இங்கிலாந்தில் கொள்கலனிலிருந்து மீட்க்கப்பட்ட வியாட்நாமியர்களில் சடலங்கள் தாய் நாட்டிற்கு!
சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்மீது மிளகாய்த்தூள் வீச்சு
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் அசஞ்சே சிறையில் உயிரிழக்கும் ஆபத்து- 60 வைத்தியர்கள் கடிதம்
ஹொங்கொங் தேர்தலில் ஜனநாயக ஆதரவு குழுக்கள் பெரும் வெற்றி
ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல் இடம்பெற்ற நகர்களுக்கு பாப்பரசர் முக்கியத்துவ விஜயம்
லண்டனில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட உஸ்மான் கானின் அச்சமூட்டும் கடந்தகாலம்
வடகொரியா ஜப்பானிய கடலுக்குள் இரு ஏவுகணைகளை ஏவிப் பரிசோதனை
ஹொங்கொங் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தால் பதிலடி ; அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
இங்கிலாந்தில் கொள்கலனிலிருந்து மீட்க்கப்பட்ட வியாட்நாமியர்களில் சடலங்கள் தாய் நாட்டிற்கு!
27/11/2019 இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பகுதியில் கொள்கலன் ஒன்றிலிருந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 வியட்நாமியர்களில் சடலங்களில் 16 பேரின் சடலங்கள் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வியட்நாம் செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.
இதன்பின்னர் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சொந்த இடங்களுக்கு அம்பியூலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி லண்டனுக்கு கிழக்கே உள்ள எஸ்ஸெக்ஸ் என்ற பகுதியில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவ்வாறு சடலங்களாக மீட்க்கப்பட்டவர்கள் 15 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்.
அத்துடன் அவர்களுள் 31 ஆண்களும் 8 பெண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்மீது மிளகாய்த்தூள் வீச்சு
26/11/2019 இந்தியாவில் சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் மீது கொச்சியில் மிளகாய்த்தூளை மர்ம நபர்கள் வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை.
இருப்பினும் இந்த ஆண்டு சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது இல்லை என்பதில் கேரள அரசு உறுதியாக இருந்து வருகிறது. சபரிமலைக்கு செல்லும் பெண்களை கேரள அரசு திருப்பி அனுப்பிவருகிறது.
இதனிடையே கொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகே திருப்தி தேசாயுடன் வந்த பிந்து அம்மணி என்பவர் மீது சிலர் மிளகாய்த்தூளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு திருப்தி தேசாய் உள்ளிட்டோர் சபரிமலை செல்ல முயன்றபோது போராட்டம் நடத்தப்பட்டது. அதனால் அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
26/11/2019 லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் அசஞ்சேக்கு தீவிர சிகிச்சை தேவை என்று 60க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இணைந்து இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு உலகமெங்கும் பிரபலமானவர், ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இந்த விவகாரத்தில் ஜூலியன் அசஞ்சேயை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டியது. இதற்கிடையே சுவீடனில் இவருக்கு எதிராக 2 பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர்.
இதனால் நாடு கடத்தும் சூழ்நிலை உருவானதால் கடந்த 2012ஆம் ஆண்டு அவர், லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அசஞ்சேக்கான அடைக்கலத்தை ஈக்குவடார் அரசு திடீரென வாபஸ் பெற்றதால் கடந்த ஏப்ரல் மாதம் அவர் லண்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டில் 50 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லண்டனின் புறநகரில் உள்ள பெல்மர்ஷ் சிறையில் அசஞ்சே அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தனிமை சிறையில் வைக்கப்பட்டு உள்ளதால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது.
இந்த நிலையில் அசஞ்சேயின் உடல் நிலை தொடர்பாக 60-க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இணைந்து இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “அசாஞ்சே, மனச்சோர்வு உள்ளிட்ட உளவியல் பிரச்சினைகளாலும், பல் மற்றும் தோள்பட்டை தொடர்பான நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக ஒரு பல்கலைக்கழக வைத்தியசாலையில் முழுமையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவுஸ்திரேலியாவை சேர்ந்த வைத்தியர் லிசா ஜான்சன் தெரிவிக்கையில்,
“சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள அசஞ்சே வைத்தியரீதியாக தகுதியானவரா என்பதை தீர்மானிக்க ஒரு சுதந்திரமாக வைத்திய மதிப்பீடு தேவை” என தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
ஹொங்கொங் தேர்தலில் ஜனநாயக ஆதரவு குழுக்கள் பெரும் வெற்றி
25/11/2019 ஹொங்கொங்கில் இடம்பெற்ற மாவட்ட சபை தேர்தல்களில் ஜனநாயக ஆதரவு இயக்கம் எதிர்பாராத பாரிய வெற்றியை பெற்றுள்ளது.
ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் வேட்பாளர்கள் இதுவரையில் 278 ஆசனங்களை கைப்பற்றியுள்;ளனர்.
சீனா சார்பு வேட்பாளர்கள் 42 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்த தேர்தலில் சீனாசார்பு தரப்பின் முக்கிய வேட்பாளரான யூனிஸ் கோ தோல்வியடைந்துள்ளார்.
இந்த வேட்பாளர் ஹொங்கொங் காவல்துறையினருக்கு ஆதரவாக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார்,மேலும் இவர் ஜனநாயகம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்கிய கும்பல்களுடன் தொடர்பை பேணி வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே இவர் சில வாரங்களிற்கு முன்னர் கத்திக்குத்துக்கு இலக்கானார், இந்த தேர்தல் முடிவினை சீனா சார்பு வேட்பாளர் வானம் தலைகீழாக மாறியது போன்றது என வர்ணித்துள்ளார்.
இதேவேளை ஹொங்கொங்கில் பாரிய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து வரும் அமைப்பின் தலைவரான ஜிம்மி சாம் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த தேர்தல் முக்கியமானது ஏனெனில் இதுவே ஆட்சியாளர்களிற்கும் ஜனநாயக ஆதரவு கட்சிகளிற்கும் இடையிலான முறைப்படியான மோதல் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர் ஜொசுவா வொங் இந்த தேர்தலில் nவைவற்றிபெற்றுள்ளார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என அவர் வர்ணித்துள்ளார்.
ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த தேர்தல் ஆட்சியாளர்களிற்கான ஆதரவிற்கான பரிசோதனை களம் என வர்ணிக்கப்பட்ட நிலையிலேயே முடிவுகள் ஜனநாயகம் கோரிடும் போராடும் இயக்கங்களிற்கு சாதகமாக அமைந்துள்ளன.
ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளாமலிருந்த பெரும்பான்மையானவர்கள் தங்களிற்கு ஆதரவளிப்பார்கள் என ஆட்சியாளர்கள் கருதினர் .
எனினும் அது சாத்தியமாகவில்லை. நன்றி வீரகேசரி
ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல் இடம்பெற்ற நகர்களுக்கு பாப்பரசர் முக்கியத்துவ விஜயம்
25/11/2019 ஜப்பானுக்கு முக்கியத்துவம் மிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை அணு குண்டுத்தாக்குதலுக்குள்ளான நாகசாகி மற்றும் ஹிரோஷிமா பிராந்தியங்களிலுள்ள போர் ஞாபகார்த்த ஸ்தலங்களுக்கு விஜயம் செய்தார்.
இதன்போது அவர் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்தப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட அணு குண்டுத் தாக்குதலில் சிக்கி உயிர் தப்பி தற்போதும் வாழும் மக்களுடன் சந்திப்பை மேற்கொண்டார்.
அமெரிக்காவால் ஹிரோஷிமா நகர் மீது நடத்தப்பட்ட உலகின் முதலாவது அணுகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 140,000 பேரும் அதற்கு 3 நாட்கள் கழித்து நாகசாகி நகர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது அணுகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 74,000 பேரும் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் நாகசாகி நகரில் கூடியிருந்த பெருந்தொகையான மக்கள் மத்தியில் உரையாற்றிய பாப்பரசர், அணு ஆயுத உற்பத்தி மற்றும் அதிகரித்து வரும் ஆயுத விற்பனை என்பவற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அணு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மலர்க்கொத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அணுகுண்டுத் தாக்குதலையடுத்து கைக்குழந்தையான இறந்த சகோதரனின் உடலை தூக்கி வைத்திருக்கும் சிறுவன் ஒருவனை வெளிப்படுத்தும் புகைப்படத்துக்கு அண்மையில் நின்றவாறு பாப்பரசர் தனது உரையை ஆற்றினார்.
பரஸ்பர அழிவு தொடர்பான பயம் மற்றும் முழுமையாக நிர்மூலமாக்கப்படும் அச்சுறுத்தல் என்பன சமாதானத்துக்கு பொருத்தமற்றவையாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், அணு ஆயுத உற்பத்தியை தடுக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
அவர் ஜப்பானுக்கான இந்த விஜயத்தின்போது நாகசாகியிலுள்ள விளையாட்டு மைதானமொன்றில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது மேற்படி பிராந்தியத்திலுள்ள மக்களின் ஆன்மாவுக்கு அணு குண்டுத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள காயம் குணப்படுத்துவதற்கு சிரமமானது எனப் பாப்பரசர் கூறினார். இந்நிலையில் மூன்றாம் உலகப் போரொன்று ஏற்படும் பட்சத்தில் அனைத்தும் சின்னாபின்னமாகிவிடும் என அவர் எச்சரித்தார்.
அத்துடன் ஜப்பானில் தமது மத நம் பிக்கைக்காக சித்திரவதைக்குள்ளாகி மரணத்தைத் தழுவிய சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு பாப்பரசர் அஞ்சலி செலுத்தினார்.
நன்றி வீரகேசரி
லண்டனில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட உஸ்மான் கானின் அச்சமூட்டும் கடந்தகாலம்
30/11/2019 லண்டனின் பங்குபரிவர்த்தனை அலுவலகத்தில் குண்டு தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறைதண்டனை அனுபவித்த உஸ்மான் கான் என்பவரே லண்டனில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி ஸ்டவோர்ட்டில் வசித்து வந்த உஸ்மான் கான் லண்டனில் கத்திக்குத்தினை மேற்கொண்டவேளை காவல்துறையினரின் தாக்குதலிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
2010 இல் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட பாரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது உஸ்மான் கானும் வேறு எட்டு பேரும் கைதுசெய்யப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல்ஹைதாவினால் உந்தப்பட்டு லண்டனின்பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
பாக்கிஸ்தானை சேர்ந்தவரான யூனிஸ்கான் மத்ரசா என்ற போர்வையில் பயங்கரவாதத்திற்கு ஆட்களை திரட்டியதாகவும் நிதி சேகரித்ததாகவும் ஏற்றுக்கொண்டார் என நீதிமன்ற வட்டாரங்கள் அவ்வேளை தெரிவித்திருந்தன.
காஸ்மீரில் தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் இஸ்லாமிய பாடசாலையை ஏற்படுத்தி அவர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார் என தெரிவித்தார் என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.
உஸ்மான் கானின் குடும்பத்தினரிற்கு ஏற்கனவே அந்த நிலத்தில் மசூதியொன்று உள்ளது,என தெரிவித்திருந்த நீதிமன்ற ஆவணங்கள் கைதுசெய்யப்பட்டவர்கள் பயங்கரவாத பயிற்சி தளமொன்றை ஏற்படுத்துவதற்காக நிதி திரட்டும்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் எனவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
மிகத்தீவிரவமான திறமைவாய்ந்த பயங்கரவாதிகளை உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவதற்கு கானும் அவரது சகாவும் திட்டமிட்டனர் எனவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை உஸ்மான் கானும் அவரது சகாக்களும் கைதுசெய்யப்பட்ட பின்னர் அது குறித்து கருத்து தெரிவித்திருந்த பிரதிகாவல்துறை ஆணையாளர் ஸ்டுவேர்ட் ஒஸ்போர்ன் இவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திராவிட்டால் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்க கூடியதாக்குதல்கள்இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அவரது நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக இலத்திரனியல் கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருந்த நிலையிலும் உஸ்மான் கானால் எப்படி தாக்குதலை மேற்கொள்ள முடிந்தது என்ற கோணத்திலும்விசாரணைகள் இடம்பெறுகின்றன.
லண்டனின் பிரசித்தி பெற்ற பாலத்தின் வடபகுதியில் உள்ள பிஸ்மொங்கர் ஹோலிற்குள் உஸ்மான் கான் இந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.
அவர் தனித்தே செயற்பட்டார் என கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் அந்த கட்டிடத்திற்குள்ளேயே தாக்குதலை ஆரம்பித்துவிட்டார் அதன் பின்னரே பாலத்தை நோக்கி சென்றார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியிலேயே அவர் காவல்துறையினரை எதிர்கொண்டார் சுடப்பட்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
வடகொரியா ஜப்பானிய கடலுக்குள் இரு ஏவுகணைகளை ஏவிப் பரிசோதனை
29/11/2019 வடகொரியாவானது இரு இனங்கண்டறியப்படாத ஏவுகணைகளை நேற்று வியாழக்கிழமை ஏவிப் பரிசோதித்ததாக தென்கொரியா தெரிவிக்கிறது.
தென் ஹம்கையொங் பிராந்தியத்திலிருந்து கிழக்கு நோக்கி ஏவப்பட்ட மேற்படி ஏவுகணைகள் ஜப்பானிய கடலில் விழுந்ததாக தென்கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 4.59 மணிக்கு அந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்குமிடையில் இடம்பெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையிலேயே இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளமை குறிப் பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஹொங்கொங் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தால் பதிலடி ; அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
29/11/2019 ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு வழங்குவதை அமெரிக்கா தொடருமானால் உறுதியான கடும் பதிலடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சீனா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சட்டமூலத்தை சட்டமாக்கும் வகையில் அதற்குரிய ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ள நிலையிலேயே சீனாவின் மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் ஹொங்கொங் மக்களை கௌரவப்படுத்தும் வகையில் தான் அந்த சட்டமூலத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்படி சட்டமானது ஹொங்கொங் போதிய சுயாட்சியைக் கொண்டுள்ளதா என்பதை பரிசோதிப்பதற்கான வருடாந்த மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான ஆணையை வழங்குகிறது.
அதேசமயம் ட்ரம்ப் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சீனாவுடன் உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா நிஜங்களைப் புறக்கணித்து உண்மையை சிதைத்து வருவதாக சீன வெளிநாட்டு அமைச்சால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கட்டிடங்களுக்கு தீ வைத்து அப்பாவிப் பொதுமக்களைத் தாக்கி சட்டத்தின் ஆட்சியை மிதித்து பொது ஒழுங்கை பாதித்து வரும் வன்முறை மிக்க குற்றவாளிகளுக்கு அமெரிக்கா வெளிப்படையாக ஆதரவளித்துள்ளது எனத் தெரிவித்த ஜப்பானிய வெளிநாட்டு அமைச்சு, அமெரிக்கா தொடர்ந்து தவறான பாதையில் செல்லுமாயின் கடும் பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அச்சுறுத்தல் விடுத்துள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment