25/11/2019 ஜனாதிபதித் தேர்தலின் முடிவு, இலங்கையின் அரசியல் நடைமுறைகளில் பெரியளவிலான மாற்றங்களுக்கு வித்திடும் சூழல் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. இந்த தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ பெற்றிருக்கின்ற வெற்றியானது, சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்குப் பெருந்தீனியாக அமைந்திருக்கிறது இது முதல் விடயம். இந்த வெற்றியைக் கொண்டு, ராஜபக் ஷவினர் நிரந்தரமான அரசியல் இருப்புக்கு வழிதேடத் தொடங்கியிருக்கின்றனர் என்பது இரண்டாவது விடயம். இந்த இரண்டும் வெவ்வேறான விடயங்களாக இருந்தாலும், தனித்தனியாக இந்தப் பத்தியில் ஆராய்வது பொருத்தம்.
கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும், பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பில் செய்தியாளர்களிடம் வெளியிட்ட அறிவிப்பு முக்கியமானது.
கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு விட்டதால், இனி பொதுபல சேனா அமைப்பு அவசியமற்றது என்றும், அதனை பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கலைத்து விடப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதுபோலவே, கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பல நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிங்கள ராவய அமைப்பையும் கலைத்து விடப் போவதாக அதன் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் அறிவித்துள்ளார்.
அரசர்களுக்கு பிறகு நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ளதால், இனிமேல் தேசத்தைப் பாதுகாக்க தேசிய அமைப்புகள் தேவையில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.
அதாவது கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாகி விட்டதால், சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புகள் இனி தேவையில்லை என்ற முடிவுக்கு இரண்டு பௌத்த கடும்போக்குவாத அமைப்புகளும் வந்திருக்கின்றன.
சிறுபான்மையினரின் ஆதரவின்றி அரசாங்கத்தை அமைக்க முடியாது என்ற நிலை மாற்றப்பட்டு விட்டதாகவும், ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளில் இலங்கையில் பௌத்த கடும்போக்குவாத அமைப்புகளாக அறியப்பட்டவை தான் பொதுபல சேனாவும், சிங்கள ராவயவும்.
இதுபோன்ற இன்னும் பல அமைப்புகள் தோற்றம் பெற்றன, மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியின் பிற்காலத்தில் தான். அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்தவர் தற்போதைய ஜனாதிபதியான கோத்தாபய ராஜபக்ஷ.
அவரே பொது பலசேன அமைப்பை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தன. அதனை அவரும், மறுத்திருந்தார் பொது பலசேனாவும் மறுத்திருந்தது.
பொது பலசேனா, சிங்கள ராவய போன்ற பௌத்த அடிப்படைவாத அமைப்புகள், சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியதுடன், தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தையும் பரப்பி வந்தன.
சிங்கள பௌத்த நலனைப் பாதுகாப்பது என்ற போர்வையில், ஏனைய இன, மதத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த ஆட்சிக்காலத்திலும் இந்த அமைப்புகள் தெற்கில் உள்ள மக்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களை விதைப்பதற்கும், வன்முறைகளை தூண்டுவதற்கும் காரணமாக இருந்திருக்கின்றன.
இந்த அமைப்புகள் இம்முறை ஆட்சி மாற்றத்துக்கும் நிறையவே பங்களித்திருக்கின்றன. கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றிக்காக வெளிப்படையாகவும், உழைத்திருக்கின்றன.
இந்த நிலையில் தான், அவர் ஆட்சிக்கு வந்ததும், இனி தமது அமைப்புகள் இயங்க வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.
இதன் மூலம், வெளிப்படும் செய்தி சிறுபான்மையினருக்கு நம்பிக்கையூட்டக் கூடியதாக இல்லை என்பதே உண்மை.
கடும் போக்கு பௌத்த சிங்கள இனவாத அமைப்புகள் தமது நோக்கங்களையும், அபிலாஷைகளையும் நிறைவேற்றும் ஒருவராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ செயற்படுவார் என்று நம்புவதால் தான், தமது அமைப்புகளை கலைத்து விட முடிவு செய்திருக்கின்றன.
இதன் மூலம், நாட்டுக்கும், புதிய ஜனாதிபதிக்கும் அந்த அமைப்புகள் கொண்டு செல்லும் செய்தி, பாரதூரமானவையாகவே உள்ளன.
குறித்த பேரினவாத அமைப்புகளின் வழியில்- அவற்றின் தேவையை நிறைவு செய்பவராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ நடந்து கொள்ள முனைந்தால், அது சிறுபான்மையினரை அவரிடத்தில் இருந்து இன்னும் கூடுதலாகவே அந்நியப்படுத்தும்.
ஏற்கனவே அவர்கள் அவரிடத்தில் இருந்து வெகுதூரம் விலகி இருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகளின் பிரதிநிதியாகவோ, அவர்களின் எதிர்பார்ப்புக்கமைய ஆட்சி செய்யும் ஒருவராகவோ கோத்தாபய ராஜபக் ஷ நடந்து கொள்வாராயின், அது நாட்டில் இனரீதியான கொந்தளிப்பை இன்னும் தீவிரப்படுத்தும்.
பொது பலசேனா, சிங்கள ராவய போன்ற அமைப்புகள் கலைக்கப்படுவது என்பது முக்கியமான செய்தி அல்ல. அவற்றின் பிரதிநிதியாக யார் தொடரப் போகிறார் என்பது தான் முக்கியமான விடயம்.
அதைவிட இந்த அமைப்புகள் ஒன்றும் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் தொடங்கப்படவில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் தான் உருவாகின. அவர் மீது இந்த அமைப்புகள் நம்பிக்கை வைத்திருந்தால் இந்த அமைப்புகள் உருவாகியிருக்காது.
அவரை விட, சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புகள் கோத்தாபய ராஜபக் ஷவை தமது இரட்சகராக நம்பத் தொடங்கியிருக்கின்றன என்பது, இப்போது முக்கியமான ஒரு செய்தி. இது மஹிந்த ராஜபக் ஷவுக்கும், அவரது வழிவரும் வாரிசுகளுக்கும் கூட, நல்ல செய்தியாக இருக்காது.
தேர்தலுக்கு முன்னர், மஹிந்த ராஜபக் ஷ நாட்டுக்கு இன்னொரு தலைவர் தேவையில்லை என்றும் சிறந்த நிர்வாகி ஒருவரே தேவைப்படுகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது தலைவராக தான் இருக்கிறேன் என்றும், தனக்குக் கீழ் பணியாற்றும் ஒரு நிர்வாகியாகவே ஜனாதிபதி தேவைப்படுகிறார் என்பதுமே அவரது கருத்தாக இருந்தது. ஆனால், சிங்கள பௌத்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ள கோத்தாபய ராஜபக் ஷவை, மஹிந்தவை விடவும் மேலான தலைவனாக அடையாளப்படுத்த சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் முயற்சிக்கின்றன. இந்த நிலையில், ராஜபக் ஷவினருக்குள் எந்தளவுக்கு ஒத்துப்போகும் நிலை இருக்கும் என்பதில் கேள்விகள் உள்ளன. இந்த கேள்விகளில் இருந்தே, அடுத்த விவகாரத்துக்கு வருவோம். அதற்கும் இந்த கேள்விகளுக்கும் தொடர்புகள் உள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்றதும், மஹிந்த ராஜபக் ஷ வெளியிட்ட முதலாவது அறிக்கையிலேயே, 19 ஆவது திருத்தத்தை மாற்றியமைப்பதற்கான சமிக்ஞையை வெளியிட்டிருந்தார்.
அதற்குப் பிறகு, பசில் ராஜபக் ஷ இன்னும் விரிவாக அது பற்றி தகவல்களை வெளியிட்டார்.
19 ஆவது திருத்தச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும், அதில் ஒரு சில நல்ல விடயங்கள் இருந்தாலும், ஏனையவை மோசமான விடயங்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ராஜபக் ஷவினரின் பார்வையில் 19 ஆவது திருத்தச்சட்டம் ஒரு மோசமான அரசியலமைப்பு ஏற்பாடு தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் அது அவர்களின் குடும்பத்தினரின் நலன்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று.
மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தியது அந்த திருத்தம் தான். அவருக்குப் பதிலாக அவரது மகன் நாமல் ராஜபக் ஷவை போட்டியில் நிறுத்த முடியாமல் தடுத்ததும் 19 ஆவது திருத்தம் தான். பசில் ராஜபக் ஷவை அரசாங்கத்துக்குள் உள்நுழைய முடியாத படி தடை போட்டிருப்பதும் இந்த திருத்தச் சட்டம் தான்.
இவை தவிர, தற்போது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷ வந்திருந்தாலும், தாம் நினைத்தவாறு அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாமல் தடுத்து வைத்திருப்பதும் 19 ஆவது திருத்தச்சட்டம் தான்.
எனவே 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மீது அவர்களின் குறி விழுந்திருப்பது ஆச்சரியப்படும் ஒரு விடயமன்று.
ஆனால் நாட்டுக்கு பல நல்ல விடயங்களை அறிமுகப்படுத்தியது இந்த 19 ஆவது திருத்தச்சட்டம் தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்டன, பாராளுமன்றத்தின் அதிகாரம் வலுப்படுத்தப்பட்டது. சுதந்திரமான ஆணைக்குழுக்கள்- குறிப்பாக தேர்தல் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு என்பன நிறுவப்பட்டமை என்பன முக்கியமான மாற்றங்கள்.
சுதந்திரமான ஆணைக்குழுக்கள் தான் ஜனநாயக ரீதியான தேர்தலை உறுதிப்படுத்தின. நீதித்துறையில் ஓரளவுக்காவது சுதந்திரத்தை உறுதி செய்துள்ளன.
ஆனாலும், 19 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதில் மஹிந்த- பசில் தரப்புகள் தீவிரமாக இருக்கின்றன என்றால், அதற்கு ஒரு காரணம், ராஜபக் ஷ குடும்பத்தின் ஆதிக்கம் இன்னும் ஆழமாக காலூன்றுவதற்கு அது தடையாக இருப்பது தான்.
கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியானது மஹிந்த ராஜபக் ஷவினதும் அவரது வாரிசுகளினதும் அரசியல் எதிர்காலத்துக்கு சவாலானது. ஏனென்றால் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற தலைவராக அவர் மாறியிருக்கிறார்.
இது மஹிந்த ராஜபக் ஷவை கண்டுகொள்ளாத நிலைக்கு, அவரை மேவிக் கொண்டு எழுச்சி பெறும் நிலைக்கு இட்டுச் சென்று விடக் கூடும்.
அதைவிட, 19 ஆவது திருத்தமானது, ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை வைத்திருப்பவர்களுக்கிடையில் அதிகார மோதல்களை ஏற்படுத்தக் கூடியது என்ற கருத்தும் அரசியலாளர்கள் மத்தியில் உள்ளது.
இது உறவு முறை அண்ணன் – தம்பியாக இருந்தாலும், சிக்கலை ஏற்படுத்தி விடக் கூடும்.
இவ்வாறான நிலையில், மஹிந்த- பசில் தரப்பு 19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதில் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியமில்லை. அவர்கள் இதனை தேர்தலுக்கு முன்னரே கூறியிருந்தனர்.
ஆனாலும் அதில் விரைவாகச் செயற்பட முனைவதும், நாமல் ராஜபக் ஷவுக்கு மஹிந்த ராஜபக் ஷ கூடுதல் முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்திருப்பதும் கவனிக்கத்தக்க விடயங்கள்.
இந்தியப் பயணத்தின் போது நாமலை அழைத்துச் சென்று புதுடெல்லி தலைவர்களுக்கு அறிமுகப்படுத்திய மஹிந்த ராஜபக் ஷ, அதற்குப் பின்னர் கடந்தவாரம் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் வந்து சந்தித்த போதும், நாமல் ராஜபக் ஷவை தன்னுடன் வைத்திருந்தார்.
இது மஹிந்த ராஜபக் ஷ தனதும் தனது வாரிசுகளினதும் அரசியலில் மிக கவனமாக இருக்கிறார் என்பதை புலப்படுத்துகிறது.
இவ்வாறான நிலையில், சிங்கள பௌத்தர்களின் தலைமைத்துவத்துக்கான போட்டி வெளியே இருந்து வரப்போவதில்ல, என்றே தெரிகிறது.
-சத்ரியன் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment