புதிய ஜனாதிபதி கோத்ததாபய ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய நிலைமை உருவாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி உட்பட பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலின்போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்க்கும் வகையில் 13ஆவது திருத்த சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை பிரதமர் நரேந்திரமோடி வெளிப்படுத்தியிருந்தார்.
பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கை தமிழர் தொடர்பான நிலைப்பாடு குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தன. இந்தநிலையில் 13ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் கூட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாற்று நிலைப்பாட்டை கொண்டுள்ளமை தற்போது பரகசியமாகியுள்ளது. இந்திய விஜயத்தின்போது அந்நாட்டின் ‘த இந்து‘ பத்திரிகை மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை ஆகியவற்றுக்கு ஜனாதிபதி பேட்டியளித்திருந்தார்.
இந்தப் பேட்டியில் அவர் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தினரின் விருப்புக்கு மாறாக எதனையும் செய்ய முடியாது என்றும் 13ஆவது திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பின் ஒருபகுதியாக உள்ளதுடன் அது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனாலும் பொலிஸ் அதிகாரம் போன்றவை மாத்திரம் வழங்கப்படவில்லை. இதனை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கான மாற்றுவழிகள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு நான் தயாராக உள்ளேன் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் மக்களுக்கு நீதி, சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கு எதிராக எதனையும் செய்ய முடியாது என நான் கருதுகிறேன். பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்திற்கு மாறாக யாராவது ஏதாவது வாக்குறுதி அளித்தால் அது பொய்யாகும். பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவேண்டாம் என்றோ, வேலைவாய்ப்பை வழங்கவேண்டாம் என்றோ எந்த சிங்களவர்களும் கூறமாட்டார்கள். ஆனால் அரசியல் விவகாரங்கள் வேறுமாதிரியானவை என்றும் தெரிவித்திருக்கின்றார்.
13ஆவது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது எதிர்பார்ப்பாக வலியுறுத்திய நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அந்த விடயமும் முழுமையாக சாத்தியப்படக்கூடியதொன்றல்ல என்பதை பத்திரிகைகளுக்கான பேட்டிகளில் எடுத்துக்கூறியிருக்கின்றார்.
உண்மையிலேயே ஜனாதிபதியின் இத்தகைய கருத்தானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஏமாற்றத்தை அளிக்கும் செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டில் 13ஆவது திருத்த சட்டத்தின் அமுலாக்கத்தை வலியுறுத்தியிருந்தார். இதனை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வரவேற்றிருந்தது.
ஆனாலும் தற்போதைய ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதிருப்தியை கொண்டுள்ளது. 13ஆவது திருத்தத்தின் அவசியத்தை இந்தியப் பிரதமர் வலியுறுத்தியபோதும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதற்கு உரிய பதிலை உடனடியாக தெரிவிக்கவில்லை. கூட்டு செய்தியாளர் மாநாட்டில் அவர் மெளனம்காத்திருந்தார். ஆனால் ஊடகங்களுக்கான பேட்டிகளில் தமிழர் பிரச்சினை தொடர்பில் உரிய கருத்துக்களை ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. இது எமக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது. எனவே இந்த விடயம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாட எண்ணியுள்ளோம் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார்.
இதேபோன்றே 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என்ற இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் வலியுறுத்தலை வரவேற்றிருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் 13க்கு அப்பால் சென்று தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
உண்மையிலேயே மூன்று தசாப்தத்திற்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத்தில் பேரிழப்புக்களை சந்தித்த தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வின் அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி தீர்வு வழங்கப்படவேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாக உள்ளது. கடந்த பல தேர்தல்களில் இதற்கான ஆணையினை அந்த மக்கள் வழங்கியுள்ளனர். ஆனால் அந்த ஆணைக்கு ஏற்ப மாறி மாறி வந்த அரசாங்கங்கள் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த விடயம் தொடர்பில் ஓரளவிற்கு முன்னேற்றகரமான செயற்பாடு இடம்பெற்றிருந்தது.
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் அரசியல் தீர்வையும் முன்வைக்கும் விடயத்தில் ஓரளவிற்கு முற்போக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஆட்சிமாற்றம் காரணமாக அந்த விடயமும் கைவிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில்தான் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை முன்னெடுக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. இதன் ஒருபடியாகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் இந்திய விஜயமும் பிரதமர் நரேந்திர மோடியின் வலியுறுத்தலும் அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
ஆனால் தற்போது புதிய ஜனாதிபதி பெரும்பான்மை சமூகத்தினரின் விருப்புக்கு மாறாக எதனையும் செய்ய முடியாது என்றும் 13ஆவது திருத்தத்தில் சில விடயங்களை அமுல்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளமை அரசியல் தீர்வு விடயத்தில் பெரும் சந்தேகமான விடயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவும் கருத்து தெரிவித்திருக்கின்றார். இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளதை ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் அதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதால் அது குறித்து ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்க முடியும் என்று கூறியிருக்கின்றார்.
ஜனாதிபதியின் கூற்று மற்றும் அமைச்சர் கெஹெலியரம்புக் வெலவின் கருத்து ஆகியன 13ஆவது திருத்தம் கூட முழுமையாக அமுல்படுத்தப்படமாட்டாது என்பதை கட்டியம் கூறுவதாகவே அமைந்திருக்கின்றன.
பெரும்பான்மையின மக்களின் விருப்பத்திற்கு மாறாக எதனையும் செய்ய முடியாது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தாகும். ஏனெனில் எமது நாட்டில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமானால் அதனை பெரும்பான்மை சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறானால்தான் அதனை நடைமுறைப்படுத்தலாம். ஜனாதிபதியின் இந்தக்கருத்தில் தவறு எதுவும் இல்லை.
ஆனாலும் அரசியல் தலைமைகள் தமிழர்களுக்கு பிரச்சினை உண்டு. அதற்கு தீர்வு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு முதலில் வரவேண்டும். அவ்வாறு பெரும்பான்மை சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்ற தரப்பினர் தீர்வை வழங்க முன்வரும்போது அதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கப்போவதில்லை.
1994ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பெரும் வெற்றிபெற்றார். அவரது ஆட்சிக்காலத்தில் அரசியல் தீர்வுக்கு முயற்சி எடுக்கப்பட்டது. பெரும்பான்மையின மக்களின் மனங்களை மாற்றுவதற்கு பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அன்றைய அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் வெண்தாமரை இயக்கம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
இதேபோன்றே 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சமஷ்டித் தீர்வை வழங்குவேன் என்று கூறிய அன்றைய ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 49 இலட்சம் மக்கள் வாக்களித்திருந்தனர். தமிழ் மக்கள் வாக்களிக்காமையினாலேயே அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டிருந்தது. அந்த வேளையில் சிங்கள மக்கள் அரசியல் தீர்வுக்கு ஆதரவு தெரிவித்தே இருந்தனர்.
தற்போதைய நிலையில் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்றே வெற்றிபெற்றுள்ளார். எனவே இத்தகைய பேராதரவைப் பெற்ற தலைவர் பிரச்சினைக்கு தீர்வுகாண முயன்றால் அதற்கு எதிர்ப்பு கிளம்பப்போவதில்லை எனவே இதனை உணர்ந்து அரசியல் தீர்வுக்கான நடவடிக்கையை புதிய அரசாங்கம் எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறோம்.
(03.12.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் ) - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment