வெள்ளத்தில் மூழ்கியது திருகோணமலை மாவட்டம்!
கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக ஊழியருக்கு பயணத் தடை!
கிளிநொச்சியில் கனமழை ; மக்கள் வீடுகளுக்குள் வெள்ளம்
தூதரக பணியாளரின் உடல்நிலை காரணமாக அவரை விசாரணைக்குட்படுத்த முடியாத நிலை- சுவிஸ் மீண்டும் தெரிவிப்பு
மட்டக்களப்பில் வெள்ள அபாயத்தைக் குறைக்க குளங்களின் வான்கதவுகள் திறப்பு
கண்ணிவெடி அகற்றலுக்கு 2 மில்லியன் டொலர்கள் - கனடிய அரசாங்கம் அறிவிப்பு
நோர்வே தூதுவர் - ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சந்திப்பு
வெள்ளை வேன் சாரதியென அறிமுகப்படுத்தியவர், ராஜிதவின் ஊடவியலாளர் மாநாடு குறித்து விசாரணை
1300 இரண்டாம் மொழி பயிலுனர்களின் நிலை என்ன? - நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர் யுவதிகள்
ஜனாதிபதியை சந்தித்த பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
கனடா உயர் ஸ்தானிகர், சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
யு.என்.டி.பி.யின் ஆசிய- பசுபிக் பிராந்திய பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்
சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் இலங்கை விஜயம்- அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஆராய இரு தரப்பும் இணக்கம்
கல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்
அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் - அலைனா டெப்லிட்ஸ்
எதிர்க்கட்சி தலைவர் சஜித்தே..!: முடிவை அறிவித்தார் ரணில்...!
ஊவா பொலிஸ் பிரதானியின் உதவியாளராக சி.ஐ.டி.யின் பணிப்பாளரான திசேரா
தூதரக பணியாளரை மருத்துவசிகிச்சைக்காக இலங்கைக்கு வெளியே கொண்டு செல்ல சுவிஸ் வேண்டுகோள்- அரசாங்கம் மறுப்பு
ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சியா ? : ஐந்து இளைஞர்கள் கைது
சீரற்ற காலநிலையால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : வடக்கு, கிழக்கில் வெள்ளத்தினால் மக்கள் பெரும் அவலம்
பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் !
ஜனாதிபதி கோத்தாபயவுடன் சந்திப்பினை மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!
2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு
வெள்ளத்தில் மூழ்கியது திருகோணமலை மாவட்டம்!
03/12/2019 திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாத்திமா பாலிகாவித்தியாலயத்தின் வீதி ஊடாக கடும் மழை காரணமாக அப்பகுதி இன்று மாலை வேளையில் மூழ்கியுள்ளது.


இது தொடர்பில் நீர் வடிந்தோடக்கூடியவாறும் மக்களின் வீடுகளுக்குள் நீர் உட்புகாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக ஊழியருக்கு பயணத் தடை!
03/12/2019 கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் தூதரக பெண் ஊழியருக்கு கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடைவிதித்துள்ளது.
அத்துடன் அவரை எதிர்வரும் 09 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
கிளிநொச்சியில் கனமழை ; மக்கள் வீடுகளுக்குள் வெள்ளம்
03/12/2019 அதிக மழை காரணமாக கட்டைக்காடு பகுதியில் மக்கள் வீடுகளிற்குள் வெள்ளம் புகுந்ததில் இரண்டு குடும்பங்கள் கண்டாவளை பிரதேச செயலாளரின் முயற்சியினால் பாதுகாப்பான பகுதிக்கு நகர்த்தப்பட்டனர்.

தொடர் மழை காரணமாக கிளிநொச்சி கட்டைக்காடு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியகுளம் நிறைவு மட்டத்தை அடைந்துள்ளமையால் அதிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் வீடுகளிற்குள் சென்றுள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் வெள்ள நீர் வீடுகளிற்குள் உட்புகுந்த நிலையில் வாழும் குடும்பங்களை சந்தித்தார். அங்கு காணப்படும் வெள்ள நீர் வெளியேறும் வரை அவர்களை கட்டைக்காடு அ.த.க. பாடசாலையில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்ததார்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட குறித்த இரு குடும்பங்களிற்குமான உணவு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் கண்டாவளை பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளார்.
அதேவேளை குறித்த பகுதியில் வட்டக்கச்சி செல்லும் பிரதான வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீதியை குறுக்கெடுத்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் பயணம் செய்வதில் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

பிரமந்தனாறு குளம் அடைவு மட்டத்தை அடைந்து மேலதிக நீர் வெளியேறி வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதயில் உள்ள மக்கள் பயன்பாட்டு வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியல் வாழும் 15 குடும்பங்கள் குறித்த பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். அப்பகுதியில் காணப்படும் நிலை தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

இன்று காலை முதல் ஓரளவான மழையற்ற காலநிலை தொடர்கின்றது. தொடர்ந்தும் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வார்கள். நன்றி வீரகேசரி
தூதரக பணியாளரின் உடல்நிலை காரணமாக அவரை விசாரணைக்குட்படுத்த முடியாத நிலை- சுவிஸ் மீண்டும் தெரிவிப்பு
03/12/2019 இலங்கையில் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தனது தூதரக பணியாளரின் உடல்நிலை காரணமாக அவரை விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுவிட்சர்லாந்து மீண்டும் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் State secretary பாஸ்கல் பெரிஸ்வில் இதனை தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிக்கும் சுவிட்சர்லாந்திற்குமான இலங்கையின் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சியை சுவிட்சர்லாந்திற்கு அழைத்து தனது நாட்டின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் வெளிவிவகாரத்திற்கான சமஸ்டி திணைக்களம் உரிய சட்டங்களை பயன்படுத்தி இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிற்கும் ஆதரவளிக்கும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
உடல்நிலை காரணமாக குறிப்பிட்ட பணியாளர் இன்னமும் விசாரணைக்கு உட்படுத்த முடியாதவராக காணப்படுகின்றார் என பாஸ்கல் பெரிஸ்வில் உறுதி செய்தார்,தனிநபரின் உடல்நிலையே முக்கியமான விடயம் என அவர் வலியுறுத்தினார் என சுவிட்சர்லாந்தின் வெளிவிவகாரத்திற்கான சமஸ்டி திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிகாரிகளின் விசாரணைகளை தாமதப்படுத்தும் நோக்கம் எதுவும் சுவிட்சர்லாந்திற்கு இல்லை, சுவிட்சர்லாந்தின் வெளிவிவகாரத்திற்கான சமஸ்டி திணைக்களம தனது பணியாளர் குறித்த தனது கடமைகளை தீவிரமானதாக கருதுகின்றது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைவெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தூதரக பணியாளர் தொடர்பான சம்பவத்திற்கு எதிரான ஆதாரங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்து தூதுவரை தெளிவுபடுத்துமாறு சுவிட்சர்லாந்து அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான உறவுகளில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
மட்டக்களப்பில் வெள்ள அபாயத்தைக் குறைக்க குளங்களின் வான்கதவுகள் திறப்பு
03/12/2019 மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வருகின்ற கன மழையின் காரணமாக ஏற்படும் வெள்ள நீர் அபாயத்தைக் குறைப்பதற்கு வசதியாக குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மித மிஞ்சிய நீர் கடலுக்குள் பாய விடப்படுவதாக மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.எம்.பி.எம். அஸ்ஹர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்களான உன்னிச்சை, நவகிரி, உறுகாமம், கட்டுமுறிவு, வெலிக்காக்கண்டி ஆகிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பை ஊடறுத்துச் செல்லும் புளுகுணாவை குளத்தின் வான் கதவும் திறந்து விடப்பட்டுள்ளது.
புளுகுணாவைக் குளத்தின் நீர்மட்டம் 29அடிக்கு மேல் உள்ளதனாலும், தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருப்பதினாலும் இந்தக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து கால நிலை சீரடையாமல் இருப்பதால் மாவட்ட இடர் முகாமைத்துவ அலுவலர்களும், நீர்ப்பாசனத் திணைக்களம், பிரதேச செயலகங்கள் ஆகியவற்றின் அதிகாரிகளும் கள நிலைமைகளை அவதானித்து செயற்படும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கடற்படையினர், விமானப் படையினர், இராணுவத்தினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸார் ஆகியோரும் கண்காணிப்பு தயார் நிலைக் கடமைகளில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
03/12/2019 பணிவலுவில் அரைப்பங்கிலான பெண்களை உள்ளடக்கிய, இலங்கையின் வடக்கில் கண்ணிவெடி அகற்றலுக்கான 2 மில்லியன் டொலர்களை வழங்குவதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் கரினா கோல்ட் ஆகியோர் கண்ணிவெடி அகற்றலுக்கு உதவும் விவரங்களடங்கிய இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்:
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“வெடிக்காத கண்ணிவெடிகள் உலகில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள உள்ளுர் மக்கள் தங்கள் நிலங்களில் வாழ்வதையும் வேலை செய்வதையும் தடுக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் இந்த ஆயுதங்களால் 7,000 பேர் தங்கள் உயிர்களை இழக்கின்றனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைகின்றனர்.
அதனால்தான், சாசனத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் உலகமயப்படுத்துவதிலும், தீர்மானம் எடுத்தல் செயற்பாடுகளிலும் பால்நிலை சமத்துவம் குறித்து கவனம் செலுத்திய கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைக்காக நேற்றைய தினம் திங்களன்று ஒட்டாவா உடன்படிக்கைக்கான தமது உறுதிப்பாட்டினை கனடா மீளுறுதி செய்தது.
கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு ஆதரவளிப்பதற்கு 83 மில்லியன் டொலர்களை அறிவித்தது.
கண்ணிவெடிகள் அகற்றலின் அனைத்து மட்டங்களிலும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரமாக ஈடுபடுவதை உறுதி செய்வது கனடாவுக்கு முன்னுரிமையானதாகும்.
அவ்வாறு செய்வது அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துகிறது, மேலும் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவதில் மாற்றத்தின் முகவர்களாக இருப்பதற்கான வாய்ப்புக்களை மக்களுக்கு வழங்குகிறது.
பணிவலுவில் அரைப்பங்கிலான பெண்களை உள்ளடக்கிய, இலங்கையின் வடக்கில் கண்ணிவெடி அகற்றலுக்கான 2 மில்லியன் டொலர்களும் இந்தப் புதிய நிதியுதவியில் உள்ளடங்குகின்றது.
ஈராக்கில், இந்தப் பணியில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் ஒரு முன்முயற்சியுடன் டேஷிலிருந்து (Daesh) விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க 2 மில்லியன் டொலர்களை நாம் வழங்குவோம்.
கண்ணிவெடிகளை தடை செய்வதற்கு வேண்டிய சர்வதேச பிரசாரத்திற்கான 4.3 மில்லியன் டொலர்கள் முக்கியமான நிறுவன ஆதரவை வழங்க கனடா உறுதி பூண்டுள்ளது,
இந்த நிதி அரசுகள் தமது கடமைகளை எட்டுவதற்கும் சாசனத்தை உலக மயப்படுத்துவதற்கும் உதவி செய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
நோர்வே தூதுவர் - ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சந்திப்பு
03/12/2019 இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் கடல் பாதுகாப்பு, மீன்பிடி, தகவல் தொழில்நுட்பம், பசுமை சக்தி, வேலைவாய்ப்பு, பெண்களை வலுப்படுத்தல் மற்றும் நல்லாட்சி போன்றவற்றுக்கான் எமது ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் வழங்குவோம். என அதில் இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி வீரகேசரி
வெள்ளை வேன் சாரதியென அறிமுகப்படுத்தியவர், ராஜிதவின் ஊடவியலாளர் மாநாடு குறித்து விசாரணை
03/12/2019 நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த நபர் தொடர்பிலும், அந்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் கடந்த நவம்பர் மாதம் 10 திகதி முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோத்தாபய ராஜபக்ஷவே என்றும் இவ்வாறு அண்ணளவாக 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கடத்தப் பயன்படுத்திய வெள்ளை வேன் ஒன்றின் சாரதியாக பணியாற்றியதாகவும் குறித்த நபர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
1300 இரண்டாம் மொழி பயிலுனர்களின் நிலை என்ன? - நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர் யுவதிகள்
03/12/2019 அண்மையில் தேசிய ஒருமைபாடு அரசகரும மொழிகள் சழூக மேப்பாடு அமைச்சின் ஊடாக இரண்டாம் மொழியை கற்பிப்பதற்கு மொழிகளில் தகமை உள்ள 1300 விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இவர்களுக்காகன நியமன கடிதங்கள் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் ஏற்பாட்டில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி அலரி மாளிகையில் வழங்கி கைக்கப்பட்டது.
இவர்களில் தமிழ் மொழி மூலம் 800 பேரும் சிங்களமொழி மூலம் 300 பேரும் ஆங்கில மொழிமூலம் 200 பேருமாக அடங்குவர்.
இந்த இரண்டாம் மொழி கற்பிப்பதற்காக தெரிவு செய்யபட்டவர்களுக்கு நாடாளாவிய ரீதியில் காணப்படும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஊடாக பயிற்சிகள் ஆரம்பிக்கபட்டு நடைபெற்று வந்தன. கடந்த மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்காக இவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதும் இது வரை பயிற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்த நிலமை குறித்து பயிலுனர்கள் குறித்த பயிற்சி நிறுவன அதிகாரிகளையும் பயிற்றுவிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு வினவிய போதும் பொருத்தமான பதில்கள் வழங்காததினாலும் பயிற்சிகள் ஆரம்பிப்பது குறித்து உரிய திகதியை வழங்காததினாலும் பயிற்றுவிப்பாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக இந்த நியமனங்களை பெற்றவர்கள் ஏற்கனவே சில அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் புரிந்தவர்கள். தங்களுக்கு ஒரு பொருத்தமான தொழில் கிடைக்க போகின்றது என்ற நோக்கில் இருந்த தொழிலையும் விட்டுவிட்டு இந்த தொழிலில் இணைந்து பயிற்சிகளை பெற்று வந்தனர்.
இவ்வாறான நிலையில் இவை எந்த காரணம் இன்றியும் உரிய பதில்கள் இன்றியும் இடை நிருத்தப்பட்டமையால் பயிலுனர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். இரண்டாம் மொழி சிங்களம் கற்பிக்க தமிழ்மொழி மூலம் 800 பயிலுனர்கள் தெரிவு செயய்பட்டு இருந்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர் மலையத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள். இவர்களுக்கு சிங்களமொழியில் கூடிய பரீட்சயம் இருந்ததாலும் சிங்களவர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்க கூடிய தகமை இருந்ததாலும் இவர்கள் தெரிவு செய்யப்பட்டு இருந்தார்கள். தற்போது இவர்களின் நிலை கேள்வி குறியாகி உள்ளதுடன். உலரீதியில் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
தற்போது தெரிவு செய்யபட்ட சில பயிலுனர்களுக்கு இருந்த தொழிலும் இல்லாமல் போய் கிடைத்த தொழிலும் இல்லாமல் போய் உள்ளது. நாட்டில் மொழிக் கொள்கையை திறம்பட முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
இதனை நம்பி இத்துறைக்கு விண்ணப்பித்து தற்போது நிர்க்கதியாகி உள்ளவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர். நன்றி வீரகேசரி
ஜனாதிபதியை சந்தித்த பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
03/12/2019 பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை இன்று (02) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்ல தமது நாடு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
இலங்கையுடன் நெருங்கிய நட்புறவை பேணிவரும் தமது நாடு, பொருளாதார அபிவிருத்தி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு பற்றிய விடயங்களில் இலங்கையுடனான தொடர்பினை வலுவாக முன்னெடுத்துச் செல்ல ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
தமது நாட்டில் உள்ள பௌத்த பாரம்பரியத்துடன் தொடர்புடைய மரபுரிமைகளை பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்ததுடன், வெகுவிரைவில் தமது நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றினை மேற்கொள்ளுமாறு அவர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார உதவிகளுக்கு அப்பாற்பட்டு இரு நாடுகளும் பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டதுடன், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான வெற்றிலை ஏற்றுமதியினை இதன்போது நினைவுப்படுத்தினார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல் ஆகியன தற்போது நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
அதேவேளை இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் தமக்கு உதவியளிக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மொஹமட் பைசல் மற்றும் இலங்கைக்கான பதிற் கடமை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமட் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். நன்றி வீரகேசரி
கனடா உயர் ஸ்தானிகர், சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
02/12/2019 இலங்கைக்கான கனடா நாட்டின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் (Daved Mckinnon)இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

இதன்போது ஜனாதிபதி உயர் ஸ்தானிகருடன் சுமூகமாக கலந்துரையாடியதுடன், உயர் ஸ்தானிகர் கனடா அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை ஜனாதிபதிக்குத் தெரிவித்தார்.
இதேநேரம், சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் விசேட பிரதிநிதியும் சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் நாயகமுமான இலங்கைக்கான முன்னாள் சீன தூதுவர் வூ ஜியாங்கோ (Wu Jianghao) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார். நன்றி வீரகேசரி
யு.என்.டி.பி.யின் ஆசிய- பசுபிக் பிராந்திய பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்
02/12/2019 இலங்கைத் தமிழ்ப் பெண்ணான கன்னி விக்னராஜா ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (யு.என்.டி.பி) ஆசிய -பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக பதவியேற்றுள்ளார்.
முன்னதாக இவரை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குட்ரெஸ், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான உதவி செயலாளர் நாயகமாகவும், உதவி நிர்வாகியாகவும் நியமித்திருந்தார். கன்னி விக்னராஜா ஐ.நா முறைமைகளில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான நீண்டகால அனுபவம் கொண்டவராவார். இவர் யு.என்.டி.பி.யின் நாடு, பிராந்திய மற்றும் அனைத்துலக அளவில் ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களில் பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் பிறந்த கன்னி விக்னராஜா பிறின்ஸ்ரென் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் Bryn Mawr கல்லூரியில் பொருளாதாரத் துறையில் இளமாணி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் இலங்கை விஜயம்- அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஆராய இரு தரப்பும் இணக்கம்
02/12/2019 இலங்கையும் சீனாவும் தங்களின் நீண்ட கால நட்புறவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் ஆராய்வதற்கு இணங்கியுள்ளன.
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான முன்னாள் தூதுவர் வு ஜியாங்காவோ பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பின்போது அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஆராயப்பட்டதாகவும்,இரு தரப்பும் இது குறித்து கருத்துபரிமாற்றத்தில் ஈடுபட்ட பின்னர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்ட கால நட்புறவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இணங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கம் நீண்ட கால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து விருப்பம் வெளியிட்டுள்ளது.
இலங்கையுடனான சீனாவின் பொருளாதார ஒத்துழைப்புகளை அதிகாரிப்பது குறித்த சீனாவின் விருப்பத்தை விசேட பிரதிநிதி வெளியிட்டுள்ளார்.
இரு நாடுகளும் கைச்சாத்திட்ட ஆனால் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படாத திட்டங்களிற்கு புத்துயுர் கொடுப்பதற்கும் இரு தரப்பும் இணங்கியுள்ளன. நன்றி வீரகேசரி
கல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்
05/12/2019 தனது கொள்கை பிரகடனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர்இதனைத் தெரிவித்தார்.
தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட உலக பொருளாதாரத்திற்கு திறமைவாய்ந்த இளம் தலைமுறைய உலகிற்கு வழங்கக்கூடிய கல்வி முறைமைக்குள் உடனடியாக பிரவேசிக்க வேண்டியுள்ளது. இதன்போது பரீட்சையை மையமாகக்கொண்ட கல்வி முறைமையிலிருந்து விலகி பிள்ளைகளின் தோல்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமக்க முடியாத சுமைகளை நீக்கும் வகையிலான பின்புலமொன்றை அமைக்க வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது நாட்டின் தேவையையும் சர்வதேச மட்டத்தில் பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ள முறைபற்றி கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
கல்வித்துறை குறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அரசியலில் இருந்து விலகி கல்வியியலாளர்களினால் அவை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளை கூடிய விரைவில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் 2019ஆம் ஆண்டிலிருந்து உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி குறுகிய காலத்திற்குள் பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். மேலும் குறுகிய கால அடிப்படையில் நாட்டுக்குத் தேவையான தொழிற்படை ஒன்றை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக முறைமைக்கு டிப்ளோமா கற்கைநெறிகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
தொழிற்சந்தையை இலக்காகக்கொண்டு ஆசிரியர் கல்லூரிகள்இ ஹோட்டல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அழிவுக்குள்ளாக இடமளிக்காது கூடிய விரைவில் தேசிய பல்கலைக்கழக முறைமைக்குள் இணைத்து தேசிய வளமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தேவையை கண்டறிந்து பாடநெறிகளை தயாரிக்கும் சந்தர்ப்பத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. இதற்காக பல்கலைக்கழகங்களை வலுவூட்ட வேண்டியுள்ளதுடன்இ போலியான நியாயங்களில் இருந்து விலகி கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
காலிஇ மாத்தறைஇ அம்பாந்தோட்டை உட்பட அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பல்கலைக்கழங்களை ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதற்காக பெரும் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத கட்டிடங்களை புனர்நிர்மாணம் செய்து பயன்படுத்தக்கூடிய வழிவகைகள் குறித்து கண்டறியப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
விஞ்ஞானம் மற்றும் கணிதத் துறைகளில் அதிகளவு மாணவர்கள் நாட்டுக்கு வழங்க வேண்டியுள்ளது. கலைத்துறையில் கல்விகற்று வருகின்றவர்களை குறுகிய காலத்தில் தகவல் தொழிநுட்ப அறிவுடன் பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைத்துக்கொள்வதும் மிகவும் முக்கியமானதென்று குறிப்பிட்டார்.
உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை நாட்டுக்குள்ளேயே பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் பாடசாலைகளில் இருக்க வேண்டிய ஆசிரியர்களின் தொகையை வெற்றிடங்கள் ஏற்படாத வகையில் பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். கல்வித்துறைக்காக ஒரு வருடக் காலப் பகுதியில் தேசியக் கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டுமென்று இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இன்று இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடல் கல்வித்துறை தொடர்பான மதிப்பு வாய்ந்த ஒரு அறிகுறியாகும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.
அமைச்சர் பந்துல குணவர்தனஇ இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். நன்றி வீரகேசரி
05/12/2019 அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கையை தமிழ் மக்கள் அங்கீகரித்திருந்தமையை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருந்தன
மேலும் தேசிய பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திய இரா சம்பந்தன் , மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்க கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வினை அரசியல் யாப்பொன்றின் மூலாமாக அடைவதே எமது நோக்கமாகும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மட்டுமல்லாது அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வினை அடையும் முகமாக அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என தெரிவித்த இரா சம்பந்தன் எச்சந்தர்ப்பத்திலும்
எமது மக்களின் அபிலாசைகளையோ உரிமைகளையோ நாம் விட்டுக்கொடுக்கவோ அவற்றிக்கு மாறாகவோ செயற்பட மாட்டோம் எனவும் தெரிவித்தார். மேலும் இனங்களிற்கிடையே சமாதானமும் நாட்டிலே இஸ்திரத்தன்மையும் இல்லாத பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்து கொள்வது மிக கடினமாகும் எனவும் வலியுறுத்தினார்.
19வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் ஜனநாயக பண்புகளிற்கு விரோதமான எந்தவொரு திருத்தங்களிற்கும் நாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாதொழிப்பதற்கு தாம் சார்பாக செயற்பட முடியாதென்பதனையும் வலியுறுத்தி கூறினார்.
இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேறிய மனித உரிமை பேரவை பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியாமையே இந்த விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டமைக்கான முக்கிய காரணமாகும் என தெரிவித்த அதேவேளை, இலங்கை அரசாங்கமானது பல்வேறு விடயங்கள் தொடர்ப்பில் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது,

இந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதானது, இலங்கை அரசாங்கமானது உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இல்லை என்பதனையே எடுத்துக்காட்டும் என்பதனை வலியுறுத்தினார்.
அதுமாத்திரமல்லாது இந்த வாக்குறுதிகளில் பின்வாங்குகின்றமையானது இலங்கை அரசாங்கம் சர்வதேச பிரகடணங்களை தன்னிச்சையாக மீறி செயற்படுகின்ற ஒரு அரசாங்கமாக கணிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் எனவும் வலியுறுத்தினார்
இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான தொடர்பாடலை தமது அரசாங்கம் கொண்டிருக்கும் என்பதனை மீளுறுதி செய்த அமெரிக்க தூதுவர் அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
எதிர்க்கட்சி தலைவர் சஜித்தே..!: முடிவை அறிவித்தார் ரணில்...!
05/12/2019 எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவும், ஐ.தே.க. வின் தலைமைத்துவ பொறுப்புக்களில் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவும் நீடிக்கவுள்ளதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இன்று (05.12.2019) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் பாராளுமன்ற குழுவும் இணைந்தே மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
ஊவா பொலிஸ் பிரதானியின் உதவியாளராக சி.ஐ.டி.யின் பணிப்பாளரான திசேரா
(எம்.எப்.எம்.பஸீர்)
05/12/2019 முன்னணி விசாரணைகளை வழி நடத்தி வந்த நிலையில் சி.ஐ.டி. பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றப்பட்ட நிலையில், அவ்விசாரணை களை கையாண்ட உதவி பொலிஸ் அத்தியட்சரான பீ.எஸ். திசேரா நேற்று முதல் ஊவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.

சி.ஐ.டி.யின் மூன்றாம் நிலை உயர் அதிகாரியாக கருதப்பட்ட அவர், சமூக கொள்ளை மற்றும் விஷேட விசாரணைப் பிரிவு ஆகிய முக்கிய இரு பிரிவுகளை வழி நடாத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி வித்திய படுகொலை விவகாரம், ரத்துபஸ்வலவில் தண்ணீர் கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, ஊடகவியலாளர் லசந்த படுகொலை, ஊடகவியலாளர்களான கீத் நொயார், உபாலி தென்னகோன் உள்ளிட்டோர் மீதான தாக்குதல்கள், வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பிலான கருத்தடை விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்த விசாரணைகளை உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவே கையாண்டார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் வழி நடத்தலில் இவ்விசாரணைகளை சமூக கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா குழு முன்னெடுத்த நிலையில், அந்த விசாரணைகளை நெறிப்படுத்தி அதற்கு தேவையான தலைமைத் துவத்தை உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவே வழங்கியிருந்தார். இந்நிலையிலேயே கடந்த சனிக்கிழமை இடமாற்றப்பட்டார்.
இந்த இடமாற்றமானது பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவினால் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று அந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டு, உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா ஊவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக தேசிய பொலிஸ் ஆணைக் குழுவால் இடமாற்றம் செய்யப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தூதரக பணியாளரை மருத்துவசிகிச்சைக்காக இலங்கைக்கு வெளியே கொண்டு செல்ல சுவிஸ் வேண்டுகோள்- அரசாங்கம் மறுப்பு
04/12/2019 இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக பணியாளரை மருத்துவசிகிச்சைக்காக இலங்கையிலிருந்து சுவிஸிற்கு கொண்டு செல்வதற்கு சுவிட்சர்லாந்து தூதரகம் அனுமதி கோரியதாகவும் அதனை மறுத்துவிட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் குறிப்பிட்ட பெண் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பெண்ணை மருத்துவசிகிச்சைக்காக அவரது குடும்பத்தினருடன் இலங்கையிலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கான அனுமதி கோரப்பட்டது,என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தூதரக பணியாளரை கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் விமானத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு சுவிஸ் அதிகாரிகள் முயன்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 25 ம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்து குறிப்பிட்ட பெண்ணிடமிருந்தோ அல்லது தூதுவரிடமிருந்தோ உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் எதனையும் பெறாத போதிலும் தூதுவர் வழங்கிய குறைந்தளவு தகவல்களை அடிப்படையாகவைத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள அமைச்சர் இந்த விசாரணைகளின் போது குற்றச்சாட்டுகள் சிறிதளவு கூட உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எங்கள் அரசியல்தலைமைத்துவத்தின் மீது சேற்றைவாரியிறைக்கும்,பொய்களையும் பிழையான தகவல்களையும் தெரிவிக்கும் மற்றுமொரு நடவடிக்கையாக இதனை காண்கின்றேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சியா ? : ஐந்து இளைஞர்கள் கைது
(எம்.எப்.எம்.பஸீர்)
05/12/2019 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலை செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்று வாழக் கூடிய சூழலும் கிடைக்கும் எனவும் கூறி சிலருடன் இணைந்து கொலை சதித் திட்டம் தீட்டியதாக தெரிவித்து ஐந்து இளைஞர்களை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந் நிலையில் அவர்களில் நால்வரை விடுவித்த நீதிமன்றம் பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தபப்டும் சந்தேக நபரை மட்டும் 72 மணி நேரம் தடுப்பில் வைத்து விசாரிக்க கட்டுநாயக்க பொலிஸாருக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை நீதிவான் கேசர சமரதிவாகர இதற்கான அனுமதியை இன்று மாலை வழங்கினார். அதன்படி வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரை தொடர்ந்து தடுப்பில் வைத்து விசாரிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
கடந்த திங்களன்று கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பொறுப்பதிகாரி , உப பொலிஸ் பரிசோதகர் இந்திக தலைமையிலான குழுவினர், சீதுவை - ஜயவர்தனபுர , அமந்தொழுவை பகுதியில் வாடகையில் பெற்ற வீட்டில் தங்கியிருந்த ஐவரைக் கைது செய்தனர்.
வாழைச்சேனை , கிளிநொச்சி - அக்காரயன்குளம் , விஷ்வமடு - தர்மபுரம் விஷ்வமடு - கல்லாறு மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அத்தோடு கைதுசெய்யப்பட்ட நபர்களில் மேலதிக விசாரணையின் பின்னர் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சீரற்ற காலநிலையால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : வடக்கு, கிழக்கில் வெள்ளத்தினால் மக்கள் பெரும் அவலம்
(எம்.மனோசித்ரா, கரைச்சி, வெல்லாவெளி நிருபர்கள்)
07/12/2019 நாட்டில் இரு வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 35 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இவ்வாறான சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சீரற்ற காலநிலை தொடரும் அதே வேளை, வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் மழை குறையக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கிழக்கு , ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை , நுரரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை , மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஏனைய கடற்பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசங்களிலும் மழை பெய்யும்.
இவ்வாறு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 - 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்.
பாதிப்புக்கள்

நிலவும் சீரற்ற காலநிலையால் மணிசரிவு , வெள்ளம், மரம் முறிந்து வீழ்ந்தமை, மின்னல் தாக்கம் போன்ற அனர்த்தங்களால் 20 மாவட்டங்கள் அதிக பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.
பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு , அம்பாறை, திருகோணமலை, மன்னார், முல்லைதீவு, கிளிநொச்சி, வவுனியா , கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகல், அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 542 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு சில அனத்தங்களுக்கு முகங்கொடுத்து 8 பேர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளம், மண்சரிவு போன்றவற்றினால் 20 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 943 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட 2609 குடும்பங்களைச் சேர்ந்த 8553 பேர் 90 தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கில் பாதிப்பு
கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்றுக்காலை வரை பெய்த கனமழைக் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்க்கியுள்ளன.
வெள்ளத்தினால் மூழ்கியுள்ள பகுதிகளில் சிக்கியிருந்த பொது மக்களை நேற்றுமுன்தினம் இரவு முதல் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றிருந்தனர். அத்தோடு க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சில பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது. அவ்வாறான இடங்களிலும் படையினர் படகுகள் மூலம் மாணவர்களை பரீட்சை மண்டபங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் கன மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 6841குடும்பங்களை சேர்ந்த 22262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதில் 920 குடும்பங்கள் 21 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதில் கரைச்சி பிரதேசத்தில் 182 குடும்பங்களும், பளையில் ஒரு குடும்பமும், கண்டாவளையில் 714 குடும்பங்களும், பூநகரியில் 23 குடும்பங்களும் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு கரைச்சி பிரதேசத்தில் 3147 குடும்பங்களும், பளையில் 252 குமும்பங்களும், கண்டாவளையில் 3317 குடும்பங்களும், பூநகரியில் 125 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் அடை மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவானோர் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளனர்.
இதில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கு உட்பட்ட பகுதியில் 8899 குடும்பங்களை சேர்ந்த 28831பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 236 குடும்பங்களை சேர்ந்த 797 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் பாலங்கள் உடைப்பெடுத்தமையினால் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அம்பாறையில்
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதே வேளை, அம்பாறை மாவட்டத்தில் 39849 குடும்பங்களை சேர்ந்த 132573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும், கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் .
தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளாந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ளம் பாய்ந்து வருவதால் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை அன்னமலை, சொறிக்கல்முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொளனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் இவ் வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில்

தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலே இதுவரை 9953 குடும்பங்களைச் சேர்ந்த 33288 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நேற்று முதல் 8 இடைத்தங்கல் முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
நேற்று முதல் 8 முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்கள் கடந்த 24 மணித்தியாளங்களில் கிடைத்த அதிகமான மழைவிழ்ச்சி காரணமாக 18 முகாம்களில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு அங்கு மக்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள்,சமைத்த உணவுகள் ,குடிநீர் என்பனவும் வழங்கப்பட்டு வருகின்றது.
கிரான் பாலத்தை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அங்கு மக்களின் போக்குவரத்துக்காக 5 இயந்திரப்படகுகள் சேவையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது அப்பகுதியிலிருந்து கல்வி பயிலும் பொது சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் 2 மாணவர்கள் இவ் இயந்திரப்படகுக்கூடாகவே தங்களின் பயணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதிவருவது குறிப்பிடத்தக்கது . நன்றி வீரகேசரி
பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் !
06/12/2019 பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து சைகைசெய்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுமார் 2400 பவுண்ட் அபராதம் விதிப்பதாக இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எச்சரித்திருந்தார்.
அதன் பின்னர் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றினால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஜனாதிபதி கோத்தாபயவுடன் சந்திப்பினை மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!
(எம்.மனோசித்ரா)
06/12/2019 புதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்குமிடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என்று இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு
07/12/2019 2020 ஆம் ஆண்டின் “மிஸிஸ் வேர்ல்ட்” - “உலக அழகுத் திருமதி” என்ற பட்டத்தை சுவீகரித்தார் இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி.

அமெரிக்காவில் லொஸ்வேகொஸில் இடம்பெற்ற தெரிவில் 51 பேர் கலந்து கொண்டனர் . இதில் பங்குபற்றிய கேரோலின் குறித்த விருதை பெற்றுள்ளார்.

ஏற்கெனவே அவர் “ மிஸிஸ் ஸ்ரீ லங்கா” என்ற விருதுக்கும் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போதே அவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார்.

35 ஆண்டுகளுக்கு பிறகு “மிஸிஸ் வேர்ல்ட்” - “உலக அழகுத் திருமதி” இலங்கை பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த விருதை முதலாவது தடவையாக 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment