நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.
19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கவேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ கூறியுள்ளார். இதேபோன்றே பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக போட்டியிட்டிருந்த மைத்திரிபால சிறிசேன பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தார். அவரை ஆதரித்த பொது எதிரணி இதற்கான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தது.
அந்தத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அங்கம் வகித்ததுடன் 100 நாள் வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டது. தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய 100 நாட்களுக்குள் 19ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையிலுள்ள அதிகாரங்கள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டன. நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்குமிடையில் சமநிலையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் மூலம் ஒரு வருடத்தில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கும் அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டு நான்கரை வருடங்களுக்குப் பின்னரே பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கும் நிலைமை உருவாக்கப்பட்டது. இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்றும் பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் எனவும் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதி அமைச்சுக்கள் எதனையும் தம்வசம் வைத்திருக்க முடியாது என்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை முப்பதாக வரையறுக்கப்பட வேண்டும் என்றும் 19ஆவது திருத்தம் வலியுறுத்துகின்றது.
இதனைவிட சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஜனநாயக விழுமியங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சுயாதீன ஆணைக்குழுக்களின் காரணமாக ஜனாதிபதியினால் உயர் நியமனங்கள் நேரடியாக செய்யமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் எதேச்சதிகாரப் போக்காக செயற்படமுடியாத நிலைமையும் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் எதேச்சதிகாரப் போக்கை கட்டுப்படுத்தும் வகையிலும் ஜனநாயக விழுமியங்களை கட்டிக்காக்கும் வகையிலும் இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அன்று பாராளுமன்றத்தில் 19ஆவது திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அது நிறைவேற்றப்பட்டது. இதற்கு அன்று எதிரணியிலிருந்த மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
இவ்வாறு 19ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமையினால்தான் தேர்தல்கள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் நடத்தக்கூடிய நிலைமை உருவாகியிருக்கின்றது. தற்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்
எந்தவித வன்முறைகளும் அற்ற நிலையில் சுதந்திரமாக நடத்துவதற்கு இந்த சட்டத்திருத்தத்தின் அமுலாக்கமே காரணம் என்பதை மறுக்க முடியாது.
அதேபோன்றே ஜனாதிபதியின் எதேச்சதிகார செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையினால் நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு அது வழிசமைத்தது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட அரசியல் தீர்மானம் காரணமாக நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. ஆனால் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து 52 நாள் நீடித்த அரசியல் நெருக்கடிக்கு தீர்வு ஏற்பட்டிருந்தது. அன்றைய ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றம் சுயாதீனமாக தீர்ப்பு வழங்கும் நிலைமை இந்த திருத்தச் சட்டத்தின் காரணமாகவே ஏற்பட்டிருந்தது.
இவ்வாறு ஜனநாயக விழுமியங்களை கட்டிக் காக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் விடயமானது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிற்து.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ
பக் ஷவின் ஆட்சிக் காலத்தில் 18ஆவது திருத்தச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடும் வகையில் 18ஆவது திருத்தச் சட்டத்தினை மஹிந்த ராஜபக் ஷ நிறைவேற்றியிருந்தார். இரண்டு தடவைகளே ஒருவர் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என்ற சரத்தை மாற்றி எத்தனை தடவை வேண்டுமானாலும் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற திருத்தத்தை கொண்டு வந்து இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதனையடுத்து 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ போட்டியிட்டிருந்தார். ஆனால் அவர் தோல்வியடைந்ததையடுத்து புதிய அரசாங்கம் 18ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாதொழித்து 19ஆவது திருத்தத்தை அமுலுக்கு கொண்டு வந்திருந்தது.
தற்போது புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷ பதவியேற்றுள்ளதுடன் பிரதமர் ராஜபக் ஷ தலைமையில் இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அடுத்த பாராளுமன்றத் தேர்தல் மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் பெற்று 19ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாதொழிப்பதற்கே தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பெரும்பான்மை மக்களின் பேராதரவைப் பெற்று ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷ தெரிவாகியுள்ளமையினால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று எப்படியாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதன் மூலம் இந்த திருத்தத்தினை மேற்கொள்ளலாம் என்று அரசாங்கம் எண்ணியுள்ளது.
ஆனால் 19ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்க மாட்டாது என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருக்கின்றார். கடந்த திங்கட்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த லக் ஷ்மன் கிரியெல்ல 19ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அது குறித்து எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி சுட்டிக்காட்டும் பட்சத்தில் நாம் அது தொடர்பில் அவதானம் செலுத்த தயாராக உள்ளோம். ஆனால் அதனை முழுமையாக நீக்குவதற்கு நாம் ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு வெகுவான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்குமிடையில் சம நிலையொன்றை ஏற்படுத்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்து அவை அரசியல் தலையீடுகள் இன்றி இயங்குவதற்கு அனுமதித்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே 19ஆவது திருத்த யோசனைகள் முன்வைக்கப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோன்றே 19ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. உட்பட பெரும்பாலான சிறுபான்மைக் கட்சிகளும் உள்ளன.
இந்தநிலையில்தான் 19ஆவது திருத்த சட்டத்தினை இல்லாது செய்வதற்கு புதிய அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருகின்றது. இந்த திருத்தச் சட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதில் சிறு மாற்றங்களை செய்ய முடியும். ஆனால் அதனை முழுமையாக நீக்குவதென்பது அரசியல் சுயநலத்துக்கான தீர்மானமாகவே அமையும்.
எனவே இந்த விடயம் தொடர்பில் புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் சிந்தித்து செயற்பட வேண்டும். நாட்டில் ஜனநாயக விழுமியங்களை கட்டிக்காக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின செயற்பாடுகள், திட்டங்கள் மக்களின் வரவேற்பைப் பெறவேண்டுமானால் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் நல்லிணக்கம் என்பன பாதுகாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
(05.12.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் ) - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment