு என்பன அவனை இக்கட்டில் தள்ளுகிறன.

மாணிக்கம், செல்வமாக வரும் ஜெய் தன் நடிப்பில் வேறுபாடு எதையும் காட்டாது ஒரே பாணியில் நடித்திருந்தது குறையாகவே தென்பட்டது.  ஆனாலும் நிதானமான நடிப்பையே வழங்கியிருந்தார்.  

படத்தில் ஜெய் இரட்டை வேடம் என்றால் படம் முழுவதும் காட்சிக்கு காட்சி வியாபித்திருந்தவர் நாகேஷ்தான்.  ஜோடி இல்லாமல் தனி ஆவர்த்தனமாக நகைச்சுவையை வழங்கியிருந்தார் அவர்.

படத்திற்கு கதைவசனம் எழுதியவர் பாலமுருகன்.  கருத்தாழம் மிக்க வசனங்களுடன் நாகேஷிற்கான நகைச்சுவை வசனங்களையும் திறமையுடன் எழுதியிருந்தார் பாலமுருகன்.  லட்சுமி படம் முழுவதும் கவர்ச்சியாக வருகிறார்.  விஜயகுமாரி அதற்கு நேர்மாறாக வருகிறார்.


படத்திற்கு இசை டி. ஆர். பாப்பா இவரின் இசையில் கண்ணதாசன் ஒத்தைக் கல்லு முக்குத்தி ஜொலிக்குதடி பாடல் இன்றும் ஜொலிக்கிறது.  படத்திற்கு நடன ஆசிரியராக பணியாற்றியவர் பிரபு தேவா அல்ல அவரின் தந்தை சுந்தரம் எம். கிருஷ்ணனின் டைரக்ஷனில் படம் உருவாகியது.


No comments: