01/12/2019 ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் பேச வேண்டிய சூழ்நிலையொன்று விரைவில் உருவாகும். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து அழுத்தம் கொடுப்பார்.
ஜனாதிபதியின் அழைப்பு விரைவில் வரலாமென்ற எதிர்பார்ப்பில் கூட்டமைப்பினர் காத்திருப்பதாக வெளிநாட்டு செய்தி சேவைக்கு ஒரு பேட்டி வழங்கப்பட்டிருக்கின்றது. குளத்துக்குள் கொக்கு ஒன்று ஒற்றைக்காலில் நின்று காத்திருப்பது போன்ற நிலையை இது உணர்த்துகிறதா அல்லது ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கின் கதையை கூறுகிறதா என்பது இப்போதைக்கு புரியாத விடயந்தான்.
புதிய ஜனாதிபதியின் வருகை ஒரு புதிய யுகத்தை நோக்கி நகரவிருப்பதாக எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். சில பெளத்த தருமத்தினரும் பேரினவாத, தீவிரவாத தலைவர்களும் ஜனாதிபதியின் வெற்றியானது பெளத்த மற்றும் சிங்கள தேசியத்தின் வெற்றியாக பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். இப்பெருமைப்படலுக்கு இன்னொரு காரணம் சிறுபான்மை சமூகத்தின் ஆதரவின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார் ஜனாதிபதியென்ற தற் பெருமையாகவும் இருக்கலாம்.
இவ்வாறானதொரு நிலையில்தான் ஜனாதிபதியின் அழைப்பு தங்களை நோக்கி விரைவில் வரக்கூடுமென்ற நம்பிக்கையை கூட்டமைப்பினர் வெளிப்படுத்தியுள்ளனர். கூட்டமைப்பின் இந்த நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு உடனடியாக நிறைவேறக் கூடிய சாத்தியமும் சந்தர்ப்பமும் ஏற்படுமா என்பது தொடர்பாக அகவழி முறையில் புறநிலை சூழலையும் வைத்து ஆராய வேண்டியது அவசியமாகிறது.
முதலில் அகவழி முறையில் உள்ள காரணிகளை ஆராய்ந்தால், ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்குவதற்கு முன்னமே, சிறுபான்மை சமூகத்தின் ஆதரவின்றி தேர்தலில் வெற்றி பெற முடியுமென்ற தனது ஊகத்தை வெளியிட்டிருந்தது மாத்திரமன்றி அத்தகையதொரு வெற்றிக்கான ஊகங்களை வகுத்து வந்ததன் காரணமாகவே எந்தவொரு சிறுபான்மை தரப்பினர் சார்ந்த கட்சியையும் தனக்கான ஆதரவைக்கோரி அவர் பேச்சுவார்த்தை நடத்தவுமில்லை, நடத்துவதற்குரிய முயற்சியை மேற்கொள்ளவுமில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த ஒரு செய்தியின் பிரகாரம் தேர்தல் நடைபெறுவதற்கு முன் தன்னை தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோது கூட்டமைப்பின் தலைவர் உட்பட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து தாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதே பொருத்தமான விடயமென தான் ஆலோசனை வழங்கியபோதும் அதை விரும்பியும் விரும்பாமலும் ஏற்றுக் கொண்ட கோத்தபாய, சிங்கப்பூருக்குச் சென்று வந்தபின்பு நடத்துவோம் என்று கூறியவர் இதுவரை எங்களை அழைக்கவில்லையென அண்மையில் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தமை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம்.
சுமந்திரனின் கோரிக்கைக்கு இதுவரை செவிமடுக்கவில்லையென்பது பல காரணங்களின் அடிப்படை சார்ந்ததாக கருதிக் கொண்டாலும் தென்னிலங்கை மக்களின் அபிப்பிராயங்களை மீறி அவர் எவ்வாறு நடந்து கொள்வார் என்பது சந்தேகத்துக்குரிய விடயமே!
இன்னொரு விடயம், தேர்தல் வேட்பாளர்களை நோக்கி ஐந்து கட்சிகளின் 13 அம்ச கோரிக்கையை தமிழ்க்கட்சிகள் முன்னெடுத்தனர். இரு பிரதான வேட்பாளர்களும் இந்தக் கோரிக்கை தொடர்பாக நிராகரித்துள்ளார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் இத்தகையதொரு நிபந்தனை விதிப்பாளர்களுடன் தான் எக்காரணம் கொண்டும் பேசு
வதற்கு தயாரில்லையென்பதை பகிரங்கமாகவே மறுத்திருந்தார். அவ்வாறு ஏற்றுக் கொள்வதற்குரிய பாதக, சாதக நிலையைக் கருத்தில் கொண்டே அவ்வாறான மறுதலிப்பை அவர் தெரிவித்திருந்தார் என்பது சிங்கள ஆய்வாளர்களின் கருத்து.
ஆனால் தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட 13 அம்ச கோரிக்கைகளையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு, எதிர்வேட்பாளர் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள், சமஷ்டி உருவாகப் போகிறது, நாடு பிளவுபடப்போகிறது, தமிழ் ராஜ்ஜியமொன்று உருவாக்கிக்கொடுக்கப்போகும் வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் செயற்பட்டு வருகிறார். வாக்குறுதிகளை நல்கி விட்டார் என்ற எதிர்க்கணியப் பிரசாரங்கள் தென்னிலங்கை வேட்பாளர்கள் மத்தியில் தீபோல் பரவியதன் காரணமாகவே இந்த வெற்றியை ஜனாதிபதி சுதாகரித்துக் கொண்டுள்ளார் என்ற விமர்சனங்களிலும் உண்மை இல்லாமலில்லை.
இவ்வாறான பொதுசன அபிப்பிராயம் வேரூன்றிக் காணப்படுகிற ஒரு சூழ்நிலை யில் தமிழ்க் கட்சிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவோ தமிழ்மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உடனடியாக கலந்துரையாடுவதற்குரிய சூழ்நிலை உருவாக முடியுமா என்பது பலமான கேள்விக்குரிய சந்தேகமே.
எனது வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்களும் பங்காளிகளாக வேண்டும் என நான் பலமுறை அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் அவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறவில்லை. சிங்கள மக்களின் ஆதரவிலேயே நான் வெற்றி பெற்றுள்ளேன். தேர்தலில் போட்டியிடும்போது சிங்கள மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற முடியும் என்பதை முன்கூட்டியே நான் அறிந்திருந்தேன். இருந்த போதிலும் இலங்கையர் என்ற அடிப்படையில் என்னுடன் ஒன்றிணைந்து பணியாற்ற உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தனது பதவியேற்பு வைபவத்தின்போது சிறுபான்மை சமூகத்தவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அவரின் அழைப்பானது விசுவாசமும் தேசியப் பண்பும் கொண்டதாக இருந்தாலுங்கூட, எந்தளவுக்கு முன்கொண்டு செல்லப்படும் என்பதற்கு கட்டியம் கூறமுடியாது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அதிலும் குறிப்பாக வட–கிழக்கு மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வு என்பவை சாதாரண அல்லது இலகுவான பிரச்சினைகளாக யாராலுமே அர்த்தப்படுத்தி விடமுடியாது.
தேசியப் பிரச்சினையாக கருதப்படும் இனப்பிரச்சினை அது ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது. அதற்குள் பல்வேறு விடயங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதிகாரப் பகிர்வு, சுயநிர்ணய உரிமை, தாயகக் கோட்பாடு, அதிகார வலு, வட–கிழக்குப் பிராந்தியம் என்ற ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளடங்கிய
ஒரு விடய ம். இவற்றுக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டுமாயின் அரசியல் சாசனத்தினூடாகவே காணப்பட வேண்டுமென்பதை தமிழ்த் தலைமைகள் அழுத்தம் திருத்தமாகவே கூறி வருகிறார்கள். புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால் மாத்திரமே எமது பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமென இவ்வாரங்கூட, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். இவ்வாறான சங்கடங்கள் நிலவும் நிலையில் கூட்டமைப்பை அழைத்து புதிய ஜனாதிபதி பேசக்கூடிய கருப்பொருள் எதுவாக இருக்க முடியும் அதுவுமன்றி சிறுபான்மை இனத்தவருடனான நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுப்பதற்கு அபிவிருத்தியே ஒரே வழியென கூறிவரும் ஜனாதிபதி நல்லிணக்க செயற்பாடு தொடர்பான விவகாரங்களில் அதிகாரப் பகிர்வு பற்றியோ அரசியல் சாசன முன்னெடுப்பு தொடர்பாகவோ மூச்சுவிடவேயில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியல் சாசனம் தொடர்பாக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்றைய பிரதமரான மஹிந்த ராஜபக் ஷ தனது கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தமை மறந்துவிட முடியாது. அதுவுமன்றி புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் விஷமத்தனமான, விபரீதமான பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டதன் விளைவே இன்றைய ஆட்சி மாற்றத்துக்கான காரணங்கள் என்ற உண்மையையும் மறந்துவிட முடியாது. இவ்வாறு இருக்கும் நிலையில் மீண்டுமொரு பேச்சுவார்த்தைக்கான சூழல் எப்படி உருவாகப் போகிறது என்பது கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத புள்ளியாகவே காணப்படுகின்றது.
இன்னுமொரு யதார்த்தமான நிலையை தமிழ் தலைமைகள் விளங்கிக் கொள்ள வேண்டும். நல்லிணக்க அரசாங்கம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்த அனைத்து சூழலும் திட்டமிட்ட முறையில் இன்று மாற்றப்பட்டு விட்டது. இதுவொரு துரதிஷ்டமான நிலைதான். பொருத்தமான வாய்ப்பையும் சந்தர்ப்பங்களையும் சாத்திய சூழலையும் நாம் கைநழுவ விட்டுவிட்டோம் என்பதனை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல் சில சிங்கள தலைமைகளை நம்பியதன் ஒட்டுமொத்த விளைவையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் கதிரையை விட்டு சுதந்திரமாக இறங்கி விடைபெற்று விட்டார்கள். விடைபெற ஆயத்தமாகிறார்கள். ஆனால் வலியைச் சுமக்கும் தலைமைகளாக தமிழ் தலைமைகள் ஆளாக்கப்பட்டுவிட்டன.
தென்னிலங்கை மக்கள் மத்தியில் மீண்டும் இனத்துவ சிந்தனைகள் தலைதூக்க தொடங்கி விட்டன. பெளத்த அடிப்படைவாதம் முளைவிட்டுக் கொண்டிருக்கிறது. துட்டகைமுனுவாதம், தன்னை மீள் பார்வை செய்யத் தொடங்கியிருக்கிறது. பெளத்தம் சிங்களம் என்ற மேலாதிக்கவாதம் மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென்ற இனத்துவக் கருத்துக்கள் மலிந்து கொண்டிருக்கிற சூழல் உருவாகி வருவதாக எண்ணப்பாடுகள் தோற்றம் கொண்டிருக்கும் நிலையில் நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் அபிலாஷைகள் செல்லாக் காசாகிவிடும் என்ற பயமே இன்று காணப்படுகின்றது.
நாம் அடுத்து எதிர்பார்க்கும் புறநிலைச் சூழல் பற்றியும் சிறிது கவனம் செலுத்துவோமாயின் எமக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழியாகவும் தெரிவாகவும் காணப்படுவது அயல் நாடான இந்திய அரசின் அனுசரணை அழுத்தம் எமக்கு உதவலாமென்று.
ஜனாதிபதி பதவியேற்றுக் கொண்டதன் பின் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக
இந்தியா சென்றுள்ளார். பிரதமர் நரேந்திரமோடியின் விசேட அழைப்பை ஏற்று அவரின் அயல்நாட்டு விஜயம் அமைந்துள்ளது. இவ்வேளையில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் மக்களின் விடயத்தில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதியிடம் நிச்சயமாக வலியுறுத்துவார், எனினும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் ஈடுபாடு இன்னமும் அதிகமாக இருக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் சுமந்திரன் இன்னுமொரு ஆரூடத்தையும் கூறியுள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது, இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்கப்படும். அவ்வாறானதொரு சூழ் நிலையில் ஜனாதிபதி கூட்டமைப்பை அழைத்துப் பேசுவதற்குரிய சந்தர்ப்பமொன்று நிச்சயம் உருவாகும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னுள்ள முதலாவது அயல்நாட்டு விஜயமாக காணப்படும் அவரின் இந்திய விஜயத்தின்போது அவருடன் செல்லும் குழுவில் இடம்பெற்றிருக்கும் ராஜதந்திரிகளாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் உள்ளடங்கியிருக்கிறார்கள். அதிகாரிகள் மட்ட குழுவாக இக்குழு காணப்படுகிறதே தவிர அமைச்சர்கள் மற்றும் ராஜதந்திரிகள் இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
பொதுவாக முன்னைய காலங்களில் இவ்வாறானதொரு விஜயத்தின் போது இரண்டொரு அமைச்சர்கள் அதிலும் சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோர், வெளிவிவகார புலமைசார் வல்லுநர்கள் இடம்பெறுவார்கள். இது வழமை.
இப்போதைய சூழலில் இந்தியாவின் அழைப்பு இருநாட்டுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எது சார்ந்ததாக அமையப் போகிறது என்பது தொடர்பாக உடனடியாக அனுமானிக்க முடியாது.
இந்தியத் தரப்பினரைப் பொறுத்தவரை குறிப்பாக நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னுள்ள கடந்தகால அனுபவங்களைக் கொண்டு பார்க்கையில் இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் அவர்கள் காட்டிவந்த அக்கறையில் ஒரு கையறு நிலையே காணப்படுகிறது. வெறுமனே, “என்னை நம்புகின்றீர்களா?”என்ற வார்த்தை ஜாலங்களைத் தவிர பலமான எந்த ஆதாரங்களையும் இந்தியத் தரப்பிலிருந்து கிடைக்கப் பெறவில்லை. 13 ஆவது அரசியல் சாசனம் உருவாவதற்கு காரணமாக இருந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் இன்னும் அமுலில் இருந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பில் இந்தியாவின் அக்கறை எவ்வாறு இருந்தது என்பது பற்றி விரிவாக ஆராய வேண்டிய அவசியமில்லை.
கடந்த ஆட்சிக்காலத்தில் சீனாவின் பிரசன்னங்கள் செல்வாக்குகள் மேல்நிலை பெற்று வந்துள்ளதை இந்தியா பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் இந்தியாவால் இது சுட்டிக்காட்டப்பட்டுமுள்ளது. இன்றைய ஜனாதிபதி இவ்விவகாரத்தை பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் கொடுத்தது மிகப் பெரிய தவறு. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக் காலத்தில்
சீனாவுடனான இலங்கையின் நெருங்கிய ஈடுபாடு வெறுமனே வர்த்தக நோக்கிலானது. இந்நிலை மாற்றப்பட்டது பெரிய பாதிப்புக்குரிய விடயம். சீனா மாத்திரம் முதலீடு செய்வதற்கு அனுமதிக்காமல் இந்தியாவும் ஏனைய முக்கிய நாடுகளும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவ வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு குந்தகம் ஏற்படாமல் இலங்கை நடந்து கொள்ளும் என்ற ஒரு கருத்தை ஜனாதிபதி தெரிவித்திருக்கும் நிலையிலேயே அவரின் இந்தியப் பயணம் அமைந்திருக்கிறது.
இப்பயணம் தொடர்பில் பல்வேறு விதமான ஆருடங்களும் ஊடகங்களும் தெரிவிக்கப்பட்டாலும் இந்தியத் தரப்பினரால் அரசியல் தீர்வு தொடர்பிலோ அல்லது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது சம்பந்தமாகவோ அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருந்த போதிலும் அண்மையில் இலங்கைக்கு அவசரமாக விஜயம் செய்திருந்த ெஜய்சங்கர் சில விடயங்களை வலியுறுத்திச் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாட்டில் வாழும் தமிழ்மக்களுக்கு நீதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கு ஜனாதிபதி முன்னின்று செயற்பட வேண்டும். இதனை இந்தியாவும் தெளிவாக கூறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அழைத்து தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவாரா அவ்வாறானதொரு சந்தர்ப்பம் உருவாகுமா? என்பது பற்றிய தர்க்கத்துக்கு அப்பால் சில நியாயங்களும் யதார்த்தங்களும் உண்டு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டுமென்பதையே தமிழ்த் தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றார்கள் என்பதேயுண்மை. அவ்வகையில் தமிழ்மக்களுடைய நீண்டகாலப் போராட்டமென்பது அடிப்படை சார்ந்த ஒரு அரசியல் பிரச்சினை. அதற்கான நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.
அவ்வாறு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டுமாயின் அரசியல் சாசனம் ஒன்றின் மூலமாகவே காணப்பட வேண்டுமென்ற யதார்த்தத்தை ஜனாதிபதி புரிந்து கொள்வார் என்பது எல்லோரும் நம்புகின்றவிடயம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் என்பது ஒரு தலைமைக்கு எதிராகவோ அன்றி குறித்த கட்சிக்கு எதிராகவோ அளிக்கப்பட்ட வாக்குகளாகவோ அன்றி ஒட்டுமொத்த எதிரணியினருடைய வாக்காகவோ கருதிக் கொள்வது என்பது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வாக முடியாது. சிறுபான்மை மக்களின் வாக்குகளை வெற்றி பெற்ற ஜனாதிபதி ஒருவர் பெறவில்லையென்பது அவரை மறுதலித்துப் பார்க்கும் சமூகத்தை அவர் ஆட்கொள்ளவில்லையென்ற கருத்தையே புலப்படுத்தி நிற்கின்றது. குறித்த ஒரு சமூகத்தின் ஆதரவை அல்லது நம்பிக்கையை வெற்றிபெற்ற ஜனாதிபதி பெற முடி யாமல் போயிருப்பது ஜனநாயகத்தின் பலவீனத்தையே எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு ஒரு குழுமத்தவர்கள் அல்லது இனத்தவர்கள் ஆதரவு தரவில்லையென்ற விடயத்தை ஆராய்ந்து பார்ப்பின், அடிப் படையில் அம்மக்களுக்குள்ள பிரச்சினை அது தீர்க்கப்படாமல் நீறுபூத்த நெருப்பாக இன்னும் புகைந்து கொண்டிருக்கிறதென்ற உண்மைத்தன்மையையே வெளிப்படுத்திக் காட்டுகிறது. இவ்வாறானதொரு நிலையில் நீண்டு பயணித்துக் கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் புதிய ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிற விடயம். இதைத் தீர்ப்பதற்கு திறந்திருக்கும் ஒரே வழிப்பாதை தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிக அனுபவமும் வலிமையும் கொண்ட கட்சியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஆழமான பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி துணிவுடனும் திறனுடனும் மேற்கொள்ள வேண்டுமென்பதே தமிழ் மக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பு.
கடந்துவந்த சூழலையும் இன்றைய அரசியல் சூழலையும் ஒப்பிட்டுப் பார்ப்பின் தமிழ் மக்களுடைய நீண்டகால பிரச்சினைக்கு துணிச்சலுடனும் ஆளுமையுடனும் தீர்வு காணக்கூடிய ஒரு தலைமையாக இன்று நம்பப்படுகிறவர் ஜனாதிபதி கோத்தபாய என்பது பொதுவான அபிப்பிராயம் மாத்திரமல்ல நம்பிக்கையும்கூட, இந்த நம்பிக்கையும் அபிப்பிராயமும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழ்த் தரப்பினர் எதிர்பார்ப்பதுபோல் அழைத்து உரையாடி நீண்ட காலப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாண ஜனாதிபதி தீவிரமாக செயற்பட வேண்டியது அவசியமாகிறது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment