பெரும்பான்மை சமூகத்தினரின் விருப்பத்திற்கு மாறாக எதனையும் செய்யமுடியாது- அதிகார பகிர்வு குறித்த கேள்விக்கு கோத்தாபய பதில்- இந்துவிற்கு பேட்டி


01/12/2019 இலங்கையின் பெரும்பான்மை சமுகத்தினரின் விருப்பத்திற்கு மாறாக எதனையும் செய்ய முடியாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
த இந்துவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களிற்கு நீதி சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது, அதற்கு உங்கள் பதில் என்ன என்ற கேள்விக்கு பெரும்பான்மை சமுகத்தின் விருப்பங்களிற்கு எதிராக எதனையும் செய்ய முடியாது எனவும் நான் கருதுகின்றேன்.பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்திற்கு மாறாக யாராவது ஏதாவது வாக்குறுதியளித்தால் அது பொய்.பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவேண்டாம் வேலைவாய்ப்பை வழங்கவேண்டாம் என எந்த சிங்களவரும் தெரிவிக்க மாட்டார்.ஆனால் அரசியல் விவகாரங்கள் வேறு மாதிரியானவை என கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுஹாசினி ஹைதரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
பேட்டி தமிழில் - வீரகேசரி இணையம்.
கேள்வி-
நீங்கள் புதுடில்லியில் தெரிவித்தது போல இந்திய இலங்கை உறவுகளை  மேலும் உயர்ந்த நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்லப்போகின்றீர்கள்?  உங்கள் முன்னுரிமைக்குரிய விடயம் என்ன?
பதில்- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்திலேயே எங்களிற்கு புதுடில்லியுடன் நெருக்கமான உறவுகள் காணப்பட்டன.
ஆனால் பின்னர் 2014-15 இல் அது வீழ்;ச்சியடைந்தது,சிறிசேன அரசாங்கத்துடனும் இந்தியா இலங்கை உறவுகள் சிறப்பானவையாக ஆரம்பித்து ஏமாற்றம் அளிப்பவையாக முடிவடைந்தன.
நான் ஒரு தொடர்ச்சியான நிலையை பேண விரும்புகின்றேன்,நான் வழமையாக மிகவும் வெளிப்படையானவன்,ஆகவே என்னால் ஒரு விடயத்தை செய்ய முடியாவிட்டால் என்னால் முடியாது என புதுடில்லிக்கு தெரிவிப்பேன்,என்னால் முடியுமானால் நான் செய்வேன் என தெரிவிப்பேன்,அதன் பின்னர் எனது வாக்குறுதிகளை இழுத்தடிக்கமாட்டேன்.
கடந்த காலங்களில் தனித்தனியான பொறிமுறைகளை கொண்டிருந்ததன் காரணமாக நாங்கள் வெற்றியடைந்தோம். புதுடில்லியுடன் மூன்று நபர்கள் கொண்ட ஒருங்கிணைப்புகுழுவை கொண்டிருந்தோம்.
அவ்வேளை மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததால் எங்களிற்கு அந்த பொறிமுறை அவசியமானதாக காணப்பட்டது.நெருங்கிய தொடர்புகள் காரணமாக உணர்பூர்வமான பிரச்சினைகளிற்கு எங்களால் தீர்வை காணமுடிந்தது.
கேள்வி- அந்த பொறிமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துவீர்களா?
பதில்-மோதல்கள் காரணமாக அந்த நேரத்தில் அது அவசியமானதாக காணப்பட்டது, ஆனால் தற்போது அது அவசியமானது என நான் கருதவில்லை,எங்களால் வெளிவிவகார அமைச்சின் ஊடாக பணியாற்ற முடியும். நாங்கள் நேர்மையாக பணியாற்றினால் எந்த பிரச்சினைகளும் வராது.
இந்தியாவிற்கும் எங்களிற்கும் இடையிலான முக்கிய விவகாரமாக அமையக்கூடியது,பாக்கிஸ்தான் சீனாவுடனான உறவே என நான் கருதுகின்றேன். 
ஆனால் இந்திய அதிகாரிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படு;த்தக்கூடிய எதனையும் நாங்கள் செய்யாவிட்டால் பிரச்சினைகள் எழாது.
கேள்வி- நீங்கள் சீனாவுடன் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாக வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றீர்கள்,இது குறித்து இந்தியாவும் கரிசனை கொண்டுள்ளது,இத்துடன் மத்தல விமானநிலைய திட்டமும் உள்ளது, இந்தியா இது குறித்தும் விருப்பம் வெளியிட்டுள்ளது,தற்போது நீங்கள் அதிகாhரத்தில் உள்ளதால் நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்

பதில்-
அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற  மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்காணப்படவேண்டும் என நான் கருதுகின்றேன்.இவை ஹோட்டல்களோ அல்லது முனையங்களோ இல்லை.
ஆனால் விமானநிலையங்களின் கட்டுப்பாட்டையோ அல்லது  துறைமுகங்களின் கட்டுப்பாட்டையோ வழங்குவது என்பது வேறுவிடயம்.
 இந்த 99 வருட உடன்படிக்கை எங்கள் எதிர்காலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்,பெறுமதியான சொத்துக்களை வழங்கியமைக்காக அடுத்த தலைமுறை எங்கள் தலைமுறையை சபிக்கும்,இதன் காரணமாகவே எங்கள் கட்சி இந்த திட்டங்களை எதிர்த்தது.
கேள்வி- ஆனால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில்  ஏற்பட்ட கடன்கள் காரணமாகவே இந்த துறைமுகத்தை வழங்கவேண்டிய நிலையேற்பட்டது?
பதில்- இல்லை இது பிழையான கருத்து.நாங்கள் கடன்பொறிமுறையை உருவாக்கினோம் என்பதும் பொய்.நாங்கள் எங்கள் ஆட்சியின் போது துறைமுகம் தொடர்பான முதல்தொகுதி கடனை மீள வழங்கியிருந்தோம்,ஆனால் சிறிசேன அரசாங்கம் கடன்களை பெற்று அதனை செலவிட்டது,அவர்கள் கடன்கள் அதிகரிப்பது குறித்து கவலைகொண்டிருந்தால் அவர்கள் இறைமையை விட்டுக்கொடுப்பதை விட அதனை அடைத்திருக்கவேண்டும் 
கேள்வி- இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து இந்தியாவிற்கு பிரச்சினைகள் காணப்பட்டன,குறிப்பாக சீனா நீர்மூழ்கிகள் இலங்கை துறைமுகத்தில் தரித்து நிற்பது தொடர்பில் பிரச்சினைகள் காணபட்டன,அவ்வேளை பாதுகாப்பு செயலாளராக நீங்களே காணப்பட்டீர்கள், ஜனாதிபதி என்ற அடிப்படையில் இந்த விடயம் குறித்து அதிகளவு உணர்வுபூர்வமானவராக விளங்குவீர்களா?
பதில்-நாங்கள் அவ்வேளையும் உணர்வுபூர்வமானவர்களாக விளங்கினோம்,ஆனால் நீர்மூழ்கி விவகாரம் என்பது சாதாரண விடயம்,அதனை அதிகாரிகள் பெரிதுபடுத்தினார்கள்.
யுத்தக்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது வழமை, இந்த கப்பல்கள் அராபிய கடலில் கடல்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் கடல்படை செயலணியை சேர்ந்தவை.ரஸ்ய கப்பல்களும் வந்துள்ளன.
சீனா நீர்மூழ்கிகளிற்கு இடமளிக்குமாறு கோரியவேளை அதிகாரிகள் அதனை சாதாரண விடயமாக கருதி அனுமதித்தார்கள்.
இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் தனது நூலில் இந்தியாவின் நலனிற்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்க மாட்டேன் என கோத்தாபய ராஜபக்ச  தெரிவித்தார் அதனை நிறைவேற்றினார் என குறிப்பிட்டுள்ளார்,ஆகவே நான் நேர்மையாக செயற்பட்டுள்ளேன்.
கேள்வி- உங்கள் சகோதரரின் அரசாங்கத்தின் தோல்விக்கு இந்திய அமைப்புகள் சதி செய்தன என நீங்கள் கடந்த காலங்களில் குற்றம்சாட்டியுள்ளீர்கள்,உங்கள் அரசாங்கத்தினால் கடந்த காலத்தின் இந்த சந்தேகங்களில் இருந்து விடுபடமுடியுமா?
பதில்-விடுபட முடியும் என நான் நிச்சயமாக கருதுகின்றேன்.நாங்கள் அமைப்புகள் ஆட்சி மாற்றத்திற்காக சதி செய்வது குறித்து கேள்விப்பட்டோம்,அமெரிக்காவும் இதில் சம்பந்தப்பட்டிருந்தது.
சீனாவுடனான எங்கள் உறவுகளே இந்த சந்தேகங்களிற்கு காரணம்,ஆனால் அது புரிந்துணர்வின்மையால் உருவானது.
எங்களிற்கும் சீனாவிற்கும் இடையில் முற்றுமுழுதாக வர்த்தக உறவுகளே காணப்பட்டன,இந்தியா ஜப்பான் சிங்கப்பூர் அவுஸ்திரேலியாஉட்பட உலக நாடுகளை இலங்கையில் முதலீடு செய்துகொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.அவர்கள் தங்கள் நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு கேட்கவேண்டும், அவ்வாறு செய்யாவிடின் இலங்கை மாத்திரமல்ல ஆசியா முழுவதும் இந்த பிரச்சினை காணப்படும்,ஏனைய நாடுகள் மாற்று வழிகளை முன்வைக்காவிட்டால் சீனா புதிய பட்டுப்பாதை திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கும்.
கேள்வி- இந்தியாவிடமிருந்து  பயங்கரவாதம் தொடர்பில் எவ்வகையான ஒத்துழைப்புகளை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்-இலங்கையி;ல் உள்ள ஆபத்துக்கள் தற்போது மாற்றமடைந்துள்ளன,விடுதலைப்புலிகள் இலங்கைக்கான ஆபத்தாக மாத்திரம் காணப்பட்டது போலயில்லாமல்,ஐஎஸ் என்பது சர்வதேச அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.
இந்த ஆபத்து தொடர்பில் எங்களை விட இந்தியாவிடமும் ஏனைய உலக நாடுகளிடமும் அதிக தகவல்கள் காணப்படக்கூடும்.
முன்னைய அரசாங்கம் பாதுகாப்பு புலனாய்வு விடயங்களிற்கு அதிக முன்னுரிமையை வழங்கவில்லை.
எங்கள் ஆட்சியின் போது இராணுவபுலனாய்வே முக்கிய அமைப்பாக விளங்கியது.
ஆனால் முன்னையை அரசாங்கம் தங்கள் கவனத்தை இராணுவத்திலிருந்து அகற்றிவிட்டது,நாங்கள் அதனை தற்போது மாற்றியமைத்துள்ளோம்,எங்கள் புலனாய்வு துறையினர் விடுதலைப்புலிகளை மையமாகவைத்தே செயற்பட்டனர், ஐஎஸ் அமைப்பினரை அல்ல, இதன் காரணமாக எங்கள் புலனாய்வு பிரிவினரை தரமுயர்த்த விரும்புகின்றோம்.
இந்த விடயத்தில் இந்தியாவினதும் ஏனைய நாடுகளினதும் உதவி அவசியம்.
கேள்வி- பாதுகாப்பு குறித்த நீங்கள் கவனம் செலுத்துவது கடந்த காலத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்த அச்சத்தினை மீண்டு;ம் ஏற்படுத்தியுள்ளது,காணாமல்போதல் , வெள்ளை வான் மற்றும் குறிப்பாக பத்திரிகையாளர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த அச்சங்கள் காணப்படுகின்றன,இவை மீண்டும் நிகழாது என உங்களால் வாக்குறுதி வழங்கமுடியுமா,
பதில்- இவை பொய்யான குற்றச்சாட்டுகள், நிச்சயமாக நான் இவ்வாறான எவற்றிலும் ஈடுபடவில்லை. 
2009ற்கு பின்னர் நாங்கள் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய முயன்றோம்,ஆனால் அவை கடினமானவையாக காணப்பட்டன,நாங்கள் இவற்றிற்கு காரணமில்லை நாங்கள் சிஐடியினரை இவை குறித்து விசாரணை செய்யுமாறு கேட்டுக்கொண்டபோதிலும் அவர்களிடமும் எந்த ஆதாரங்களும் இருக்கவில்லை.
அது அவ்வளவு இலகுவானது என்றால் ஏன் சிறிசேன அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை,யுத்தகாலத்தில் பத்திரிகையாளர்கள் குறித்து இறுக்கமாகயிருந்தோம்,ஆனால் அதன் பின்னர் அவ்வாறிருக்கவில்லை,மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை, என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நாங்களே யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தோம்,ஏன் முன்னைய ஜனாதிபதிகளிடம் இவ்வாறான  குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வியெழுப்வில்லை.
கேள்வி- கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் பின்னர் தமிழ் மக்களிற்கு நீதி சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது, அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்- வெளிவிவகார அமைச்சரிற்கு நான் தெரிவித்தது போன்று தமிழ்மக்களிற்கு அபிவிருத்தியையும் சிறந்த வாழ்க்கைதரத்தையும் வழங்குவதே எனது அணுகுமுறை.
சுதந்திரம் அரசியல் உரிமைகளை பொறுத்தவரை அவை ஏற்கனவே எங்கள் அரசமைப்பில் இடம்பெற்றுள்ளன.
வேலைவாய்ப்பு மூலமும் மீன்பிடித்துறை விவசாயம் போன்றவற்றினை ஊக்குவிப்பதன் மூலமும் நேரடியாக மக்களிற்கு நன்மைகள் சென்றவடைவதற்கான வழிவகைகளை காணவேண்டும்  என நான் தெளிவாகயுள்ளேன்.
நாங்கள் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆராயலாம் ஆனால் கடந்த 70 வருடங்களாக தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஒரு விடயம் குறித்து மாத்திரமே வாக்குறுதியளித்து வந்துள்ளனர்- அதிகாரப்பகிர்வே அது.
ஆனால் இறுதியில் எதுவும் இடம்பெறவில்லை.பெரும்பான்மை சமுகத்தின் விருப்பங்களிற்கு எதிராக எதனையும் செய்ய முடியாது எனவும் நான் கருதுகின்றேன்.பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்திற்கு மாறாக யாராவது ஏதாவது வாக்குறுதியளித்தால் அது பொய்.பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவேண்டாம் வேலைவாய்ப்பை வழங்கவேண்டாம் என எந்த சிங்களவரும் தெரிவிக்க மாட்டார்.ஆனால் அரசியல் விவகாரங்கள் வேறு மாதிரியானவை.
ஐந்து வருடங்களிற்கு பின்னர் வடக்குகிழக்கின் அபிவிருத்தி குறித்து நான் சாதித்தவைகளை மதிப்பிடுங்கள் என நான் தெரிவி;க்கின்றேன்
கேள்வி- நீங்கள் அதிகாரப்பரவல் குறித்து பேச்சுவார்த்தை பற்றி வாக்குறுதியளிக்கின்றீர்களா?அல்லது பெரும்பான்மை பகுதிகளிற்கான உரிமை குறித்தா?
பதில்- 13வது திருத்தம் இலங்கையின் அரசமைப்பின் ஒரு பகுதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது,பொலிஸ் அதிகாரம் போன்றவை மாத்திரம் வழங்கப்படவில்லை, இதனை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாது,நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயார்.
கேள்வி- கடந்த காலத்தில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் என்ற அடிப்படையில் படையினரை நீங்கள் வெற்றிக்கு இட்டுச்சென்றீர்கள்,ஆனால் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளிற்கு மத்தியில் சர்வதேச ஆணை வழங்கப்பட்ட நல்லிணக்க உண்மை நடைமுறையை முன்னெடுத்து செல்லவில்லை என நீங்கள் குற்றம்சாட்டப்படுகின்றீர்கள்,ஐந்து வருடமுடிவில் உங்கள் எதனை சாதிக்க நினைக்கின்றீர்கள்?
பதில்- இந்த குற்றச்சாட்டுகள் பிழையானவை.யுத்தகாலத்தை விட நான் அதிக ஈடுபாட்டை காட்டினேன்,நிலக்கண்ணிவெடிகளை அகற்றினேன், மீள் குடியேற்றங்களை நடைமுறைப்படுத்தினேன்,ஆயுதக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களை மீளப்பெற்றோம்,நானில்லாமல் மாகாணசபை தேர்தல் சாத்தியமாகியிராது,சர்வதேச சமூகம் இந்த விடயங்களை ஏற்றுக்கொள்ளவில்லை அங்கீகரிக்கவில்லை,வடக்குகிழக்கில் சிறப்பான சூழலை ஏற்படுத்த உதவிய இந்த நடவடிக்கைகளை தமிழ் தலைவர்கள் கூட அங்கீகரிக்கவில்லை.
தமிழில்- ரஜீபன் - நன்றி வீரகேசரி 

No comments: