மழைக்காற்று தொடர்கதை - அங்கம் 12 - முருகபூபதி


வழக்கம்போன்று அபிதா அன்றும் அதிகாலையே துயில் எழுந்துவிட்டாள். முதல்நாள் இரவு அங்கிருப்பவர்கள் கட்டில்களுக்குச்சென்ற பின்னரும் விழித்திருந்து அந்த இரண்டு மாணவர்களின்  நாவன்மைப்போட்டிக்கான உரையை எழுதி,  திருத்தங்கள் செய்து முடிக்க பன்னிரண்டு மணியும் கடந்துவிட்டது.
ஜீவிகாவிடம் இரண்டு நீண்ட கடித உறைகளை வாங்கிவைத்திருந்தாள். அவற்றில் அந்த உரைகளை வைத்து, தனது அறையில் படுக்கை மீது வைத்திருந்தாள்.
காலை ஐந்து மணிக்கு அலார்ம் வைத்து எழுந்தவுடன், தேநீர் தயாரித்து அருந்தியவாறு, அந்த  உரையை மீண்டும் எடுத்து படித்துப்பார்த்தாள்.  அவளுக்கு பூரண திருப்தி.
இம்மாணவர்களுக்கு இவ்வாறு பேச்சு எழுதிக்கொடுத்ததை, ஊருக்குச்சென்று இன்றோ நாளையோ திரும்பவிருக்கும் கற்பகம் ரீச்சர் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்போகிறாள்..?  என்ற கவலையும் யோசனையும் அபிதாவுக்கு வந்தது.
இங்கே, ஜீவிகாவும் சுபாஷினியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் முறுகிக்கொண்டிருக்கிறார்கள். கற்பகம் ரீச்சர் வீட்டில் இல்லாதபோது என்னவெல்லாமோ  நடந்துவிட்டன.
சுபாஷினி தான் திட்டமிட்டவாறு இன்று பெட்டி படுக்கைகளுடன் மூட்டை கட்டிவிடுவாளோ..?  என்ற கவலையும் அபிதாவை ஆட்கொண்டது.
 “ நான் ஏன் இதற்கெல்லாம் அநாவசியமாக கவலைப்படவேண்டும். இந்த வீட்டுக்கு வேலைக்காரியாக வந்த எனக்கு இவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் ஏன் எனக்கு  தீவிர அக்கறை. நானும் ஒரு பெண்ணாக இருப்பதனாலா..? 
இறுதிப்போருடன் பார்த்திபனின் உறவுகளின் புறக்கணிப்பு நாடகங்களினால்  தனித்துப்போயிருந்த எனக்கு கிடைத்திருக்கும் இந்த அடைக்கலத்தில் அன்பைத் தேடுவதற்கான உந்துதல் மனதில் தோன்றியிருக்கிறதா..?

மனதில் எஞ்சியிருக்கும் கணவன் பார்த்திபன், செல்வமகள் தமிழ்மலர் நினைவுகள் அடிக்கடி வந்து வாட்டிக்கொண்டிருப்பதிலிருந்தும் அந்தவேண்டாத உறவுகளின் தொல்லைகளிலிருந்து தப்பிச்செல்வதற்காக இங்கே வந்திருந்தாலும், கடந்த கால பசுமையான நினைவுகளும் கசப்பான அனுபவங்களும் ஏன் தொடர்ந்தும் மனதில் உழன்றுகொண்டிருக்கின்றன..?
நினைக்கத் தெரிந்த மனதிற்கு மறக்கத்தெரியவில்லையே!
அபிதா,  சிரமபரிகாரம் செய்துவிட்டு வந்து, வீட்டின் பின்புறமும் முன்புற முற்றத்திலும் பூத்திருந்த நந்தியாவட்டை, நித்திய கல்யாணி மரங்களிலிருந்து மலர்களை கொய்துகொண்டு வந்து சிறிய சரம்  தொடுத்து, ஜீவிகாவின் பெரியம்மா ராஜேஸ்வரியின் படத்திற்கு சார்த்திவிட்டாள்.
இந்தக்கடமையையும் நாள்தோறும் தவறாமல் செய்துவரும் அபிதாவுக்கு இறுதிப்போரின் பின்னர்  கடவுள் நம்பிக்கையும் அற்றுப்போயிருந்தது.
அவள் திருநீறு பூசி சுவாமி கும்பிட்டு பல வருடங்களாகிவிட்டன. வீட்டு வேலைக்கென்று வந்தவிடத்தில், அந்த வீட்டின்  சுவாமி அறையையும் கூட்டித்துப்பரவு செய்து காலையும் மாலையும் அங்கு விளக்கேற்றினாலும் கடமைக்காகத்தான் செய்து வந்தாள். படங்களைப்பார்த்து ஒருநாளும் கையெடுத்து வணங்கியதில்லை.
சமையலறை வேலை எப்படியோ, அதுபோன்றதே ஜீவிகாவின் மறைந்துவிட்ட பெரியம்மா ராஜேஸ்வரியின் படத்திற்கு தினமும் பூச்சரம் செய்து அணிவிக்கும் கடமையும்.
அன்றும் அந்த முதல் கடமை முடிந்துவிட்டது. அந்தப்படத்தின் அருகில் இரண்டு ஊதுவத்திகள் எரிந்து மணம் பரப்பத்தொடங்கிவிட்டன.
சுவரிலிருந்து இரண்டு கைகளையும் விரித்தவாறு  புன்முறுவவலுடன்  சத்திய சாயிபாபா ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார். அபிதாவுக்கு அவரிடத்திலும் நம்பிக்கையில்லை. ஆனால், அன்று இந்த வீட்டுக்கு வந்த முதல்நாளன்று அந்த இன்ஸ்பெக்டர், வீட்டை சோதனையிடவந்து, இந்த சாயிபாபா படத்தை  பார்த்துவிட்டுத்தானே விசாரணையை மேற்கொண்டு தொடராமல் அகன்று சென்றான்.
அதனால் அவரது படத்தை பார்க்கும்போதெல்லாம் அபிதா மனதிற்குள் சிரித்துக்கொள்வாள். அந்த வீட்டின் கூடத்தில் அவள் நடமாடும்போது ராஜேஸ்வரியினதும்  சாயிபாபாவினதும் படங்களை பார்க்கும்போது, அவர்கள்  இருவரும் தன்னையே பார்ப்பதுபோலிருக்கிறதே என்ற வியப்பும் அவளுக்கு வருகிறது.
சுவர்களிலிருக்கும்  எவருடைய படத்தையும் பார்த்தாலும்,  அதிலிருப்பவர்கள் தங்களையே பார்ப்பதுபோலத்தானே இருக்கிறது.  எல்லோரும் காலையில் வேலைக்குப்புறப்பட்டுவிட்டால், வீட்டில் தனித்திருக்கும்  தன்னை  அவர்கள் இருவருமாவது சுவரிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கட்டும்.
அபிதா,  மஞ்சுளாவுக்கும் ஜீவிகாவுக்கும் தனித்தனி பிளாஸ்ரிக் கண்டேயினரில்  அப்போது தயாரித்த நூடில்ஸை வைத்து மூடி, அவற்றுடன் கரண்டிகளையும் வைத்தாள்.
ஜீவிகாவும் மஞ்சுளாவும்  துயில் எழுந்துவந்து, தேநீர் அருந்தி வேலைக்குப்புறப்படுவதற்கு தயாரானார்கள். ஆனால், சுபாஷினி மாத்திரம் வெளியே வராமல் கதவை மூடிக்கொண்டு இன்னமும் உறங்குகிறாள். அவள் உறங்குகிறாளா..? அல்லது உறங்குவது போல் பாசாங்கு காட்டுகிறாளா?  என்பது அபிதாவுக்கு புரியவில்லை.
 “ என்ன அபிதா, நேற்று இரவு நீண்ட நேரம் விழித்திருந்தீங்களோ..? அந்தப்பெடியளுக்கு பேச்சு எழுதியாச்சா..?  “ எனக்கேட்டாள் ஜீவிகா.
  ஓம்  “ என்று தலையாட்டினாள் அபிதா.
 “ நீங்கதான் அந்தப்பெடியன்களுக்கு பேச்சுப்போட்டிக்கான பேச்சை எழுதிக்கொடுத்த விடயம் கற்பகம் ரீச்சருக்கு  தெரியவேண்டாம்.  “ என்றாள் மஞ்சுளா.
 “ ஏன்… அப்படி சொல்றீங்க… நான் சொல்லாவிட்டாலும் அந்தப்பிள்ளைகள் அவவிடம் சொல்வாங்க. பேச்சுப்போட்டியின்போது எப்படியோ தெரியத்தானே போகுது. “ என்றாள் அபிதா.
 “ அந்தப்பெடியன்களிடம் நீங்கதான் எழுதித்தந்ததாக கற்பகம் ரீச்சரிடம் சொல்லவேண்டாம் என்று சொல்லிவையுங்க அபிதா.. “ என்று சொன்ன மஞ்சுளா, தனது மதிய உணவுக்கண்டேயினரை திறந்து   வாசத்தை நுகர்ந்தாள்.
 “ பிள்ளைகளிடம் பொய்சொல்லக்கூடாது. அது தவறு. கற்பகம் ரீச்சர் ஊரிலிருந்து திரும்பி வந்தவுடனே நான் அவர்களிடம் சொல்லப்போகும் முதல் செய்தியே  நான்தான் எழுதிக்கொடுத்தேன் என்பதாகவே இருக்கும்.. “
“ இங்கே நடந்ததெல்லாம் சொல்வீங்களா..?  “ என்று ஜீவிகா அடுத்துக்கேட்டதும், அவள் எதனைக்குறித்து அப்படிக்கேட்கிறாள் என்பது அபிதாவுக்கு புரிந்தது.
   யார்… யாரிடம் எது எதை சொல்லவேண்டும், எது எதை சொல்லக்கூடாது என்பதுமா எனக்குத் தெரியாது அம்மா.  “ என்று புத்திசாலித்தனமாகச்சொன்னாள் அபிதா.
  ஜீவிகாவுக்கும் சுபாஷினிக்கும் இடையே தோன்றியிருக்கும் சுமுகமற்ற நிலையின் ரிஷிமூலமே தெரியாதிருக்கும்போது, நான் ஏன் அநாவசியமாக உளறிக்கொட்டவேண்டும். ‘ அபிதா மனதிற்குள் பேசிக்கொண்டாள்.
ஜீவிகாவை ஏற்றிச்செல்ல அவள் பணியாற்றும் பத்திரிகைக்காரியாலய வாகனம் வந்துவிட்டது.
அவசர அவசரமாக தனது அறையிலிருந்து வெளிப்பட்ட மஞ்சுளா,     ஜீவிகா.. பிளீஸ்.. என்னையும் பஸ் ஸ்டேன்டில் இறக்கிவிட்டுப்போறியா… பிளீஸ்  “ எனச்சொல்லிக்கொண்டு வந்தாள்.
இருவரும் புறப்பட்டனர்.
 “ எல்லாம் எடுத்தீங்களா… மொபைல்…  “ ஞாபகப்படுத்தினாள் அபிதா. இவ்வாறு தினமும் இவர்களுக்கு காலையில் நினவுபடுத்துவதையும் அபிதா மற்றும் ஒரு கடமையாக்கிக்கொண்டிருக்கிறாள்.
அந்த வாகனம் புறப்பட்டதன் பின்னர், வெளியே  வாசலுக்கு வந்து கேட்டருகில் நின்று  வீதியின் இருமருங்கும் பார்த்தாள் அபிதா.
மாணவர்கள் சீருடையுடன் இரண்டு திசையிலிருந்தும் பாடசாலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். அருகிலிருக்கும் பிள்ளையார் கோயிலிலிருந்து காலைப்பூசைக்கான மணி  ஓசை கேட்டுக்கொண்டிருக்கிறது.
வீதியால் செல்லும் சிலர், கோயில் வாசலில் நின்று கும்பிட்டும் தோப்புக்கரணம்போட்டும் தலையில் குட்டிக்கொண்டும் தரிசனம் செய்துவிட்டு அகன்றுகொண்டிருக்கின்றனர்.
இந்த  வீட்டுக்கு வந்து இத்தனை நாட்களாகியும் அந்தக்கோயில் பக்கமே அபிதா செல்லவில்லை. கற்பகம் ரீச்சர் அங்கே சென்று எடுத்துவரும் திருநீற்றையும் ஒருநாளும் தீண்டியதும் இல்லை.
அபிதா, அந்த மாணவர்கள் இருவரையும் எதிர்பார்த்து சில நிமிடங்கள் காத்து நின்றாள். பின்னர், கேட்டை மூடிசாத்திவிட்டு உள்ளே வந்தாள்.
சுபாஷினி எழுந்து தேநீர் அருந்திக்கொண்டிருக்கிறாள். அபிதா அவளுக்கு காலை வணக்கம் சொன்னாள்.
   அபிதா, நேற்று நீங்க எழுதிய ஒரு பேச்சை மாத்திரம்தான் படித்தேன். மற்றதையும் தாங்களேன் படித்துப்பார்ப்போம். 
தான் தங்கும் களஞ்சிய அறைக்குச்சென்று அந்த இரண்டு  நீண்ட கடித உறைகளையும் எடுத்துவந்து கொடுத்துவிட்டு, மீண்டும் வாயிலுக்கு வந்து கேட்டைத்திறந்து வீதியின் இருமருங்கும் பார்த்தாள் அபிதா.
அந்த மாணவர்கள் மறந்துவிட்டார்களோ? அவர்களின் வீடுகளும் அவளுக்குத் தெரியாது. அபிதாவுக்கு பதற்றமாக இருந்தது.
சுபாஷினி இரண்டு உரைகளையும் படித்து,  கடித உறையில் வைத்துவிட்டு, கவலையின் ரேகைகளை முகத்தில் படியவைத்தவாறு வந்த அபிதாவை ஏறிட்டுப்பார்த்து,   “ நல்லா எழுதியிருக்கிறீங்க… நீங்கள் ஒரு ரீச்சராக வந்திருக்கவேண்டும்.  “ என்றதும் அபிதாவுக்கு சிரிப்பு வந்தது.
                                 “ கேட்டதை கொடுத்திருந்தால் ரீச்சர் வேலையென்ன அதனைவிட உயர்ந்த வேலைகளும் கிடைத்திருக்கும்… கெட்ட மனிதர்கள்.  மோசமான சமூகம்.    எனச் சொல்லிவிட்டு,   “ அது போகட்டும் இன்றைக்கு நீங்க வேலைக்குப்போகவில்லையா..? 
 “ இல்லை. மனம் சரியில்லை.     என்ற சுபாஷினிக்கு, அபிதாவின் வாழ்விலும் ஏதோ சொல்லமுடியாத மர்மம் இருப்பதுபோல் தெரிந்தது.
 “ அது என்ன கேட்டதை கொடுத்திருந்தால்…. லஞ்சமா…? அல்லது வேறு எதுவுமா…?  “ சுபாஷினிக்கு இருகோடுகள் தத்துவம் நினைவுக்கு வருகிறது.
ஒரு பெரிய கோட்டை வரைந்துவிட்டு, அதனை சிறிய கோடாக மாற்றவேண்டுமானால், அருகில் அதனைவிட பெரிய கோட்டை வரையவேண்டும் என்பார்கள்.
இன்று வீட்டிலிருந்து தனது கதையை அபிதாவிடம் சொல்லி ஆறுதல் தேடவேண்டும் என்றிருந்த சுபாஷினிக்கு, அதனைவிட பெரிய கதை இவளிடமும் இருக்கிறதோ என்ற யோசனையும் வந்தது.
   எனக்குப்பசிக்கிறது. சாப்பிடப்போறன். நீங்களும் வாங்களேன்.  “ என்று சுபாஷினியை அபிதா அழைத்தபோது, கேட்டில் தட்டும் சத்தம் கேட்டது.
 “ அந்தப்பிள்ளைகள் வந்திட்டாங்கபோலிருக்கு  “ எனச்சொல்லிக்கொண்டு அந்த கடித உறைகளுடன்  விரைந்து வந்தாள் அபிதா.
அவள் நீண்டநேரம் எதிர்பார்த்திருந்த அந்த இரண்டு மாணவர்களும் கேட்டருகில் நின்றனர். அவர்களின் நெற்றியில் நீறு துலங்கியது.
 “ இது இன்னும் எவ்வளவு காலத்திற்கு  “ என்று அபிதா மனதிற்குள் நினைத்தாள். அந்த மாணவர்களின் முகத்தில் எதிர்பார்ப்பு – பரவசம் – உற்சாகம் – புன்னகை  இருப்பதைக்கண்டு அபிதாவும் முகம் மலர்ந்தாள்.
எழுதியிருந்ததை அவர்களிடம் நீட்டினாள்.  “ தேங்ஸ் அன்ரி. ரீச்சர் வந்திட்டாங்களா…? வந்தால் சொல்லுங்க. நாங்க மனப்பாடம் செய்து ரீச்சருக்கு முன்னாலும் உங்களுக்கு முன்னாலும் பேசிக்காண்பிக்கின்றோம். தேங்ஸ் அன்ரி    ஒரு மாணவன் சொன்னான்.
அருகிலிருந்த மற்ற மாணவனும் மீண்டும் மீண்டும் இரண்டு முறை நன்றி சொன்னான். அவர்கள் அபிதா கொடுத்ததை வாங்கிக்கொண்டு கையசைத்து நகர்ந்தார்கள்.
அந்த வீட்டிலிருக்கும் பெரிய பெண்களோ, இப்படி ஒருமேடைப்பேச்சை நான்தான் எழுதிக்கொடுத்தேன் என்று கற்பகம் ரீச்சரிடம் சொல்லிவிடவேண்டாம் என்கிறார்கள்.  ஆனால், இந்த சின்னஞ் சிறுசுகள் நேர்மையாக ரீச்சரிடம் சொல்வோம் என்கின்றன.  குழந்தைப்பருவத்தில்  குடியிருக்கும் உண்மை எவ்வாறு வளர்ந்த பருவத்தில் நேர்மாறாகிவிடுகிறது.
பொய், வஞ்சகம், சூது, பொறாமை, ஏமாற்று வேலைகள் வளர்ந்த பின்னர்தான் வருமோ..?
அபிதா கேட்டை மூடி சாத்திக்கொண்டு உள்ளே வருகிறாள்.  சுபாஷினி வாசல் கதவடியில்  நின்றவாறு,    என்னவாம் உங்கட மாணவர்கள்…? கற்பகம் ரீச்சரைத் தேடி இதுவரையில் எந்தவொரு மாணவனும் இங்கே வந்ததில்லை. இப்போது வருகிறார்கள். எல்லாம் அபிதா,  நீங்கள் வந்த நேரம்தான். உண்மையிலேயே நீங்கள் அந்தப்பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த பேச்சு நன்றாக இருந்தது. இந்த வீட்டிலிருந்த பெரிய எருமைகள் சொன்னதையும் கேட்டேன்.   என்ன நடந்தாலும் சரி,  நீங்கள்தான் எழுதிக்கொடுத்தீங்க என்பதை கற்பகம் ரீச்சரிடம் சொல்லிவிடுங்க. அதுதான் சரி.  “ என்றாள் சுபாஷினி.
அபிதா அதனைக்கேட்டு, சுபாஷினியின் கன்னத்தில் செல்லமாக தட்டினாள். அந்தக்கையை எட்டிப்பிடித்த சுபாஷினி,  “ எதிலும் உண்மையாக இருக்கவேண்டும். அதுதான் சரி     எனச்சொல்லிவிட்டு,  ஒரு கணம் அபிதாவின் கண்களை ஊடுறுவிப்பார்த்தாள்.
 “ என்ன… நேற்றைய கோபம் எல்லாம் இப்போது தணிந்துவிட்டதா..? இன்றைக்கு இரவு ஜீவிகா வந்ததும் பேசுங்க. எதனையும் மனம்விட்டுப்பேசினால்தான் நல்லது. கோபத்தை மனதில் வளரவிடாதீங்க.  அது உங்களைத்தான் அழித்துவிடும் “  என்று அவளது கண்களை அபிதாவும் ஊடுறுவிப்பார்த்தவாறு சொன்னாள்.
திடீரென்று சுபாஷினி விம்மி வெடித்து அழுதாள்.
   என்ன… என்ன…  ஏன்…  “அபிதா பதறிக்கொண்டு கேட்டாள்.
 “ நீங்கள் உங்கட குழந்தையை பெற்று வளர்த்து போரிலே  பறிகொடுத்தீங்க. நானோ, பெறாமலேயே  வயிற்றிலேயே  அழித்த பாவி.  எனக்கு மன்னிப்பே இல்லை. 
அபிதா திடுக்கிட்டாள்.
( தொடரும் )




  

-->















No comments: