எழுத்தாளர் – ஊடகவியலாளர் முருகபூபதி The Catamaran இணைய இதழுக்கு வழங்கிய நேர்காணல்: இனப்பகை ஒரு நோய்தான் !


நோய்க்கு மூவினத்தவரும் சேர்ந்து சிகிச்சை செய்யவேண்டும் !!  

புலம்பெயர்ந்து சென்றவர்கள் மேலும் மேலும் கோயில்களை கட்டுவதற்கும் புனருத்தரணம் செய்து கும்பாபிஷகம் நடத்துவதற்கும்தான் பணத்தை விரையம் செய்துகொண்டிருக்கிறார்கள் !!!

எங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளும் பெருகிவிட்டன --  அதனாலும் நாட்டில் சமாதானத்திற்கான சாத்தியங்களும் குறைந்த கால எல்லையும் நீடித்துக்கொண்டிருக்கின்றது!!!!


படைப்பிலக்கிய வாதியும் ஊடகவியலாளருமான  முருகபூபதி இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார்.


அவுஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் அனைத்துச் சமூகத்தினரையும் இணைத்து இலக்கிய அரங்குகளையும் நிகழ்த்தி வருகிறார். தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள மக்களிடத்திலும் எழுத்தாளர்களிடத்திலும் இவருக்கு நெருக்கமான உறவுண்டு. இன ஐக்கியத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்தி அதிகமான சிறுகதைகளும்  நாவலும்  எழுதியுள்ளார். தமிழ் -  சிங்கள மொழிப் புலமையுள்ளவர். இவரது சிறுகதைகளில் சில ‘மதக்க செவனெலி’ (SHADOWS OF MEMORIES) என்ற பெயரில் சிங்களத்தில் வெளிவந்துள்ளது. இலங்கையில் உள்ள பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ‘இலங்கை மாணவர் கல்வி  நிதியம்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் வழியாக உதவிகளைச் செய்து வருகிறார்.

இந்த நேர்காணலில் தன்னுடைய அவதானங்களையும் அனுபவங்களையும் முன்னிறுத்தி இலங்கையின் எதிர்காலத்துக்கான பங்களிப்புகளைப் பற்றிப் பேசுகிறார்.
The Catamaran இணைய இதழுக்காக முருகபூபதி வழங்கிய நேர்காணல்:
த கட்டுமரன்:  இலங்கைச் சமூகங்கள் யுத்தத்திற்குப் பிறகு,
நாட்டினுள் எப்படிச் செயற்பட்டிருக்க வேண்டும்?
முருகபூபதி:  ஒருபுறம் முஸ்லிம்களின் ஆதரவு, மற்றும் ஒருபுறம் கிழக்கு மக்களின் அபிமானம், இடையில் மலையக மக்களின் அனுசரணை,  ஆகிய அனைத்தையும் வடக்கின் தமிழர் தரப்பு தலைமைகள் படிப்படியாக இழந்துவிட்டு தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கிருக்கின்றன.

இந்தப்பக்கம், நீடித்த முப்பது ஆண்டுகாலப்போரில் வெற்றிவாகை சூடியதாக மார்தட்டிக்கொண்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்க்ஷ என்ன சொன்னார்?
“இனிமேல் இந்த நாட்டில் சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிம்களோ என்ற பாகுபாடு இல்லை! அனைவரும் இலங்கையரே!” ஆனால், போர் முடிந்து பத்து ஆண்டுகளின் பின்னர், பௌத்த துறவிகளையும் கடும்போக்காளர்களையும் இணைத்துக்கொண்டுள்ள ஞானசார தேரர், “இந்த நாடு பௌத்த சிங்களவருக்கு மட்டுமே உரியது!?” எனச்சொல்கிறார். இவை வெறும் சாதாரண நிகழ்வுகள் அல்ல. இனப்பிரச்சினைக்குத்தீர்வாக டட்லி – செல்வா ஒப்பந்தம் வந்தபோது அதனை எதிர்த்து ஜே.ஆர். ஜெயவர்தனா, கண்டி தலதா மாளிகை நோக்கித்தான் பாத யாத்திரை தொடங்கினார். இறுதியில் அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது!

முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுநர்கள் பதவி விலகவேண்டும் என்று ஒரு பௌத்த பிக்கு, உண்ணாவிரதம் இருந்து தனது கோரிக்கையில் வெற்றிபெற்றதும் இந்த தலதா மாளிகையின் முன்றலில் இருந்துதான். மற்றும் ஒரு பௌத்த பிக்கு, ‘இது பௌத்த சிங்களவர்களின் நாடு’ என மார் தட்டுகிறார்.

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும், அனைத்து பௌத்த சிங்களத்தலைவர்களும் அந்த மாளிகை சென்றே பௌத்த உயர் பீடங்களிடம் ஆசி பெற்றுவருகின்றனர். ஆனால், நாடாளுமன்றில் இனங்கள் சார்ந்த - இனப்பிரச்சினை சார்ந்த எந்தவொரு சட்டமூலம் வந்தாலும், அதனை அங்கீகரிப்பதில் இறுதி முடிவை சொல்லும் அதிகாரம் அதே தலதா மாளிகையிடம்தான்,  அந்த பௌத்த உயர் பீடங்களிடம்தான் இருக்கிறது!  இலங்கையை யார் ஆண்டாலென்ன..?  இதுதான் எழுதப்படாத விதி! இந்தப்பின்னணிகளை இலங்கை, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் வடக்கு – கிழக்கு – மேற்கு – மலையக தமிழ் மக்கள் புரிந்துகொண்டிருக்கவேண்டும்.
இந்த அனுபவங்களைத்தான் நீடித்த போருக்குப்பின்னரும் இலங்கை சமூகங்கள், குறிப்பாக தமிழ்பேசும் சமூகங்கள் பெற்றுள்ளன. இதிலிருந்து, அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு பயணிக்கவேண்டும் என்ற ஒன்றிணைந்த தீர்மானத்திற்கு வரவேண்டியவர்கள் தமிழ் – முஸ்லிம் தலைவர்கள்தான். அவர்களை ஆதரிக்கும் இரண்டு சிறுபான்மை இனமக்களிடமும் புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை.
நீடித்த முப்பது ஆண்டு காலப்போரிலிருந்து இலங்கை பொருளாதாரம் மீண்டு எழுவதற்கிடையில் இந்த ஆண்டு, உயிர்த்த ஞாயிறு சம்பவங்களால் மேலும் மேலும் இலங்கை பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதனால், இனிமேல் அனைத்து இலங்கை சிறுபான்மை சமூகங்கள் மட்டுமல்ல பெரும்பான்மை சமூகமும் எத்தகைய தெரிவுக்கு முன்வர வேண்டும் என்பதை அந்த மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
த கட்டுமரன்:  இதில் புலம்பெயர்ந்திருக்கும் இலங்கைச் சமூகங்கள் எத்தகைய பங்காற்றியிருக்கலாம் என்று எண்ணுகிறீர்கள்?
முருகபூபதி:  இலங்கை அரசியலில், புலம்பெயர்ந்த இலங்கை சமூகங்களின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டளவில்தான் இருக்கும். வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களினால், இலங்கை அரசியல் விவகாரங்களை கையாள முடியாது. அதற்கு அங்கு சட்டத்தில் இடமில்லை! அரச தரப்பிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அழுத்தம் கொடுக்க மாத்திரமே முடியும். இது அவ்வப்போது நடந்துவருகிறது. ஆனால், அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கொலிதான். வெளிநாடுகளில் பல எழுத்தாளர்கள் இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவுசெய்துவருகிறார்கள்.
அவுஸ்திரேலியாவில் மாத்திரம் ஐந்திற்கும் மேற்பட்ட சிங்கள இதழ்கள் வெளிவருகின்றன. ஆனால், சமகாலத்தில் ஒரே ஒரு தமிழ் மாத இதழ் ( எதிரொலி) மாத்திரமே வெளிவருகிறது. சிங்கள மக்களும் தங்கள் பிரதேசத்து ஏழை மக்களுக்காகவும் இராணுவத்தில் இணைந்து போரில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் இங்கிருந்து உதவிவருகின்றனர். இலங்கையில் இனப்பகை முற்றும் சந்தர்ப்பங்களில் புகலிடத்தில் வாழும் மனிதநேய – மனித உரிமை ஆர்வலர்கள் கருத்தரங்குகளை நடத்திவருகின்றனர். இது அவர்களுக்கு தங்கள் தாயகம் மீதான பற்றுதலை காண்பித்தாலும், இலங்கையிலிருக்கும் கடும்போக்காளர்களின் சிந்தனையில் மாற்றம் எதனையும் இங்கிருப்பவர்களால் ஏற்படுத்தமுடியவில்லை என்பதுதான் உண்மை.
த கட்டுமரன்:  மேலும் மேலும் இனப்பகைமை வலுப்பெற்றுச்
செல்வதற்கான காரணமென்ன?
முருகபூபதி :  இனப்பகை இருந்தால்தான் தாங்கள் பதவிகளில் இருக்கமுடியும் என்று நம்புபவர்கள் உள்ள தேசம்தான் இலங்கை. இனப்பகை தேசத்தின் பொருளாதார வளங்களை சூறையாடிவிடும் எனத் தெரிந்தும், இனப்பகையை மூட்டக்கூடிய சட்டங்களைத்தான் நடைமுறையில் வைத்துள்ளனர். இனமுரண்பாடுகள்தான் நிரந்தர இனப்பகையாக மாறுகிறது.

இலங்கை 1915 ஆம் ஆண்டு முதல் காலத்துக்குக்காலம் இனநெருக்கடிக் கலவரங்களை சந்தித்துள்ளது. இன நல்லிணக்கம் என்று பேசிப்பேசியே வந்தாலும் நடைமுறையில் எதுவும் இல்லை. சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்தமையினால்தானே, அவசரகாலச்சட்டம், ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் வேளைகளில் சிறுபான்மையினரின் சொத்துக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டன. இதுவரையில் அதற்காக யாராவது சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்பட்டார்களா? அரசியல்வாதிகளும் இனவாத – மதவாத சிந்தனைகொண்டவர்களும் தொடர்ந்தும் இனப்பகையை ஊட்டும் பேச்சுக்களைத்தானே பேசிவருகிறார்கள்.

த கட்டுமரன்:   இந்தப் பிரச்சினையைத்தீர்ப்பதற்கு எந்த வகையில்  வெளிநாட்டுச் சக்திகளைப் பயன்படுத்தலாம்? கையாளலாம்?
முருகபூபதி:  வெளிநாட்டுச்சக்திகள் ஆதாயம் இல்லாமல் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப்பிரச்சினையில் தலையிடாது!  இலங்கை, தென்கிழக்காசியாவுக்கே, தலைமைதாங்க எத்தனிக்கும் இந்தியாவின் அயல்நாடு. 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தபோது, இந்தியாவை மீறி எந்தவொருநாடும் போருக்குள் சிக்குண்டிருந்த மக்களை பாதுகாக்க முன்வரவில்லை. அதனால்தான், “அந்தப்போரை முன்னின்று நடத்தியது இந்தியாதான்” என்று துணிச்சலுடன் முன்னாள் அதிபர் சொன்னார்.


போர் முடிவுக்கு வந்தபின்னர், இலங்கையில் இரண்டு அதிபர் தேர்தல்கள் நடந்துவிட்டன. அரசுகளும் மாறின. வெளிநாட்டுச்சக்திகள் இக்காலப்பகுதியில்; இலங்கையில் நன்றாக காலூன்றிவிட்டன. வெளிநாட்டுச்சக்திகளுக்கு இலங்கை ஒரு சுண்டக்காய் நாடு. ஆட்சிபீடம் ஏறுபவர்களை எவ்வாறு கையாளவேண்டும் என்பது அவற்றுக்குத் தெரியும். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் இரண்டு தலைவர்கள் கைச்சாத்திட்டனர். அந்த ஒப்பந்தத்திற்கு இறுதியில் என்ன நடந்தது? இந்தியாவின் ஆதிக்கம் அதன் ஊடாக செறிந்துவிடும் என்பதால், அதனை விரும்பாத சில வெளிநாட்டு சக்திகள் மறைமுகமாக தலையிட்டு தொடர்ந்தும் இலங்கையைக் கொதிநிலையில் வைத்திருந்தன. இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக எந்தவொரு அர்த்தமுள்ள அனைத்து மூவினங்களும் ஏற்கக்கூடிய தீர்வு வந்தாலும், அதில் தனது நாட்டுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது…?  என்றுதான் அந்த வெளிநாட்டு சக்திகள் பார்க்கும். இது தெளிவானது. எனவே இலங்கை இனமுரண்பாட்டில் இன்னமும் பூகோள அரசியலைத்தான் (Geo politics-especially in trinational relations as influenced by geographical factors)  தனது வகிபாகமாக வைத்துள்ளன.

த கட்டுமரன்:  அப்படியென்றால் அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள்,  எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகத்துறையினர் மற்றும் சமூக
செயற்பாட்டியக்கங்கள் போன்ற தரப்புகள் எவ்வாறான
செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம்?
முருகபூபதி:   தொடர்பாடல்தான் அவசியமானது. தொடர்பாடல் அற்றுப்போன சமூகம் உருப்படாது! நீங்கள் குறிப்பிடுகின்றவர்கள் இனப்பகை முற்றும் தருணங்களில், அதனைத்தணிக்க தம்மாலானதை செய்துவந்தாலும், சட்டமும் ஒழுங்கும் ஆரோக்கியமாக நீதியின்பாற்பட்டிருக்கவேண்டும். நாம் 1974 இல் தேசிய ஒருமைப்பாடு மாநாடு நடத்தினோம். 1977 இல் கலவரம் வந்தது. தென்னிலங்கையில் தமிழர்கள் அகதிகளாக கப்பலேறி காங்கேசன் துறையில் இறங்கினார்கள். அப்போது நீங்கள் சொல்லும் தரப்புகள் ஒரு முனையிலும் -  இனவாத கடும்போக்காளர்கள் மறு முனையிலும்தான் நிற்கிறார்கள். இதுவரையில் இலங்கையில் இனக்கலவரத்தை தூண்டியவர்களுக்கு, கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டவர்களுக்கு சட்டம் என்ன செய்தது? அந்த தீயசக்திகளின் பின்னால் அரசியல்வாதிகள்தான் நிற்கிறார்கள். எனினும் நல்லெண்ண சக்திகள் தொடர்ந்து தம்மாலியன்றதை செய்துதான்வருகின்றன.
த கட்டுமரன்:  இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அக – புறச் சூழலை உருவாக்குவதில் கலை, இலக்கியத்துறைப் பங்களிப்புகள் எப்படியானதாக இருக்க வேண்டும்?
முருகபூபதி: மொழிப்பரிவர்த்தனை மிக முக்கியமானது. இலங்கையில் இரண்டு மொழிகள்தான் பிரதானமானது. ஆங்கிலம் ஒரு துணைமொழி. அடிக்கடி இலங்கை எங்கும் தமிழ் – சிங்கள – முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் நடைபெறவேண்டும். முன்னர், வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் அவர்கள் பயணித்து,  சந்தித்து பேசியிருக்கிறார்கள். இச்சந்திப்புகளை இலங்கையில் இருக்கும் ஒன்பது மாகாண சபைகளும் முன்னின்று நடத்தவேண்டும். இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களை அந்த சந்திப்புகளில் பரிந்துரைத்து, ஒருங்கிணைக்கலாம். அத்துடன் கல்லூரிகள், பாடசாலைகளின் மட்டத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் மத்தியில் தமிழ் – சிங்கள கலை இலக்கியங்களை அறிமுகப்படுத்தி, இனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். அதனால், கலாசார பண்பாட்டு விழுமியங்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள் இன, மத, மொழி ரீதியாக சிந்திக்காமல், நாம் அனைவரும் இலங்கையர் என்ற மனோபாவத்துடன், சர்வதேச அரங்கில் நல்ல கீர்த்தியை பெற்றுக்கொடுக்க முன்வரல்வேண்டும். அதற்கு முன்னர் அங்கிருக்கும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களிடம் இது பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்தல் வேண்டும்.

த கட்டுமரன்: உண்மையில் நாட்டில் நல்லிணக்க வாழ்வுக்கான சாத்தியங்களும் கால எல்லையும் எப்படியிருக்கும்?
முருகபூபதி:  எங்கள் தேசம் கடக்கவேண்டிய தூரம் அதிகம். ஆனால், கடக்கத்தான் வேண்டும். எளிதாகக்கடக்கமுடியும். இந்தியா போன்று பல இனங்கள் வாழும் நாடல்ல இலங்கை. வற்றாத ஜீவநதிகள் ஓடும் அழகிய தேசம். மூன்று இனங்கள் வாழ்ந்தாலும், இரண்டு மொழிகளைத்தான் பிரதானமாக பேசுகிறார்கள். எனது பல சிறுகதைகளில் இன ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியிருக்கின்றேன். அத்தகை சில கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘மதக்க செவனெலி’ (SHADOWS OF MEMORIES) என்ற பெயரில் சிங்களத்தில் வெளிவந்துள்ளது.
இதனை , என்னிடம் தமிழ் கற்ற தமிழ் அபிமானி அமரர் வண. ரத்னவன்ஸ தேரர் அவர்களுக்கே சமர்ப்பித்துள்ளேன். அந்த நூலின் அறிமுக அரங்கு அவர் வாழ்ந்த சிங்களப்பிரதேசமான மினுவாங்கொடையில் கொரஸ என்ற கிராமத்தில் நடந்தபோது சிங்கள மக்கள் திரளாக வந்திருந்தார்கள். சிங்கள வாசகர்கள் உரையாற்றினார்கள். தொடர்ச்சியாக சிங்கள – முஸ்லிம் இலக்கியவாதிகளுடன் உறவாடிவருகின்றேன். நான் வதியும் அவுஸ்திரேலியாவிலும் இவ்வாறு தொடர்பாடல்களை மூவினத்தவருடனும் பேணி வருகின்றேன்.


உங்களுக்கு ஒரு சுவாரசியமான தகவல் சொல்லத்தான் வேண்டும். நான் நீண்டகாலமாக இதய நோயாளி. அத்துடன் இன்சுலின் ஏற்றும் நீண்ட கால நீரிழிவு உபாதையுடன் காலத்தை நகர்த்தி வருகின்றேன். அதனால் பல பக்கவிளைவுகளுக்கும் சிகிச்சை பெற்றுவருகின்றேன். எனது குடும்ப மருத்துவர் பங்களாதேசத்தின் முஸ்லிம் ஒருவர். எனக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர் இலங்கையைச்சேர்ந்த சிங்களவர். நான் தமிழன். இதிலிருந்து என்ன புரிகிறது?



நோய்க்கு அரசியல் – மொழி – இனம் – சாதி இல்லை. எந்த நோயும் எவருக்கும் வரலாம். நோயாளியை பராமரிக்கும் மருத்துவர்களிடத்திலும் இன, மத, மொழி, சாதி வேறுபாடுகளை காணமுடியாது. அவ்வாறுதான் அந்தப்புனிதமான தொழிலுக்கு தேர்ச்சிபெறும்போது சத்தியப்பிரமாணம் எடுக்கின்றனர். இலங்கையிலும் இனப்பகை ஒரு நோய்தான். அது முற்றியிருக்கிறது. அதற்கு மூவினத்தவரும் இணைந்துதான் சிகிச்சை செய்யவேண்டும்.

கால எல்லை பற்றியும் கேட்டிருக்கிறீர்கள். அன்றாடம் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைச்செய்திகளையும் நாட்டு நடப்புகளையும் அவதானித்துவருகின்றேன். போகிற போக்கைப்பார்த்தால், நாம் கடக்கவேண்டிய தூரம் இன்னும் அதிகம்தான்.
இலங்கையில் பல பிரதேசங்களில் இன்றும் மக்கள் மண்குடிசைகளில் வாழ்ந்தவாறு மலகூட வசதிகளும் அற்றிருக்கின்றனர். உயிரோடு வாழும் அம்மக்கள் அப்படி இருக்கையில், உயிரற்ற சிலைகளுக்கு இன்னும்தான் இருப்பிடங்கள் அமைப்பதற்கு ஆட்சியாளர்கள் எத்தனிக்கிறார்கள். புலம்பெயர்ந்து சென்றவர்களும் மேலும் மேலும் கோயில்களை கட்டுவதற்கும் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கும்தான் பணத்தை விரையம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
எங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளும் பெருகிவிட்டன. அதனாலும் நாட்டில் சமாதானத்துக்கான சாத்தியங்களும் குறைந்து கால எல்லையும் நீடித்துக்கொண்டிருக்கிறது. வடபிரதேசத்தில் மாத்திரம் பதினைந்திற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் என்று சமீபத்தில் எனது பதிவொன்றில் எழுதியிருந்தேன்.


தென்னிலங்கையும் இதுவிடயத்தில் சளைத்தது அல்ல! அஸ்தமனத்திலிருந்து உதயத்தை காணத்தான் விரும்புகின்றோம்!  ஆனால், எங்கள் தேசம், அஸ்தமனத்தை நோக்கிச்செல்லும் பாதையில்தான் செல்கிறது. அதற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம்!!

---0---
நன்றி:  www.thecatamaran.org
-->






No comments: