28/11/2019 ஜனா­தி­பதி தேர்­தலை அடுத்து ஏற்­பட்­டுள்ள அர­சியல்  மாற்றம்  தொடர்­பிலும்    தமிழ் மக்­களின் எதிர்­கால  திட்­டங்கள் குறித்தும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  உட்­பட தமிழ் கட்­சி­களின் தலை­மைகள் தற்­போது  ஆராய்ந்து வரு­வதை  காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின்  வேட்­பாளர்  கோத்­த­பாய ராஜ­பக் ஷ பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் ஆத­ரவைப் பெற்று   வெற்­றி­யீட்­டி­யுள்ளார்.  இந்த தேர்­தலில்  வடக்கு, கிழக்கு உட்­பட  நாட்டில்  உள்ள  சிறு­பான்­மை­யின மக்கள்  பெரும்­பான்­மை­யாக   புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு  ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தனர்.  இவ்­வா­றான நிலை­யிலும் பெரும்­பான்மை மக்­க­ளது   பெரும்­பான்மை வாக்­கு­க­ளைப்­பெற்று  ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார். பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான புதிய  அர­சாங்­கமும்  பத­வி­யேற்­றி­ருக்­கின்­றது.
ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் தொடர்பில்  தமிழ் தலை­மைகள்  தீவி­ர­மாக சிந்­திக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.  கடந்த  காலங்­களில் தமிழ் பேசும் மக்­களின் வாக்­கு­களே நாட்டின் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் நிலைமை காணப்­பட்டு வந்­தது. ஆனால் இம்­முறை  இன­வாதம்  உச்­ச­க்கட்­டத்தில்   நின்­ற­மை­யினால் அந்த நிலைமை  மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. எனவே இத்­த­கைய  அர­சியல் சூழ்­நிலைக்கு ஏற்ப   சிறு­பான்­மை­யின மக்­களும் தமது   அர­சியல் வியூ­கங்­களை  அமைக்­க­வேண்­டிய நிலைமை  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.
இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்   தலைவர் இரா. சம்­பந்தன்  மற்றும்  கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் கருத்­துக்­களை  தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.   தற்­போ­தைய நிலையில்  தமிழ் மக்கள்  ஒற்­று­மை­யாக ஒரு­மித்து செயற்­பட வேண்­டு­மென்று கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன்  தெரி­வித்­துள்ளார்.
இதே­போன்றே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன்  யாழ்ப்­பா­ணத்தில் நேற்று முன்­தினம்   நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்­டின்­போது  தமிழ் கட்­சிகள்  ஒற்­று­மைப்­பட்டு  செயற்­பட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை  வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.  நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில்  தமிழ் மக்கள் சரி­யான தீர்­மா­னத்தை எடுத்­தி­ருந்­தார்கள். அதனை  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும்  உறு­திப்­ப­டுத்தி  அறி­வித்­தி­ருந்­தது.   இதற்­கி­ணங்க தமிழ் மக்கள்  வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.
எமது மக்கள் இன­ரீ­தி­யாக வாக்­க­ளிக்­க­வில்லை.  தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில்  ஆட்­சி­மாற்­றத்தை விரும்­ப­வில்லை.   ஆனால்  தற்­போது அந்த நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. எனவே இந்த நிலை இன்­னமும் மோச­ம­டை­யாது இருக்­க­வேண்­டு­மானால்  எதிர்­வரும்  பாரா­ளு­மன்றத் தேர்தல்  மிக முக்­கி­ய­மா­ன­தாகும்.   அதில் வெற்­றி­பெற்ற தரப்பு  மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை அடை­யக்­கூடாது. அதற்­கேற்ப நாம் செயற்­ப­ட­வேண்டும். ஆகவே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  வரும் தேர்­தலில்    தமிழ் மக்­களின் ஏகோ­பித்த குர­லாக மிகப்­பெ­ரிய பலத்­தோடு  பாரா­ளு­மன்றம் செல்­ல­வேண்டும் என்று சுமந்­திரன்   கூறி­யுள்ளார்.
தமிழ் தரப்பின் பலம்  குறை­வ­டை­யக்­கூடாது. இருப்­ப­தை­விட  இன்­னமும் பலம் அதி­க­ரிக்­க­வேண்டும்.  அவ்­வாறு  பலம் அதி­க­ரிக்­க­வேண்­டு­மானால் தமிழ் மக்கள்  ஒன்­றாக இருந்து  வடக்­கிலும் கிழக்­கிலும்  சில­வே­ளை­களில்  வட­கி­ழக்­கிற்கு வெளி­யேயும் ஒற்­று­மை­யாக நின்று வாக்­க­ளிக்­க­வேண்டும். இதுவே இன்­றைய தேவை­யாக உள்­ளது. அதை குழப்­பு­கின்ற வகையில் மாற்று அணிகள்  உரு­வாக்­கப்­ப­டு­வது தவிர்க்­கப்­ப­ட­வேண்டும்.  மாற்று அணிகள் தங்­க­ளுக்கு ஆத­ரவு இருக்­கின்­றதா என்­பதை பரீட்­சித்­துப்­பார்க்கும் தருணம் இது­வல்ல.  எனவே  எதிர்­வரும்  பாரா­ளு­மன்றத் தேர்­தலில்   அனை­வரும்   ஒன்­றி­ணை­ய­வேண்டும்.   அனைத்து தமிழ் தரப்­புக்­க­ளையும் எங்­க­ளுடன் இணைந்து கொள்­ளு­மாறு மிகப்  பணி­வாக எங்கள் மக்கள் சார்பில்  கேட்­டுக்­கொள்­கின்றேன் என்றும் சுமந்­திரன்  அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார்.
தற்­போ­தைய தருணம் சரித்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும்.  இதனை தவ­றாது உப­யோ­கிக்­க­வேண்டும். அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக இதனை  எவரும் உப­யோ­கிக்­கக்­கூ­டாது என்றும்   அவர்  கேட்­டுக்­கொண்­டுள்ளார்.
உண்­மை­யி­லேயே ஜனா­தி­பதி தேர்தல்  முடி­வு­க­ளா­னது   சிறு­பான்­மை­யின மக்­களின்  அர­சியல் செயற்­பா­டுகள்   மீள்­பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்ற நிலை­மையை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. அதனை மறுப்­ப­தற்­கில்லை.   இந்த நிலையில்  தமிழ்  மக்­களின் அர­சியல் தலை­மைகள்  ஒற்­று­மைப்­பட்டு   ஓர­ணியில்  நின்று  அந்த மக்­களின் எதிர்­கால நலன்­களை பாது­காக்­க­வேண்­டி­யது  அவ­சி­ய­மாக உள்­ளது.  
ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது  தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் தமிழ் தலை­மைகள் ஒரு­மித்த நிலைப்­பாட்­டுக்கு வந்து  ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில்  உரிய  முடிவு எடுக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.   ஆனால்  இறு­தியில்  ஒவ்­வொரு கட்­சியும் ஒவ்­வொரு வித­மாக முடிவு எடுக்கும் நிலை­மையே தோன்­றி­யி­ருந்­தது.  ஆறு தமிழ் தேசிய கட்­சி­களை   ஒன்­றி­ணைக்கும் முயற்­சியில் யாழ்., மட்­டக்­க­ளப்பு  பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்­தினர் ஈடு­பட்­டி­ருந்­தனர். இந்த முயற்­சி­யின்­போது  தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு தொடர்பில் ஆரா­யப்­பட்டு 13 அம்ச திட்­டங்­களும்  முன்­வைக்­கப்­பட்­டன.  ஆனால்  அந்த  திட்­ட­வ­ரை­பானது  தென்­ப­கு­தியில் பெரும் சர்ச்­சையை  ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.  இந்த   ஐந்து தமிழ் கட்­சி­களின்  13 அம்ச திட்ட யோச­னைகள் தொடர்பில்  தென்­ப­கு­தியில்  இன­வாத பிர­சாரம்  மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.  தற்­போ­தைய  ஜனா­தி­பதி தேர்தல்   முடி­வுக்கும்  இந்த திட்­ட­வ­ரைபு  கார­ண­மாக  அமைந்­தி­ருக்­கலாம் என்ற கருத்தும்   நில­வு­கின்­றது.
இவ்­வாறு திட்­ட­வ­ரைபு தயா­ரிக்­கப்­பட்டு  ஐந்து கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து  பிர­தான  ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளுடன் பேசு­வ­தற்கு முடிவு எடுத்த போதிலும்  அந்த முயற்சி கைகூ­ட­வில்லை. இத­னை­ய­டுத்து    தமிழ் தேசி­யக்­கட்­சிகள்  ஜனா­தி­பதி  தேர்தல் தொடர்பில் வெவ்­வேறு நிலைப்­பா­டு­களை எடுத்­தி­ருந்­தன.
தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்­தது.  கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி  இந்த ஒற்­றுமை முயற்­சிக்கு முன்­னரே ஜனா­தி­பதி தேர்­தலை தமிழ் மக்கள் பகிஷ்­க­ரிக்­க­வேண்டும் என்று   அறி­வித்­தி­ருந்­தது.  இதே­போன்றே முன்னாள்   வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் கூட்­டணி  எந்­த­வொரு சிங்­கள வேட்­பா­ளரை நோக்­கியும் ஆத­ரவு கரம் நீட்ட முடி­யாது என்றும் ஆனால்  மக்கள் விரும்­பி­ய­வாறு வாக்­க­ளிக்­கலாம் என்றும்  அறி­வித்­தது.  சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான  ஈ.பி.ஆர்.எல்.எப்.பும் மக்கள்  விரும்­பி­ய­வர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கலாம் என்று அறிக்­கை­யிட்­டது.  இவ்­வாறு  ஒவ்­வொரு கட்­சி­யும் வெவ்­வேறு கோணங்­களில்   முடி­வு­களை எடுத்­தி­ருந்­தன.
இவ்­வாறு இந்­தக்­கட்­சிகள் முடி­வு­களை எடுத்­தி­ருந்த நிலையில்  ரெலோவின் முக்­கி­யஸ்­த­ரான  எம்.கே. சிவா­ஜி­லிங்கம்   தமிழ் மக்­க­ளுக்­காக   அவர்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக  தனித்­துப்­போட்­டி­யி­டு­வ­தாக கள­மி­றங்­கி­யி­ருந்தார்.  தானே தமிழ் மக்­களின் பொது­வேட்­பாளர் என்றும்   பெயர்­சூட்­டிக்­கொண்டார்.  இவ­ருக்கு ஆத­ர­வாக ரெலோவின் செய­லாளர்  ஸ்ரீ­காந்தா உட்­பட  அந்­தக்­கட்­சியின் யாழ். கிளை­யினர் செயற்­பட்­டி­ருந்­தனர்.
ஆனாலும்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  விடுத்த வேண்­டு­கோளை  ஏற்று மக்கள் தேர்­தலில்  வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.  வடக்கு, கிழக்கில்  பெரும்­பான்­மை­யான தமிழ் மக்கள்   புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தனர். 2015ஆம் ஆண்டு  நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில்  வடக்கிலும் கிழக்கிலும்   அன்றைய வேட்பாளர் மஹிந்த ராஜபக் ஷவுக்கு  கிடைத்த வாக்குகள் கூட இம்முறை  பொதுஜன பெரமுனவினருக்கு கிடைக்கவில்லை. 85 வீதமான  தமிழ் மக்களின் வாக்குகள்  கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த தரப்பிற்கே வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலைமையில்தான் தற்போது   எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றுபட்ட  வியூகம் அமைக்கவேண்டியதன் அவசியம்  குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை  வலியுறுத்தி வருகிறது.  ஆனாலும்  மாற்றுத்தலைமை குறித்தும்  மாற்றுக்கட்சி அரசியல்  தொடர்பிலும்   ஏனைய தரப்பினர் சிந்தித்து வருகின்றனர்.  நல்லாட்சி அரசாங்க காலத்தில் சி.வி. தலைமையிலான மாற்று தலைமை தொடர்பிலும் சிந்திக்கப்பட்டது.  ஆனால் அந்த முயற்சிகள் எதுவும்  உரிய பலனை தரவில்லை.
எனவே தற்போதைய சந்தர்ப்பத்தில் தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு  ஒருமைப்பாட்டுடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய  பாடுபடவேண்டியதே இன்றியமையாதது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
(28.11.2019 வீரகேசரி நாளிதழ் ஆசிரிய தலையங்கம் ) - நன்றி வீரகேசரி