ஐனாதிபதியின் இந்திய விஜயம் உறவில் பரிமாணத்தை ஏற்படுத்துமா?


30/11/2019  பேரா­சி­ரியர் கொட­கார இலங்­கை யின் வெளிநாட்டுக் கொள்கை வகுத்தல் பற்றி குறிப்­பி­டும்­போது இலங்­கையின் வெளிநாட்­டுக்­கொள்­கையின் அத்­தி­பாரம் இந்­தி­யா­வு­ட­னான உற­வு­களே எனக் குறிப்­பிட்டார். (Corner stone of Sri Lankan Foreign Policy is its relations with India ) இலங்கை இந்­தி­யா­வுக்கு மிக அண்­மை­யி­ல­மைந்­துள்ள மிகப் பெரிய இடப்­ப­ரப்பு, சனத்­தொகை கொண்ட நாடென்­பது மட்­டு­மல்ல வர­லாற்­றுக்கு முந்­திய காலத்­தி­லி­ருந்து இலங்கை இந்­திய தொடர்­புகள் உற­வுகள் மிக நெருக்­க­மாக தொடர்ந்­த­மையும் பிர­தான கார­ண­மாகும்.
சிங்­கள இனத்தின் வம்ச தொடர்பு இந்­தி­யா­வி­லி­ருந்து வந்த விஜய­னுடன் ஆரம்­பித்­தது. அசோக மன்­னனின் காலத்தில் பௌத்தம் இலங்­கைக்கு பர­வி­ய­மையும் இலங்கை பௌத்த நாடாக மிளிர்­கின்­ற­மையும் இலங்கை இந்­திய  உற­வு­களின் சிறப்­பம்­ச­மாகும். அத்­துடன் இலங்­கையின் வர­லாற்றில் தென்­னிந்­திய மன்­னர்­களின் படை­யெ­டுப்பும் காலத்­துக்கு காலம் தென்­னிந்­திய மன்னர் ஆட்­சி­ய­மைத்­த­மையும் சின்னஞ் சிறிய நாட்டின் இருப்­புக்கு சவா­லாக  இருந்­தன. 1505 இல் ஆரம்­பித்த ஐரோப்­பி­யர்­களின் படை­யெ­டுப்பும் 400 வரு­டங்­க­ளுக்கு மேலான போர்த்­துக்­கேய, ஒல்­லாந்த, ெவள்ளையர்­களின்  ஆட்­சி­களும் இலங்­கையின் இருப்­புக்கு சவா­லான வேறு கார­ணங்­க­ளாகும்.
இந்த அடிப்­ப­டையில் ஆராயும் போது இலங்­கையின் இருப்­புக்கு அச்­சு­றுத்தல் தென்­னிந்­திய அர­சு­க­ளி­ட­மி­ருந்து வந்­தன. என்­பது வர­லாற்­றா­சி­ரி­யர்­களின் சாட்­சி­ய­மாகும். இக்­கா­ர­ணங்­க­ளி­னா­லேயே பேரா­சி­ரியர் கொட­கார பிர­ப­ல­மான வாச­கத்தை ெதரிவித்­தி­ருந்தார். என்­பது கண்­கூடு. 1980களில் இலங்­கையில் இந்­தி­யாவின் தூது­வ­ராக பதவி வகித்த ேஜ.என். டிக்சிற் இலங்கை அனு­ப­வத்­தையும் தொகுத்து பிர­ப­ல­மான நூல் ஒன்­றினை எழு­தினார்.
இந்­தி­யாவின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்­பா­ளர்கள் (Makers of  Indian Foreign   Policy) என்ற நூலில் இந்­திய அர­சாங்கம் மறைந்த பிர­தமர் ராஜிவ் காந்­தியின் ஆட்சிக் காலத்தில் இந்­திய சமா­தா­னப்­ப­டையை (IPKF) அனுப்­பி­ய­மையை வெகு­வாக ஆத­ரிக்­க­வில்லை. அத்­துடன் முன்னாள் பிர­தமர் இந்­திரா காந்தி கடைப்­பி­டித்த இலங்கை தொடர்­பான கொள்­கையை ஏற்­க­வில்லை. இலங்­கையில் இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பிரி­வினை கோரி போரா­டிய அமைப்­புக்கு இந்­தியா நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் ஒத்­தாசை வழங்­கி­யமை தவறு என வாதிட்டார். எனினும் இந்­தி­யாவின் ெவளிநாட்டுக் கொள்கை வகுப்­பா­ளர்கள் தொடர்ந்தும் பிராந்­தி­யத்தில் இந்­தியா ஆதிக்க நாடு என்ற அடிப்­ப­டை­யி­லேயே இரு­த­ரப்பு, பல்­த­ரப்பு உற­வு­களை கையாள வேண்டும் என்றே கரு­து­கி­றார்கள்.
இலங்­கையில் 2019ம் ஆண்டு கார்த்­திகை 16ஆம் திகதி இடம்­பெற்ற ஐனா­தி­பதி ேதர்தலில் கோத்தபாய ராஜ­பக் ஷ ஐனா­தி­ப­தி­யாக வெற்றி பெற்று சூடு ஆற­மு­தலே இந்­தி­யாவின் ெவளிநாட்­ட­மைச்சர் ெஐய­சங்கர் இலங்­கைக்கு விஜயம் செய்து பார­தப்­பி­ர­தமர்  நரேந்­திர மோடியின் வாழ்த்­து­ம­ட­லுடன் ஐனா­தி­ப­தியை சந்­தித்து கார்த்­திகை 29ம் திகதி இந்­தி­யா­வுக்கு அர­சு­முறை பய­ணத்தை மேற்கொள்­ளு­மாறு பிர­தமர் நரேந்­திர மோடியின் அழைப்­பி­னையும் கைய­ளித்தார்.
2015ஆம் ஆண்டில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இந்­திய பிர­த­மரின் அழைப்பின் பேரில் 2015 மாசி மாதம் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­த­மையும் நிை­ன­வி­லி­ருக்­கத்­தக்­கது. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும்  ஜனா­தி­ப­தி­யாக விஜயம் செய்த முதல் நாடு இந்­தி­யா­வாகும். இலங்கை ஜனா­தி­ப­திகள் புதி­தாக பத­வி­யேற்­றபின் முத­லா­வ­தாக விஜயம் செய்யும் நாடு இந்­தியா என்­பது எழு­தாத விதி­யாகும். ஏனைய பிராந்­திய நாடுகள் இந்­தி­யா­வுக்­குத்தான் இலங்கை முக்­கி­யத்­துவம் என்­பதை நடை­மு­றையில் ஏற்றுக் கொண்­டுள்­ளன.
மீண்டும் பேரா­சி­ரியர் கொடி­கா­ரவின் கூற்று முக்­கி­யத்­து­வ­ம­டை­கி­றது. ஜனா­தி­பதி ேதர்தல் கார்த்­திகை 16 இல் நடை­பெ­று­வ­தற்கு முன்னர் சில இந்­திய அச்சு ஊட­கங்கள் ேதர்தல் பற்­றிய விவ­ர­ணக்­கட்­டு­ரை­களில் ராஜ­பக் ஷ குடும்பம் மீண்டும் ஆட்­சியைக் கைப்­பற்­றினால் என்ன நிகழும் என்ற அடிப்­ப­டையில் ஆய்­வுக்­கட்­டு­ரை­களை வெளியிட்­டன. சில கட்­டு­ரைகள் நியா­யப்­ப­டுத்த முடி­யாத விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தின. ராஜ­பக் ஷ குடும்பம் ஆட்­சி­ய­மைத்தால் சீனா என்­கின்ற பூதம் இலங்­கையை ஆட்­டிப்­ப­டைக்கும் என்­கின்ற தோர­ணையில் சீன விரோத குணாம்­சத்தை  ெவளிப்­ப­டுத்­தின.
ஐ.நா. சபையின் பட்­டயம் நாடுகள் பற்­றிய பெருங்­கொள்­கை­களை வகுத்­துள்­ளது. நாடு­களின் சுதந்­திரம், இறைமை, சுயா­தி­பத்­தியம், உள் விவ­கா­ரங்­களில் தலை­யி­டாமை, சச்­ச­ர­வு­களை ஆயுத மோத­லின்றி தீர்த்தல், நாடு­க­ளுக்­கி­டையில் ஒத்­து­ழைப்பு பற்­றி­யெல்லாம் கூறு­கி­றது. உலகின் ஏக வல்­ல­ர­சான அெமரிக்­காவும் சனத்­தொ­கையில் பெரிய நாடான சீனாவும் கரி­பியன்  தீவில் உள்ள மிகச்­சி­றிய தீவுகள் (நாடுகள்) யாவும் ஐ.நா. சாசன அடிப்­ப­டையில் சம­னா­னவை. அவ்­வா­றெனில் நடை­மு­றையில் நாடுகள் சுதந்­திர நாடு­க­ளா­க­வில்­லையே என்ற கேள்வி எழு­கி­றது.
நடை­மு­றையில் யதார்த்­தத்தில் பெரிய நாடு, சிறிய நாடு, வலி­மை­யான நாடு, பல­வீ­ன­மான நாடு, செல்­வந்த நாடு, அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு, தரையால் சூழப்­பட்ட நாடு (land locked countries) என நாடுகள் காணப்­ப­டு­கின்­றன. இந்­நா­டுகள் பெய­ர­ளவில் இறை­மை­யுள்ள நாடு­க­ளா­யினும் உண்­மையில் தத்தம் இறை­மை­களை சுயா­தி­பத்­தி­யத்தை இழந்த நாடு­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன.  ஆகையால் ஐ.நா.வின் கொள்­கை­க­ளுக்கு அப்பால் நடை­மு­றையில் நாடு­களின் இரு­ த­ரப்பு உற­வு­களில் ஆதிக்கம் செலுத்தும் காரணி புவிசார் அர­சி­ய­லாகும். (Geopolitic) புவிசார் அர­சியல் என்­பது ஒரு அறிவு சார் சொற்­றெ­ாட­ரா­க­வி­ருந்­தாலும் சாதா­ரண  வாச­கர்கள் புரிந்து கொள்­வது கடி­ன­மா­ன­தொன்­றன்று.
புவியின் பூமி­சாஸ்­திரம் அதா­வது மானி­டமும் பௌதீக அமைப்­புக்­களும் எவ்­வாறு அர­சி­ய­லிலும் சர்­வ­தேச உற­வு­க­ளிலும் செல்­வாக்கு செலுத்­து­வ­தென்­பது பற்­றிய ஆராய்­வி­னையே புவிசார் அர­சியல் எனக் கூறப்­ப­டு­கி­றது. பிராந்­திய ஆய்­வுகள், சுவாத்­தியம் அல்­லது கால­நிலை, சனத்­தொகை பரம்­பல் நாடு­களின் பருமன், அமைவு, இயற்கை வளங்கள், பிர­யோக விஞ்­ஞானம் போன்ற பல கார­ணிகள் புவிசார் அர­சி­யலை தீர்­மா­னிக்­கின்­றன. வேறு வார்த்­தை­களில் கூறினால் பிர­யோக விஞ்­ஞா­னத்தால் விஞ்­ஞான தொழில்­நுட்ப அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடுகள் விண்ெவளி ஆராய்ச்­சியில் மகத்­தான சாத­னைகள் புரிந்­துள்­ளன. அவை அணு ஆயு­தங்களை தயா­ரித்து பரி­சோ­தித்து வெற்றி கண்­டுள்­ளன.
பெரிய சனத்­தொ­கை­யுள்ள நாடுகள் பாரிய இரா­ணு­வங்­களை கொண்­டுள்­ளன. இயற்கை வளங்­களை, எண்ணெய் வளத்தை கொண்­டுள்ள நாடுகள் செல்வம் செழிக்கும் நாடு­க­ளா­க­வுள்­ளன. நிலத்தால் சூழப்­பட்ட நாடுகள்   துறை­மு­க­வ­ச­திகள் இல்­லா­த­ப­டியால் அயல்­நா­டு­களின் தய­விலே வாழ நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­கின்­றன. அபி­வி­ருத்­தி­ய­டையும் நாடுகள் தத்தம் பொரு­ளா­தார இலக்­கு­களை அடை­வ­தற்கு உலக வங்கி போன்ற சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் நீதி­யற்ற ஆலோ­ச­னை­களை செவி­ம­டுக்க வேண்­டி­யுள்­ளன. நடை­மு­றையில் சர்­வ­தேச உற­வுகள்  சம­னற்­ற­மு­றையில் காணப்­ப­டு­கின்­றன என்­பதே உண்­மை­யாகும்.
பக் ஷ கார்த்­திகை 29ஆம் திகதி இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­ய­வுள்ளார் இலங்கை இந்­திய தரப்பு எந்த விட­யங்­களை மேசை முன் பேசப்­போ­கி­றார்கள் என இரு அர­சாங்­கங்­களும் ெவளிப்­ப­டை­யாக தெரிவிக்­கா­வி­டினும் என்ன விவ­கா­ரங்­களை பேசப்­போ­கி­றார்கள் என்­பது விணவெளி ஆராய்ச்சி விஞ்­ஞானம் போன்று இர­க­சி­ய­மா­ன­தல்ல. நாடு­க­ளுக்கு நாடுகள் புதிய ஜனா­தி­பதி, பிர­த­மர்கள் ெதரிவா­கும்­போது வாழ்த்­துச்­செய்­திகள் அனுப்­பு­வது மிகச் சர்­வ­சா­தா­ர­ண­மான நட­வ­டிக்­கை­யாகும். சில ஊட­கங்கள் புதிய ஜனா­தி­ப­தி­யாக அமெ­ரிக்கா வாழ்த்­தி­யது சீனா வாழ்த்­தி­யது இந்­தியா வாழ்த்­தி­யது  செய்­திகள் ெவளியாகும் போது வாச­கர்கள் குழப்­ப­ம­டை­வது இயல்­பா­ன­தாகும்.
ஏனெனில் இந்த நாடுகள் வாழ்த்­தி­யது ஏதோ ஒரு முக்­கி­ய­மான நிகழ்வு என்ற மாயையை பத்­தி­ரிகை செய்­திகள் வழங்­கு­கின்­றன. பிர­தமர் மோடி அர­சாங்­கத்தின் தலை­வ­ரா­கவும் இந்­திய ஐனா­தி­பதி அரசின் தலை­வ­ரா­கவும் இந்­திய அர­சி­ய­ல­மைப்பு சாச­னத்தின் படி விளங்­கு­கின்­றனர். இலங்­கையின் அர­ச­ த­லை­வ­ருக்கு இந்­தி­யாவின் அரச தலை­வரும் இலங்­கையின் அர­சாங்க தலை­வ­ருக்கு இந்­திய  அர­சாங்க தலை­வரும் வாழ்த்து செய்­தி­களை அனுப்­பி­யுள்­ள­னனர். அதே­போன்று இலங்­கையின் புதிய பிர­த­ம­ருக்கு இந்­தி­யாவின் பிர­தமர் வாழ்த்து செய்தி அனுப்­பு­தலும் சாதா­ரண நடை­மு­றை­க­ளாகும். அந்­த­ வ­கையில் பிர­தமர் மோடி ஐனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தி சமா­தா­னத்­துக்­காக கூட்­டாக இயங்­கு­வது  அபி­வி­ருத்தி, செழிப்பு, பாது­காப்பு ஆகிய பொது­வான விட­யங்கள் உள்­ள­டக்­கிய வாச­கங்கள் இடம் பெற்­றுள்­ளன. இந்த வாழ்த்து செய்­திக்கும் ஏனைய நாடொன்­றுக்கு அனுப்பும் வாழ்த்து செய்­திக்­கு­மி­டையில் பெரிய வேறு­பாடு ஒன்றும் கிடை­யாது.
இலங்கை இந்­திய உற­வு­களில் உர­ச­லான விட­யங்கள் எவை என நுணுகி  ஆராய்ந்தால் இந்­திய மீன­வர்கள் இலங்கை கடல் எல்­லைக்குள் அத்­து­மீறி மீன் பிடித்தல் தொடர்­கின்ற ஒரு  பிரச்­சி­னை­யாகும். தமிழ் நாட்டில் அர­சி­யல்­கட்­சிகள், அமைப்­புக்கள் இலங்கை தமி­ழர்­க­ளுக்கு ஆத­ரவு ெதரிவித்து மத்­திய அர­சாங்­க­த­திற்கு அழுத்தம் கொடுத்தல்  கார­ண­மாக இந்­திய மத்­திய அர­சாங்கம் இலங்கை அர­சாங்­கங்­க­ளுடன் சில  முரண்­பாடு நில­மைகள் உரு­வாக்­கி­யமை ஆகிய இரு விவ­கா­ரங்­களும் அர­சியல் ரீதியில் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­மை­யாகும். சர்­வ­தேச உற­வுகள் மற்றும் இந்து சமுத்­திர கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­யங்­க­ளான விவ­கா­ரங்­களை நோக்­குகையில் இலங்கை சீன இரு தரப்பு உற­வுகள் இந்­தி­யா­வுக்கு எதி­ரா­னவை என்ற பரப்­பு­ரையும் இந்­தி­யாவின் சில ஊட­கங்­களில் தொனிக்­கிறது.
1970களின் பின்­ப­கு­தியில் முன்னாள் ஜனா­தி­பதி ேஜ.ஆர் ஐய­வர்த்­தன அெமரிக்­கா­வுடன் மிக நெருங்­கிய தொடர்­பு­களை தாபித்தார். Voice of America    வானொ­லியை இலங்­கையில் அனு­ம­திக்க முடிவு செய்தார். இந்து சமுத்­திர பிராந்­தி­யத்தில் அெமரிக்­கா­வுக்கு  அனுமதி­கொ­டுக்கப் போகிறார் என பீதி­யான செய்­தி­களை சில இந்­திய ஊட­கங்கள் ெவளிவிட்­டன. இப்­போது சீனப் புரளி முன்னர் அனு­ம­திக்க புரளி கிளப்பி விடப்­பட்­டன. ஆனால் இந்­திய சீன உற­வுகள் மிக நெருக்­க­மா­க­வுள்­ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இரு தலை­வர்­களும் பேச்­சு­வார்த்­தை­களின் போது முன்னர் இலங்கை இந்­திய தரப்­புடன் பேசி முடிக்­காத விட­யங்கள் முதலில் ஆரா­யப்­படும். சித்­திரை 2017 இல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்து புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஒன்றில் கைச்­சாத்­திட்டார். சக்­தி­வளம் பெட்­ரோ­லியம், துறை­முகங்கள், விமா­ன­நி­லை­யங்கள், புகை­யி­ர­த­நி­லை­யங்­கள், பெருந்­தெ­ருக்கள், வீட­மைப்பு மற்றும் விவ­சாயம் ஆகிய விட­யங்­களை புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் உள்­ள­டக்­கி­யி­ருந்­தது. இவ்­வி­ட­யங்­களில் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி இரண்டு திட்­டங்­களில் அதிக அக்­கறை செலுத்­தினார். 500 மெகாவால்ட் வாயு­வினால் இயக்­கப்­படும் சக்தி ஆலை, திரு­கோ­ண­ம­லையில் அமைந்­துள்ள முன்­னைய பிரித்­தா­னிய எண்ணெய் தாங்கி ஆகி­ய­வையே பிர­தமர் மோடி அக்­க­றை­ காட்­டிய விட­யங்­க­ளாகும்.
திரு­கோ­ண­மலை எண்ணெய் தாங்கி தொடர்­பான ஆரம்ப ஒப்­பந்தம் 2003இல் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. திரவ இயற்கை வாயுவால் இயக்­கப்­படும் சக்­தி­திட்டம் இலங்கை அர­சாங்க தரப்­பினால் இன்னும் பெரி­தாக ஆரா­யப்­ப­ட­வில்லை 500 மெகாவால்ட் சக்தி இந்­தியா முன்­வந்த வேளை ஜப்­பானும் 500 மெகாவால்ட் ஆலை­யொன்றை தர முன்­வந்­தது. முன்­னைய பேச்­சு­வார்த்­தையின் போது ஜப்­பா­னிய அர­சாங்கம் நிலக்­க­ரியால் இயக்­கப்­படும் ஆலை ஒன்றை இலங்­கைக்கு வழங்க முன்­வந்­தது. நிலக்­க­ரியால் ஏற்­படும் சுற்­றாடல் பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டி வரும் என்­கின்ற சுற்­றாடல் அக்­க­றை­களால் இத்­திட்டம் கைவி­டப்­பட்­டது.
நிலக்­க­ரிக்கு பதி­லாக திரவ வாயுவால் இயங்கும் ஆலையை வழங்க ஜப்பான் முன்­வந்­தது. இதனால் இலங்கை தொடர்பில் இந்­தியா ஜப்பான் அர­சாங்­கங்கள் ஆலை­களை வழங்க முன்­வந்த படியால் இத்­திட்டம் முத்­த­ரப்புத் திட்­ட­மா­கி­யது. இந்த முற்­த­ரப்பு திட்­டங்­களை இலங்கை அமைச்­ச­ரவை 27.02.18 திகதி அங்­கீக­ரித்­தது. இத்­திட்­டத்தின் பிர­காரம் இலங்கை அர­சாங்கம் 15% உரி­மை­க­ளையும் இந்­தியா 47.5% உரி­மை­க­ளை­யும் ஜப்பான் 37.5% உரி­மை­க­ளையும் பெறு­வ­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. எனினும் 27.02.18 இல் அமைச்­ச­ர­வையால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட போதும் இற்றை வரை எந்த நகர்வும் இடம்­பெ­ற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இலங்­கையின் முன்னாள் பிர­தமர் ரணில்­ விக்­கி­ர­ம­சிங்க ஐப்­பசி 2018இல் மீண்டும் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்தார். சக்தி ஆலைத்­திட்­டங்கள் இலங்கைத் தரப்பால் கிடப்பில் போடப்­பட்­டுள்­ள­மையால் பிர­தமர் மோடி அ­தி­ருப்­தியை வெளியிட்டார். 29 கார்த்­திகை மாதம் நடை­பெற­வுள்ள பேச்­சு­வார்த்­தையில் திரவ வாயுவால் இயக்­கப்­படும் ஆலைத்­திட்­டங்கள் இடம்­பெ­றலாம். அது­மட்­டு­மல்ல இந்­தி­யா­வுக்கு திரு­கோ­ண­மலை எண்ணெய் தாங்­கியை குத்­த­கைக்கு வழங்­கு­வது தொடர்­பா­கவும் இந்­திய தரப்பு பிரஸ்­தா­பிக்கும் எனவும் நம்­பப்­ப­டு­கின்­றது.
இந்­தி­யா­விலே திரு­கோ­ண­மலை எண்ணெய் தாங்­கி­களை வழங்­கு­வ­தற்கு முன்னர் எதிர்­க் கட்­சி­களும் பெற்­றோ­லியம் கூட்­டுத்­தா­பன தொழிற்­சங்­கங்­களும் எதிர்ப்பைக் காட்­டின என்­பது குறிப்­பி­டத்­தக்­கது முன்­னைய மஹிந்த ராஐ­பக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் பேச்சு வார்த்தை நடாத்­தப்­பட்டு கிடப்பில் போடப்­பட்ட எற்கா (Economy and Technical cooperation agreement ) ஒப்­பந்தம் தொடர்­பான விட­யங்­களும் 29ஆம் திகதி பேச்­சு­வார்த்தை இடம்­பெ­றலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. IS பயங்­க­ர­வாத  அச்­சு­றுத்தல் தொடர்­பா­கவும் பிராந்­தி­யத்தில் எவ்­வாறு கூட்­டாக பயங்­க­ர­வா­தத்தை எதிர்­கொள்­வது எனவும் நிச்­ச­ய­மாக உரை­யா­டப்­படும்.
2009 க்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இலங்­கைக்கு வீட­மைப்பு, காங்­கே­சன்­து­றை­முக அபி­வி­ருத்தி, பலாலி விமா­ன­நி­லைய அபி­வி­ருத்தி, கலா­சா­ர­நி­லையம், புகை­யி­ர­த­பாதை திட்டம்  என பல திட்­டங்­க­ளுக்கு இந்­திய அர­சாங்­கத்தின் உதவி பெரிய வரப்­பி­ர­சா­தங்­க­ளாகும். ஜனா­தி­ப­தி­யாக கோத்தாபய பதவி ஏற்ற பின்னர் இந்­திய ஊடகம் ஒன்­றிற்கு பேட்டி அளிக்­கையில் இலங்கை எந்த நாட்­டு­டனும் இரா­ணுவ விட­யங்கள் இரா­ணுவ சிக்­கல்கள்,  முரண்­பா­டு­களில்  சம்­பந்­த­ப்ப­டாமல் சுதந்­தி­ர­மான போக்கை கடை­பி­டிக்கும் எனவும் அணி­சேரா கொள்­கையை கடைப்­பி­டிக்க போவ­தா­கவும் ெதரிவித்தார்.
அத்­துடன் ஊட­க­வி­ய­லா­ளரின் கேள்­விக்கு பதி­ல­ளிக்­கையில் முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை 99 வருட குத்­த­கையில் சீனா­வுக்கு கொடுத்­த­மையை தமது கட்சி ஏற்­க­வில்லை என்றும் இந்த ஒப்­பந்தம் தொடர்­பாக சீனா­வுடன் மீளாய்வு செய்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட உள்­ள­தாக ெதரிவித்தார். இலங்கை இந்­திய இரு­த­ரப்பு வர்த்­தகம் இலங்­கைக்கு மிகப் பாத­க­மான வர்த்­தக மீதி காணப்­ப­டு­வதால் இலங்கை தரப்பில் இவ்­வி­ட­யமும் முன்­வைக்­கப்­ப­டலாம் என ெதரிகி­றது.
அமெரிக்கா மிலே­னியம் (Millenium challenge cooperation agreement) ஒப்பந்தத்தை இலங்கையுடன் கைச்சாத்திடுவதற்கு பெரும் பிரயத்தனத்தில் இறங்கியுள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் மிலேனியம் ஒப்பந்தத்தை மீளவும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என விரும்புகிறது. இவ்வாறு அமெரிக்க சீனா இந்திய நலன்களுக்கான தளமாக இலங்கை பயன்படுத்தப்படுமா என்பது பற்றி இலங்கையில் புத்திஜீவிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்து ஜனாதிபதி கோத்தாபயவுடன் உரையாடும் போது இலங்கை தமிழ் சிறுபான்மையினரின் அபிலாசைகள் முன்னெடுக்கப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்கின்ற செய்தியையும் கொடுத்தார் என்பதை சில ஊடகங்கள் ெதரிவித்தன.
2020ஆம் ஆண்டு மாசி பங்குனியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் தற்போதைய கோத்தபாய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தால் அெமரிக்காவுடன் இணைந்து கூட்டாக சமர்ப்பித்த பிரேரணையை வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் யோசனைகளை முன்வைப்பதற்கு இந்தியாவில் அனுசரணையை ஜனாதிபதி கோத்தாபய கோருவார் என எதிர்பார்க்கலாம்.
பிரதமர் மோடி தமிழகத்திலோ கேரளத்திலோ ஆந்திராவிலோ எந்தவிதமான ஆதரவினையும் பொதுத் தேர்தலில் பெறவில்லை என்பதும் தி.மு.க., அ.தி.மு. கட்சிகளின் தயவில் மத்திய அரசாங்கம் ஆட்சி நடத்தவில்லை என்கின்ற நிலையில் அக்கட்சிகளால் எந்த அழுத்தத்தையும் பிரதமர் மோடிக்கு பிரயோகிக்க முடியாது  என்ற சூழ்நிலையில் பிரதமர் மோடி ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கக்கூடும்  என இலங்கை வட்டாரங்களில் நம்பிக்கை காணப்படுகிறது. ஜனாதிபதி கோத்தாபயவின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இலங்கை இந்திய உறவுகளில் அதிகரித்த கூட்டுறவை ஏற்படுத்தும் என கூற முடியும்.   நன்றி வீரகேசரி 













No comments: