இலங்கைச் செய்திகள்


மே முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல்

"சிறுபான்மையின வாக்குகள் கிடைக்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்க்க எவரும் முயற்சிக்கக்கூடாது"

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

சவூதி அரேபிய தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிலிருந்து 900 பொலிஸ் அதிகாரிகள் நீக்கம்!

திருகோணமலையில் இந்திய கப்பல் 

யாழ் - சென்னை இடையிலான மற்றுமொரு விமான சேவை அடுத்த வருடம்

மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் 

கண்ணீர் காணிக்கைக்கு தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்கள் 

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இரு நாடுகளின் வரலாற்றுத் தொடர்புகளை வலுவூட்டியுள்ள இலங்கை ஜனாதிபதியின் விஜயம்: இந்திய ஜனாதிபதி புகழாரம்

முக்கிய முடிவை அறிவித்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

யாழில் ரயிலை கவிழ்க்க முயற்சி!

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு - யாழ். மேல் நீதிமன்ற உத்தரவு

தூதரக பணியாளருக்கு கொழும்பில் நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கை



மே முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல்

25/11/2019 பாராளு­மன்றத் தேர்தல் பெரும்­பாலும் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடத்­தப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
விரைவில் பாரா­ளு­மன்றத் தேர்­தல் நடத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ கூறி­யி­ருந்­தாலும், பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்­கான அதி­காரம் மார்ச் முதலாம் திக­திக்குப் பின்­னரே அவ­ருக்கு கிடைக்கும்.
இந்த நிலையில், ஜனா­தி­பதி பாரா­ளு­மன்றத் தேர்தல் அறி­விப்பை வெளி­யிட்ட பின்னர், தேர்­தலை நடத்­து­வ­தற்கு, தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு குறைந்­தது இரண்டு மாதங்கள் தேவைப்­படும் என்று ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.
எனவே மார்ச் 2 ஆம் திகதி பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான அறி­விப்பை ஜனா­தி­பதி வெளி­யிட்­டாலும், மே மாதம் முதல் வாரத்­தி­லேயே தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  நன்றி வீரகேசரி 






"சிறுபான்மையின வாக்குகள் கிடைக்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்க்க எவரும் முயற்சிக்கக்கூடாது"

(ஆர்.யசி)
25/11/2019  இந்த ஆட்சியாளர்களுக்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்க்க எவரும் முயற்சிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார, தமிழ் முஸ்லிம் மக்களின்  ஆதரவை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி சிந்திக்து அவர்களுடன் பயணிக்க  வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் வடமேல் ஆளுநர் மொஹமட் முசமிலுக்கு எதிராக சிங்கள பெளத்த மக்களை தூண்டிவிட நாம் எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. எம்மை சாட்டி எவரும் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் எனவும் அவர் கூறினார். 
வடமேல் மாகாண ஆளுநர் மொஹமட் முசமிலின் நியமனத்துகத்கு எதிராக சிங்கள மக்கள் தேரர்கள் சிலருடன் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்யவுள்ளதாகவும் அதற்கு பொதுபல சேனா தலைமை தாங்குவதாகவும் குறிப்பிடப்பட்ட நிலையில் இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் ஆளுநர் மொஹமட் முசம்மிலும் கலந்துகொண்டனர். 
இதன்போதே கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கூறினார்.  நன்றி வீரகேசரி 









பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

26/11/2019 இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) இன்று (25) முற்பகல் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இதன்போது உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன், ஜனாதிபதியுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.
பிரதி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் டொம் பர்னும் (Tom Burn)  இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.  நன்றி வீரகேசரி 









சவூதி அரேபிய தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

26/11/2019  இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நசர் அல் ஹர்த்தி (Abdul Nasser Al-Harthy) உள்ளிட்ட தூதுக் குழுவினர் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர்.
இதன்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சவூதி அரேபிய அரசாங்கத்தின் சார்பில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட தூதுவர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் ஜனாதிபதிவுடன் சுமூகமாக கலந்துரையாடினர்.  நன்றி வீரகேசரி 









ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிலிருந்து 900 பொலிஸ் அதிகாரிகள் நீக்கம்!

26/11/2019  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சுமார் 900 அதிகாரிகள் ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 24  ஆம் திகதி முதல் 900 ஜனாதிபதி பாதுகாப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அவர்கள் பணிபுரிய விரும்பும் இரண்டு பிரிவுகளுக்கு அவர்களை பெயரிட அனுமதி வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ள பட்டியலில் இரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும், நான்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும், ஐந்து பொலிஸ் அத்தியட்சகர்களும், ஏழு பிரதம பொலிஸ் பரிசோதகர்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 







திருகோணமலையில் இந்திய கப்பல் 

(எம்.மனோசித்ரா)
26/11/2019  இந்திய கடற்படைக் கப்பலான ' நிரீக்ஷக் ' நேற்று பயிற்சிக்காக திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலை கடற்படை மரபுக்கு ஏற்ப இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
துறைமுகத்திற்கு வந்ததும், கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் பெக்கி பிரசாந்த், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
இதன் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் நினைவு பரிசுகளும் பரிமாறிப்பட்டன.
பயிற்சி விஜயம் முடிந்ததும் இந்திய கடற்படைக் கப்பல் டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட உள்ளது.
நன்றி வீரகேசரி 













யாழ் - சென்னை இடையிலான மற்றுமொரு விமான சேவை அடுத்த வருடம்

26/11/2019  பிற்ஸ் எயார் தனியார் நிறுவனம் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான விமான சேவையை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமான சேவையை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் விமானத்தை தரை இறக்குவதற்கான அனுமதி இது வரையில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாகவே ஏற்கனவே திட்டமிட்டபடி பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை தமது நிறுவனத்தினால் மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமது நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இந்தியா சென்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகளை இந்திய விமான நிறுவனமான எலைன்ஸ் விமான நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் இந்த விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன. நாளாந்தம் சுமார் 50 பயணிகள் பயணம் செய்வதாகவும் விமான நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 









மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் 

26/11/2019  மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக குறித்த கல்வெட்டுக்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் நாளை 27ஆம் திகதி இரவு வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும்.
அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்த வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  
மாவீரர் வாரத்தின் இறுதிநாளான  நாளை 27ஆம் திகதி  மாலை 06.05 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் தொடக்கம் இறுதி யுத்தத்தில் வீரமரணமடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் குறித்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டு உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 










கண்ணீர் காணிக்கைக்கு தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்கள் 

26/11/2019  கிளிநொச்சியில் உள்ள  கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் என்பன  2019 மாவீரர் நாளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.
நடந்துமுடிந்த போராட்டத்தில் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2016 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 2019 மாவீரர் நாள் ஏற்பாடுகள் ஒவ்வொரு துயிலுமில்லங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறே கிளிநொச்சியில் உள்ள அனைத்து  மாவீரர் துயிலுமில்லங்களிலும்  அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்த அனைத்து தரப்பினர்களும் இணைந்து மாவீரர் நாளுக்குரிய பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்தோடு எவ்வித தடைகளும் நெருக்கடிகளும் இன்றி மாவீரர் நாள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபபூர்வமாக இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் மாவீரர்துயிலுமில்ல  பணிக்குழு   அறிவித்துள்ளது    நன்றி வீரகேசரி 









பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

30/11/2019  பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி  நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர் தனது குழுவுடன் இரண்டுநாள் இலங்கையில் இருக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது முதலாவது விஜயமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
இரு நாட்டிற்கான உறவுகளை அவர் வலுபடுத்திய பின்னரே,  பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









இரு நாடுகளின் வரலாற்றுத் தொடர்புகளை வலுவூட்டியுள்ள இலங்கை ஜனாதிபதியின் விஜயம்: இந்திய ஜனாதிபதி புகழாரம்

30/11/2019  இந்திய ராஷ்ட்ரபதி பவனில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கௌரவிக்கும் வகையில் நேற்று இரவு இந்திய ஜனாதிபதியினால் விருந்துபசாரம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது முதலாவது வெளிநாட்டுப் உத்தியோகப்பூரவ விஜயமாக இந்தியாவுக்கு வருகை தந்து இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுவூட்டியிருப்பதாக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் இதன் போது தெரிவித்துள்ளார்.



மேலும், இது நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு தெற்காசிய வலயத்தின் எதிர்கால பயணத்தை வலுவூட்டும் என்றும் இந்திய ஜனாதிபதி கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் எதிர்காலத்திற்காக வகுத்துள்ள கொள்கைப் பிரகடனம் அந்நாட்டின் அனைத்து பிரிவுகளையும் துரிதமாக மேம்படுத்துமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 



இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுவூட்டுவதன் மூலம் வர்த்தகம் பொருளாதாரம் மற்றும் சமூக தொடர்புகளை மேம்படுத்த முடியும் என்பதோடு, இரு நாட்டு மக்களினதும் வாழ்க்கையை மேம்படுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.  நன்றி வீரகேசரி 










முக்கிய முடிவை அறிவித்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

30/11/2019  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய விடயம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.



தாம் மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதன் மூலம் மக்களுக்கான சேவையை தொடரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 












யாழில் ரயிலை கவிழ்க்க முயற்சி!

30/11/2019  மல்லாகம் பகுதியில் ரயிலை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதா எனும் கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மல்லாகத்திற்கும் கட்டுவானுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் பாதையில் உள்ள வளைவொன்றில் தண்டவாளத் தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்துப் பொருத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதற்கும் மேற்பட்ட இரும்பு கிளிப்பு களை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அகற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாகப் ரயில் திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தினர்.
அதனை அடுத்து விரைந்து செயற்பட்ட ரயில் திணைக்கள அதிகாரிகள், கிளிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் வேறு கிளிப்புகள் பொருத்த நடவடிக்கை எடுத்து ரயில் பாதை சீர் செய்யப்பட்டது. அதனால் நடைபெறவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டது.
தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தப்பட்டிருந்த கிளிப்புகள் அகற்றப்பட்டமையால் ரயில் வரும் போது அவ்விடத்தில் புகையிரதம் தடம் புரளும் வாய்ப்புக்கள் அதிகம்.
அதேவேளை அப்பகுதி குடிமனைகள் அதிகமாக உள்ள பகுதியும் ஆகும். அவ்விடத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டு இருந்தால் உயிரிழப்புக்கள் அதிகமாக ஏற்பட்டு இருக்கலாம்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாகப் ரயில் திணைக்கள அதிகாரிகள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  நன்றி வீரகேசரி 










புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு - யாழ். மேல் நீதிமன்ற உத்தரவு


30/11/2019  புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இல்லாமலேயே வழக்கை விளக்கத்துக்கு எடுக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் வழக்கின் முதலாவது எதிரியான வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று மன்றில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. எதிரி தன்மீதான குற்றச்சாட்டை மறுத்து சுற்றவாளி என்று மன்றுரைத்தார்.
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சுவிஸ்குமார் என்பவரை சட்டமுறையற்ற வகையில் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்க உதவியதன் மூலம் தண்டனைச் சட்டக் கோவை 209ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றமொன்றைப் புரிந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைத்ததன் மூலம் 109ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 209ஆம் பிரிவின் கீழான குற்றமொன்றைப் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா உள்ளிட்ட 30 பேர் வரை சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
முதலாவது சந்தேகநபர் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையானார். இரண்டாவது சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதால் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை.
வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.
முதலாவது எதிரிக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டதுடன் அதன் பிரதி அவருக்கு வழங்கப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், சுற்றவாளி என்று மன்றுரைத்தார்.
“இந்த வழக்கின் ஆவணங்கள் உரியவாறு வழக்குத் தொடுனரிடமிருந்து கிடைக்கவில்லை. அத்துடன், இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சில்வா நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
அதுதொடர்பில் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடப்படவேண்டும்” என்று எதிரி லலித் ஜெயசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.
எதிரி தரப்பு விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், வழக்கின் ஆவணங்களை எதிரி தரப்புக்கு வழங்குவதற்காக வரும் பெப்ரவரி 18ஆம் திகதிவரை வழக்கை ஒத்திவைத்தார்.
பின்னணி
புங்குடுதீவு மாணவி  2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். மறுநாள் அவரது சடலம் பற்றைக் காணிக்குள் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கின் சந்தேகநபர்களைப் பொலிஸாரும் பொதுமக்களும் பிடித்தனர். சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரையும் ஊர் மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை யாழ்ப்பாணம் அழைத்து வந்த உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன், அன்றைய தினம் இரவு பொலிஸ் காவலிலிருந்து அவரை விடுவித்தார்.
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதுதொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று சட்ட மா அதிபரின் நடவடிக்கைகக்காக விடப்பட்டது.
இதேவேளை, மாணவி படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் (Trial at bar) முன்னிலையில் இடம்பெற்றது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இடம்பெற்று சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதனையடுத்தே சுவிஸ் குமாரை தப்பிக்கவைத்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றஞ்சாட்டப்பட்டவரை தடுப்பில் இருந்து விடுவிக்க உதவி குற்றம் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் தலா 5 ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 










தூதரக பணியாளருக்கு கொழும்பில் நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கை

29/11/2019  இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தனது பணியாளர் கடத்தப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2019 நவம்பர் 25 ம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார்,அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு  மிரட்டப்பட்டார் என தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் பரவுகின்றன,என தெரிவித்துள்ள சுவிஸ் தூதரகம் பின்வரும் தெளிவுபடுத்தல்களை வெளியிட விரும்புவதாக  என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுவிஸ் தூதரகம் உடனடியாக உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டை தாக்கல் செய்ததுடன் பொலிஸ் விசாரணைக்கு ஆதரவாகவும்,விசாரணையை ஆரம்பிப்பதற்காகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மோசமடைந்து வரும் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர் தற்போது  வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை எனவும் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த அதிகாரியொருவரை சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் மறுத்துவிட்டது என குற்றச்சாட்டுகள் வெளியாகின்றன, அவ்வாறான வேண்டுகோள் எவையும் விடுக்கப்படவில்லை எனவும் சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 








No comments: