
இலங்கையில் பெரும்பான்மையினத்து பௌத்த சிங்கள மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசங்களில் அவர்கள்
தமிழில் பேசினார்கள். எழுதினார்கள். அத்துடன் சிங்களம் பேசுவதற்கும் எழுதுவதற்கும்
தெரிந்துகொண்டார்கள்.
அதனால் எமது ஈழத்து தமிழ் இலக்கியவளர்ச்சியில் அவர்களும் உந்துசக்திகளாக
மாறினார்கள். தென்னிலங்கையில் மாத்தறைக்கு சமீபமாக இருக்கும் திக்குவல்லை என்ற
ஊரின் பெயரை தமிழ் இலக்கிய உலகிற்கு பிரசித்தம் செய்த முன்னோடியாக எம்மத்தியில் திகழ்ந்துகொண்டிருப்பவர்தான் இலக்கிய நண்பர் திக்குவல்லை கமால்.
ஒரு கடலோரக்கிராமம் தமிழ் இலக்கியத்தில் தனது பெயரை தக்கவைத்துக்கொண்டதற்கு
அங்கு பிறந்து ஆசிரியராகவும் இலக்கிய கர்த்தாவாகவும் அறிமுகமான நண்பர் எம். எச்.
எம். ஷம்ஸ் எமக்கு அறிமுகப்படுத்திய
திக்குவல்லை கமாலின் ஆசிரியர்களும் எழுத்தாளர்கள்தான் என்பதும் ஆச்சரியமானது.
ஏ. இக்பால், சந்திரசேகரன் ஆகியோரிடம் கல்வி கற்றிருக்கும் திக்குவல்லை
கமாலின் இயற்பெயர் முகம்மது ஜலால்தீன் முகம்மது
கமால். 1950 ஆம் ஆண்டு, திக்குவல்லையில் பிறந்திருக்கும் கமால், அவ்வூர் மக்களின்
பேச்சுத்தமிழை இலக்கியத்திற்கு வரவாக்கியவர்.
1970 களில் தமிழகத்திலும் இலங்கையிலும் புதுக்கவிதைத் துறை பெரும்
வீச்சாக வளர்ந்தது. புதுக்கவிதையை ஏற்கலாமா? நிராகரிக்கலாமா? என்ற சர்ச்சைகளும் எழுந்தன.
அதனை குளியலறை முணுமுணுப்புகள் என்றும், ஆற்றுவெள்ளம் எனவும்
சிலர் எதிர்வினையாற்றினார்கள். ஆனால் புதுக்கவிதை
புற்றீசல்போன்று பரவியது.
இரண்டு வரிகளில் பல அர்த்தங்கள் தரக்கூடிய புதுக்கவிதைகளும்
வந்தன.
வல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
என்ற தொடரையும் எழுதினார். பின்னர் அத்தொடரும் நூலாகியது. தமிழகத்தில் வானம்பாடிகள் இந்தத் துறையில்
சிறகடித்துப்பறந்தனர். புதுக்கவிதைகளுக்காகவும்
சிற்றேடுகள் மலர்ந்தன.
மல்லிகையில் நான் எழுதத்தொடங்கிய காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து
பல படைப்பாளிகளும் அறிமுகமாகியிருந்தனர். இலங்கையில்
அவ்வேளையில் எனக்கு படிக்கக்கிடைத்த முதலாவது
புதுக்கவிதை நூல் எலிக்கூடு. அதனை நூல் எனச்சொல்வதிலும் பார்க்க சிறிய பிரசுரம்
என்றுசொல்வதுதான் பொருத்தம்.
சின்னச்சின்ன கவிதைகளுக்கு அத்தகைய சிறு பிரசுரங்கள் போதுமானதாகவுமிருந்தது.
இந்திய சுதந்திரம் என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய
புதுக்கவிதை இவ்வாறிருந்தது:
இன்னும் விடியவேயில்லை
அந்த இரண்டு வரிகளுக்குள்தான் எத்தனை அர்த்தங்கள். அதனைப்படித்த
பின்னர்தான், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததே ஒரு இரவுவேளையில்தான் என்ற உண்மையும்
தெரிந்தது.

நான் பிறந்த நீர்கொழும்பூரில் 1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வளர்மதி நூலகம் என்ற அமைப்பை உருவாக்கி,
அதே பெயரில் கையெழுத்து சஞ்சிகையும் நடத்தியிருந்தோம். எங்கள் வீட்டு முகவரியிலிருந்து அந்த நூலகம் இயங்கியது.
ஒருநாள் திக்குவல்லை கமாலின் எலிக்கூடு புதுக்கவிதை பிரசுரம்
தபாலில் வந்திருந்தது. அவ்வாறே எங்கள் ஊரில் பெரியமுல்லை என்ற இடத்தில் வசித்த எழுத்தாளர்
மு. பஷீர், மினுவாங்கொடை கள்ளொழுவையில் வசித்த எழுத்தாளர் நிலாம்
ஆகியோருக்கும் வந்திருந்தது.
அந்தப்பிரசுரத்தின் அருட்டுணர்வில் நிலாமும், ஈழத்து நூன்
என்ற புனைபெயரில் நூன் கவிதைகள் என்ற மிகவும் சின்னஞ்சிறிய பிரசுரத்தை வெளியிட்டார்.
இத்தகைய பிரசுரங்களை ஆர்வக்கோளாறு என்றும் மூத்த எழுத்தாளர்கள்
மத்தியில் எதிர்வினைகள் வந்தன. மினுவாங்கொடையில் உடுகம்பொல என்னுமிடத்தில் கொரஸ என்ற
கிராமத்தில் ஶ்ரீ சுதர்மாணந்த விகாரையின் பிரதம குருவாக விளங்கிய பண்டிதர் வண. ரத்னவன்ஸ
தேரோ அவர்களிடமும் நிலாம் ஊடாக அந்த எலிக்கூடு சென்றது.
அவர் அச்சமயம் தமிழ் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு
கமாலின் கவிதைகளை படிப்பதில் சிரமங்கள் இருக்கவில்லை. உடனே அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்துவிட்டுக்காண்பித்தார்.
இச்செய்தி மல்லிகை ஊடாக பரவியதும், கமால் உற்சாகமடைந்தார். வண.
ரத்னவண்ஸ தேரோ எமது நீர்கொழும்பு இலக்கிய வட்டத்திலும் இணைந்து துணைத்தலைவரானார்.
இந்தத் தகவல்கள் இன்றைய இளம்தலைமுறை எழுத்தாளர்களுக்கு புதியதாகவே
இருக்கும்.
மேற்கிலங்கையில் ஒரு கடலோர நகரத்தில் வாழ்ந்த எமக்கும் தென்னிலங்கையில்
மற்றும் ஒரு கடலோரக்கிராமத்தில் வாழ்ந்த கமாலுக்கும் இலக்கிய உறவுப்பாலத்தை அமைத்தது
மல்லிகை.

திக்குவல்லை கமாலும் ஒரு இலக்கியத்தேவையின் நிமித்தம்தான் வந்திருக்கிறார்
என்பது எமக்குப்புரிந்தது. அவரது கையிலிருந்த ஒரு கோவையில் சில புதுக்கவிதைகள் பிரசுரத்திற்கு
தயாராகவிருந்தன.
அதனை அவர் எழுதியிருக்கவில்லை. திக்குவல்லையில் அக்காலப்பகுதியில்
எழுதத்தொடங்கிய மற்றும் ஒரு முஸ்லிம் எழுத்தாளர் செந்தீரன் சத்தார் எழுதிய கவிதைகள். அத்தொகுப்பு விடிவு என்ற
பெயரில் சாந்தி அச்சகத்தில் அச்சாகியது.
திக்குவல்லை எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவதிலும் கமாலுக்கு
பெரும் பங்கிருந்தது. இந்த அமைப்பு “ பூ “ என்ற
ஒரு எழுத்தில் அமைந்த புதுக்கவிதை ஏட்டையும் வௌிக்கொணர்ந்தது.
இவ்வாறுதான் இலக்கியவாதி திக்குவல்லை கமாலுடன் எனக்கு நட்புறவு
தொடங்கி, இற்றைவரையில் எந்தவொரு விக்கினமும் இல்லாமல் ஆரோக்கியமாக தொடர்கிறது.
என்னைவிட ஒரு வயது மூத்தவர். சமகால இலக்கிய நண்பர். தென்னிலங்கையில்,
தர்கா நகர் சாகிறா கல்லூரியில் இவர் படிக்கின்ற காலத்திலேயே இலக்கியத்துறையில் பிரவேசித்தவர்.
அங்கு மாணவர்கள் மத்தியில் ரோணியோ அச்சுப்பதிப்பில் வௌியான சுவை
என்ற இதழில் எழுதத்தொடங்கியவர் இன்னமும் தரித்து நிற்கவில்லை. அயராமல் எழுதிக்கொண்டே
இருப்பவர். புதுக்கவிதையில் தொடங்கிய இவரது இலக்கியப்பயணம் சகோதர சிங்கள இலக்கியங்களை தமிழுக்கு மொழிபெயர்க்கும்
வரையில் வந்திருக்கிறது.

தமிழக வானம்பாடி, தாமரை, செம்மலர் முதலானவற்றிலும் எழுதியவர்.
எலிக்கூடு (புதுக்கவிதை ) கோடையும் வரம்புகளை உடைக்கும் குருட்டு
வெளிச்சம், விடுதலை, விடை பிழைத்த கணக்கு, வரண்டு போன மேகங்கள், முட்டைக் கோப்பி, புதியபாதை, முதலான சிறுகதைத்
தொகுதிகளையும் - ஒளி பரவுகிறது , நச்சு மரமும் நறுமலர்களும் , பாதை
தெரியாத பயணம், உதயக் கதிர்கள்
ஆகிய நாவல்களையும் - பிறந்த நாள் (சிறுவர் இலக்கியம்) , மல்லிகை ஜீவா
மனப்பதிவுகள் (கட்டுரை), நிராசை (வானொலி நாடகங்கள்) உதயபுரம்
(சிறுவர் இலக்கியம்) ஆகியனவற்றையும்
வரவாக்கியிருப்பதுடன், சில சிங்கள படைப்புகளையும் தமிழுக்கு அழைத்துவந்துள்ளார்.
இவை தவிர தினகரன்
தினப்பதிப்பிலும் வாரமஞ்சரியிலும் சில தொடர்கதைகளும் எழுதியவர்.
அவை: குருதட்சணை - சிங்கள மூலம்: தெனகம ஸ்ரீவர்தன.
தொடரும் உறவுகள் - சிங்கள மூலம்: சிட்னி மார்க்கஸ் டயஸ்.
வெற்றியின் பங்காளிகள் - சிங்கள மூலம்: விமலதாஸ முதலிகே.
வெற்றி மழை - புதினம், சிங்கள மூலம்: குணரத்தின ஏக்கநாயக.
கங்கைக் கரைக் காடு - புதினம், சிங்கள மூலம்: சோமவீர சேனாநாயக்க.
இவற்றுள் ஒளி பரவுகிறது , உதயபுரம் என்பன
இலங்கை சாகித்திய விருதுகளைப்பெற்றுள்ளன.
இவருக்கு, முஸ்லிம் கலாசார அலுவல்கள் அமைச்சு இலக்கிய வித்தகர் பட்டமும் கலாசார அலுவல்கள் அமைச்சு கலாபூஷணம் பட்டமும்
வழங்கியுள்ளது. முட்டைக் கோப்பி சிறுகதைத்தொகுதிக்காக
யாழ். இலக்கிய வட்டத்தினதும் இலங்கை இலக்கியப்பேரவையினதும் விருதுகளையும்
பெற்றவர்.
பேராதனை பல்கலைக்கழக மாணவி எம்.
றிம்ஸா, தனது தமிழ் சிறப்பு பட்டத்திற்காக
திக்குவல்லை கமாலின் சிறுகதைகளை
ஆய்வுக்குட்படுத்தியுள்ளார்.
எமது முற்போக்கு எழுத்தாளர்
சங்கத்திலும் இணைந்திருந்த கமால், பின்னாளில் சாகித்திய அமைப்பில் தமிழ் இலக்கிய
ஆலோசனைக்குழுவிலும் அங்கம் வகித்தவர்.
அளுத்கம சாகிறாக்கல்லூரியில்
இவர் பயின்ற காலத்தில் சுவை என்ற கவிதை இதழுக்கு இவரை நியமித்து
நெறிப்படுத்திய இவரது ஆசான் ஏ. இக்பால்
அவர்களையும் இன்ஸான் இதழில்
இவரையும் எழுதவைத்து, இலக்கியத்தில் சமூகப்பொறுப்புணர்வை ஊட்டிவளர்த்த ஏ.ஏ.
லத்தீபையும் கம்யூனிஸ்ட் கட்சியின்
இதழ்கள் தேசாபிமானி, புதுயுகம் ஆகியவற்றின் ஆசிரியர் குழுவிலிருந்த பி.
ராமநாதன், பாடசாலையில் கற்றவேளையில் ஆசானாக
விளங்கிய சந்திரசேகர சர்மா, மல்லிகை ஜீவா
ஆகியோரை தனது ஆதர்சங்களாக பெருமையுடன் குறிப்பிட்டுவரும் கமால், சிங்கள
இலக்கியங்களை தமிழுக்கு வரவாக்குவதில் ஆர்வம்கொண்டதையடுத்து, சிங்கள இலக்கிய
சகோதரர்களினதும் அபிமானத்துக்குரியவராகிவிட்டார்.
அதிர்ந்துபேசத்
தெரியாதவர். இனிய சுபாவங்களினால் இலக்கிய
நண்பர்களை அரவணைப்பவர். அதனால் பலரதும் நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்.
சிங்கள இலக்கியவாதிகளுடன்
இவருக்கிருந்த தொடர்பாடலை நன்கு அறிந்திருந்தமையால்தான் இவரை 2011 ஆம் ஆண்டின்
தொடக்கத்தில் நாம் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் மொழிபெயர்ப்பு –
இலக்கியப்பரிவர்த்தனை அரங்கிற்கு இணைப்பாளராக நியமித்திருந்தோம்.
ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மொழிபெயர்ப்பு
முயற்சிகளுக்கும் அதன் பெறுபேறாக
வெளிவரும் இலக்கியப் பிரதிகளுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. அதனை நன்கு
தெரிந்துகொண்டு அமைதியாக அயராமல் இயங்கிவருபவர் திக்குவல்லை கமால்.
மூவின மக்களும் வாழும்
இலங்கைத்தீவின் நான்கு திசைகளிலுமிருந்தும் இரண்டு மொழிகளிலும்
இலக்கியப்படைப்புகள் வந்தவண்ணமிருக்கின்றன. அத்துடன் தமிழ் – சிங்கள சிற்றேடுகளும்
வெளியாகின்றன.
இவை பற்றிய அறிமுகம் பரஸ்பரம்
கிடைப்பதற்கும் திக்குவல்லை கமால் பாலமாக திகழ்ந்துகொண்டிருப்பவர். ஈழத்து தமிழ்
இலக்கியத்தின் பரிமாணத்தில் போர்க்கால இலக்கியம், புகலிட இலக்கியம்
பேசுபொருளானபோது, அவற்றின் மூலகர்த்தாக்களை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு
அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் திக்குவல்லை கமால்.
எனது சிறுகதைகளை தொடர்ந்து
படித்துவந்திருக்கும் நண்பர் கமால்,
அவற்றில் தேசிய இனப்பிரச்சினை – இன நல்லுறவு சார்ந்த சில கதைகளை
தேர்ந்தெடுத்து, தனது நண்பரும் ஆசிரியருமான ஏ.சி. எம். கராமத் அவர்களின் ஊடாக
சிங்களத்தில் மொழிபெயர்க்கச்செய்து சிட்னி மார்க்கஸ் டயஸ் என்பவரால்
பதிப்பித்தவரும் திக்குவல்லை கமால்தான்.
அந்த நூலின் பெயர் : மதக்கசெவனலி.
(Shadows Of Memories) இதன் வெளியீட்டு அரங்கு கொழும்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச
மாநாட்டு மண்டபத்தின் கருத்தரங்கு கூடத்தில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்றவேளையிலும் வருகை தந்து உரையாற்றியவர் திக்குவல்லை
கமால்.
அன்று வடபுலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து
வெளியான மல்லிகை இதழ் தென்னிலங்கை திக்குவல்லை பிரதேச எழுத்தாளர்களையும் மேற்கிலங்கை
நீர்கொழும்பு பிரதேச எழுத்தாளர்களையும் மாத்திரம் இணைக்கவில்லை.
ஒட்டுமொத்த முழு இலங்கையிலும் வாழ்கின்ற
மூவினத்தையும் சேர்ந்த எழுத்தாளர்களையும் ஒன்றிணைத்துள்ளது. அதற்கும் பாலமாக விளங்கியவர்தான்
திக்குவல்லை கமால்.
ஈழத்த இலக்கியத்தின் மற்றும் ஒரு வரவான
புகலிட இலக்கியங்களையும் சிங்கள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியிலும் திக்குவல்லை
கமால் தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து, எனது
நீண்ட கால இலக்கியத் தோழனை பாரிஸிலிருந்து
வௌியாகும் ‘ நடு ‘ இணைய இதழ் ஊடாக வாழ்த்துகின்றேன்.
( நன்றி: “நடு “ இணைய இதழ் – பிரான்ஸ்)
letchumananm@gmail.com
------------000-----------
No comments:
Post a Comment