02/12/2019 ஆட்சி மாற்றம் என்பது பக்கச்சார்பின்றி நேர்மையாக செயற்படும் அதிகாரிகளுக்கும், பக்கம் சார்ந்து செயற்படும் அதிகாரிகளுக்கும் சிக்கலானதாகவே அமைந்து விடுவது வழக்கம்.
ஆட்சிமாறும் போது, சந்தர்ப்பத்துக்கேற்ப மாறி விடும் அதிகாரிகள் தப்பிக் கொள்வார்கள். ஏதோ ஒரு பக்கம் சார்ந்து செயற்படும் அதிகாரிகள், அடுத்த முறை வரட்டும் என்று பதுங்கிக் கொள்வார்கள்.
நேர்மையாக செயற்படும் அதிகாரிகள் பந்தாடப்படுவார்கள். அவர்களுக்கு எந்த ஆட்சி வந்தாலும், சிக்கலாகவே இருக்கும்.
ஜனாதிபதித் தேர்தலை அடுத்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அதிகாரிகள் பலருக்கு இடமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. பலருக்கு நல்ல பதவிகள் கிட்டி யிருக்கின்றன. சிலர் தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் நாங்கள் யாரையும் பழிவாங்கமாட்டோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவும் அதனை வலியுறுத்திக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் நடந்து வரும் சம்பவங்கள் பல, அரசியல் பழிவாங்கல்களாகவே, காழ்ப்புணர்வுகளாகவே தென்படுகின்றன.
தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு, யட்டியந்தோட்டையில் தமிழர்கள் வீடுகளுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாணந்துறையிலும், வேறு சில இடங்களிலும் தமிழ் மொழியிலான பெயர்ப் பலகைகள் அழிக்கப்பட்டன.
அதைவிட பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள், அலுவலகங்கள் சேதமாக்கப்பட்டிருக்கின்றன.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வாகன அணி கூட தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
இதுபோன்ற சம்பவங்கள், அச்சுறுத்தல்கள் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டவையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டியவை.
ஏனென்றால், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தேர்தல் பிரசாரங்களின் போது, நாட்டின் பாதுகாப்பை என்னால் மட்டுமே 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியும் என்று கூறியிருந்தார்.
100 சதவீதம் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்று உறுதியளித்தவரின் ஆட்சியில், தனியொருவருக்கு எந்த வகையிலேனும் தீங்கிழைக்கப்பட்டால், அது அவரது புகழுக்கே களங்கத்தை ஏற்படுத்தும்.
தமிழ் மொழியிலான பெயர்ப் பலகைகள் அழிக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே, இது அரசாங்கத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார்.
எனவே, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்குமான பொறுப்பில் இருந்து அரசாங்கம் ஒருபோதும் நழுவிக் கொள்ள முடியாது.
சில சம்பவங்கள் குறித்து தகவல்கள் வெளியானதும், அதனை சரிப்படுத்தவோ, விசாரணைகளை மேற்கொள்ளவோ மேலிடத்தில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள போதும், உயர்மட்டத்தில் இருந்து முன்னெடுக்கப்படும் பல நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை.
குற்ற விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகர, காலி பிரதி பொலிஸ் மா அதிபரின் உதவியாளராக மாற்றப்பட்டிருக்கிறார். இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம்.
அடுத்து, குற்ற விசாரணை திணைக்களத்தில் மிகமுக்கியமான புலனாய்வு அதிகாரியாக இருந்த நிசாந்த சில்வா தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு ஓடியிருக்கிறார். இது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷவின் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலைகள், ஆட்கடத்தல்கள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் போன்ற பல குற்றச் செயல்கள் குறித்து குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரித்து வந்தது.
இந்த விசாரணைகளில் பல அரசியல்வாதிகள், இராணுவ, கடற்படை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் பலர், நெருக்கடிகளை எதிர்கொண்டனர். சிலருக்கு எதிராக வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சில விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்ட முன்னரே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
இந்த விசாரணைகளில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் தான் ஷானி அபேசேகர. குற்ற விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த அவர், பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் உதவியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நிசாந்த சில்வா தாம் பழிவாங்கப்படு
வோம் என்ற அச்சத்தில் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இந்தச் சம்பவங்கள் இரண்டும் புதிய அரசாங்கத்தின் மீது ஆரம்பத்திலேயே கரும்புள்ளியை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளன.
அது மாத்திரமன்றி, நிசாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, சுவிஸ் தூதரக பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், அவரது அலைபேசியில் இருந்த தரவுகளும் உருவியெடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தச் சம்பவம் அரசியல் இராஜதந்திர மட்டங்களில் இன்னும் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருக்கிறது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தேர்தலுக்கு முன்னர், அளித்திருந்த செவ்வி ஒன்றில், தாம் ஆட்சிக்கு வந்தாலும், பொலிஸ் விசாரணைகளிலோ வழக்குகளிலோ தலையீடு செய்யப் போவதில்லை என்றும், நீதித்துறை சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.
அதுபோலவே, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அவரது பேச்சாளர், டலஸ் அழகப்பெருமவும் கூட, நீதித்துறை விசாரணைகளில் தலையிடமாட்டோம் என்று உறுதியளித்திருந்தார்.
ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கின்ற சம்பவங்கள், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
நீதித்துறை சுதந்திரத்தில் தலையீடு செய்யும் வகையிலேயே நிகழ்வுகள் பல நடந்தேறுகின்றன.
பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பழிவாங்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று மஹிந்த - – கோத்தா தரப்புகள் கூறியிருந்தன. நீதித்துறையில் தலையீடுகள் செய்யப்படாது என்று உறுதியளிக்கப்பட்டாலும், நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை.
குற்றம்சாட்டப்படுபவருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்து, போதிய சாட்சியங்கள், சான்றுகளுடன் பொலிஸ் தரப்பு அறிக்கைகளை சமர்ப்பித்தால் தான், நீதிமன்றம் ஒன்றினால் நீதியை வழங்க முடியும்.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்த காலத்தில், இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் குறித்து, ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, இன்னும் சில வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன.
இவ்வாறான நிலையில், விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளை தூக்கி அடித்து விட்டால், அந்த வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் பாரபட்சமின்றி நடந்தால் கூட நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியாது.
விசாரணைகளின் ஆணிவேரைப் பிடுங்கி விட்டு, நீதித்துறை சுதந்திரமாக இருக்கிறது என்று காட்டுவதில் அர்த்தமில்லை.
ஐ.தே.க அரசாங்கம், தமது தரப்பினரைப் பழிவாங்கியது என்பது மஹிந்த தரப்பின் குற்றச்சாட்டாகவே இருந்தாலும், அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நிரூபித்து வெளியே வருவது தான் முறையானது.
அதற்கு மாறாக குறுக்குவழியில், அதிகாரத்தைப் பயன்படுத்தியோ, அச்சுறுத்தியோ வழக்கு, விசாரணைகளைப் பலவீனப்படுத்தி, தப்பிக் கொள்ள முனைவது மக்கள் மத்தியில் இன்னமும் சந்தேகங்களையே வலுப்படுத்தும்.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தபோதே, தாங்கள் பழிவாங்கப்படுவோமோ என்று சிறுபான்மையின மக்கள் அஞ்சினார்கள். என்ன நடக்குமோ என்ற கலக்கம் ஏற்பட்டது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் முதல் உரை இன்னமும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
ஆனாலும், யாரையும் பழிவாங்கப் போவதில்லை என்றும், அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் மக்களை நம்ப வைத்துக் கொள்ள முயன்று கொண்டே அதற்கு மாறான செயல்முறைகளில் ஈடுபடும் போது அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையீனமே அதிகரிக்கும்.
இப்போது ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றம் முழுமையானது கூட இல்லை. தற்போதைய அரசாங்கத்துக்கு பாராளு மன்றத்தில் பெரும்பான்மை பலமும் இல்லை. அதனை மார்ச் 1ஆம் திகதிக்கு முன்னர் கலைப்பதற்கான அதிகாரமும் கிடையாது.
பாராளுமன்றத் தேர்தலிலும் கூட இந்த அரசாங்கம் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமாயின், அவர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவுக்கு மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் செயற்படவில்லை. அதனால் தான் அவர்களால் கோத்தாபய ராஜபக் ஷ மீது நம்பிக்கை வைக்க முடியாதிருந்தது.
இப்போது ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள்ளாகவே அதிகாரத்தைக் கொண்டு மக்களின் நம்பிக்கையை சிதைக்க முனையும் போது, அவர்கள் இந்த அரசாங்கத்திடம் இருந்து இன்னமும் தூர விலகிச் செல்வார்களே தவிர நெருங்கி வரமாட்டார்கள்.
நீதியை எதிர்பார்த்திருக்கும் எல்லா இனமக்களின் கண்களுக்கு முன்பாகவும், அதற்கான வாய்ப்புகள் பறித்தெடுக்கப்படுகின்ற போது, அரசாங்கத்தின் மீது நம்பிக்கையீனம் தான் அதிகரிக்கும்.
அதனைத் தான் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறதா ?
என்.கண்ணன் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment