பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்தரதாஸ் - பகுதி 22


நிறைகுடம்

சிறியளவில் படத்தயாரிப்பில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறியவர்கள் முக்தா பிலிம்ஸ் ராமசாமி சீனிவாசன் சகோதரர்கள்.  ஜெமினி ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் என்று இவர்களின் நடிப்பில் படங்களை உருவாக்கிய சகோதரர்களுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. அந்த ஆவலின் விளைவே நிறைகுடம் படம்!

சிவாஜியின் திரைவாழ்வின் ஆரம்பகாலம் முதலே முக்தா சீனிவாசனுடனான அறிமுகம் இருந்தே வந்துள்ளது.  பின்னர் சிவாஜி சீனிவாசன் இருவரும் காமராஜரின் காங்கிரஸ் கட்சியில் அங்கத்துவர்களாகவும் பணியாற்றினார்கள்.  இதனால் இருவருடையே ஏற்பட்ட நெருக்கமே படம் தயாரிப்பதற்கு ஏதுவானது.

தன்படங்களில் நடிக்கும் நடிகர்களுடன் பேரம் பேசி குறைந்த சம்பளத்திற்கு அவர்களை ஓப்பந்தம் செய்வதற்கு பெயர் போனவர் முக்தாபிலிம்ஸ் தயாரிப்பாளர் ராமசாமி.  அந்த அடிப்படையில் நிறைகுடம் படத்திற்கு சிவாஜியும் ஒப்பந்தமானார்.

மருத்துவ கல்லூரி மாணவர்களான சிவாஜியும் முத்துராமனும் நெருங்கிய நண்பர்கள்.  முத்துராமனின் தங்கை வாணிஸ்ரீயை சிவாஜி விரும்கிறார்.  இரண்டு நண்பர்களும் இணைந்து வாணிஸ்ரீயை ஏமாற்ற தமக்குள் சண்டை போடுவதுபோல் நடிக்கிறார்கள்.  சந்தர்ப்பவசத்தால் கார் விபத்தில் முத்துராமன் இறந்துவிட சிவாஜிதான் திட்டமிட்டு இக் கொலையை செய்துவிட்டதாக வாணிஸ்ரீ நம்புகிறார்.  விபத்தில் அவர் கண் பார்வையும் பறிபோகிறது.  அவருக்கு வாழ்வு கொடுக்க சிவாஜி அவரையே மணக்கிறார்.  கண் பார்வை மீண்டும் வாணிஸ்ரீ க்கு கிட்டியதா அவர் சிவாஜியை கணவனாக ஏற்றுக் கொண்டாரா இதுதான் நிறைகுடம் படத்தின் கதை.

படத்திற்கு கதையை எழுதியவர் பிற்காலத்தில் பிரபல இயக்குனராகத் திகழ்ந மகேந்திரன்.  இவரின் கதைக்கு திரைக் கதை வசனத்தை எழுதியவர் சோ.  நகைச்சுவை வசனங்களை எழுதுவதில் புகுந்து விளையாடிய சோவுக்கு சிவாஜி வாணிஸ்ரீ பேசும் காதல் வசனங்களை எழுதுவதற்கு சரிப்பட்டு வரவில்லை.  அதற்கு அவர் நாடியது கண்ணதாசனை!  காதல் வசனங்களை கவிஞர் எழுத அவை படமாக்கப்பட்டன.  ஆனால் வசனங்களை பார்த்ததும் இது சோவின் வசனமல்ல என்று சிவாஜி புரிந்து கொண்டார்.


சோவும் உண்மையை சிவாஜியிடம் ஒப்புக் கொண்டார்.  படத்தின் கதையை கெடுத்து விட்டீர்கள் என்று மதேந்திரன் சோவை குற்றம் சாட்டினார்.  ஆனால் அவர் மீது கோபப்படாத சோ மகேந்திரனை பின்னர் அழைத்து தனது துக்ளக் பத்திரிகையில் உதவி ஆசிரியராக அமர்த்திக் கொண்டார்.

நிறைகுடத்தில் சோ மனோரமா வி.கே.ராமசாமி சுந்தரராஜன் ஆகியோரும் நடித்திருந்தனர்.  ஓரளவு சீரியஸான கதைக்கு சோ மனோரமாவின் நகைச்சுவை ஒத்தடமாக அமைந்தது.

கண்ணதாசனின் பாடல்களுக்கு வி.குமார் இசையமைத்திருந்தார்.  கண்னெரு பக்கம் நெஞ்சொரு பக்கம், விளக்கே நீ கொண்ட ஒளிநானே ஆகிய இரு பாடல்களும் பிரபலமடைந்தன.  வி. குமார் இசையமைத்த ஓரே சிவாஜி படம் இதுதான்.

ஏற்கனவே உயர்ந்த மனிதனில் சில காட்சிகளில் மட்டும் சிவாஜிக்கு ஜோடியாக வந்த வாணிஸ்ரீ இந்தப் படத்தில் முழுமையாக இணைந்தார்.  பின்னர் இந்த ஜோடி, வெற்றி ஜோடியாக பல படங்களில் பவனி வந்தனர்.  முக்தாபிலிம்சும் பின்னர் பல படங்களை சிவாஜியில் நடிப்பில் உருவாக்கி வெற்றி கண்டது!




No comments: