உள்நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துதல் புதிய ஜனாதிபதி கோத்தபாயவிற்குப் பெரியதொரு சவால்..!


-பி.கே.பாலசந்திரன்
01/12/2019 இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வேறு எந்தவொரு தலைவரும் எதிர்நோக்காத கடுமையான உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியவராக இருக்கின்றார். பொருளாதார ரீதியானதாக இருந்தாலென்ன அல்லது அரசியல் ரீதியாக இருந்தாலென்ன அவரது உள்நாட்டுப் பிரச்சினைகள் வெளிநாட்டுப் பரிமாணம் ஒன்றையும் கொண்டிருக்கின்றன என்பது இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். 
உள்நாட்டுப் பிரச்சினைகள் சர்வதேசமயமாவது 1980 களின் ஆரம்பத்திலிருந்து இலங்கை அரசியலில் ஒரு அம்சமாக இருந்து வருகின்றது. அந்த அம்சம் நெருக்கடிகளின் காலத்தை அநாவசியமாக நீடித்ததன் மூலமாக நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைத் தாமதப்படுத்துகின்றது. அதனால் நெருக்கடிகள் தீவிரமடைந்ததுடன் கையாள முடியாதவையாகவும் மாறின. நாட்டின் நலன்களுக்குப் பாதகமான முறையில் விசேடமாகப் பொதுமக்களைப் பாதிக்கத்தக்க வகையில் பொருளாதாரத்தடைகள் விதிக்கப்படும் நிலையையும் அது உருவாக்கியது. 



உருப்படியாகச் செயற்படாத சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கம் 3.2 சதவீத வளர்ச்சி வீதத்துடனான ஒரு மந்தநிலைப் பொருளாதாரத்தையே கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விட்டுச்சென்றிருக்கிறது. அரசாங்கத்துறையிலும், தனியார்துறையிலும் முதலீடுகள் செய்யப்படவில்லை. வரி செலுத்துகையுடனான சமூகத்தின் ஒத்துழைப்பும் மிகவும் குறைவாகவே இருந்தது. இலங்கையின் சனத்தொகையில் 3 சதவீதத்தினர் மாத்திரமே நேரடி வரிகளைச் செலுத்துகின்றனர். கடன்களை மீளச்செலுத்துவது ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையின் மொத்த வெளிநாட்டுக்கடன் 5540 கோடி அமெரிக்க டொலர்களாக இருக்கிறது. நாட்டின் ஏற்றுமதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. அந்த ஏற்றுமதிக்கான சந்தையும் கூட ஐரோப்பாவுடனும், அமெரிக்காவுடனும் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருக்கிறது. அதன் காரணத்தினால் மனித உரிமை மீறல்கள் என்று கூறப்படும் செயற்பாடுகளுக்காக மேற்கு நாடுகளினால் தடைகள் விதிக்கப்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு ஆட்படக்கூடிய ஒரு பலவீனமான நிலையில் இலங்கை இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் சில வருடங்களுக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வாபஸ் பெற்றிருந்தது.
கோத்தபாய ராஜபக்ஷ தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் (2005 – 2014) பாதுகாப்புச் செயலாளராகவும், நகர அபிவிருத்திச் செயலாளராகவும் பதவி வகித்த போது தன்னை ஒரு சிறந்த நிர்வாகி என்று நிரூபித்திருக்கிறார். அந்தக்காலகட்டத்தில் இலங்கை பெருமளவு பொருளாதார அபிவிருத்தியைக் கண்டது. கோத்தபாயவிடம் தெளிவானதொரு பொருளாதார மீட்சித்திட்டம் இருக்கவில்லை. அதை அவர் தனது இயல்பான கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துவார்.
ஆனால் சிங்கள – தமிழ் பிரச்சினைக்கும், இப்போது புதிதாக சிங்கள – முஸ்லிம் பிரச்சினைக்கும் அவர் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் நழுவிக்கொண்மே போகின்றன. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இந்தப் பிரச்சினைகள் மேலெழுந்தன. அவை சிங்களவர்களில் அதிகப்பெரும்பான்மையினரின் வாக்குகள் கோத்தபாயவிற்குக் கிடைப்பதற்கு வழிகோலின. ஆனால் தமிழர்களும், முஸ்லிம்களும் ராஜபக்ஷவின் பிரதான போட்டியாளரான சஜித் பிரேமதாஸவிற்கே அதிகப் பெரும்பான்மையாக வாக்களித்தனர். 
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்புப் பாணி கோத்தபாய எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து எதிர்வுகூறுவதற்கு அவரது போட்டியாளர்களினாலும், கருத்துருவாக்கிகளினாலும், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பிட்ச் ரேட்டிங்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்களினாலும் எதிர்மறையான முறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மிகவும் உறுதி வாய்ந்தவரான ஜனாதிபதி இவற்றினால் தடுமாற்றமடைய மாட்டார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
அவருக்குக் கிடைத்த பிரம்மாண்டமான மக்கள் ஆணையை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் உள்நாட்டு முனையில் சவால்களை அவரால் எதிர்கொள்ள முடியும் என்கின்ற அதேவேளை, அமெரிக்காவினாலும் ஐரோப்பாவினாலும் ஏற்படுத்தப்படும் வெளிநாட்டுச் சவால்களை சமாளிப்பதென்பது இலகுவானதாக இருக்கப்போவதில்லை. 
வெளிநாட்டு வல்லாதிக்க நாடுகளுக்கு இலங்கையின் தரகு முதலாளித்துவ வர்க்கம் உதவியும், ஒத்தாசையும் வழங்குகின்றது. இலங்கையின் அரசியல் தலைவர்கள் நாட்டின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவிக்காகக் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களை அணுகுவதைப் பழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். உள்ளக நெருக்கடிகளில் தலையீடு செய்வதற்கு வெளிநாட்டவர்களை நாடுவது பழைய பாரம்பரியமாக இருந்து வருகின்றது. ஆனால் வெள்ளைக்கார நாடுகளினால் (போர்த்துக்கல், ஒல்லாந்து, இங்கிலாந்து மற்றும் இப்போது அமெரிக்கா) செய்யப்படுகின்ற தலையீடுகள் இலங்கையின் அரசியல் சமுதாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் அதிக தீங்கு விளைவிப்பவையாக இருந்து வந்திருக்கின்றன. 
சிறுபான்மை இனத்தவரான தமிழர்கள் தான் முதலில் தமது பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தியவர்களாவர். அவர்கள் பிராந்திய சுயாட்சியை அல்லது சுதந்திரத்தைப் பெறுவதற்கு விரும்புகின்றார்கள். இலங்கைக்கு வெளியே அனுசரணையாளர்கள் இல்லாதவர்களான சிங்களவர்களினால் தமிழர்களின் பிரச்சினையை சமாளிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் சூழ்ச்சித்தனமான செயற்பாடுகளை நாடினார்கள். வெளிநாடுகளினால் அச்சுறுத்தப்படும் போது அவர்கள் காட்டப்படும் இடங்களில் கையெழுத்திட்டு விடுவார்கள். ஆனால் தாங்கள் கைச்சாத்திடும் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதைத் தவிர்ப்பதில் மிகவும் இரண்டகமான முறையில் நடந்துகொள்வதில் அவர்கள் சமர்த்தர்கள்.
ஆனால் இறுதி முடிவு முற்றிலும் மகிழ்ச்சிகரமானதாக இருந்ததில்லை. உள்நாட்டிலும், சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் அவர்கள் நம்பகத்தன்மையை இழந்திருக்கிறார்கள். முறைப்படி செய்துகொள்ளப்படும் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்ற காரணத்தினால் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. 1948 ஆம் ஆண்டில் தோன்றிய தமிழர் பிரச்சினை இன்னமும் குமுறிய வண்ணமே இருக்கின்றது. அந்தப் பிரச்சினையை புதுவேகத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குக் கொண்டுசெல்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது. இந்தியாவிடமிருந்தும், மேற்கு நாடுகளிடமிருந்துமு; கூட்டமைப்பு உதவிகோருகின்றது. 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது குற்றஞ்சாட்டிக் கண்டிப்பதற்கு மேற்குலகம் தன்னாலானதைச் செய்யும். 2009 ஆம் ஆண்டிலிருந்து மேற்கு நாடுகள் இலங்கை மீது குற்றஞ்சாட்டுவதற்கு உள்நாட்டுப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பானதும், உறுதிப்படுத்தப்படாதவையுமான சான்றுகளைப் பயன்படுத்தியிருக்கின்றன. தொடர்ச்சியான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் சில தீர்மானங்கள் மேற்குலகத்திற்கு சார்பான ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்கள் போர்க்குற்றங்கள் என்று கூறப்படுபவற்றைக் கையாள்வதற்குப் பொறிமுறைகளை அமைக்குமாறு கோரியதன் மூலமாக சர்வதேச தலையீட்டை வலுப்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பங்கேற்புடனும், தீர்ப்புக்களை வழங்கக்கூடிய அதிகாரங்களுடனும் கூடிய நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றே மேற்குலகின் எதிர்பார்ப்புகளில் அடங்குகின்றது. அடுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. 
வெளிநாட்டு நீதிபதிகளடன் கூடிய நீதி விசாரணைப் பொறிமுறை இலங்கையின் சட்டங்களை மீறுவதாக அமையும். பயங்கரவாதத்திற்கு எதிரான 30 வருடகாலப் போரொன்றிலிருந்து விடுபட்டு, பொருளாதார அபிவிருத்தியைப் படிப்படியாக மீண்டும் தொடங்கியிருக்கும் அரசிடம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச்செய்யுமாறு Nகுட்பது பெருமளவிற்கு உகந்ததொன்றல்ல. மேற்குலகிற்குச் சார்பான முன்னைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களில் கைச்சாத்திட்டிருந்த போதிலும், அதில் வலியுறுத்தப்பட்ட கடுமையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவில்லை. ஏனெனில் அவ்வாறு செய்வது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானதாக இருக்கும் என்பதுடன், அது இனநெருக்கடியைத் தணிப்பதற்குப் பதிலாக மேலும் தீவிரப்படுத்தியிருக்கும். 
என்றாலும் மேற்கு நாடுகள் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்தன. ஏனென்றால் அவ்வாறு செய்யாவிட்டால் அதற்கான மாற்று அந்த நாடுகளைப் பொறுத்தவரை மிகவும் மோசமானதாக இருந்திருக்கும். அதாவது ராஜபக்ஷ குடும்பத்தின் தலைமையிலான அரசாங்கத்தின் மீள்வருகை முன்னைய ராஜபக்ஷ அரசாங்கம் மேற்குலக வல்லரசுகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கப் போரை நிறுத்த மறுத்ததுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலையீட்டையும் எதிர்த்தது. ராஜபக்ஷாக்கள் போரினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவின் உதவியை நாடினார்கள்.
சீனாவின் பிரவேசம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் (2005 – 2014) அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகமொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவின் தலையீடு மேற்குலக நாடுகள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியது. மேற்கிற்கும், கிழக்கிற்கும் இடையில் அமைந்திருக்கும் அந்தத் துறைமுகம் சுதந்திர உலகைச் சுற்றிவளைப்பதற்கு சீனா வகுத்த 'முத்துமாலை"யின் (ளுவசiபெ ழக Pநயசடள) ஒரு பகுதியாக நோக்கப்பட்டது. மேற்குலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு நடவடிக்கையாக விக்கிரமசிங்க அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்கு சீனாவிற்குக் கையளித்தது. இந்த உடன்படிக்கை இந்து சமுத்திரத்தின் மேற்குப் பிராந்தியம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவருவதற்காக சீனா என்றாவதொரு நாள் அதன் கடற்படைத்தளமாக மாற்றும் என்ற பீதியை மேலும் வெளிப்படுத்தியது.

சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்தியது. இலங்கை படைகளின் அந்தஸ்த்து உடன்படிக்கையொன்றை (சோபா) தன்னடன் செய்துகொள்ள வேண்டுமென்று அமெரிக்கா யோசனை முன்வைத்தது. இலங்கைத் துறைமுக வசதிகளைத் தங்குதடையின்றி அமெரிக்க இராணுவம் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இலங்கை அரசியலமைப்பிற்கு முரணான வகையில் அமெரிக்க அதிகாரிகள் அதிவிசேடமான சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய நிலையை அந்த உடன்படிக்கை ஏற்படுத்தும்.
இந்த உடன்படிக்கையின் பாதகத்தன்மையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு செயற்பாடாக மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷனின் (எம்.சி.சி) 48 கோடி டொலர்கள் நன்கொடையை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கையை அமெரிக்கா வற்புறுத்தியது. காணிப்பதிவுகளைக் கணினிமயமாக்குவதற்கும், போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கும் உதவியாகவே இந்த நன்கொடையை வழங்குவதற்கு அமெரிக்க முன்வந்ததாகக் கூறப்பட்டது.
எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே சோபாவிற்கும், எம்.சி.சிக்கும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் தேசியவாதிகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. மேற்குலகிற்கு ஆதரவான இலங்கை அரசாங்கமொன்றின் உடந்தையுடன் இலங்கையின் காணிகள் மேற்குநாட்டு முதலீட்டாளர்களினால் பயன்படுத்தப்படுவதற்கு வசதிசெய்யும் உள்நோக்கத்துடனேயே எம்.சி.சி உடன்படிக்கையை அமெரிக்கா முன்வைத்ததாக சந்தேகிக்கப்பட்டது.
நவம்பர் மாத நடுப்பகுதியில் கோத்தபாய தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்திற்கு வந்த பிறகு அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்கா நல்லாட்சி, நீதி மேம்பாடு, நல்லிணக்கம் மற்றம் மனித உரிமைகளை ஆழப்படுத்துவதில் இலங்கையுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ கூறினார். ஆனால் இந்தத் துறைகள் இலங்கையைப் பொறுத்தவரை வெளிநாடுகள் தலையீடு செய்யக்கூடாதவை என்று கருதப்படுகின்றன. 
'வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா" வெளியிட்ட ஒரு தகவலின்படி பாதுகாப்புப்படைச் சீர்திருத்தங்களையும் கோத்தபாய முன்னெடுக்க வேண்டும் என்று பொம்பியோ விரும்பியதாக அறியமுடிகிறது. அவர் வலியுறுத்துகின்ற அந்தச் சீர்திருத்தங்கள் பெரும்பான்மை சிங்களவர்களினால் வெறுக்கப்படுகின்ற போர்க்குற்றங்கள் என்று கூறப்படுகின்ற செயல்களுக்காக இலங்கைப் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்துவதையும் உள்ளடக்கும். கைது செய்யப்பட்ட படைவீரர்களை விடுவிக்கப்போவதாக கோத்தபாய ஏற்கனவே அறிவித்துவிட்டார். படைவீரர்களின் கைது பாதுகாப்புப்படைகளின் மனவுறுதியைப் பெருமளவிற்குக் குலைத்துவிட்டது என்று கடந்தவாரம் 'பாரத் சக்தி" என்ற இந்தியப் பாதுகாப்பு சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.
எம்.சி.சி உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும் என்று தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி வெளியுறவு அமைச்சர் அலிஸ் வெல்ஸ் கூறியிருந்தார். ஆனூல் அந்த உடன்படிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பு இருப்பதைக் கருத்திற்கொண்டு அதை மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது என்று இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார். 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் சில பிரிவுகள் இலங்கையின் சுயாதிபத்தியத்தையும், சுதந்திரத்தையும் மலினப்படுத்துபவையாக இருப்பதாக அந்தத் தீர்மானங்கள் மீள்பரிசீலனை செய்யப்படும் என்றும் குணவர்தன மேலும் கூறினார். இலங்கை மேற்குலகில் இருந்து தூரவிலகி அணிசேரா நாடுகளை நோக்கிச்செல்லும் என்றும் கூறியிருந்தார். இவையெல்லாம் மேற்குலகுடனும். அமெரிக்காவுடனும் இலங்கையின் பதட்டத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
அதேவேளை இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய எந்தவொரு விடயத்தையும் தனது அரசாங்கம் செய்யப்போவதில்லை என்று கோத்தபாய ராஜபக்ஷ பகிரங்கமாகக் கூறியிருக்கும் நிலையில் இந்தியாவுடனான உறவுகள் சமதளத்திலேயே இருக்கும். அத்துடன் அவர் கல்வித்துறையில், குறிப்பாக தொழில்நுட்பக்கல்வியில் இந்திய முதலீடுகளை வரவேற்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 
அமெரிக்காவைப் போன்றே இந்தியாவும் இனநல்லிணக்கத்தை நோக்கி அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறு இலங்கையைக் கேட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவைப் போலன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலோ அல்லது வெளியிலோ இந்தியா நெருக்குதலைப் பிரயோகிக்கப் போவதில்லை.
ஆனால் மாகாணசபைகள் ஒரு வீண்பணவிரயம் என்று காரணம்கூறி, கோத்தபாயவின் விசுவாசிகள் சிலர் அந்தச் சபைகளை ஒழித்துவிடுமாறு உத்தியோகபூர்வமற்ற முறையில் யோசனையொன்றை முன்வைத்திருக்கிறார்கள். 1987 ஜுலையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையின் விளைவாகக் கொண்டுவரப்பட்டவையே மாகாணசபைகள் என்பதால், அவற்றை ஒழிப்பதற்கு எடுக்கப்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் கசப்பை ஏற்படுத்தலாம்.
ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வழியில் இலங்கை அரசாங்கம் தமிழர்களின் அபிலாசைகளுக்கு இடங்கொடுக்குமேயானால் மாகாணசபைகளைப் பற்றி இந்தியா பெரிதுபடுத்தக்கூடிய சாத்தியமில்லை. இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் செய்யப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பை இலங்கையின் உச்சநீதிமன்றம் இரத்துச்செய்த போது இந்தியா ஆட்சேபிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் பிரதான அக்கறைகள் சீனா தொடர்பில் பாதுகாப்புடனும், இலங்கையில் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் மற்றும் பொருளதார ஒன்றிணைப்பு தொடர்பானவையேயாகும். இந்தியாவின் தற்போதைய நோக்கங்களைப் பொறுத்தவரை இலங்கை இனப்பிரச்சனை அதிமுக்கியத்துவம் மிக்கதாக இல்லை. புதுடில்லி இப்போது உலகசூழ்ச்சிநிலைக்கேற்ப மிகவும் விவேகமான முறையில் விவகாரங்களை அணுகுகிறது. பதவியிலிருக்கும் இலங்கை அரசாங்கத்துடன் சிநேகபூர்வமான உறவுகளைப் பேணுவதுடன் அது திருப்திப்பட்டுக் கொள்கிறது. 
சீனாவைப் பொறுத்தவரை அது பெரும் நிதிவளத்தைக் கொண்ட நாடு என்ற காரணத்தினால் இலங்கையின் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மிகப்பெருமளவு நிதியை வழங்குகின்றதும், முதலீடு செய்கின்றதுமான தனியொரு நாடாக விளங்குகின்றது. ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகைக்காலத்தைத் தற்போதைய 99 வருடங்களிலிருந்து குறைப்பதற்கு இணங்குவதைத் தவிர சீனாவிற்கு வேறு மாற்றுவழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. 
'எமது மக்கள் இதை விரும்பவில்லை. துறைமுகங்கள் போன்ற கேந்திர முக்கியத்துவமுடைய தேசிய சொத்துக்கள் இலங்கையின் கைகளிலேயே இருக்கவேண்டும்" என்று பாரத் சக்திக்கு கோத்தபாய கூறினார். 
இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பில் புதுடில்லிக்கு கோத்தபாய வழங்கிய திட்டவட்டமான உத்தரவாதமும், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் குத்தகைக் காலத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த வேண்டும் என்ற அவரது கருத்தும் சீனாவிற்கு அதிருப்தியை அளித்திருப்பது போல் தோன்றுகிறது.
கோத்தபாய தேர்தலில் வெற்றி பெற்றபோது சீனா உடனடியாக வாழ்த்துக்கூறவில்லை. தாமதமாக அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி சி ஜின்பிங், இலங்கை 'மண்டலமும் பாதையும்" செயற்திட்டத்தின் ஓரங்கம் என்பதை அவர் நினைவுபடுத்தினார். பரஸ்பரம் நம்பிக்கையும், மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் கட்டமைப்பிற்குள் அபிவிருத்தி நோக்குகளை சாதிப்பதற்கான உறுதிப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டவையாக சீன - இலங்கை உறவுகள் விளங்குமென்று நம்புவதாக, சீன - இலங்கை கேந்திர ஒத்துழைப்புக் கூட்டுப்பங்காண்மையில் புதியதொரு அத்தியாயம் திறக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார
ஆனால் ஏனைய நாடுகளில் சீனா செய்திருக்கக்கூடிய முதலீடுகள் தொடர்பான உடன்படிக்கைகள் மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருந்ததைப் போன்று அம்பாந்தோட்டைத் துறைமுகக் குத்தகைக் காலகட்டத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த நாளடைவில் சீனா இணங்கும்.


(நியூஸ் இன் ஏசியா) - நன்றி வீரகேசரி 










No comments: