கைகொடுத்து அரவணைக்கும் கருணையே ஐயப்பன் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


    ஐயப்பன் தரிசனத்தை அனைவருமே நாடுகிறார்
    மெய்யான உணர்வுடனே விரதமாய் இருக்கின்றார்
    நெய்கொண்டு அபிசேகம் செய்துமவர் நிற்கின்றார்

    கைதட்டி கைதட்டி கானமவர் இசைக்கின்றார்

    மாலைபோட்ட அனைவரையும் சாமியெனப் பார்க்கின்றார்
    மருள்நீக்கும் மாமருந்தாய் தர்மதாத்தாவை நினைக்கின்றார்
    காலைமாலை வேளையெல்லாம் கைகூப்பி வணங்குகின்றார்
    கயமைதனை நீக்குகின்ற கடவுளென நம்புகின்றார்

    ஆடம்பரம் அத்தனையும் அவரொதுக்கி வாழுகிறார்
    ஐயப்பன் மெய்யெனவே அகமுழுதும் இருத்துகிறார்
    கேடுகெட்ட காரியத்தை கிடங்கிலிட்டு மூடுகிறார்
    ஆடுகிறார் பாடுகிறார் ஐயப்பனின் நினைவுடனே

    சபரிமலை ஏறிவிட்டால் பிணியகலும் என்கின்றார்
    நிறைவுதரும் மனமமைய சபரிமலை உதவுதென்பார்
    கறைமிடற்கு சிவனாரும் கரியநிற திருமாலும்
    இருவருமாய் இருப்பவனே ஐயப்பன் எனப்பகர்வார்


    கல்லையும் முள்ளையும் கணக்கிலவர் எடுத்திடார
    எல்லாமே இடஞ்சலெனும் எண்ணத்தை இருத்திடார்
    ஐயப்ப தரிசனிமே அவர்மனதில் அமர்ந்திருந்திருக்கும்
    அரிகர சுதனுக்கே அத்தனையும் அர்ப்பணிப்பார்

    இருமுடியை ஏந்துவதை பெரும்பயனாய் கருதிடுவார்
    வருவினைகள் வாராமல் காக்குமென நினைத்திடுவார்
    குருசாமி முன்னிலையில் குறையெல்லாம் இறக்கிவிட்டு
    படியேறி படியேறி பாரம்போக்க வேண்டிடுவார்

 

   பம்பையிலே நீராடி தம்மழுக்கைப் போக்கிநிற்பார்
    பாவமூட்டை யத்தனையும் போயகல வேண்டிடுவார்
    வம்புசெறி மனமதனை மாண்டுவிடச் செய்கவென
    மலையேறி ஐயப்ப முன்னிலையில் சரணடைவார்

  ஐயப்ப வழிபாட்டை அனைவருமே நாடுகிறார்
  ஆகமத்தை வேதமதை ஐயப்பன் விரும்பவில்லை
  மெய்யான பக்தியுடன் நெருங்கிவரும் அடியவரை
  கைகொடுத்து அரவணைக்கும் கருணையே ஐயப்பன்

  விருப்பமுடன் பலரிப்போ சபரிமலை நினைக்கின்றார்
  சபரிமலை நினைப்பினிலே சஞ்சலமே போகுதென்பார்
  ஐயப்பன் தனைநினைக்க ஆனந்தம் பெருகுதென்பார்
  ஆதலால் ஐயப்பனைக் காதலுடன் தொழுகின்றார்
 
  
   


    
-->


No comments: