02/12/2019 மதமும் அரசியலும் ஒரே வண்டியில் சவாரி செய்யும் போது சூறாவளியும் பின் தொடர்கிறது (When religion and politics ride in the same cart, the whirlwind follows) என அமெரிக்காவின் விஞ்ஞான புனை கதை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பிராங்க் ஹேர்பட் ஒரு தடவை கூறியிருந்தார்.
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மற்றும் அடுத்த கட்டமாக இடம்பெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும் போது சூறாவளி தொடருமோ என்ற அச்சம் சிறுபான்மை மக்களிடத்தே தோன்றியுள்ளதை மறுக்க முடியாது.
ஏனெனில், பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தாம் இலங்கையின் சிங்கள மக்கள் செறிவாக வாழக்கூடிய பகுதிகளுக்குச் சென்று விகாரைகள் ஊடாக பிரசாரத்தை முன்னெடுத்ததை பகிரங்கமாகக் கூறியிருந்தார். இலங்கை ஒரு பெளத்த நாடு என்ற வகையில் அரசியல்வாதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை பிக்குகள் விரும்புகின்றனர். அவர்களின் வழி அரசியல் செய்தாலே தமக்கு சிங்கள மக்களின் வாக்குகளும் கிடைக்கும் என்ற அரசியல்வாதிகளின் எதிர்ப்பார்ப்பு இன்று நேற்று உருவாகியதல்ல. இந்த நிலைப்பாடுகள் இம்முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் உருவாகி விடவில்லை. இது சிங்கள மன்னராட்சி காலத்திலேயே தோன்றி விட்டதொன்று. பின்னர் 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க இந்த யுக்தியை கையாண்டார். இந்த வரலாறு பலருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால் இங்கு எழுந்திருக்கும் கேள்வி என்னவெனில் எல்லா காலங்களிலும் பெளத்த பிக்குகள் எல்லோருடைய அரசியலையும் தீர்மானிக்க முடியுமா என்பது தான். அதாவது தற்போதைய ஜனாதிபதி கோத்தாபயவிடம் பெளத்த கடும்போக்கு வாதத்தை முன்வைத்து பிக்குகள் அவரை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியுமா என்பதே முக்கிய கேள்வி. ஏனென்றால் ஜனாதிபதி கோத்தாபய எதற்கும் வளைந்து கொடுக்காத அதே வேளை, தனித்து முடிவுகளை எடுக்கும் ஒருவர். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவர் பெளத்த பிக்குகளின் ஆதரவை நாடியிருந்தாலும் வெற்றி பெற்ற பிறகு அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய தேவையை உணர்ந்தே தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் உடனடியாக சிறுபான்மை மக்களுக்கு தீர்வுகளை முன்வைக்க அவர் தயாராகவில்லை. அடுத்த வருடம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஸ்திரமான ஒரு ஆட்சியை ஏற்படுத்திய பிறகே ஜனாதிபதி இது தொடர்பில் பேச விழைவார் என்று எதிர்பார்க்கலாம். அது வரை அவருக்கு இந்த பிக்குகளின் ஆதரவு அவசியம்.
பிக்குகளின் பிரதிபலிப்பு
பொதுபலசேனா, சிங்கள ராவய மற்றும் இராவணா பலய போன்ற கடும்போக்கு சிங்கள பெளத்த அமைப்புகளின் கடந்த கால செயற்பாடுகள் சிலவற்றால் நாட்டின் பல சிங்கள பெளத்தர்களே தலைகுனியும்படியான நிலைமைகள் ஏற்பட்டது என்னவோ உண்மை. பல பெளத்த பீடங்கள் கூட இவர்களின் செயற்பாடுகளை கண்டித்திருந்ததுடன் இவர்கள் பெளத்த மதத்தை அவமதிக்கின்றனர், புத்தரின் போதனைகளை இவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை என்று பகிரங்கமாக கருத்துத் தெரிவித்திருந்தனர்.
பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய அமைப்பினரின் அறிவிப்புகளுக்கு சில நாட்களுக்குப்பின்னர் களனி பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய கல்கந்தே தம்மானந்த தேரர் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்திருந்தார்.
‘பெளத்த பிக்குகளின் முக்கியமான பொறுப்பு என்னவெனில், தம்மை பின்பற்றுபவர்களின் மனதை மேம்படுத்துவதே ஒழிய அரசாங்கத்தை மாற்றுவதில்லை. இது எமது நோக்கமே அல்ல இதைத்தான் புத்தபகவான் உபதேசம் செய்துள்ளதோடு பல உதாரணங்களையும் காட்டியுள்ளார். நாட்டை நிர்வகிக்க சிறந்த தலைவரை அவர்கள் தெரிவு செய்தாலும் தலைவரின் ஆலோசனைகளை புரிந்து கொள்ளும் அளவுக்கு மக்களின் மனநிலை வளராத நிலையில் அவர்களால் எதையும் அடைய முடியாது’
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இதே வேளை கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசியிருந்த மிஹிந்தல ரஜமகா விகாரையின் பிரதம விகாராதிபதி வலவகஹென்குணவேவ தம்மாரத்ன தேரர், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமல்லாது எதிர்காலத்தில் வேறு எந்த தேர்தல்களிலும் பௌத்த பிக்குகளை போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
மேலும் ஏனைய கட்சித் தலைவர்களும் பௌத்த பிக்குகளை தேசிய பட்டியலிலும் உள்வாங்கக் கூடாது என்றும் அவர் தெரிவிக்கிறார். ஜனாதிபதி கோத்தாபய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே அவர் நாட்டின் தேசியத்தையும் மத விவகாரங்களையும் பாதுகாப்பார் என்பதில் சந்தேகமில்லை. அது தொடர்பான சகல விவகாரங்களையும் சிறப்பாக முன்னெடுப்பார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இரு வேறு கண்ணோட்டங்களை பெளத்த பிக்குகளும் கொண்டிருக்கின்றனர். ஆனால் சிறுபான்மை மக்கள் சார்பாக பேசக்கூடிய பெளத்த பிக்குகளோ , பிரிவினரோ அல்லது அரசியல்வாதிகளோ இங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையானோரே உள்ளனர் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது பெரும்பான்மை சிங்கள மத்தியில் எடுபடாது. மேலும் இங்கு பெளத்த தேசியம் மற்றும் பிரிவினைவாத கருத்துக்களும் தேர்தல் காலங்களில் முன்னெடுக்கப்படும் போது அதை மக்களும் ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கிலேயே உள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் கால பிரசாரங்களிலும் இதுவே இடம்பெற்றன. எந்தவொரு சிங்கள பிரதேசத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு வாழ்ந்து வரும் பிரபல அரசியல்வாதியாகட்டும் அல்லது கல்வி கற்ற சமூகமோ , வர்த்தக பிரமுகர்களோ , சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவரோ சிங்கள பெளத்தராக இருக்கும் பட்சத்தில் குறித்த பிரதேச பெளத்த விகாரையின் விகாராதிபதிக்கு கீழ்படிந்தவராகவே இருக்க வேண்டும். அவர்கள் கூறும் கருத்தை ஏற்பவராக இருத்தல் அவசியம். இங்கு ஊரோடு ஒத்துபோதல் என்பது குறித்த பிரதேசத்தின் விகாராதிபதியின் பேச்சை கேட்டல் என்பதே பொருள்படும்.
எனினும் கடந்த காலங்களில் சேறும் சகதியுமாக மாறியுள்ள அரசியலில் புனிதமான மதம் எந்தளவுக்கு ஆழவேரூன்றியுள்ளது என்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. மன்னர் காலத்தில் இது ஆரம்பித்திருந்தாலும் சுதந்திரத்துக்குப் பின்னரே பெளத்தம் அரசியல்மயமாகிய மதமாக மாறியுள்ளது. அதுவே பின்னர் மதவாத அரசியலை முன்னெடுப்பதற்கு காரணமாகியுள்ளது. இது இலங்கையின் அரசியல் தத்துவத்தில் அரசியலுக்கும் மதத்துக்குமிடையிலான ஒரு முக்கிய தவிர்க்க முடியாத கருப்பொருளாக தொடர்கிறது.
உலகின் எந்த மதங்களை எடுத்துக் கொண்டாலும் அவை மக்களின் விசுவாசத்திற்கு வலு சேர்க்கும் கருத்துக்களையே கூறிவருகின்றன. அந்த விசுவாசமானது அவர்களின் எதிர்காலத்திலும் தாக்கம் செலுத்துகிறது. அதை மதகுருமார்களும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனாலும் எக்காலத்திலும் இதை முன்னெடுக்க முடியுமா அல்லது ஆட்சியாளர்கள் இவர்கள் சொல்வதற்கெல்லாம் வளைந்து கொடுக்கக் கூடியவர்களாக இருப்பார்களா என்றும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஜனாதிபதியின் நகர்வுகள்
இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவைக்குப்பிறகு தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்க - ளில் சிறுபான்மையினத்தவர்கள் இல்லை என்ற செய்தி பரவலாகப்பேசப்படுகின்றது. அமைச்சர் பதவிகளிலும் இரண்டு தமிழர்கள் மாத்திரமே இடம்பெற்றிருந்தனர். இதில் ஆச்சரியங்கள் எதுவும் இல்லை. ஏனென்றால், தேர்தல் காலத்தில் பாராளுமன்ற உறுப்புரிமையை கொண்டிருந்த தமிழ் கட்சிகளில் இரண்டு மாத்திரமே பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவை நல்கியிருந்தன. ஆகவே அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டிய தேவைகள் இருந்தன. அதே வேளை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைப்பாளர்கள் பொறுப்புகளை குறித்த மாவட்டத்தின் எம்.பிக்கள் பெற்றுள்ளனர். இதில் சிறுபான்மையினத்தவர்கள் பெற்றிருக்கின்றனர்.
இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றே கூறலாம். ஏனெனில் அடுத்த வருடம் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையே இந்த பொறுப்புகள். அதன் பின்னர் இடம்பெறப்போகும் அமைச்சரவையே அடுத்த ஐந்து வருடங்களுக்கானது. எனவே இதில் சிறுபான்மையினருக்கு இடமில்லை என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமல்ல. எனினும் பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறப்போவது யார் என்பதே இங்கு எழுந்திருக்கும் எதிர்பார்ப்பாகும். எனவே இந்த ஜனாதிபதியை மதவாதிகள் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று கூறினாலும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவர் முன்னெடுக்கும் திட்டங்கள் மற்றும் சிறுபான்மையினரை சார்ந்து எடுக்கப்போகும் முடிவுகளை பொறுத்திருந்து பார்த்தல் அவசியம்.
எது எப்படியானாலும் இலங்கையின் கடந்த கால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் அரசியலுடன் சேர்ந்து பயணிக்கவே பெளத்த மதம் விரும்பும். அது சூறாவளியாக மாற்றாது தென்றலாக மாற்றும் வலிமை தற்போதைய ஜனாதிபதிக்கு உள்ளது என்பதை மக்களும் அறிவர். அதே வேளை இதை குறித்த கடும்போக்கு மதவாதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு சமூகத்தை கீழே தள்ளி விட்டு மற்றுமொரு சமூகத்தை மேம்படுத்த வேண்டுமென புத்தபகவான் எங்கும் கூறவில்லையே.
- சிவலிங்கம் சிவகுமாரன் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment