அஞ்சலிக்குறிப்பு: தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் மறைந்தார் வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவான முதலாவது கலாநிதியும் இவரே ! ! - முருகபூபதி

.

நீண்ட நாட்களாக  அவுஸ்திரேலியா – சிட்னியில்  முதியோர் காப்பகத்தில் நனவிடை தோய்ந்துகொண்டிருந்த தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்  அவர்கள் கடந்த 19 ஆம் திகதி மறைந்தார் என்ற செய்தி, தற்போது இலங்கையில் நிற்கும் எனக்கு வந்து சேர்ந்தது.
இவர் பற்றி சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழில்  இவ்வாறு எழுதியிருந்தேன். " பேராசிரியர்   பூலோகசிங்கம்  அவர்கள்  தமிழ்  உலகில் கொண்டாடப்படவேண்டியவர்    என்ற   வார்த்தை  வெற்றுப்புகழாரம் அல்ல. 

எங்கள்  நாவலரை,  " வசனநடை  கைவந்த  வல்லாளர்  ஆறுமுகநாவலர் " -  என்று  அறிந்திருக்கின்றோம்.   தமிழ்நாட்டில்  கடலூரில்  ஒரு காலத்தில்   வள்ளலார்  சுவாமிகளுக்கு  எதிராக  நீதிமன்றில்  அவர்  வழக்காடியதையும்  அறிந்திருப்போம்.

ஆனால்,  அவர்  தமது  இளமைக்காலத்தில்  கோபமும்  மூர்க்க  குணமும் கொண்டவர்   என்பதை  அறிந்திருப்போமா  ?  தமது  உறவினர்  மீது  தமக்கு வந்த  கோபத்தை  வெளிப்படுத்துவதற்கு    ஒரு  கத்தியை  எடுத்துக்கொண்டு அவர்   துரத்திய  கதை  எத்தனைபேருக்குத் தெரியும்  ?
ஆறுமுகநாவலர்  நூற்றாண்டு  இலங்கையில்  நாடுதழுவிய  ரீதியில் கொண்டாடப்பட்டவேளையில்   நடைபெற்ற  விழாக்களில் உரைநிகழ்த்தியவர்தான்  அந்த  சுவாரஸ்யத்தை  வெளிப்படுத்தினார்.
அவர்தான்   தகைமைசார்  பேராசிரியர்  பொன். பூலோகசிங்கம்.

இவ்வாறு   கூட்டங்களிலும்  விழாக்கள்  மற்றும்  சந்திப்புகளிலும்  பல சுவாரஸ்யங்களை  அவிழ்த்து  கலகலப்பூட்டும்  பூலோகசிங்கம்  அவர்கள் அவுஸ்திரேலியா,  சிட்னியில் புலிடம் பெற்றபின்னரும் அயராமல் இயங்கிவந்தவர். அங்கு நடைபெறும் தமிழ்க் கல்வி  – தமிழ் கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பிப்பார். சிட்னி தமிழ் முதியோர் சங்கத்திலும் இணைந்திருந்தவர்.
நாம் 2001 ஆம் ஆண்டு மெல்பனில் ஆரம்பித்த தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்திலும் இணைந்திருந்தவர். அந்த ஆண்டு மெல்பனில் பிரஸ்டன்  நகரமண்டபத்தில் நடைபெற்ற முதலாவது விழாவில் இடம்பெற்ற நூல்கள் – இதழ்கள், மறைந்த எழுத்தாளர்கள் – கலைஞர்களின் ஒளிப்படக்கண்காட்சியை சம்பிரதாயபூர்வமாக திறந்தும் வைத்தார்.  அதன்பின்னர் அடுத்த ஆண்டு  ( 2002 இல் )  சிட்னி தமிழ் எழுத்தாளர் விழாவிலும் பங்கேற்றார்.
எனது நூல்களின் வெளியீடு,  மறைந்த வானொலி ஊடகக்கலைஞர்  ‘ அப்பல்லோ  ‘ சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் நினைவு அரங்கில் நடைபெற்றவேளையிலும் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பேராசிரியரின் மாணவி ( திருமதி) கலையரசி சின்னையா. இவர் ( அமரர் ) வித்துவான் வேந்தனாரின் புதல்வி.




பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் எமது தமிழ் எழுத்தாளர் விழா சிட்னியில் நடைபெற்றபோது எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பாக இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டி கௌரவித்தோம்.
பின்னாளில் வயதுக்கும் முதுமைக்கும்  தொற்றிக்கொள்ளும்  உடல் உபாதைகள் வந்ததனால் சிட்னியில்  ஒரு  முதியோர்  பராமரிப்பு நிலையத்தில்  கட்டிலில்   சயனித்தவாறு  கடந்த  காலங்களை  நனவிடை தோய்ந்துகொண்டிருந்தார். அவ்வேளையிலும் அவரைச்சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்துள்ளதுடன் அவர் பற்றிய பதிவுகளும் எழுதியிருக்கின்றேன்.
இலங்கையில் வெளியாகும் ஞானம் இதழின் ஆசிரியரின் வேண்டுகோளின் பிரகாரம், இவர் பற்றிய ஞானம் இதழ் அட்டைப்பட அதிதிக்குறிப்புகளும் எழுதியிருக்கின்றேன்.
பேராசிரியை சித்ரலோக மௌனகுரு அவர்களும் இவரது மாணவிதான். ஞானம் ஆசிரியர் ஞானசேகரனின் துணைவியார் திருமதி ஞானலக்‌ஷ்மி  அவர்களும் இவரும் இணைந்து கல்வி வெளியீட்டுத்திணைக்கள வெளியீடுகளில் பங்காற்றியவர்கள்.   
சிறிது காலம் சிட்னி முதியோர் இல்லத்தில் படுக்கையிலிருந்தவாறு தனது கடந்தகாலங்களை நனவிடை தோய்ந்த பேராசிரியர் தற்போது  அவர் குறித்து  எம்மை நனவிடை தோய வைத்துவிட்டு விடைபெற்றுவிட்டார்.
ஒவ்வொரு   மனிதர்  வாழ்விலும்  முதுமை  வரும்.  அந்த  முதுமை  மேலும் இரண்டு   மைகளையும்  அழைத்துக்கொண்டு  அருகிலிருந்து  உறவாடும். அவைதான்   தனிமை - இயலாமை.
அந்தத்தனிமையும்  எழுதமுடியாதிருக்கும்  இயலாமையும்தான்   அவரை  வாட்டிக்கொண்டிருந்தன.  அதற்கும் விடுதலை கொடுத்துவிட்டு அகன்றுவிட்டார்.
 பூலோகசிங்கமும்  அங்கதச்சுவையுடன்  உரத்துச்சிரித்து  மகிழ்வூட்டுபவர். ஆறுமுகநாவலரைப்பற்றி  நாம்  அறியாத  பல  பக்கங்களை,  அவரது நூற்றாண்டு   காலத்தில்  தான்  பேசிய  மேடைகளில்  சொன்னவர்.
ஒரு  சமயம்  கடும்கோபத்துடன்  தமது  உறவினர்  ஒருவரை வெட்டுவதற்காக  ஒரு  வெட்டுக்கத்தியுடன்  நாவலர்  ஓடியிருக்கும் செய்தியைச்சொல்லி,   தனது  பேச்சுக்களினால்  எங்களை  சிலிர்க்கச்செய்த சிங்கம்,   நிரந்தரமாக ஓய்ந்துவிட்டது.
சிலவருடங்களுக்கு   முன்னர்  சிட்னியில்  ஒரு  நாள்  வெளியே நடந்துசென்றபோது , எதிர்பாராதவிதமாக  தடுக்கியோ  மயங்கியோ விழுந்திருக்கிறார்.   அதனைத் தொடர்ந்து  தீவிர  சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு,  படிப்படியாக  தேறியிருந்தாலும்,  பவளவிழா நெருங்கியிருந்த   காலப்பகுதியில்  விதியானது  தன்னை  இப்படி முடங்கியிருக்கச்செய்துவிட்டதே   என்ற  கவலையையும்  கடந்துசென்றவர்.
அந்த  முதியோர்  இல்லத்தில்  அவர்  தங்கியிருந்த  அறையில்,  அருகில் மற்றும்  ஒரு  கட்டிலில்  படுத்திருந்து  சிகிச்சை  பெற்றுவந்த  அவருடைய மனைவி தனபாலதேவி அவர்களும்  சிலவருடங்களுக்கு முன்னர்    அவரிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.
பேராசிரியர்,  தம்மிடமிருந்த  பெறுமதியான  நூல்கள்  பலவற்றை  சிட்னி  அறிவகம்   நூல் நிலையத்திற்கு  வழங்கிவிட்டார்.
                  பூலோகசிங்கம்  - கல்விமான்.  பேராசிரியர்,  பேச்சாளர்,  ஆய்வாளர் , எழுத்தாளர் , பதிப்பாசிரியர்.
1936   ஆம்  ஆண்டு   வவுனியாவில்  செட்டிக்குளத்தில்    பிறந்த  பூலோகசிங்கம்   அவர்கள்   தனது   83 ஆவது   வயதில் மறைந்துள்ளார்.    ஈழத்து இலக்கிய   உலகில்  சிறந்த   ஆய்வாளராகவும்,  கல்வித்துறையில்  சிறந்த கல்விமானாகவும்   விளங்கிய  இவர்,  இலங்கையில்  ஆறுமுகநாவலர் சபையில்  அங்கம்  வகித்தவர்.
ஆறுமுகநாவலரின்  நூற்றாண்டு  இலங்கையில்   கொண்டாடப்பட்டபோது நாடுதழுவிய   ரீதியில்  நடைபெற்ற  பல  கருத்தரங்குகளிலும்  நாவலர் விழாக்களிலும்  கருத்துச்செறிவான  உரைகளை  நிகழ்த்தியவர்.
நாவலரின்   சமயப்பணி -  தமிழ்  உரைநடை  வீச்சு  தொடர்பாக  மட்டுமன்றி   குறிப்பிட்ட  காலகட்டத்தில்  யாழ்ப்பாணத்தில்  அவர்  மேற்கொண்ட சமுதாயப்பணிகளையும்   இன்றைய  தலைமுறையினர் அறிந்துகொள்ளத்தக்கவிதமாக  சான்றாதாரங்களுடன்  கட்டுரைகளும் எழுதிய   பேராசிரியர்   பூலோகசிங்கம்  அவர்கள்  அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த  பின்னரும்  தனது  ஆய்வுப்பணிகளைத் தொடர்ந்தார்.
இவரிடம்  பல்கலைக்கழகங்களில்  கற்ற  பல  மாணவர்கள்  பின்னாளில் எழுத்தாளர்களாகவும்  ஆய்வாளர்களாகவும்  மிளிர்ந்திருக்கிறார்கள்.
எளிமையாகவும்   அதேசமயம்  கருத்தாழத்துடனும்  பேச  வல்லவர்.
இவரது  தமிழ்  ஆய்வுப்பணிகளுக்காக  இலங்கை  அரசின்  கலாசார  அமைச்சு  கலாகீர்த்தி  என்ற  அதிவிசேட  பட்டத்தை  1993  இல் வழங்கி பாராட்டி   கௌரவித்துள்ளது.
தமிழுக்குத்தொண்டாற்றிய  பத்தொன்பதாம்  நூற்றாண்டில்  வாழ்ந்த பேரறிஞர்  ஜே.ஆர். ஆணல்ட் சதாசிவம்  பிள்ளை  அவர்கள்   இந்தியாவிலும் இலங்கையிலும்  வாழ்ந்திருக்கும்  புலவர்பெருமக்கள்  பற்றிய  வரலாற்று நூலை   எழுதியவர்.
பாவலர்  சரித்திர  தீபகம்  என்னும்   அந்த  நூலை  தேடி எடுத்து மீள்பதிப்புச்செய்வதற்கு  கொழும்பு  தமிழ்ச்சங்கம்  1975  ஆம்  ஆண்டில் முன்வந்தபொழுது,  அதற்காக  ஆக்கபூர்வமாக  ஆதரவும்  ஒத்துழைப்பும் தந்தவர்தான்    பேராசிரியர்  பொன். பூலோகசிங்கம்.
" அந்த  நூலை  அரிய  பல  ஆராய்ச்சிக்குறிப்புகளுடன்  பதிப்பித்து தந்தவர்தான்  பூலோகசிங்கம்  "  என்று  தமிழ்ச்சங்கத்தின்  வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன்   வாழ்ந்து மறைந்த  க.இ.சு. கந்தசுவாமி   அவர்கள் பதிவுசெய்துள்ளார்.
குறிப்பிட்ட  நூல்  இரண்டு  பாகங்களாக  வெளியாகியிருக்கிறது.
பேராசிரியர்  அவர்கள்,  தமது  ஆரம்பக்கல்வியை   செட்டிகுளம்  அரசினர் தமிழ்  வித்தியாலயத்திலும்  இடைநிலைக்  கல்வியை  யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார்  கல்லூரியிலும்  கற்று,   அங்கிருந்து   பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு   அனுமதி  பெற்று -  பேராசிரியர்கள்  வி. செல்வநாயகம்,  ஆ. சதாசிவம்,  ச. தனஞ்சயராசசிங்கம்,  சு. வித்தியானந்தன் ஆகியோரின்   மாணவராக  விளங்கியவர்.
   இலங்கை  அரசின்    பல்கலைக்கழகப்  புலமைப்பரிசில்  பெற்று  1963  முதல் 1965   வரை  ஒக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகத்தில்  திராவிட மொழியியலறிஞர்  பேராசிரியர்   தோமஸ்  பரோவின்  கீழ்  மொழியியல் ஆராய்ச்சி   மேற்கொண்டு  கலாநிதிப்  பட்டம்  பெற்றார்.
வவுனியாவில்  முதலாவதாக  கலாநிதிப்பட்டத்தைப்  பெற்றுக்கொண்டவரும்   இவரே  என்பது  சிறப்புக்குரியது.
கொழும்பு பல்கலைக்கழகம்,  களனி  பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம்   ஆகியவற்றில்  பேராசிரியராகப்  பணிபுரிந்தார்.
1997   ஆம்  ஆண்டின்  பின்னர்  அவுஸ்திரேலியாவுக்கு  புலம்பெயர்ந்தார். பூலோகசிங்கம்  எழுதிய  நூல்களில்  தமிழ்  இலக்கியத்தில் ஈழத்தமிழறிஞரின்  பெருமுயற்சிகள்,  ஈழம்  தந்த  நாவலர்  என்பன இலங்கை  அரசின்  விருதுகளைப் பெற்றுள்ளன.
இந்துக்  கலைக்களஞ்சியம் ,  நாவலர்  பண்பாடு,   சிலப்பதிகார யாத்திரை ,  Poet Thambimuthu – a profile  ஆகிய  நூல்களையும்  வரவாக்கியிருக்கும்  பேராசிரியர்  இவை தவிர,  பல்வேறு  மலர்கள் ,  இதழ்களில்  நூற்றுக்கு மேற்பட்ட   கட்டுரைகளை  எழுதியிருக்கிறார் .   ஈழத்துத்  தமிழ்  இலக்கிய வரலாறு - சமயம் -  இலக்கணம்  பற்றியும்  எழுதியிருப்பவர்.
பண்டைத் தமிழ்  இலக்கியத்தில்  அகப்பொருள்  நெறி, தத்தை விடுதூது, பதினெட்டாம்  நூற்றாண்டு  வரையான  ஈழத்துத்  தமிழ்  இலக்கியம்,  பத்தொன்பதாம்   நூற்றாண்டு  ஈழத்துத் தமிழ்  வளர்ச்சி, ஈழத்துப் புராணங்கள்,  வன்னி  நாட்டின்  வரலாறு.  கோணேசர் கல்வெட்டு, முருகவழிபாட்டின்  தோற்றமும்  வளர்ச்சியும், தமிழ்  இலக்கண  விசாரம் முதலான  கட்டுரைகளும்  எழுதியிருக்கிறார்.
 இவ்வாறு  அயற்சியின்றி  இயங்கியிருக்கும்  பேராசிரியர்,  எம்மைவிட்டுப்பிரிந்தார் என்ற செய்தி கிடைத்தபோது நெஞ்சம்  அடைக்கிறது.
அவருடைய  மாணாக்கர்கள்,  இலக்கிய  நண்பர்கள்  இந்தப்பூமிப்பந்தெங்கும் வாழ்கின்றனர்.   அவருடைய  வாழ்வையும்  பணிகளையும்  அருகிருந்து பார்த்தவர்களும்  அவர்தம்  படைப்புகளை  படித்திருப்போரும்  அவர்  வாழும்   காலத்திலேயே  தமிழ்  உலகின்  கவனத்திற்கு  சமர்ப்பிப்பதற்கு ஆவனசெய்திருக்க வேண்டும்.
  ஆனால், அவ்வாறு நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை.
ஞானம் இதழில் இவர் பற்றி நான் எழுதிய குறிப்புளை படித்த வவுனியாவைச்சேர்ந்த ஒரு மருத்துவர், இவரைத்தேடி சிட்னி வருவதற்கு முயன்றபோது , அந்த தகவல் அறிந்து தாமதியாமல் சிட்னியில் வதியும் இலக்கிய நண்பர் திரு நந்தகுமாரை தொடர்புகொண்டேன்.
அவரும் தாமதியாமல் பேராசிரியரின் ஒளிப்படம் தாங்கிய குறிப்பிட்ட ஞானம் இதழை அவர் தஞ்சமடைந்திருந்த முதியோர் காப்பகத்திற்கு எடுத்துச்சென்று காண்பித்து, அதிலிருந்த எனது குறிப்புகளை வாசித்துக்காண்பித்தார்.  இதுவிடயத்தில் உதவிய சிட்னியில் வதியும் ஊடகவியலாளர் நண்பர் சுந்தரதாஸ் அவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டுகின்றேன்.
பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் அவர்கள், இனிமேல் எமது நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருப்பார்.
----0---
letchumananm@gmail.com

-->







No comments: