பொண்ணு மாப்பிள்ளை
நகைச்சுவை சஸ்பென்ஸ் இவை இரண்டும் சரிசமமாக கலந்து உருவான படம்தான் பொண்ணுமாப்பிள்ளை. ஏற்கனவே ஜெயசங்கர் ஜெயலலிதா ஜோடியில் யார் நீ படத்தைத் தயாரித்திருந்த வில்லன் நடிகர் பி எஸ் வீரப்பா ஜெய்சங்கர் நடிப்பில் இந்தப் படத்தையும் தயாரித்திருந்தார். ஆனால் கதாநாயகியாக இதில் காஞ்சனா நடித்திருந்தார்.
வைரங்களை கடத்தும் வில்லன் பொலிசாரிடம் இருந்து தப்ப வைரங்களை ஒரு கிட்டார் வாத்தியத்திற்குள் வைத்து அதனை கதாநாயகனின் காரில் போட்டுவிடுகிறான். அந்த கிட்டார் இரண்டு வாத்திய கலைஞர்களிடம் போய் சேர்கிறது. இது தெரியாத வில்லன் கதாநாயகியை அணுகி கிட்டாரை தரும்படி மிரட்டுகிறான். அவளோ அது பற்றி ஒன்றும் தெரியாது என்கிறாள். இந்த தகறாலில் வில்லனை கத்தியால் குத்திக் கொலை செய்து விடுகிறாள். பிணம் ஒர் அறையில் இருக்க அன்று மாலையே அவளுடைய திருமணநாள் விருந்தும் அங்கு நடக்கிறது.
இவ்வாறு போகும் கதையை உசிலை சோமனாதன் எழுதி அதற்கு வசனமும் தீட்டியிருந்தார். அவருடைய நகைச்சுவை வசனங்களை மிக சரளமாகவும் சிரிப்பைத் தூண்டுவதாகவும் அமைந்திருந்தன.
இந்தப்படம் தயாரான சமயம்தான் இளம் நடிகரான ஜெய்சங்கர் கீதாவை திருமணம் செய்து பொண்ணு மாப்பிள்ளையாக காட்சியளித்தார். திருமணத்தைத் தொடர்ந்து அவர் கலந்து கொண்ட முதல் படப்pடிப்பும் பொண்ணுமாப்பிள்ளைத் தான். படத்தில் ஜெய்சங்கர் காஞ்சனா ஜோடி பொருத்தம் நன்றாகப் பொருந்தியது.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் நாகேஷ் வீரப்பன் வி கே ராமசாமி ஏ கருணாநிதி மனோரமா டைப்பிஸ்ட் கோடி பகோடாகர்தர் என்று ஏராளமான நகைச்சுவை நரகர்கள் நடித்திருந்தார்கள். இவர்கள் அனைவரும் ஒர் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிப்பதாக கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த அடுக்குமாடி வீடுகளுக்கு சொந்தக்காரியாக பழம் பெரும் நடிகை அங்கமுத்து நடித்தார்.
வைரங்கள் மறைக்கப்பட்ட கிட்டாரை வைத்துக் கொண்டு கொட்டமடிப்பவர்களாக நாகேஷீம் வீரப்பனும் நடித்திருந்தார்கள். அன்றைய சீசனில் இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் அருமையான நகைச்சுவையை வழங்கியிருந்தார்கள். இந்த வீரப்பன் பிற்காலத்தில் கவுண்டமணி செந்தில் நடிக்கும் நகைச்சுவை காட்சிகளுக்கு பல படங்களில் வசனமெழுதி புகழ்பெற்றார்.
படத்தில் வில்லனாக படத்தை தயாரித்த வில்லன் வீரப்பா நடித்திருந்தார். படங்களில் நடிப்பதை குறைத்திருந்த வீரப்பா நீண்ட இடைவெளிக்க பிறகு இதில் நடித்திருந்தார். இந்தப்படத்தில் அவருடைய முகம் வித்தியாசமான மேக்அப் மூலம் அச்சமுட்டுவதாகவும் விகாரமாகவும் காட்டப்பட்டது. காஞ்சனாவிடம் அவர் நான் அன்னியன் அல்ல இந்தியன்தான் என்று கூறுவது நல்ல ஸ்டைல்! புpரபல இயக்குனர் பீம்சிங்கிடம் உதவியாளராக பணியாற்றிய எஸ் ராமநாதன் படத்தை டைரக்ட் செய்தார்.
பம்பாய் டு கோவா படத்தின் மூலம் முதன்முதலாக அமிதாப்பச்சனை இந்தித் திரைக்கு அக்ஷன் ஹீரோவாக அறிமுகப்டுத்திய பெருமையை பெற்றவர் இந்த ராமநாதன். தொய்வில்லாமல் படத்தை நகர்த்தியிருந்தார் இவர்.
மர்மப் படங்களுக்கு இசையமைப்பதில் புகழ் பெற்றவர் வேதா. இந்தப் படத்திற்கு இவரே இசையமைத்தார். மணமகன் அழகனே என்ற பாடலை கிட்டார் வாத்தியத்துடம் மேற்கத்திய பாணியிலும் மிருதங்க வாத்தியத்துடம் கர்நாடக இசையுடனும் கலந்து இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார். இதுதவிர நாளாம் நாளாம் திருநாளாம் எல்லோரும் கைத்தட்டுங்கள் ஆகிய பாடல்களும் ரசிக்கும்படி வேதாவினால் இசையமைக்கப்பட்டன.
கலகலப்பான பொண்ணுமாப்பிள்ளை பின்னர் காமினி பொன்சேகா நடிப்பில் ஹொந்தம வெலாவ என்ற பெயரில் சிங்களத்திலும் வெளிவந்நது.
No comments:
Post a Comment