01/12/2019 நடந்து முடிந்த எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் நாட்டில் பல்வேறு அதிர்வலைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. இத்தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களை இரு துருவங்களாக்கியுள்ளதோடு ஒவ்வொரு கட்சியினதும் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் ஆழமாகச் சிந்திக்கவும் வைத்துள்ளது. சிறுபான்மைக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்காகி விடவில்லை. சிறுபான்மைக் கட்சிகள் தேர்தல் முடிவுகளால் திக்குமுக்காடிப் போயுள்ளன.
எனினும் இச் சமூகத்தினர் ஒன்றுபடுவதற்குப் பதிலாக தமக்குள்ளேயே முரண்பட்டுக் கொள்ளும் பிழையான ஒரு போக்கையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்நிலை பாதக விளைவுகள் பலவும் ஏற்படுவதற்கு உந்துசக்தியாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் கடந்த 16ஆம் திகதி நடந்து முடிந்திருக்கின்றது. இத் தேர்தலில் வெற்றிபெறப்போவது யார்? என்றும் அவர் எத்தனை வாக்குகளைப் பெற்றுக்கொள்வார்? என்றும் வெற்றியாளருக்கு அதிகப்படியாக எத்தனை மேலதிக வாக்குகள் கிடைக்குமென்றும் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். இக்கருத்துகளில் பல விடயங்கள் பொய்த்துப் போயுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக் ஷ நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார். 69 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் இவருக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த வெற்றி உண்மையில் போற்றத்தக்க ஒரு வெற்றியாகவே உள்ளது. நாட்டு மக்கள் கோத்தபாயவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக இவ்வெற்றி அமைந்திருக்கின்றது. இந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் நடந்து கொள்வார் என்று திடமாக நம்பலாம்.
இத்தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் அதிகமான ஆதரவை புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியிருந்தமை தெரிந்த விடயமாகும். எனினும் அவரது வெற்றி சாத்தியமாகாத நிலையில் ஆதரவு வழங்கிய கட்சிகளின் நிலை இப்போது தர்மசங்கடமாகியுள்ளது. இதற்கிடையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தான் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் ஆதரவிலேயே வெற்றி பெற்றதாகத் தெரிவித்திருந்தார். மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்போது சிங்கள மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற முடியும் என்பதை தான் முன்கூட்டியே அறிந்திருந்ததாகவும் தனது வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்களும் பங்காளர்களாக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தபோதும் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். தமிழ், முஸ்லிம் மக்கள் இனியாவது ஒன்றிணைய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கிடையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயவுக்கு பத்து இலட்சம் சிறுபான்மை மக்கள் வாக்களித்திருப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்திருக்கின்றார் என்றாலும் அதை மறைக்க சிலர் முயற்சிப்பதாகவும் அசாத் குற்றம் சாட்டி இருக்கின்றார். கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கட்சிகள் பலவும் தங்கள் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கி இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட சிறுபான்மைக் கட்சிகள் பலவும் இதில் உள்ளடங்கும்.
ஐக்கிய தேசியக் கட்சி
ஐ.தே.க. இந்நாட்டில் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு கட்சியாகும். இக்கட்சியின் மீது மலையக மக்கள் உள்ளிட்டவர்கள் இனம் புரியாத ஒரு பற்றை வைத்திருப்பதும் தெரிந்த விடயமாகும். சிறுபான்மை மக்களின் தோழனாக இக்கட்சி செயற்பட்டது என்று கூறிவிட முடியாது. இக்கட்சியும் பல தடவைகள் சிறுபான்மை சமூகத்தின் மீது தனது கோர முகத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது. இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்து அம்மக்களை நிர்வாணப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியே ஆகும்.
எனினும் பின்னர் இக்கட்சியே இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் வழங்கி தான் செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டது. 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனக்கலவரமானது இந்நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற கறை படிந்த அத்தியாயமாகும். இக்கலவரத்தை உரியவாறு அடக்குவதற்கு ஐ.தே.க. முன்வரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் ஐ.தே.க.வின் மீது இன்னும் இருந்து வருகின்றது. 1983 கலவரம் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை அச்சம் கொள்ளச் செய்திருந்தது. இருப்பைக் கேள்விக்குறியாக்கி இருந்தது. சிறுபான்மையினர் வாழ்வதற்கு இந்த நாடு உகந்த நாடா? என்ற சிந்தனையை 1983 ஆம் ஆண்டு கலவரம் ஏற்படுத்தி இருந்தது.
ஐ.தே.க.வின் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு கணிசமான தீர்வு கிடைத்ததாக இல்லை. நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமரான நிலையிலும் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்கதையாகி இருக்கின்றது. காணி விடுவிப்பும் முழுமை பெறவில்லை. முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகளும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. இவற்றுக்கு மத்தியிலும் சிறுபான்மையினர் அதிகமான ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கே வழங்கி இருந்தனர். சஜித் பிரேமதாச விடாமுயற்சிகளை மேற்கொண்டு புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக இடம்பிடித்தார்.
சஜித்தின் இந்தப் போராட்டம் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. ஐ.தே.க. ஆதரவாளர்கள் ரணிலைக் காட்டிலும் சஜித்தை அதிகமாக நேசித்ததை அவதானிக்க முடிந்தது. ஆனாலும் சஜித் தேர்தலில் வெற்றி பெறவில்லை. சஜித்தின் தோல்விக்கு கட்சிக்குள் ஐக்கியத்தன்மை காணப்படாமை முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, சஜித்தின் பிடிவாதம் மற்றும் வெற்றியை விரும்பாத ரணில், சஜித் தோல்வியடைவதற்கான காய்நகர்த்தல்களை உள்ளுக்குள் மேற்கொண்டதாகவும் கருத்துகள் உலவின.
எவ்வாறெனினும் சஜித்தின் தோல்வியைத் தொடர்ந்து ஐ.தே.க. வுக்குள் மேலும் விரிசல்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்தும் சஜித் மற்றும் ரணிலிடையே இழுபறி நிலைமைகளே இருந்து வருகின்றன. சஜித்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படாவிட்டால் புதிய கட்சி ஒன்றை அவர் ஆரம்பிக்க உள்ளதாகத் தெரியவருகின்றது.
அவ்வாறாக சஜித் புதிய கட்சியை ஆரம்பிக்குமிடத்து ஐ.தே.க. வீழ்ச்சிப் பாதையில் பயணிக்க நேரிடும். ஐ.தே.க.வுக்குள் ரணிலைவிட சஜித்தின் பலம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில் சஜித்தின் புதிய கட்சி கணிசமான ஆதரவாளர்களின் ஒத்துழைப்புடன் வீறுகொண்டெழும் என்றும் நம்பப்படுகிறது.
ஸ்ரீ.ல.சு.க.
அமரர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் இப்போது கேள்விக்
குறியாகியுள்ளது. ஸ்ரீ.ல.சு.கட்சியின் அதிகமான ஆதரவாளர்கள் தற்போது பொதுஜன பெரமுனவுடன் கைகோர்த்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இக்கட்சி பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவளித்த நிலையில் ஸ்ரீ.ல.சு.க.வின் பிறிதொரு குழுவினர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்திருந்தனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஸ்ரீ,ல.சு.க. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவதைக் கண்டித்திருந்தார்.
குமார வெல்கம போன்றவர்களும் சந்திரிகாவுடன் கைகோர்த்திருந்தனர். சந்திரிகாவின் வருகையை வரவேற்றுப் பேசியிருந்த சஜித் பிரேமதாச, புதிய ஜனநாயக முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து நாட்டில் ஜனநாயக அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு உறுதியளிக்கின்ற இத்தருணம் மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் அபிவிருத்தி, சமத்துவம், சுயாதீனம் என்பவற்றை ஏற்படுத்தி செளபாக்கியமானதொரு இலங்கையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு பயணிப்பதே இப்புதிய கூட்டணியின் முக்கிய இலக்காகும் என்று தெரிவித்திருந்தார்.
எனினும் கோத்தபாயவின் வெற்றி தற்போது பொதுஜன பெரமுனவின் செல்வாக்கை அதிகப்படுத்தி இருக்கின்றது. சுதந்திரக் கட்சியினரின் மாற்றுக் குழுவினரின் எதிர்பார்ப்புகள் மழுங்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இக்குழுவினர் பொதுஜன பெரமுனவின் பக்கம் திரும்பிப்பார்க்கின்ற ஒரு நிலையையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
பொதுஜன பெரமுன வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி வைக்கின்ற ஒவ்வோர் அடியும் சுதந்திரக் கட்சி பின்னோக்கி வைக்கின்ற அடியாகவே காணப்படுகின்றது. இந் நிலையில் சுதந்திரக் கட்சி எதிர்காலத்தில் செல்வாக்கிழப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாகக் காணப்படுகின்றன. இக்கட்சியை தூக்கி நிறுத்துவது இனியும் சாத்தியமாகுமா? அவ்வாறு முடிந்தாலும் இன்னும் எத்தனை காலத்துக்கு காத்திருக்க வேண்டிவரும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி
மக்கள் விடுதலை முன்னணியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி இம்முறை தேர்தலில் எதிர்பார்த்த வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. தேசிய மக்கள் சக்தி இத்தேர்தலில் பத்து இலட்சத்துக்கும் பதினைந்து இலட்சத்துக்கும் இடைப்பட்ட வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு பலரிடையே காணப்பட்டது. அவ்வாக்குகள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தும் என்றும் பலர் பேசிக்கொள்வதையும் கேட்கக்கூடியதாக இருந்தது. அனுர குமார திசாநாயக்க ஆளுமை மிக்கவர் என்றும் இந்த ஆளுமை தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்தும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் பேசிக்கொண்டார்கள். எனினும் அனுர குமாரவின் ஆளுமை எதிர்பார்ப்புகளை உரியவாறு நிறைவேற்றவில்லை. இத்தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க நான்கு இலட்சத்து 18 ஆயிரத்து 553 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார். இது எதிர்பார்த்த வாக்குகளாக இல்லை. எனவே மக்கள் விடுதலை முன்னணியும் தனது செயற்பாடுகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
சிறுபான்மைக் கட்சிகளின் வரிசையில் கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிக்கப் போகின்றது-? என்ற எதிர்பார்ப்பு அநேகரிடம் காணப்பட்டது. சிறுபான்மை மக்களே ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக அமைவர் என்ற கருத்தாடல்களுக்கு மத்தியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் அதிகமாகவே பேசப்பட்டது. ஐந்து கட்சிகள் இணைந்து முன்வைத்த 13 அம்சக் கோரிக்கை தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் கவனம் செலுத்தாத நிலையில் கட்சிகளின் நிலைமை தர்மசங்கடமானது. இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு வழங்கி இருந்தது. இது குறித்து பல்வேறு விமர்சனங்களையும் எதிர்க்கட்சியினர் முன்வைத்திருந்தனர். சஜித் பிரேமதாச 13 அம்சக் கோரிக்கைகளையும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் இதன் காரணத்தினாலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவை வழங்குவதற்கு முன்வந்திருப்பதாகவும் சிங்கள மக்களிடையே கருத்துகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையானது பெரும்பான்மை மக்களின் செல்வாக்கை சஜித் பிரேமதாச பெற்றுக்கொள்வதில் ஒரு வீழ்ச்சி நிலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கடந்த கால தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்செல்ல வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. கூட்டமைப்பு கடந்த காலத்தில் ஆட்சியின் இருப்புக்கு தோள் கொடுத்தபோதும் அதன் மூலமாக உரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, காணாமலாக்கப்பட்டோர் குறித்த முன்னெடுப்புகள் உட்பட 13 அம்சக் கோரிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றைச் சாதகமாக்கிக்கொள்ள சாதுரியமான காய் நகர்த்தல்களின் அவசியம் குறித்தும் வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. கூட்டமைப்பு அடுத்த நகர்வுகளை நிதானமாக மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் ஆதிக்கத்தைப் பலப்படுத்தி சாதக விளைவுகளைப் பெற்றுக்கொள்ள முற்படுதல் வேண்டும்.
மலையகக் கட்சிகள்
தமிழ் முற்போக்குக் கூட்டணி ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு வழங்கி இருந்தது. சஜித்தின் வெற்றி உறுதியானது என்று இக்கூட்டணி பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருந்தது. எனினும் இது சாத்தியமாகாத நிலையில் கூட்டணியின் எதிர்பார்ப்பு மழுங்கடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கோத்தாவுக்கு ஆதரவளித்த நிலையில் கோத்தா வெற்றி பெற்றதோடு ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராகியும் இருக்கின்றார். தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு இவருக்குக் கிடைத்திருக்கின்றது. எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் முழுமையாக ஆறுமுகனின் கோரிக்கையை ஏற்று கோத்தாவுக்கு வாக்களிக்கவில்லை என்ற ஒரு கருத்தும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் இ.தொ.கா. கோத்தபாயவுக்கு சுமார் எண்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொடுத்திருப்பதாக மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்த இடைவெளியைக் காட்டிலும் இம்முறை இடைவெளி குறைந்திருக்கின்றது. கோத்தபாயவுக்கு இ.தொ.கா. வழங்கிய ஆதரவு தீர்க்க தரிசனத்துடன் மேற்கொள்ளப்பட்டது. நீண்ட தொலைநோக்கின் அடிப்படையிலேயே இ.தொ.கா.வின் இவ்வாதரவு வழங்கப்பட்டது என்றும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மலையகத்தைப் பொறுத்தவரையில் இ.தொ.கா.வும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் எதிரும் – புதிருமாக உள்ளன. ஒரு கட்சியை இன்னொரு கட்சி விமர்சித்து வருகின்றது. இந்த விமர்சனங்கள் சில வேளைகளில் மூன்றாமவருக்கு வாய்ப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றன. மூன்றாவது தரப்பினர் மலையக சமூகத்தை கைகொட்டிச் சிரிப்பதற்கும் இவை வாய்ப்பாகி இருக்கின்றன. இ.தொ.கா.வும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் கடந்த காலத்தில் வெவ்வேறு கட்சிகளைப் பிரதி நிதித்துவப்படுத்தி இருந்தன. ஜனாதிபதித் தேர்தலிலும் இதுவே நடந்தது. இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இவ்விரு கட்சிகளும் ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் இடம்பெறும் வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். நிலைமைகளைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
இணக்கப்பாடு
இந்நாட்டில் சிறுபான்மையினரின் நிலைமைகளைக் கருத்தில்கொண்டு சிறுபான்மையினர் தங்களுக்குள் ஓர் இணக்கப்பாட்டுடனும் புரிந்துணர்வுடனும் வாழ வேண்டிய ஒரு தேவை அதிகமாகக் காணப்படுகின்றது. விட்டுக்கொடுப்பு, கலந்துரையாடல் இவற்றின் ஊடாக சிறுபான்மைக் கட்சிகள் தமக்குள் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இந்நிலையில் சிறுபான்மைச் சமூகத்தினர் ஒருவருக்கொருவர் இழிவுபடுத்திக் கொள்வதோ அல்லது சேறு பூசிக் கொள்வதோ பிழையான செயலாகும். இத்தகைய நிலைமைகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் வேரறுக்கப்பட வேண்டியதுமாகும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் மலையக மக்களை ‘தோட்டக்காட்டான்’ என்று கூறி கொச்சைப்படுத்தி இருக்கின்றார். இது குறித்து பலரும் கண்டனங்களை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சிறுபான்மையினர் பலம் குறைந்தவர்கள், அரசியலில் வலிமையற்றவர்கள், பொருளாதார மற்றும் ஏனைய வாய்ப்புகளற்றவர்கள், பல துறைகளிலும்
பின்தங்கியவர்கள் என்ற முறையிலேயே அவர்களை இழிவுபடுத்தும் நிலைமைகள், சொற்கள் உலக நாடுகளில் காணப்படுகின்றன. அமெரிக்காவுக்கு கறுப்பு இனத்தவர்கள் அடிமைகளாகப் போனார்கள். ஆபிரிக்காவில் இருந்து இவர்கள் அழைத்துச்செல்லப்பட்டார்கள். இவர்களை ‘நீக்ரோ’ என்று பெயரிட்டு அழைத்தனர். பிற்காலத்தில் ‘கறுப்பர்கள்’ என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். இந்த இரண்டு சொற்களுமே அவர்களை இழிவுபடுத்துவதாக பிற்காலத்தில் விமர்சனங்கள் மேலெழுந்தன. எனவே ’நீக்ரோ’, ‘கறுப்பர்கள்’ என்று கூறுவது இழிசொல் என்பதை உணர்ந்து அது தவிர்க்கப்பட்டு இன்று அவர்களை ‘ஆபிரிக்க அமெரிக்கர்’ என்று அழைப்பதாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் போன்றவர்கள் கூறுகின் றனர்.
அமெரிக்காவில் நீக்ரோ கல்வி என்ற பெயரில் நூல்களும் உள்ளதாகத் தெரிய வருகின்றது. இங்கிலாந்தில் பாகிஸ்தானியர், இலங்கையர், பங்களாதேசத்தவர் எனப் பலரும் உள்ளனர். அவர்களை சுட்டுவதற்கென்று ஒரு சொல் வைத்திருக்கின்றார்கள். அது ஒரு இழி சொல். அவ்வாறு கூறப்படக் கூடாது. தமிழ் நாட்டவர்களை இழிவுபடுத்துவதற்கு கேரளப் பகுதியில் ஒரு சொல் வைத்திருக்கின்றனர். இலங்கையில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் சொற்கள் சிங்களத்தில் இருக்கின்றன. தமிழர் மத்தியிலும் இருக்கின்றது. மலையக மக்களை இழிவுபடுத்தும் இன்னும் சில சொற்களும் இருக்கின்றன. தமிழர்களை இழிவுபடுத்தும் பொதுச் சொல்லும் இன்னும் இருப்பதைக் கூறியாதல் வேண்டும். எனினும் இத்தகைய இழிசொற்களைப் பயன்படுத்தி எந்த ஒரு சமூகத்தையும் இழித்துக் கூறுதல் கூடாது. இவ்வாறு கூறுவதால் அந்தச் சமூகத்தின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்பதோடு அது மனிதாபிமானமும் ஆகாது என்பதையும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். அதாவுல்லாஹ் ஒரு சிறுபான்மைச் சமூகத்தவராக இருந்தபோதும் அவர் பிறிதொரு சிறுபான்மைச் சமூகமான மலையக சமூகத்தை இழிசொல்லைப் பயன்படுத்தி அடையாளப்படுத்தி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயமாகவே உள்ளது.
நாகரிகமடைந்த நாடுகள் இன்று இவ்வாறாக இழிசொற்களைப் பயன்படுத்தி ஒரு சமூகத்தை அடையாளப்படுத்தும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றன. இதனை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளுதல் வேண்டும். இழிசொல் பிரயோகம் தொடர்பில் முஸ்லிம் அமைப்புகளும் கண்டனத்தை வெளியிடுதல் வேண்டும். இலங்கை பல்லின மக்களும் வாழுகின்ற ஒரு நாடாகும். இங்கு ஒவ்வொரு இனத்தவரதும் கலாசார –பண்பாட்டு –விழுமியங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஓரினம் தனது கலாசாரத்தைப் பேணி முன்செல்கின்ற அதேவேளை ஏனைய இனத்தவரது கலாசாரத்துக்கும் மதிப்பளித்து உரியவாறு பேணுவதற்கு ஒத்துழைத்தல் வேண்டும். இந்த நிலைமை இல்லாதவிடத்து முரண்பாடுகளும், பிணக்குகளும், குரோதங்களும், விரும்பத்தகாத நிகழ்வுகளும் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். எனவே இந்த நிலை தொடர்பில் அவதானம் செலுத்துவதோடு ஆழமாகச் சிந்தித்துச் செயற்படுதலும் வேண்டும். ஓர் இனம் இன்னொரு இனத்தை இழிவுபடுத்துவது நியாயமானதல்ல. இதேவேளை மலையகச் சமூகம் இப்போது பல்வேறு துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகின்றது. பட்டதாரிகள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளனர். சமூக நிலைமைகள் முன்னேற்றம் கண்டுள்ளன. கல்வி மையச் சமூகம் என்ற நிலையை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றது. எனவே மலையக சமூகத்தை குறைத்து மதிப்பிட யாரும் முனைதல் கூடாது. இச்சமூகத்தின் சமகால நிலைமைகளைப் புரிந்துகொண்டு கருத்துகளை வெளியிட வேண்டும்.
நல்லிணக்கம்
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களை இரு துருவங்களாக ஆக்கியுள்ளதாக கருத்துகள் பலவும் வெளிப்படுத்தப்பட்டு வருவது தெரிந்த விடயமாகும். இந்நிலையில் சிங்கள மக்களுக்கிடையேயும் சிறுபான்மை மக்களுக்கு இடையேயும் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டு அவர்களை ஐக்கியப்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. சிறுபான்மை இனத்த வருடனான நல்லிணக்கச் செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு அபிவிருத்தியே ஒரே வழி என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். இதேவேளை புதிய ஜனாதிபதி சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறை வேற்றும் வகையில் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கெளரவம் தொடர்பில் தேசிய நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுப்பார் என்று இந்தியா எதிர்பார்த்துள்ளது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு தீர்வை எட்டுவதற்கு தேசிய நல்லிணக்க முயற்சிகளை இலங்கை அரசாங் கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா எதிர்பார்த்திருப்பதை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
ஜனாதிபதி கோத்தபாயவின் வெற்றிக்கு சிறுபான்மை மக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கவில்லை என்பது ஒரு குறையாக உள்ளது. எனவே அவர் அடுத்த தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை அதிக மாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் முக்கியஸ்தர்கள் பலரும் வலியுறுத்தி இருக்கின்றனர். ஜனாதிபதி கோத்தபாயவிடம் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் வகையிலமைந்த பல்வேறு திட்டங்கள் காணப்படுகின்றன. 'இலங்கையர்' என்ற பொது வரையறைக்குள் நாட்டு மக்களை ஐக்கியப்படுத்தி ஒன்றிணைக்கக் கூடிய வல்லமை, ஆற்றல் மிக்கவராக ஜனாதிபதி கோத்தபாய விளங்குகிறார்.
புதிய ஜனாதிபதி சகல இனங்களுக்கிடையிலும் இன, மத, மொழி பேதமின்றி சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம், நம்பிக்கை, பாதுகாப்பு ஆகியன நிலைகொள்ளும் வகையில் நிச்ச யம் செயற்படுவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா போன்றவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இதேவேளை தமிழ், முஸ்லிம் மக்களை தன்னுடன் இணைந்து பணியாற்ற வருமாறும் ஜனாதிபதி கோத்தபாய அழைப்பு விடுத்திருக்கின்றார். இதற்கேற்ப ஜனாதிபதிக்கும் ஒத்துழைப்பு வழங்கி நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்வது மிகவும் அவசியமாகும்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment