25/11/2019 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியுடன், துட்டகைமுனுவின் வரலாறு மீண்டும் ஆராயப்பட்டு வருகிறது.
யார் இந்த துட்டகைமுனு, அவருக்கு ஏன் கோத்தாபய ராஜபக் ஷ முக்கியத்துவம் அளிக்கிறார் என்றெல்லாம், ஆய்வாளர்கள் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள்.
இலங்கையின் பெரும்பாலான அரச தலைவர்கள் கொழும்பில் தான் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த விதியை உடைத்தவர்கள் மூன்றே மூன்று பேர் தான்.
முதலாமவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. இரண்டாமவர் ரணசிங்க பிரேமதாஸ. மூன்றாமவர் கோத்தாபய ராஜபக் ஷ.
1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தன, கண்டி தலதா மாளிகையின் பத்திரிப்பு மண்டபத்தில் இலங்கையின் ஏழாவது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
அதற்கு முன்னர், 30 ஆண்டுகளில் பிரதமர் பதவியில் இருந்தவர்கள் அனைவரும் கொழும்பிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.
தலதா மாளிகையில் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட ஜே.ஆர் ஜெயவர்த்தன, அதற்குப் பின்னர் நாட்டின் ஜனாதிபதியாக 1989 ஜனவரி 1ஆம் திகதி வரை – கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
ஜே.ஆருக்குப் பின்னர், 1988 தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ரணசிங்க பிரேமதாஸவும், தலதா மாளிகையின் பத்திரிப்பு மண்டபத்திலேயே பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அவரே, கொழும்புக்கு வெளியே பதவிப்பிரமாணம் செய்து கொண்ட முதலாவது ஜனாதிபதியாக இருந்தார்.
அதற்குப் பிறகு, கோத்தாபய ராஜபக் ஷ அநுராதபுரத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற ருவன்வெலிசாய விகாரையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்.
இது வெறுமனே ஒரு நிகழ்வு மாத்திரமல்ல, இதற்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. அதனை மீள நினைவுபடுத்தி, குறிப்புணர்த்தும் செய்திகள் பலவும் இருக்கின்றன.
கொழும்பையோ அல்லது கண்டியையோ விட்டு விட்டு அநுராதபுரத்தில், அதுவும், ருவன்வெலிசாயவில் துட்டகைமுனு மன்னனின் சிலைக்கு முன்பாக கோத்தாபய ராஜபக் ஷ பதவியேற்றுக் கொண்டதை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது,
ருவன்வெலிசாய விகாரையைக் கட்டியது, துட்டகைமுனு மன்னன். காமினி அபய என்ற பெயரைக் கொண்ட அரச வம்சத்தைச் சேர்ந்த இளவரசன் துட்டகைமுனுவாக போற்றப்படுவதற்குக் காரணம், அந்த விகாரையைக் கட்டியதால் அல்ல.
சோழ மன்னனான எல்லாளனை தோற்கடித்து, அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு ரஜரட்ட ஆட்சியை மீள நிறுவியதால் தான், துட்டகைமுனுவுக்கு அந்தப் புகழ் இருக்கிறது,
கி.மு 205ஆம் ஆண்டில் எல்லாளன், அநுராதபுரத்தில் ஆட்சியமைத்திருந்த நிலையில், கி.மு 161 அல்லது கி.மு 162இல் விஜிதபுர போரில், எல்லாளனைத் தோற்கடித்த துட்டகைமுனு, கி.மு 137 வரை ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது.
இந்தக் காலத்தில் துட்டகைமுனு தனது ஆட்சியை இலங்கை முழுவதற்கும் விரிவுபடுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எல்லாளனைத் தோற்கடித்த துட்டகைமுனு, அநுராதபுரத்தில் எல்லாளனுக்கு நினைவுச் சின்னத்தை அமைத்து, அதற்கு அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான் எனவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
விஜிதபுர போரில் பெற்ற வெற்றியை நினைவு கூரும் வகையில் துட்டகைமுனு ருவன்வெலிசாய விகாரையைக் கட்டியதாக கூறப்படுகிறது. எனினும், அந்த விகாரை கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னரே, துட்டகைமுனு கி,மு 137 இல் மரணமானதாக கூறப்படுகிறது.
தமிழ் மன்னனான எல்லாளனைத் தோற்கடித்த துட்டகைமுனுவின் சிலைக்கு முன்பாக, கோத்தாபய ராஜபக் ஷ பதவியேற்றுக் கொண்டது மாத்திரமன்றி, துட்டகைமுனுவின் சிலைக்கு முன்பாக தாம் பதவியேற்பதற்காக பெருமை கொள்வதாக தனது உரையிலும் குறிப்பிட்டிருந்தார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போரை வழிநடத்தியவர் என்று உரிமை கோருபவர் கோத்தாபய ராஜபக் ஷ.
அவரே போரை வென்றவர் என்ற அடையாளப்படுத்தும் நோக்கிலேயே ‘கோத்தாவின் போர்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.
தமிழர்களுக்கு எதிராகப் போரை நடத்த வில்லை என்றும், பயங்கரவாதத்துக்கு எதிராகவே போரை நடத்தியதாகவும், கோத்தாபய ராஜபக் ஷ கூறிக் கொண்டாலும், எல்லாளனைப் போலவே, வடக்கு, கிழக்கில் செல்வாக்குப் பெற்ற ஒரு தலைவனாக- – தளபதியாக விளங்கிய புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைத் தோற்கடித்திருந்தார்.
அதனை மையப்படுத்தியே அநுராதபுரத்தில்- – ஏற்கனவே ஒரு தமிழ் மன்னனான எல்லாளன் தோற்கடிக்கப்பட்ட இடத்தில், அவனைத் தோற்கடித்த துட்டகைமுனுவின் சிலைக்கு முன்பாக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார் அவர்.
அதுவும், அவர் தமிழ், முஸ்லிம் மக்களினால் ஆதரிக்கப்பட்ட ஒரு தலைவராக பதவியேற்றுக் கொள்ளவில்லை. அவரை தெரிவு செய்தவர்கள் முற்றுமுழுதாக சிங்கள பௌத்தர்களே.
தாம் சிங்கள பௌத்த வாக்குகளால் தான் வெற்றி பெற்றிருந்தேன் என்பதை அவர் பெருமையோடு தனது முதலாவது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் ஆதிக்கத்தை உடைத்து, தனி சிங்கள பௌத்த வாக்குகளால் வெற்றியை பெற்றதை அநுராதபுர மண்ணில் பதவியேற்றுக் கொண்டதன் மூலம் அவர் இன்னும் பெருமைக்குரியதாக மாற்ற முற்பட்டிருக்கிறார்.
தம்மை ஒரு நவீன துட்டகைமுனுவாக சித்திரித்துக் கொள்வது கோத்தாபய ராஜபக் ஷவின் இலக்காக இருக்கலாம். அல்லது துட்டகைமுனுவைப் போன்று ஒரு ஆட்சியை நிறுவுகின்ற- வரலாற்றில் இடம்பிடிக்கின்ற இலக்கு அவருக்குள் இருக்கக் கூடும்.
ஏனென்றால், துட்டகைமுனுவின் ஆட்சி அநுராதபுர அரசின் பொற்காலமாக – பௌத்த மதத்தின் எழுச்சிக் காலமாக பார்க்கப்படுகிறது. நாடெங்கும் துட்டகைமுனுவின் ஆட்சி பரவியிருந்தது.
சிங்கள பௌத்த பேரெழுச்சியின் அடையாளமாக இன்றைக்கும் என்றைக்கும் துட்டகைமுனு போற்றப்படும் நிலை உள்ளது.
இவ்வாறானதொரு வரலாற்று பின்னணியில் தான் கோத்தாபய ராஜபக் ஷவும், தன்னை நவீன துட்டகைமுனுவாக நிலைநிறுத்திக் கொள்ள எத்தனிப்பதாகத் தெரிகிறது.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த வரலாற்றுப் பெருமையை தனக்குக்குரியதாக்கிக் கொண்டு, இப்போது, சிங்கள பௌத்த மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தலைவராக அவர் எழுச்சி பெற்றிருக்கிறார்.
அவரது இந்த எழுச்சியைக் கொண்டு எதிர்காலத்தில் எதனைச் செய்யப் போகிறார் என்பது தான் முக்கியமான கேள்வி.
துட்டகைமுனு தமிழர்களுக்கு எதிரான மனோநிலையிலேயே சிறு வயதில் இருந்து வளர்ந்து வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே, எல்லாளனை தோற்கடித்து அநுராதபுர அரசை நிறுவியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
ஆனாலும் தன்னால் தோற்கடிக்கப்பட்ட எல்லாளனுக்கு நினைவுச் சின்னம் அமைத்து, அதனை அனைவரும் வணங்க வேண்டும் என்று கட்டளையிட்ட துட்டகைமுனுவின் செயல் இன்று வரை பாராட்டப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
நவீன துட்டகைமுனுவாக உருவெடுக்கும் கோத்தாபய ராஜபக் ஷவும் அவ்வாறான ஒருவராக இருக்கப் போகிறாரா அல்லது, தனி சிங்கள பௌத்த மக்களின் தலைவனாகவே செயற்படப் போகிறாரா என்ற கேள்வியே பிரதானமாக இருக்கிறது.
அவர் தனது முதலாவது உரையில், தான் சிங்கள பௌத்த வாக்குகளால் தெரிவு செய்யப்படுவேன் என்று தெரிந்திருந்தும்- அந்த வெற்றியில் பங்காளராகுமாறு தமிழ், முஸ்லிம்களை அழைத்தேன், ஆனால் பயன் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.
எனினும், வாக்களித்தவர்களுக்கு மாத்திரமன்றி வாக்களிக்காதவர்களுக்கும் தாம் ஜனாதிபதியாக செயற்படப் போவதாகவும், தம்முடன் இணைந்து கொள்ள முன்வருமாறும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்த அழைப்பு எப்படிப்பட்ட மனோநிலையில் இருந்து விடுக்கப்படுகிறது என்பது முக்கியம்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் போரில் வெற்றியீட்டிய பின்னர் மஹிந்த ராஜபக் ஷவும், பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டோம், இனி எங்களுடன் இணைந்து செயற்பட வாருங்கள் என்று தான் கூறினார்.
ஆனால் அவர் தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லவோ, அவர்களுக்கான உரிமைகளை வழங்கவோ தயாராக இருக்கவில்லை.
வெற்றியின் மேலாதிக்கத்தில் இருந்து தமிழர்களை ஆட்சி செய்யவே விரும்பினார்.
அதனால் தான், அவர், 2009இற்குப் பின்னர் தமிழர்களால் ஒவ்வொரு தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்டு வருகிறார். கோத்தாபய ராஜபக் ஷவைக் கூட தமிழர்கள் நம்புகின்ற மனோநிலையில் இல்லை என்பதை தேர்தலின் மூலம் காட்டியிருந்தனர்.
ஏனென்றால், எல்லாளனைத் தோற்கடித்த பின்னர் துட்டகைமுனு நடந்து கொண்டது போல, மஹிந்த ராஜபக் ஷவோ, கோத்தாபய ராஜபக் ஷவோ நடந்து கொள்ளவில்லை.
இப்போது, கோத்தாபய ராஜபக் ஷ தமிழர்களை மாத்திரமன்றி முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்லும் ஒருவராக மாறுவாரா அல்லது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் அடையாளச் சின்னமாக நிலைபெறப் போகிறாரா ?- பொறுத்திருந்து பார்க்கலாம்.
- என். கண்ணன் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment